வெள்ளி, ஆகஸ்ட் 29

வேரறுந்த மரம்

             

                 முகமும் தளர்ந்திருக்கும் அவருடைய உடலும் மூக்கையா பிள்ளைக்கு எண்பெத்தி எட்டு வயதிருக்கும் எனக்காட்டியது. தன்னுடைய நான்கு பிள்ளைகளில் ஏற்கனவே இரண்டு பிள்ளைகளைப் பறிகொடுத்து விட்டிருந்தார். இப்போது அறுபத்தைந்து வயதான தனது மூத்த பிள்ளையும்  ஹார்ட் அட்டாக்கில் உயிரை விட்டிருந்தபடியால் கொஞ்சம் கண்ணீரோடு வாசலில் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் சேரில் அமர்ந்திருந்தார் மூக்கையா பிள்ளை. 

                மூக்கையா பிள்ளை அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர்களுக்கெல்லாம் ஓரளவு தெரிந்த பெரிய மனிதர்தான். இருந்தாலும் வீம்பும் பிடிவாதமும் பிடித்தவர். கதர் சட்டை வேட்டிதான் அணிவார். இன்றும் அந்த ஆடையைத்தவிர வேறு அணிந்ததில்லை. ஒரு காலத்தில் வியாபாரத்தில் உச்சத்தில் இருந்தார். தன்னுடைய பணத்தை எல்லாம் நிலங்களாக வாங்கி குவித்திருந்தார். இன்னும் மண்ணாசை அடங்கவில்லை.

                  பிள்ளைகள் நான்கு பேரும் அவ்வளவு வசதியானவர்கள் என்று சொல்லிவிட முடியாது. இரண்டு பெண் பிள்ளைகள் கல்யாணம் முடித்துக்கொடுத்து மாப்பிள்ளைகளின் தயவில் சந்தோசமாக குடும்பம் நடத்திவிட்டு பிள்ளைகளையும் பெற்று சின்ன வயதிலேயே நோயின் காரணமாக அடுத்தடுத்த சில வருடங்களில் இறந்துவிட்டனர்.

              மூக்கையா பிள்ளை தன்னுடைய மனைவி இருந்தவரை கம்பீரமாக சுற்றித்திரிந்தவர். தன்னுடைய பணத்தினை யாருக்காகவும் செலவழிக்காதவர். தன் உடம்பு சரியில்லாவிட்டால்கூட பணம் தராமல் சரியாகவேண்டும் என நினைப்பவர். இப்போதுகூட இறந்த தனது மூத்த பிள்ளையின் மருத்துவ செலவுக்குகூட சல்லிக்காசு செலவழிக்காதவர். மூத்த பிள்ளையின் மனைவிக்குச் சொல்லி அழக்கூட உறவினர்கள் யாருமில்லை. அமைதியாக வழியும் கண்ணீரோடு கணவனை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

          துக்கம் விசாரிக்க வந்தவர்கள் அனைவரும் மூக்கையா பிள்ளையை மறைமுகமாக வசைபாடிக்கொண்டிருந்தனர். 

                        ”இம்புட்டு பணத்தையும் வச்சுக்கிட்டு மனுசன் என்ன பண்ணப்போறாராம்.

                                        இவர் மட்டும் கொஞ்சம் பணம் செலவழித்திருந்தால் இதய ஆப்பிரேஷன் பண்ணி அவரைக்காப்பாற்றி இருக்கலாம். வயசாக வயசாக இம்புட்டு பிடிவாதம் இருக்கக்கூடாது”

                 புள்ளைகளுக்குகூட உதவாத அந்தப்பணம் எதுக்கு! 

                       நிலமா வாங்கி குவிக்கிறாரே! இவரு சாகுறப்போ கொண்டா போகப்போகிறார்!  என்று ஆளாளுக்கு அவரைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தனர்.

                        எந்தச் சலனமும் இன்றி மூக்கையா பிள்ளை அமர்ந்திருந்தார். இறந்த உடலை தூக்குவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

                  மூக்கையாபிள்ளையின் பால்ய தோழரான சுப்பையா நாயக்கர் துக்கம் விசாரிக்க அப்போதுதான் காரில் வந்து இறங்கினார். அவரும் மூக்கையாபிள்ளைக்கு ஈடான வசதி படைத்தவர்தான். பிள்ளைகளை நன்கு படிக்கவைத்து நல்ல வேலையில் அமர்த்தி திருமணமும் முடித்துக் கொடுத்துவிட்டார்.

