வியாழன், அக்டோபர் 27

மொக்கராசுவின் கட்டில்

மொக்கராசு... பேர்தான் அப்படி.
ஒல்லியான சரீரம்...அடர்த்தியான மீசை.....ஒடுங்கிய கன்னம்.....
இடுங்கிய கண்கள்....தலையில் கொஞ்சம் முடி... இடுப்பில் ஒரு வேஷ்டி.
அவர் சட்டை அணிந்ததே இல்லை. எப்பவும் ஒரு துண்டுதான்.
என்ன மொக்கராசு! மணி அதுக்குள்ள ஒன்பதரை ஆயிடுச்சா?  கட்டிலத் தூக்கியாச்சு... என்று கேட்டபடியே வாயில் ஒரு துண்டு பீடியைப் பற்ற வைத்தான் சங்கையா.
மொக்கராசு கட்டிலைத் தூக்கிக் கொண்டு வந்து வீட்டிற்கு வெளியே இருக்கும் வேப்பமரத்தின் கீழ் போட்டுதான் தூங்குவார்.
அவர் கட்டிலைத் தூக்கி விட்டால் மணி 'டாண்' என்று ஒன்பதரை சொல்லும்.
அவர் வீடு சின்ன ஓட்டு வீடுதான்.
வெளித்திண்ணையில் பழைய பொருட்கள் மண்டிக்கிடக்கும்.
அதில் பாம்பு இருக்குமா? பல்லி இருக்குமா? என யாருக்கும் தெரியாது.
பழைய மண்வெட்டி, துருப்பிடித்த கம்பி, பழைய கலப்பை, தண்ணி இறைக்கிற உருளை,சின்னதும் பெருசுமா நிறைய கொச்ச கயிறு...
அவருக்கே தெரியுமோ தெரியாதோ அவ்வளவு பொருட்கள் கிடந்தன.

அந்த கட்டிலை கக்கத்தில் இடுக்கியபடி மெதுவாக நடந்து வந்து மரத்தின் கீழ் வந்து  வைத்தார்.
கட்டிலை அவருக்கு ரொம்ப பிடிக்கும்.
அவருக்கு விவரம் தெரிஞ்ச நாள்லயிருந்து அதுலதான் தூங்குவார்.
அந்த கட்டில் மொத்தமும் கயிற்றால சுத்தப்பட்டிருக்கும்.
ஒரு பக்கம் அறுந்து தொங்கின கயிற சின்ன கொச்ச கயித்தால கட்டி ஒட்டுப் போட்டிருந்தார்.
கட்டிலின் ஒரு கால் கொஞ்சம் ஆட்டம் கண்டிருந்தது.
'அத எப்படியாவது சரி செஞ்சுரணும்' என்று பார்வதி அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருப்பாள்.

பார்வதி... அவரின் சம்சாரம். 'உலகத்துல ரொம்ப பிடிச்சது யாரு?னு' கேட்டா..
கொஞ்சம் கூட யோசிக்காம சொல்வா..'எம் புருசன்தான்'னு.
மொக்கராசுவுக்கு எந்த நோவும் வராது.
மொக்கராசுகிட்ட பார்வதிதான் வருவா.. நோவ வரவிட மாட்டா'னு...  அந்த ஊர் பெருசுக நக்கல் பண்ணும்.
பார்வதி இறந்து இன்னியோட அஞ்சு மாசம் ஓடிப்போச்சு.
மொக்கராசுவும் கொஞ்சம் ஒடஞ்சுதான் போயிருந்தார்.

என்ன மொக்கராசு..ரொம்ப சிந்தனையாயிருக்கு? சாப்புடீரா? என்றபடியே பீடியை ஒரு இழு இழுத்தான் சங்கையா.
சங்கையா ....மொக்கராசுவின் பக்கத்து வீட்டுக்காரன்.
எப்பவும் வெளித்திண்ணையில் உட்கார்ந்திருப்பான்.
பீடியையும் அவனையும் பிரித்துப்பார்க்க முடியாது. மொக்கராசுவிடம் தொணத் தொணனு பேசிக்கிட்டே இருப்பான்.

