வெள்ளி, அக்டோபர் 26

காக்கா பிடித்தல்

                    சிறிய வயதில் காகம் வடையைக் தூக்கிக்கொண்டு போன கதையில்தான் முதன்முதலாக காகம் அறிமுகமானது. அதில் காகமானது மற்றவர்களை ஏமாற்றும் என்றே கற்பித்தார்கள். பின்பு ஒரு கதையில் புத்திசாலியாக சித்தரிக்கப்பட்டது. குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் ஒரு காகம் அலையும் எனவும் சிறிதளவு தண்ணீர் உள்ள ஒரு மண்பானையில் கல்லைத்தூக்கி போட்டு நீரை நிறையவைத்து தண்ணீர் குடித்துவிட்டு செல்லும். அப்போது முதல் காகத்தை நிறையவே நேசித்தேன். எங்கள் வீட்டு எதிரில் செல்லும் மின்கம்பியில் வரிசையாக காகம் அமர்ந்திருக்கும் அழகே தனிதான். ஆனால் இப்போது காகத்தை பார்ப்பதே அரிதாக உள்ளது. உண்மையிலேயே காகம் இனம் அழிந்துகொண்டு வருகிறதா எனத்தெரியவில்லை. வீட்டு மொட்டை மாடியில் வடாம் காயவைக்கும்போது எதுக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ காகத்திற்கு பயப்படுவார்கள். ஆனால் அந்த காகத்தினை கூப்பிட்டு விரதமிடும் நாளில் மட்டும் உணவும் வைப்பார்கள். (ஆனா வடாம் திங்கக்கூடாது.. என்ன ஞாயம் இது) சிலர் தினமும் உணவு வைப்பதை கண்டிருக்கிறேன். 

     

                பி.மன்தேய்ஃபெல் எழுதிய ”இயற்கை விஞ்ஞானியின் கதை” என்ற நூலில் காகம் பற்றிய அருமையான தகவல் கிடைத்தது. அதனை பகிர்ந்து கொள்கிறேன்.  காக்கைகளின் மூளை பெரும்பாலான பறவைகளின் மூளையைக்காட்டிலும் அதிக வளர்ச்சி பெற்றது. கூர்ந்து கவனித்தால் விசித்திரமான நிகழ்ச்சிகளைக் காணலாமாம்.  வயல்களில் உள்ள பூச்சிகளையும் உணவாகக் கொள்வதால் உழவர்களின் நண்பன் எனப்படுகிறது. இறந்துபோன உடல்களையும் இது தின்பதால் துப்புரவாளர் என அழைக்கலாம். காகம் பொதுவாக அறிவுத்திறன் உடையது.

               உத்திரப்பிரதேச வேட்டைக்காரர் ஒருவர் விந்தையான நிகழ்ச்சி ஒன்றை வருணித்திருந்தார்.. ஒரு சுரங்கப் பொறியாளர் ஒருவர் குறி தவறாமல் சுடப்பழகுவதற்கு தினமும் காக்கைகளைச் சுடத்தொடங்கினார். சில நாட்களில் காக்கைகள் அவரைக்கண்டதும் ஓடத்தொடங்கின. இதனால் அவர் குப்பைக்கிடங்கின் அருகில் இருக்கும் ஒரு கொட்டடியில் பதுங்கிக் காத்திருந்து பொறியாளர் பொறி வைத்தார். குப்பைக்கு உணவு உண்ண காக்கை வரும் என காத்திருந்தார். ஆனால் காக்கைகள் அவரைப் பார்த்துவிட்டன. மரத்தின் உச்சியில் பதுங்கி இருக்கும். அவர் சென்ற பின்புதான் காகம் பறக்கத்தொடங்கும்.