                 அவரைப்பார்த்தவுடன் மூக்கையாபிள்ளைக்கு ஒரு பக்கம் சந்தோசம். அவருடைய இடம் ஒன்றினை ஏற்கனவே விலைக்கு கேட்டிருந்தார். அதை வாங்குவதற்கான சந்தர்ப்பம் இதுவரை அமையவில்லை. அந்த எண்ணம் மூக்கையாபிள்ளையின் மனதில் ஓடி மறைந்தது. சில சம்பிரதாய விசாரிப்புகளுக்குப்பின் சுப்பையா நாயக்கர் அவசர வேலை இருப்பதாகக்கூறி கிளம்பிவிட்டார்.

                     உறவினர்கள் அனைவரும் வந்து சேர்ந்திருந்தனர். பொழுது சென்றுகொண்டிருந்தபடியால் உடம்பினை சீக்கிரம் தூக்கவேண்டும் என்றனர். அனைவருக்கும் பசி வேறு வயிற்றைக்கிள்ளியது. வந்தவர்களுக்கும் அழுது கொண்டிருப்பவர்களுக்கு சுக்கு காப்பி கொடுத்தால் நல்லாயிருக்கும் என்று தோன்றியது. மூக்கையா பிள்ளையிடம் உறவினர் ஒருவர் கொஞ்சம் பணம் கொடுங்கள்... வந்தவர்களுக்கு காப்பித்தாண்ணி வாங்கித்தரனும் என்று கேட்டார். அதெல்லாம் எதுக்குய்யா.. இப்போதான் கிளம்பிருவோம்ல.. என்று மூக்கையா பிள்ளை மறுத்துவிட்டார். உறவினர் முணுமுணுத்துக்கொண்டே துண்டை வாயில் பொத்தியபடி மரப்பெஞ்சின் ஒரு ஓரத்தில் அமர்ந்துவிட்டார். மற்ற செலவுகளை இன்னொரு மகன்தான் செய்து கொண்டிருந்தார்.

                 உடம்பு தூக்கப்பட்டது. மலர்களைத் தூவி விட்டபடி முன்னாடி ஒருவன் செல்ல உடம்பின் பின்னே அனைவரும் வரிசையாகச் சென்றனர். மூக்கையா பிள்ளையும் மெதுவாக நடந்து சென்றார். இப்போது மனதில் சுப்பையா நாயக்கர்தான் இருந்தார். அவரின் இடத்தை வாங்குவதற்கு இன்னும் கொஞ்சம்தான் பணம் தேவை. என்ன செய்யலாம் என்ற யோசனையிலேயே வந்தார்.

                 மயானத்தில் எல்லாச்சடங்குகளும் முடிந்து கொள்ளி வைக்கப்பட்டது. 
                             மூக்கையாபிள்ளைக்கு திடீரென ஒரு யோசனை வந்தது. இறந்த மூத்த மகன் கொடுத்து வைத்திருந்த பணம் இவரிடம்தான் இருந்தது. அதையும் சேர்த்தால்  எப்படியும் சுப்பையா நாயக்கரின் இடத்தை வாங்கி விடலாம் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

                தீ இப்போது ”மளமளவென..” எரியத்தொடங்கியிருந்தது.

வெள்ளி, ஆகஸ்ட் 22

குண்டுப் பெண்


கடந்த பத்தாயிரம்
ஆண்டுகளில் எந்த நாட்டின்
மீதும் இந்தியா
போர்தொடுக்கவில்லையாம்
நான் ஒவ்வொரு மணித்துளியும்
தொடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன்
விட்ட அம்புகள் எல்லாம்
என் விலா எலும்பில்
சரியான ஆசான்தான்
இல்லையோ என்ற 
சந்தேகம் எனக்கு
வளைந்த பெண் பற்றி 
வகுப்பெடுத்தவன் நான்
நீ கொஞ்சம் உடம்பைக்குறை
என்றால்
நீ கொஞ்சம் சதை வை
என்கிறாய்
உலகில் என்றுமே நடக்க 
வாய்ப்பில்லாதவை இவை
போர் வீரன் என்று
பெயரெடுக்க நினைத்தால்
என்னை சரியான 
‘போர்’ வீரனாக்கி விடுகிறாய்
என்னுடன் விழிச்சண்டைக்கு வா
ஒற்றைக்கு ஒற்றையாய்
சற்றே பொறுத்திரு
இன்னும் கொஞ்சம் எனது
அம்பை கூர்மையாக்கிவிட்டு
வருகிறேன்
கூரியவற்றை எல்லாம் வெல்லும்
காதல் வீரனாய்..!



