சனி, அக்டோபர் 24

பேய்க்கதை

                      ஒரு பேய்க்கதை எழுதலாம் என்று ஆசையாக மேஜையின்முன் அமர்ந்தேன். எப்படி ஆரம்பிப்பது எனத்தெரியவில்லை. பேய்க்கதைகள் நிறையப் படித்துள்ளேன். பேய்ப்படங்களும் பார்த்துள்ளேன். ஆனால் பேய் என்று எதையும் நேரிடையாகக் கண்டதில்லை. ஆனாலும் பேய் பற்றிய பயம் மனதில் எப்போதும் உண்டு. கொஞ்சம் பேப்பரும் ஒரு பேனாவையும் எடுத்து வைத்துக்கொண்டு தைரியமாக அமர்ந்தேன். அப்படியே எனக்குத்தெரிந்த ஒவ்வொரு பேய் சம்பவமாக ஞாபகப்படுத்திப் பார்த்தேன்.

                       நான் சிறுவனாக இருந்தபோது ஒரு இரவு வேளையில் துக்க செய்தி ஒன்று சொல்வதற்காக என்னையும் மற்றொரு பையனையும் பக்கத்தில் உள்ள துலுக்கன்குளம் ஊருக்கு அனுப்பிவிட்டார்கள். அப்போது தொலைபேசி வசதியெல்லாம் கிடையாது. அது ஐப்பசி மாதம் என்று நினைக்கிறேன். மழைவரும்போல இருந்தது. இரவு மணி ஒன்பது அல்லது ஒன்பதரை இருக்கலாம். காற்று கொஞ்சம் பலமாக வீசியது. எங்கள் ஊருக்கும் துலுக்கன்குளத்திற்கும் இடையில்தான் மயானம் உள்ளது. எனக்கு மனதில் பயமிருந்தாலும் கூடவே ஒரு பையனும் வருகிறான் என்ற தைரியத்தில் கிளம்பியாச்சு. மயானம் நெருங்கும்போது திரும்பிப்பார்க்ககூடாது என்று நினைத்தாலும் மயானம் பக்கம் திரும்பிப் பார்த்தேன். பிணம் ஒன்று எரிந்துகொண்டிருந்தது. மனதில் கிலி பிடித்தது. சைக்கிளை சற்று வேகமாக மிதித்தேன். கிழக்குப்பக்கம் இருந்து வீசிய காற்று சைக்கிளை நகரவிடவில்லை. மனதிற்குள் இனம்புரியாத பயம். பேய் வந்து சைக்கிளைப் பிடிக்குமோ! முடிந்தமட்டும் பெடலை மிதித்தேன். சைக்கிள் மெதுவாக நகர்கிறது. டேய்! முருகேசா.. என்று அவனை அழைத்தேன். அவன் ம்ம்.. என்ற சத்ததுடன் பயந்து என் சைக்கிளின்பின் அவன் ஒரு சைக்கிளில் வருகிறான். எப்படியோ பயத்துடனே துலுக்கன்குளம் சென்று செய்தியை சொல்லிவிட்டு ஊருக்குத்  திரும்பினோம். 

                        இப்போது மணி பதினொன்று இருக்கும். திரும்பவும் மயானத்தின் வழிதான் வரவேண்டும். இப்போது பயம் மனதில் அதிகரித்திருந்தது. வயிற்றுக்கும் தொண்டைக்கும் ஒரு உருண்டை உருண்டு கொண்டிருந்தது. அவனை முன்னே போகச்சொல்லி நான் பின்னாடியே வந்தேன். இப்போது மயானத்தில் தீ மளமளவென்று எரிந்து கொண்டிருந்தது. வெள்ளையாக புகை வேறு வந்துகொண்டிருந்தது. ஏதோ சினிமா பாடலை சத்தமாக பாடியபடி பயத்தைக் காட்டிகொள்ளாமல் ஊர்வந்து சேர்ந்தோம். 

                இதேபோல பள்ளிப்பருவத்தில் ஒருநாள் இரவு எங்கள் பாட்டி ஒரு பேய்க்கதை சொன்னாள். அது கதை என்று சொல்லவில்லை. நிஜ சம்பவம் என்று கூறினாள். எனக்கு ஆவாத்தா பாட்டி ஒருத்தி இருந்தாள். அவள் அதிகாலை நான்கு மணிக்கு குப்பை போடுவதற்காக ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடத்திற்கு சென்றாள். அப்போது கொள்ளிவாய் பேய் ஒன்று வந்து ஆவாத்தா பாட்டியின் காதில் கிடந்த நகையை பறித்துக்கொண்டது( திருட்டு கொள்ளிவாய் பேய்). அவள் பயந்து ஓடிவந்து தனது கணவனிடம் கூறினாள். 

                            அவர் என்னைப்போல் இல்லாமல் கொஞ்சம் தைரியசாலி. உடனே ஒரு போர்வையை போர்த்திக்கொண்டு அந்த இடத்திற்கு சென்றார். கொள்ளிவாய் பேய்கள் அந்த நகையை நடுவில் வைத்து சுற்றிநின்று ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தனவாம். இவரும் போர்வையைத்தூக்கி எறிந்துவிட்டு தனது வேஷ்டியை அவிழ்த்துப் போட்டுவிட்டு பேயோடு பேயாக கூட்டத்துடன் சேர்ந்து ஆடினாராம். நகையை ஒவ்வொரு பேயாகத் தூக்கிப்போட்டு விளையாடினவாம்.  இவரிடம் நகை வந்தவுடன் ஒரே ஓட்டமாக தூக்கிக்கொண்டு ஓடிவந்து விட்டாராம். 

