வியாழன், நவம்பர் 27

கையளவு நீர்

                   
ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பாடா! கொளுத்தும் வெயிலில் வெளியில் அலைந்துவிட்டு வீட்டில் நுழைந்து நாற்காலியை இழுத்துப்போட்டு அதில் அமர்ந்தேன். முன்னாடி மேஜையில் அன்றைய நாளிதழ் கிடந்தது. எடுத்து வழக்கம்போல் தலைப்புச்செய்தியாக வாசித்தேன். வழக்கமான செய்திகள்தான். மேஜையில் சின்ன டம்ளரில் நீர் இருந்தது. யாரும் அருந்திவிட்டு மீதம் வைத்திருந்தார்களா எனத் தெரியவில்லை. எடுத்து அருந்தலாமா என யோசித்தேன்.
                   அப்போது மெலிதாக சிரிப்பு சத்தம் கேட்டது. யாரென்று சுற்றும் முற்றும் பார்த்தேன்.  டம்ளரில் உள்ள நீர்தான் சிரித்தது. எனக்கு பயமாகிவிட்டது. பேய் ஏதாவது பிடித்திருக்குமோ என்று. சின்ன வயதில் அம்மா வெளி அறையிலிருந்து உள்ளே போய் கொஞ்சம் சொம்பில் தண்ணீர் கொண்டு வாடா என்றால்... முடியாது என்று மறுத்துவிடுவேன். உள் அறைக்குத் தனியாக சென்றால் பேய் பிடித்துக்கொள்ளும் என்ற பயம். நான்காம் வகுப்பு படிக்கும்போது யாருமில்லா ஒரு மதியப்பொழுதில் டவுசர் மாத்துவதற்காக கொடியில் கிடந்த டவுசரை எட்டி எடுத்தேன். அப்போது கிரீச் என்ற சத்தம். எங்கிருந்து வந்தது எனத்தெரியவில்லை. அலறியடித்து வாசலில் வந்து நின்றுகொண்டேன். பக்கத்துவீட்டு மாமா என்னடா.. அம்மணமா நிக்குற என்ற விசாரிப்பில் எனக்கு சின்னதாக ஒரு அவமானம்தான். இல்ல மாமா  டவுசர் கொடியில் கிடக்குது... எனக்கு எட்டல என்றேன். அவர் வந்து எடுத்துக்கொடுத்தார். உடனே டவுசரை மாட்டிக்கொண்டு வெளியில் ஓடிவந்துவிட்டேன். அந்த சத்தம் எனக்குள் இன்னும் ஒலிக்கிறது . பேயை நினைத்து பயந்ததுதான் காரணம்.
                      அப்புறம்  சூரியன் மறையும் ஒரு மாலைப்பொழுதில் மக்காச்சோளத்துக்காக காவல் காக்கும்போது ஏதோ சத்தம் கேட்டதற்காக பயந்து நடுங்கியிருக்கிறேன். பேயை நினைத்து பயந்துகொண்டிருக்கும் காலம் மாறவே இல்லை.
                    நண்பனின் அம்மா இறந்த அன்று நல்லமழை. மயானத்தில் சடலம் எரிந்துவிட்டதா என்று பார்ப்பதற்காக நாலைந்துபேர் சென்றார்கள். அவர்களுடன் நானும் மயானத்திற்கு சென்று அரைகுறையாக எரிந்த சடலத்தைப்பார்த்து பயப்படாத மாதிரி காட்டிக்கொண்டேன். உள்ளூர நடுங்கியது வேறுவிசயம். மயானத்திற்கு சென்றுவந்த வீரக்கதையை நீண்டநாட்களாக  நண்பர்களிடம் சொல்லி நானும் வீரமானவன்தான் பேய்க்கு பயப்படாதவன் எனக்காட்டிக்கொண்டேன்.
                    இப்போதுவரை பேயை பார்த்தது இல்லை. ஆனால் பேயை நினைத்து மனதில்  ஏற்படும் பயம் இன்றுவரை மாறவில்லை. இது இப்படி இருக்க திடீரென யாருமற்ற அறையில் சிரிப்பு சத்தம் கேட்டால் பயப்படாமல் இருக்க முடியுமா! டம்ளரில் இருக்கும் நீர் நான்தான் சிரித்தேன் என்றவுடன் பயத்தைவிட ஆச்சரியம்தான் அதிகமாகியது. நானில்லாமல் நீங்கள் இருக்கமுடியாது என்று தலைக்கனத்துடன் பேச ஆரம்பித்தது. நான் பூமியில் ஏறத்தாழ 2/3 மடங்கு இருக்கிறேன் என்று இருமாப்பு காட்டியது. எல்லோரும் என்னை நீர் என்று மரியாதையுடன் அழைப்பார்கள் என்று இன்னும் அகம்பாவத்துடன் கூறியது.
                 நானும் பொறுமையாக கேட்டுக்கொண்டு ஆமாம்! நீர் இல்லாமல் எங்களால் இருக்கமுடியாது என்பது உண்மைதான். ஆனால் உன்னை பயன்படுத்தத்தான் எங்களைப்போன்ற உயிர்களை கடவுள் படைத்தார் என்றேன். அது வாய்விட்டு சிரித்தது. நாங்கள் இல்லாத இடமே இல்லை. ஆறு, குளம், ஏரி, கிணறு, கடல் என்று எங்கும் வியாபித்திருப்போம். மழை பெய்யவில்லையென்றால் விவசாயம் பொய்த்து மனிதர்கள் இறக்கவேண்டிவரும் என்று அகம்பாவம் குறையாமல் கூறியது.
                 இவ்வளவு அகம்பாவத்துடன் பேசுகிறாயே.. நீ நல்லவர்களுடன் மட்டும் சேராமல் கெட்டவர்களுடனும் சேருகிறாய். யாருடனும் எளிதில் கலந்துவிடுகிறாய் என்றேன். அது என்னுடைய இயல்பு என்று நீர் கூறியது. எனக்கு எல்லோரும் ஒன்றுதான். எல்லோரும் எனக்கு கீழ்தான். நான்தான் உயர்ந்தவன் என்றது. நான் பொறுமையில்லாமல் அதன் கர்வத்தை அடக்க படக்கென்று டம்ளரை எடுத்து நீரை அருந்திவிட்டேன். 
                     இப்போது டம்ளர் சிரித்தது. நீ எதற்கு சிரிக்கிறாய் என்று வெறுப்புடன் கேட்டேன். மனித மனத்தை நினைத்து சிரித்தேன் என்றது. எல்லோரையும் அடக்கி ஆள நினைக்கும் மனம் மனிதனுக்கு மட்டுமே உண்டு என்றது.  எந்த ஒரு உயிரினமும்  பாத்திரத்திற்குள் நீரை அடக்குவதில்லை. மனிதன்தான்
 நீரை மட்டுமல்ல எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து அடக்குபவன். எல்லோரையும் அடக்கி ஆள நினைக்கும் நீங்கள்தான் அகம்பாவம் பிடித்தவர்கள் என்றது. அமைதியாக நான் தலை கவிழ்ந்து கொண்டேன்.