செவ்வாய், ஆகஸ்ட் 19

கூச்சம்

                

              கூச்சம் எல்லோருக்கும் பொதுவானது. தோல், பாதம், உள்ளங்கை போன்றவற்றில் தொடு உணர்வு செல்கள் அதிகம் உள்ளன. இதில் அவற்றின் மேற்போர்வை இல்லை. அதனால் குறைந்தபட்ச தூண்டல்களையும் துல்லியமாகக் கடத்தும் திறன் பெற்றுள்ளன. காதலியின் இடுப்பு, கன்னம், பாதம், உள்ளங்கையை வருடுவது சுகமான அனுபவம்தான். இந்தக்கூச்ச உணர்வு மனிதர்களுக்கு இல்லையென்றால் சந்தோஷம் என்று ஒன்று காணாமல் போயிருக்கும். எல்லோருமே மரத்துப்போய் அலைவார்கள்.  குழந்தைகளுக்கு இந்த கூச்ச உணர்வு சற்று அதிகமாக இருக்கும். 

                                        இதைப்பற்றிய 1996ல் வெரியர் எல்வின் எழுதிய உலகம் குழந்தையாக இருந்தபோது என்ற நூலில் ஒரிஸாவைச் சேர்ந்த கொண்டர் இனமக்கள் கூறிய கதை இது. ஆதி காலத்தில் குஷி உண்டாக்கும் கூச்ச உணர்ச்சி மக்களிடம் இல்லாத போது அவர்கள் ஒழுக்கத்துடன் இருந்தனர். சேர்ந்து உட்கார்ந்து, பொறுப்புணர்ச்சியுடன் தத்தம் கடமைகள் பற்றியும், தம் பயிர் விளைச்சல் பற்றியும் பேசினர். இப்போதுபோல அர்த்தமற்ற சிரிப்போ, தேவையற்ற வேலையோ எதுவுமில்லை.

              நிரந்தலா எனும் தேவதைக்கு இது அலுப்பாக இருந்ததாம். இநதச் சாரமற்ற வாழ்க்கையை சற்றே மாற்றி, வாழ்வில் வண்ணம் சேர்க்க நினைத்தது. காட்டுக்கு போய் மெழுகு எடுத்து, கூச்ச உணர்ச்சியை வெளிப்படுத்தும் உயிர் வண்டு ஒன்றை உருவாக்கியது.ஆம்,  குழந்தைகளின் வயிற்றுக்குள் இந்த வண்டைச்செலுத்தியது. “உள்ளே போனது மோவாய் அடியில், அக்குள், விலா அருகில் வசித்து வா, யாராவது தொட்டால் உள்ளே ஓடு, அவர்களுக்கு கூச்சமும், சிரிப்பும் வரும் என்று தேவதை கூறியதாம். வண்டும் அவ்வாறே செய்தது.

                 எட்டு நாட்கள் கழித்து வண்டு நுழையப்பெற்ற ஆண், பெண்களைக்காணச்சென்றது. பொறுப்புணர்ச்சி மறைந்து எங்கும் காதல் வாழ்வும், சிரிப்பும் நிறைந்திருந்தது. ஒரு பெண்ணின் இடுப்பைத்தொட பெண் சிரித்துக்குலுங்கினாள்.

                இந்த அர்த்தமற்ற சிரிப்பும், கூச்சமும் இப்படித்தான் தொடங்கினவாம். நிரந்தலா தேவதை இல்லையென்றால் காதலியை எங்கே தொட்டாலும் கூச்சமிருக்காது. எரிச்சல்தான் படுவாள். வாழ்க நிரந்தலா... வாழ்க..வாழ்க...

சனி, ஆகஸ்ட் 16

கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு

               கருப்பு - நிறங்களின் இல்லாமை. இது ஒரு நிறமல்ல. வெளிச்சத்தின் முந்தைய நிலை. வெயிலின் தாக்கம் அதிகமுள்ள பகுதிகளில் கருப்பின் தாக்கம் அதிகம்தான். சிவப்பாக்கும் கிரீம்கள் அதிகம் விற்பதும் இந்தவகை நாடுகளில்தான். கோவில் சிலைகளின் வண்ணம்கூட கருமைதான். பார்ப்பதற்கு அழகு தருவதும் அதுதான். சிலைகளை கருப்பாக்கவே எண்ணெய் வழிபாடு. கரிய மேகமும் அழகுதான். துக்கம், மரணம் போன்றவற்றைக் குறிக்கவும் கருப்பு பயன்படுகிறது.

