திங்கள், ஏப்ரல் 1

காதலின்பின் மெளனம்



           நடந்துசெல்லும் பாதையில் கையில் கிடைக்கும் மரத்தின் இலைகளை பறிக்கும்போது அதற்கு வலிக்கும் என்று உணர்ந்திருக்கிறீர்களா!
காலில் எறும்புகள் மிதிபடும் என்பதை நாம் ஒருபோதும் யோசிப்பதில்லை..  அதற்கு நேரமும் இல்லை. இயல்பாய் இருப்பவனுக்கே இந்த நிலமை என்றால்.... காதலித்துப்பார் உலகத்தில் நீங்கள் மட்டுமே இருப்பதாய் உணர்வாய். உலகம் மறக்கும். சுற்றம் மறக்கும்.

காதலி
சரியென்று சொன்னால்
புல்லின் நிழலில் கூட
ஓய்வெடுக்கலாம்
எறும்புகளுடன்
ஓட்டப்பந்தயத்தில்
கலந்துகொள்ளலாம்..!


எதிர்வரும் மனிதர்கள் எந்த நிறத்தில் நம்முடன் பழகுகிறார்கள் என்பதை நம்மால் எளிதில் உணரமுடியாது. மனசுக்கு நிறமுண்டு. ஆனால் அந்த  நிறம் அவனுக்கு மட்டுமே தெரியும்.

காதலி
மனசின் நிறத்தை
கண்ஜாடையில்
உணர்ந்துகொள்வான்
காதலன்..!


உலகம் எளியோர்களை எப்போதும் மதித்ததில்லை. தினமும் கோடானகோடி உயிர்கள் இறக்கின்றன. அத்தனையும் நமக்கு செய்திதான். நம்முடைய உறவினர் ஒருத்தர் யாரேனும் இறந்துவிட்டால் துக்கம் தாளாமல் அழுகிறோம்.

காதலி
மனசும் இறக்கிறது
நிராகரிக்கப்பட்ட
காதலால்..!


கோபங்கள் மனசை காயப்படுத்தும். கோபத்தில் வரும் வார்த்தைகளுக்கு முகம் கிடையாது. அது யாரையும் பார்க்காது. அதன் கடிவாளம் நம்மிடம் உள்ளவரை கோபம் நம்வசப்படும். காதலிலும் வரும் கோவம் வார்த்தைகளை வரவிடாது. அது மெளனக்கோபம்...

பறவைகள்
கிளைகளை நம்புவதில்லையாம்
நானும் உன்னை நம்பவில்லை
உன் மனதை மட்டுமே..!


காதலில் காதலியை  மட்டுமே அங்குலம் அங்குலமாய் தெரியும். காதலில் தோற்றுப்பார் உலகமும், வாழ்வும் புரியும். வலி என்பதன் அர்த்தமும் புரியும். மெளனத்தில் உள்ள அர்த்தம் புரியும். 


வார்த்தையை கொல்வதும்
மெளனம்
உன்னை கொல்வதும்
மெளனம்தான்
மெளனம் அழகானது
பிரிதொருமுறை
பேசுவாய் எனும்வரையில்
மெளனம் சித்திரவதையானது
பேசவேமாட்டாய் எனும்போது
நானும் மெளனிக்கிறேன்.. !

சனி, மார்ச் 2

தொலைந்த வார்த்தைகள்

"இப்போதும் 
பேசிக்கொண்டுதானிருக்கிறோம்
மெளனங்களால்…"

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஏதோவொன்றை தேடிக்கொண்டுதானிருப்பார்கள். நான் வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

“புரிந்து கொள்ளப்படாத மொழி
மெளனம்”

வைகறைப்பொழுது, அந்திப்பொழுது, இரவுப்பொழுது, நடுச்சாமம் எந்நேரமும் வார்த்தைகள் என்மீது பிள்ளையார் எறும்பாய் ஊறிக்கொண்டுதான் இருக்கும். சிலநேரங்களில் காக்காய் கடிபோல் கடித்தும் என்மீது துப்பியும் விழுந்துகிடக்கும்.

”பலயுகங்களாய்
காற்றில் பறவைகள் எழுதிக்கொண்டுதான் இருக்கின்றன
தரையில் பல உயிரினங்கள் எழுதுகின்றன
நீரிலும் மீன்கள் எழுதிக்கொண்டுதான் இருக்கின்றன
எதுவும் புரியாமலே தாவரங்கள் தலையசைக்கின்றன”

எந்தப்புத்தகத்திலும் இல்லாத வார்த்தைகளை நான் தேடிக்கொண்டு இருக்கின்றேன். நிறையப்பேர் வார்த்தைகளை விற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். நான் அவற்றை எல்லாம் பொறுக்கிகொண்டு இருக்கிறேன்.

“ வார்த்தைகளுக்கும் கால் முளைக்கும்
பொய்பேசும்போது! “

வார்த்தைகளை கோர்த்துப் படிக்கும்போது அவை ரசிக்க வைக்கிறது. அது ரகசியக்காதலையும் எழுதிச்செல்கிறது.

“ நீ எழுதும் வார்த்தைகளில்
நிச்சயமாய் நானில்லாமல் இருக்கலாம்
ஆனால்..
உன் இதயத்தசைத் துளிகளில்
எங்கேனும் சிறிது ஒட்டிக்கொண்டுதானிருப்பேன் “

நமக்குத் தெரிந்த அத்தனை வார்த்தைகளையும் பேசித்தீர்த்துவிட்டோம். நான் உன்னிடம் கொஞ்சம் கடன் வாங்கிக்கூட பேசியிருக்கிறேன். வார்த்தைகளும் ஒருநாள் தீரும் என்பதை அறிந்துகொண்டேன். எனக்கான வார்த்தைகள் எங்கேனும் ஒழிந்து கொண்டிருக்கலாம். எனக்கான வார்த்தையை நீ எழுதியவற்றில் இருந்தே நான் அறிந்துகொண்டேன். அது மெளனம்…

”காதலித்துப்பார்
பேசிக்கொண்டே இருப்பாய்
காதலில் தோற்றுப்பார்
மெளனமாய் இருப்பாய்”






previous home