         மறுநாள் பொறியாளர் ஒரு நண்பருடன் கொட்டடிக்குள் போனார். நண்பர் உடனே வெளியே வந்துவிட்டார். தான் சென்றுவிட்டதாக நினைத்து காகம் வரும் என பொறியாளர் நம்பினார். ஆனால் இந்த தந்திரம் பலிக்கவில்லை. அடுத்த நாள் இரண்டு நண்பர்களுடன் கொட்டடிக்குள் போனார். நண்பர்கள் உடனே வெளியே வந்துவிட்டனர்ஆனாலும் காக்கைகள் ஏமாறவில்லை. இவர் எழுந்து சென்றபின்புதான் காகம் பறந்து குப்பை மேட்டிற்கு வந்தது. பொறியாளருக்கு பயங்கர கோபம். காக்கைகள் என்ன அவ்வளவு அறிவாளியா? அதை வென்று காட்டுவேன் என்றார்.

       விடமாட்டேன் காக்கைகளை என உணர்ச்சி பொங்க சபதமிட்டு அடுத்தநாள் மூன்று நண்பர்களுடன் கொட்டடிக்குள் போனார். மூன்று நண்பர்களும் உடனே கொட்டடியிலிருந்து வெளியேறினர். இப்போது காக்கைகள் ஏமாந்துபோய் பறந்துவந்தன. இப்போது பொறியாளர் வென்றார்.

       இந்த விபரங்களை எழுதிவிட்டு அந்த வேட்டைக்கார நண்பர், காக்கைகளால் மூன்றுவரைதான் எண்ணமுடியும் அதனால்தான் மூன்று நண்பர்கள் வெளியேறியவுடன் அவரும் சென்றுவிட்டதாக எண்ணிவிட்டன என்று முடிவு செய்தார். என்ன ஒரு வில்லத்தனம். காக்காவுக்கு எழுதப்படிக்கத் தெரியாதுன்னு நினச்சுட்டாரு போல.

           இது உண்மையிலேயே சரிதானா? மூன்று நண்பர்கள் வெளியேறும்போது நெருக்கமாகச்சென்றிருக்கலாம். காக்கைகள் அவரும் சென்றுவிட்டதாக எண்ணி பறந்திருக்கலாம். பொதுவாக தங்களுக்கு தீங்கு செய்பவர்களின் முகங்களை காக்கைகள் எளிதில் மறக்காதாம். இவற்றின் அறிவுத்திறனுக்குக் காரணம் அதன் மூளைப்பகுதியில் அமைந்துள்ள 'நிடோபோடாலியம் ஆகும். நிடோபோடாலியம் என்பது பறவைகளின் அறிவுத்திறனுக்குக் காரணமாக உள்ள மூளையின் செயல்பாட்டுப் பகுதியாகும். சிம்பன்சி மற்றும் மனிதனின் மூளைப்பகுதியில் அமைந்துள்ள 'நியோகார்டெக்ஸ்' பகுதிக்குக் கிட்டத்தட்ட சமமானதாகவும் சிம்பன்சிகளில் உள்ள நியோகார்டெக்ஸ்' பகுதியை விட பெரிய அளவிலும் நிடோபோடாலியத்தைப் பெற்றிருப்பதே ஆகும். அதனால் காகங்கள் சிறந்த ஞாபகசக்தி உடையதாக உள்ளதாம். அப்போ காக்கா பிடிக்கிறத இனிமே யாரும் கேலி பேசாதீங்க...(ஏன்னா காக்காவை விரட்டிப்பாருங்க. அதைப்பிடிப்பது எம்புட்டு கஷ்டம்னு உங்களுக்கு புரியும்) ஆனால் தீங்கு செய்பவர்களை காக்கா மாதிரி ஞாபகம் வச்சுக்கோங்க. காக்கா நண்பனாகவும் பழகும். அதைப்பார்க்க இங்க கையை வச்சு அமுக்குங்க. என்ன அதுக்குள்ள எங்க கிளம்பிட்டீங்க. ஓ! காக்கா பிடிக்கவா?