”கண்ணா கருமை நிறக்கண்ணா
உன்னைக்காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை
கண்டு வெறுப்பாரில்லை...”

”கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு..” போன்ற பல சினிமாப்பாடல்கள் கருப்பை புகழ்கின்றன.



            கிருஷ்ணா என்ற சொல்லுக்குகூட கருமை என்றுதான் அர்த்தமாம். கிருஷ்ண, ஷ்யாமள,நீளா எல்லாமே வடமொழியில் கருப்பு நிறத்தைத்தான் குறிக்கும். நீளம் என்பது வெளிச்சம் இல்லாத ஒரு நிலைதான். சூன்யம் என்றுகூடக்கொள்ளலாம். கடவுள்களில் காளியும் , காமாட்சியும் கூட கருப்புதான்.   நீதிமன்றங்களில் கருப்பு அங்கிதான் அணிகின்றனர். சிலர் கருப்பை வெறுக்கவும் செய்கின்றனர். நிறவெறிதான் இது. நிறத்தை வெறுத்தால் அவன் மனிதனே அல்ல. மனிதமனம் அத்துனை நிறத்தையும் ரசிக்கும் ஆற்றல் பெற்றது. ஒவ்வொரு சூழலுக்கு ஒவ்வொரு நிறம் அழகு. அயல் மகரந்தச்சேர்க்கை நூலில்  அப்துல் காதர் கருப்பு பற்றிய கவிதையில் அழகாக எழுதியுள்ளார்.

”ஏசுவே!
மீண்டும் நீ
பிறந்து வருவாய் எனச்
சுருதி வேதங்கள்
உறுதி கூறுகின்றன.
மீண்டும் பிறந்தால்
கர்த்தரே!
கருப்புநிற ஏசுவாகப் பிறக்க வேண்டாம்!
ஏனெனில் உன்னையும் அவர்கள்
உள்ளே அனுமதிக்கப் போவதில்லை!”
--------------------------------------------------
பெண்ணே!
உன் முகம்
ரோஜாத்தோட்டம்தான்
இருந்தாலும்
அந்தக் கருப்பு மச்சம்
நீக்ரோ
தோட்டக்காரனைப்போல’


    நானும் கல்லூரிக்காலங்களில் எப்படியாவது சிவப்பாகவேண்டும் என்ற நம்பிக்கையில் அதிகம் உபயோகித்து எந்த பலனுமில்லால் பல கிரீம்களை ஒதுக்கிவிட்டேன். பணமும் நேரமும் செலவழிந்ததுதான் மிச்சம்.  இயற்கை தந்த கொடை கருப்பு. கருப்பு மச்சம் பிடிக்கிறது. உடம்பே மச்சமாயிருந்தால் பிடிக்காமலா போய்விடும்.ரோஜாவில்கூட கருப்பு ரோஜா என்கின்றனர். ஆனால் பார்த்ததில்லை. அதன்பின்பு கருப்புதான் எனக்கு பிடித்த நிறமானது. வேறுவழி? இரவும்கூட கருப்புதான். காதலியுடன் இருக்கும் நேரங்களில் கரிய இரவுதான் பிடிக்கிறது. என் காதலியுடன் அவ்வப்போது அருந்தும் கருப்பு தேநீர்கூட பிடித்தமான ஒன்று. அதன் சுவை மட்டுமல்ல. அதன் நிறமும்கூட.

கருப்பு
எனக்குப் பிடிக்காத ஒன்று
என் கருப்பு காதலியைத் தவிர!



        என்றேனும் கருப்பு வானவில் தோன்றுமா என்று மழை பெய்து ஓய்ந்த பொழுதுகளில் வானத்தை அண்ணாந்து பார்த்ததுண்டு.
கருப்பு வெறும் நிறம் மட்டுமல்ல. ஆண்டவன் கொடுத்த வரம்.
உழைப்பாளியின் கருப்பு நிறத்தை ரசிக்காமல் நாம் உணவு உண்டால் ஜீரணமாகாது.  கருப்பு தங்கம் என்கின்றனர். தங்கத்தில் கருப்பு உண்டா எனத்தெரியவில்லை. கருப்பு வைரம் உண்டு போல. யாரையும் எதிர்ப்பதற்கு கருப்பு கொடி காட்டுகின்றனர். அசம்பாவிதம் நடந்த நாட்களை கருப்பு தினம் என்கின்றனர். முடிகூட கருப்பாயிருப்பதற்கு எத்தனையோ மெனக்கிடல்கள். ஒரு நரை வந்தாலும் அலறியடிக்கிறோம். உயரமான சற்றே கருமை நிறமுடைய பெண்களின் அழகுக்கு ஈடே இல்லை. கொஞ்சம் கலரான பெண்கள்கூட கருப்பு நிற புடவையில் சற்று கூடுதல் அழகாகவே தெரிவார்கள். என் கண்களுக்கு மட்டுமா எனத்தெரியவில்லை.
    வேலை செய்து அலுத்துத் தூங்கும் வேலையில் அங்கு கருப்புதான் இருக்கிறது. அதுதான் நிம்மதியும் தருகிறது. கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு.

