செவ்வாய், மே 13

பூப்பதெல்லாம்...

      ஓவியா பதிப்பகத்தார் வெளியிட்ட விமலனின் “பூப்பதெல்லாம்..” என்ற சிறுகதைத்தொகுப்பினை சமீபத்தில் படித்தேன். அது சிறுகதைத்தொகுப்பு என்பதைவிட நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கும் சகமனிதர்களைப் பற்றியது எனச் சொல்லலாம்.
    விருதுநகர் மாவட்டத்தைச்சேர்ந்த விமலன் பாண்டியன் கிராம வங்கியில் பணியாற்றுகிறார். இவரின் சிட்டுக்குருவி என்ற வலைப்பூவில் சமூகம் சார்ந்த பதிவுகளை தொடர்ச்சியாக எழுதிவருகிறார். நல்ல மனிதரும்கூட.. இவரின் முந்தைய வெளியீடுகள் வம்சி பதிப்பகத்தின் “காக்காச்சோறு”, அலமேலு பதிப்பகத்தின் “தட்டாமாலை”, வம்சி பதிப்பகத்தின் “வேர்களற்று”..


   அவரின் பதிவுகள் பெரும்பாலும் வாழ்வியல் சார்ந்தும் நம்மோடு பயணிக்கும்படியான தொனியில் கதைகள் அமைந்திருக்கும். தேநீர்கடை, சலூன்கடை, பலசரக்குக்கடை, மில் தொழிலாளர்கள் என்று நாம் அன்றாடம் பழகும் மனிதர்களைப்பற்றியும் அவர்களின் எளிமையான வாழ்க்கையையும் பதிவு செய்திருப்பார்.
    பூப்பதெல்லாம்.. என்ற இந்த நூலில் “பரந்து விரிந்து கிடந்த கரிசல் பூமியில் சட்டையில்லா வெற்று மேனியில் இறுக்கிக்கட்டிய தார்ப்பாய்ச்சியுடன் விதை தூவிப்போய்க்கொண்டிருந்த பாலா அய்யாவின் பின்னால் நானும், கிட்ணண்ணனும், பெரியாம்ளயும் ஒன்றன்பின் ஒன்றாகவும், வரிசை காட்டியுமாய் ஏர்பிடித்து விதைப்பு உழவு உழுதுபோன காலங்களும்… “ என்கிற விதமாய் இவரைப்பற்றி அறிமுகப்படுத்திக்கொள்ளும் பாங்கு நம்மோடு வாழும் சகமனிதனின் கதையை சொல்லப்போகிறார் என்ற எண்ணத்தினை நமக்கு கொண்டுவருகிறது. 
    வெல்லக்கட்டி என்ற கதையில் ”உப்புமீது துவரம்பருப்பும், பருப்புமீது அரிசியும் அரிசிமீது காய்கறிகளும், எண்ணெய் டின்னின்மீது வெல்லக்கட்டிகளும்..” என்று காசியப்பனின் கடையினை விவரித்திருக்கும் பாங்கு நான் சிறுவயதில் எங்கள் ஊரில் பார்த்த கடையினை அப்படியே காட்சிப்படுத்துகிறது.
    வல்லினம், மெல்லினம் என்ற கதையில் ஆயில் மில்லைப்பற்றியும் அதில் வேலைபார்க்கும் மனிதர்களையும் கண்முன் கொண்டுவருகிறார்.
ஒவ்வொரு கதைக்கும் வைத்திருக்கும் பெயர் வித்தியாசமானதுதான். வாட்டர் ஸ்பிரெயர், ஸ்கிரீன் ஷேவர், சுழியிடம், கத்தரிப்பான், விலாசம் என்று பட்டியல் நீண்டுகொண்டிருக்கிறது.
    நாணல் புல்.. ஒரு பெண்ணின் மீள் நினைவுகள், அவள் சேலைகட்டியிருக்கும் பாங்கு அந்த சேலையின் நிறம், டீக்கடையில் அவள் வந்துபோகும் காட்சிகள் நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் கதைக்குள்ளிருந்து நிஜ உலகத்திற்கு கொண்டுவந்துவிடுகிறது.
     இன்னும் நிறைய சொல்லலாம். மொத்தம் 21 கதைகள். ”மேனிபருத்த வேப்பமரம் – அது உதிர்த்த பூக்கள், மஞ்சளும் வெள்ளையும் கலர் காண்பித்து கிடப்பவைகளை இன்று எப்படியும் கூட்டிவிடவேண்டும். நேற்று நினைத்து முடியாமல் போனதை இன்று செயலாக்கிவிட வேண்டும். பூப்பவையெல்லாம் காய்க்குமானால் தாங்குமா மரம்?”

     இந்தப் புத்தகத்தில் பூத்த பூக்களையெல்லாம் பட்டியிலிடவும் முடியாது. நீங்கள் படித்துப்பாருங்கள். நம்மோடு பயணிக்கும் சகமனிதனின் வாழ்க்கையை நீங்களும் ரசித்து அவனின் சோகத்தை கொஞ்சம் பகிர்ந்தும் கொள்ளுங்கள். 

Oviya Pathippagam
17-16-5A, K.K.Nagar,
BATLAGUNDU- 642 202.
TAMILNADU