                     இப்படியாக யோசனை செய்யும்போதுதான் வீட்டில் யாருமேயில்லை என்பது ஞாபகம் வந்தது. இப்போதும் ஐப்பசி மாதம்தான். காற்று ஊ... என்று ஊளையிட்டதுபோல வீசியது. லேசாக தூறல் விழுந்து கொண்டிருந்தது. மனதில் பயம் வந்துவிட்டது. உடம்பு பயத்தில் லேசாக புல்லரித்தது. அந்த நேரம் பார்த்து கரண்ட் கட்டாகிவிட்டது. பயத்துடன் சென்று பேட்டரியை எடுத்தேன். ஜன்னல் கதவு  மூடியுள்ளதா எனப் பார்த்துவிட்டு திரும்பவும் வந்து நாற்காலியில் அமர்ந்தேன். ஊது பத்தியின் மணம் காற்றில் கலந்து வந்தது. அது மல்லிகைப்பூவின் வாசம் தந்தது. பேயினைப்பற்றிய பயம் மனதில் வந்துவிட்டது. லேசான நடுக்கத்துடன் கரண்ட் எப்போது வருமோ என்று காத்திருந்தேன். பேய்க்கதை இன்னைக்கு எழுதவேண்டாம் என்ற முடிவுடன் அமர்ந்து இருந்தேன். சற்றுநேரத்தில் கரண்ட் வந்துவிட்டது. அப்பாடா!! என்று மேஜையில் இருந்த பேப்பரை பார்த்தேன். அதில் மேலேகண்ட பேய்க்கதை எழுதப்பட்டிருந்தது.

வெள்ளி, அக்டோபர் 2

குழந்தைநிலா ஹேமா

குழந்தைநிலா ஹேமா என்ற பெயரை பதிவுலகில் அனைவரும் அறிந்திருப்பர். வானம் வெளித்த பின்னும் என்னும் வலைப்பூவில் 2008 முதல் கவிதைகள் எழுதி வருகிறார். கவிதைகள் மட்டுமே என்பது கூடுதல் சிறப்பு. இவரின் வார்த்தை பிரயோகங்களைக்கண்டு வியக்காதோர் இருக்க முடியாது.ஒவ்வொரு கவிதையும் படிப்போரின் மனநிலைக்கு ஏற்ப அவர்களுக்கே பொருந்தியதுபோல இருக்கும். தமிழில் இவ்வளவு வார்த்தைகளா என நம்மை ஆச்சரியப்படவும் வைக்கும். இளமை விகடன், திண்ணை, அதீதம்,உயிரோசை, இன்னும் பல இதழ்கள், இணையதள இதழ்கள் போன்றவற்றில்இவருடைய கவிதைகள் வந்துள்ளன. இவருடைய கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இனிப்பு ரகம்.காதல், ஈழம், நகைச்சுவை, குடும்பம், நட்பு, விரக்தி என பல தலைப்புகளில் கவிதைகள் எழுதி திகைக்க வைப்பவர்.இவர் எட்டு வயதிலேயே எழுதிய வாழ்த்து மடல் இதோ...

சின்னஞ்சிறு
பறவை சிறகிருந்தால்
பறந்துவரும்
இன்னும் பிரிந்திருக்க
இயலாமல் வாடுகின்றோம்
அன்பே பிறந்தீரே
அனைத்தும் பெற வாழ்த்துகின்றோம்..
அன்பு மனம் அண்ணா
ஆசை மனம் அக்கா
இங்கிருந்து வாழ்த்துகிறோம்
அங்கிருந்து நலம் பெறுவீர்...

இவரின் முதல் கிறுக்கல் இதுதான். கவிதை வாசிப்பில் ஆர்வம் இருப்போர் இவரின் வலைப்பூ சென்று வாசியுங்கள். நிச்சயம் வியப்பில் ஆழ்ந்துதான் போவீர்கள். வலைப்பூவில்(இதழ்கள் தவிர்த்து) 700க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார். இன்னும் இவரைப் பற்றி நிறைய எழுதலாம். தமிழின்மீது ஆர்வம் உள்ளவர்கள் குழந்தைநிலா ஹேமாவை வாழ்த்துங்கள். அவரைப்பற்றிய சுய அறிமுகத்தில் புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. .நட்போடு ஹேமா.உயிரோசையில் இவர் எழுதிய அவள் அப்படித்தான் எனும் கவிதை

விதிகளை நிர்ணயிக்கும்
நூதன மாத்திரைகளை
விழுங்கியிருந்தாள் அவள்.
வேம்புக் குயில்
மூங்கிலுக்குள் சாரம் அனுப்ப
சுவைத்தவன் நாக்கில்
ஒட்டிக்கொள்கிறது கசப்பு.
மூக்கடைத்திருப்பவனிடம்
மணங்கள் பற்றிக் கேட்டால்...
சகாயங்களேதும் செவிநுழையா
சஞ்சாரப்  பொழுதுகளில்
வெள்ளைச்சுருட்டு
சுட்டுப் புகைக்கிறாள்
சூரியக் கண்களில்.
மூங்கிலிசைத் துவாரம்
நொதித்து நிறம்மாற
நோய் எதிர்ப்புச்சக்தி
அதிகமாய்த் தேவையென
முறைப்பாடு வைக்கிறாள்
மாத்திரைக்கும் 
பின் அவனுக்குமாய்!!!

இதுபோன்ற அறுசுவைகளையும் ருசிக்க வானம் வெளித்த பின்னும் என்னும் அவரின் வலைப்பூ சென்று வாசியுங்கள். நன்றி...