வெள்ளி, ஆகஸ்ட் 15

தேவை ஒரு மணப்பெண்


தேவை
ஒரு மணப்பெண்
கொஞ்சம் அழகுடன்
நிறைய பொறுமையுடன்

கல்யாண வியாபாரத்தில்
அதிக தொகைக்கு யாராவது
அவனை ஏலம் எடுத்துக்கொள்ளுங்கள்

உன்னை முடிந்தவரை நகைகளால்
உன் வீட்டிலிருந்து பூட்டிக்கொள்
எதற்கென்று கேட்காதே
தேவை உனக்கு பொறுமை

வீட்டிற்கு தேவையான
அத்தனையும் சீராய் கொண்டுவந்துவிடு
எல்லாம் நானே என்றால்
அவன் எதற்கு 
என்று எதிர்கேள்வி கேட்காதே
தேவை உனக்கு பொறுமை

இரவுப்பசிக்கு உன்னைக்கேட்காமல்
எடுக்க அனுமதி
ஏனென்று கேட்காதே
தேவை உனக்கு பொறுமை

புகுந்தவீட்டில் எல்லோரையும்
அனுசரித்துப்போ
ஏனென்று கேட்காதே
தேவை உனக்கு பொறுமை

வீட்டு வேலைகள் அத்தனையும்
எதிர்கேள்வி கேட்காமல் செய்துவிடு
தேவை உனக்கு பொறுமை

ஏன் லேட்டு 
ஏன் குடித்தாய்
சம்பளம் எங்கே
எதையும் கேட்டுவிடாதே
தேவை உனக்கு பொறுமை 

அவனின் காலை அமுக்கிவிடு
பாவம் அவன் மட்டும்தானே
நாளெல்லாம் வேலை பாக்குறான்
தேவை உனக்கு பொறுமை 

உன் உடல்நலத்தை உடைத்து
குடும்பத்தாரின் உடல்நலம் பேண்
தேவை உனக்கு பொறுமை 

இப்படிப்பட்ட குணவானுக்கு
தேவை ஒரு மணப்பெண்
கொஞ்சம் அழகுடன்
நிறைய பொறுமையுடனும்..!



ஞாயிறு, ஆகஸ்ட் 10

கொட்டாவி, ஏப்பம், தும்மல், விக்கல், பொறை, இருமல்

              மனிதனுக்கு ஏற்படும் கொட்டாவி, ஏப்பம், தும்மல், விக்கல், பொறை மற்றும் இருமல் இவை எல்லாமே நம் உடற்செயல் நிகழ்ச்சிகள் சரிவர நடைபெறுகின்றன என்று தெரிவிக்கின்ற உடற்செயலியல் பிரதிபலிப்புகள்தான்.
கொட்டாவி : 
ஆவ்வ்வ்வ்வ்..... நமக்கு களைப்பு ஏற்படும்போதும், மூளை சோர்வடையும் போதும் நமக்கு அறிவிக்கும் செயல் கொட்டாவி ஆகும். கோடைகாலத்தைவிட குளிர்காலத்தில் மக்கள் அதிகமாக கொட்டாவி விடுகின்றனர். ரத்தத்தில் கார்பன் டை ஆக்ஸைடு அளவு அதிகரிக்கும்போதும் கொட்டாவி வரலாம். நாம் உள்ளிழுக்கும் காற்று ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்க துணை புரியலாம் என்கிறது ஒரு ஆய்வு. கொட்டாவி விடுபவர்களைப் பார்த்தாலே கொட்டாவி வரலாம். இம்புட்டு ஏன்.. கொட்டாவின்னு டைப் பண்ணும்போதே ஆவ்வ்வ்வ்வ்... எனக்கு கொட்டாவி வருகிறது. கொட்டாவி ஒரு தொற்றுச்செயல்.

TRB RESULT

முதுகலை பட்டதாரி ஆசிரியர் (POST GRADUATE TEACHER) மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
Paper II subject wise PDF File
Paper II Individual Query
PG Individual Query
PG SubjectWise PDF File