நீர் என்ன செய்வீரு... பார்வதி இருக்குற வரைக்கும் நல்லா கவனிச்சா.
உம்மரு மவன் உம்ம கண்டுக்காம  பொண்டாட்டி பேச்ச கேட்டுக்கிட்டு அடுத்த தெருவுல தனிக்குடித்தனம் போயிட்டான்.
இந்தக் காலத்துப் பசங்க எல்லாம் இப்படித்தான்.
தேவைன்னா வருவாய்ங்க.. இல்லனா தூக்கிப்போட்டுட்டு போயிருவாய்ங்க..
டேய்! எழவெடுத்தவனே செத்த நேரம் சும்மாயிரேண்டா... கடுகடுத்தவாறு மொக்கராசு சொன்னார்.
ஆமா.. உம்மரு மவன சொல்லிட்டா பொசுக்குனு கோவம் வந்திருமே! சங்கையா முணுமுணுத்தான்.

மொக்கராசு காதில் வாங்காதவராக கட்டிலின் மேல் ஒரு பழைய துணிய விரித்தார்.
முன்ன இந்த கட்டில் அழுத்தாது. இந்த கொச்ச கயிற கட்டினதுல இருந்து கொஞ்சம் அழுத்துது என்று நினைத்தபடியே இன்னொரு வெள்ளைத் துணிய விரித்தார்.
துணி பேர்தான் வெள்ளை... உலகத்தில் உள்ள அத்தனை அழுக்கும் இதுலதான் இருக்கும்.
விரிப்பு சரியாக இல்லை.
அவர் அதைப்பற்றிக் கவலைப்படாமல் மெதுவாக கட்டிலில் உட்கார்ந்தார்.
மேலே அண்ணாந்து வானத்தைப் பார்த்தார்.
ஒரு நட்சத்திரம் கூட தெரியவில்லை.
ரெண்டு நாளா இப்படித்தான் இருக்கு...மழைதான் வந்தபாடில்லை என்று சொல்லியபடியே மெதுவாகப் படுத்தார்.
சில்லென்று காற்று முகத்தில் அறைந்தது.
மொக்கராசு... இன்னிக்கு குளிர் ஜாஸ்தியாயிருக்கு. பேசாம உள்ள போய் படும். இது மோசமான ஊதக்காத்து. இது உடம்புக்கே ஆகாது. சொன்னா கேளும் என்றான் சங்கையா.
அட போடா! எந்த காத்து அடிச்சாலும் இந்த மரத்துக்கு கீழ படுத்தாதான் தூக்கம் வருது. நீ உள்ள போய் உன் பொண்டாட்டி கூட படு என்று சொல்லியபடியே திரும்பி படுத்து கொண்டார்.
ஆள் இழச்சாலும் வாய் நீளம் இன்னும் குறையல.. எனச் சொல்லியபடியே சங்கையா உள்ளே போனான்.
மொக்கராசு திரும்பி வேப்பமரத்த பார்த்தவாறே இருந்தார்.
ஏனோ தெரியவில்லை.. அவருக்கு பார்வதியின் முகம்தான் கண்முன் வந்தது.
அவரை பார்த்து பார்த்து பராமரிப்பாள். அவரை எதிர்த்து ஒரு வார்த்தை பேசினது இல்லை.
மொக்கராசு எப்பவும் இந்த கயித்துக்கட்டிலில்தான் உட்காருவார்.அதில் பிள்ளைகளைக் கூட பார்வதி உட்காரவிடமாட்டாள்.
பெரிய சிம்மாசனம்...உம் புருசனையே உட்காரவச்சுக்க என்று பிள்ளைகள் நக்கல் பண்ணுவார்கள்.
அந்த கயித்துக்கட்டில் கம்பீரமாக இருக்கும்.கயிறு நன்கு இறுக்கி கட்டப்பட்டிருக்கும்.பார்வதி அதை தூசு இல்லாமல் சுத்தமாக வைத்திருப்பாள்.

அவர் வேப்ப மரத்தை பார்த்தபடியே இருந்தார்.
தெருவிளக்கின் வெளிச்சம் மரத்தில் பட்டது.
வேப்பமரத்தில் நிறைய கிளைகள்.
சிறியதும்,பெரியதுமாய் வளைந்து, நெளிந்து இருந்தது.
அதில் சில எறும்புகள் ஏறிக்கொண்டிருந்தன. சில எறும்புகள் இறங்கிக்கொண்டிருந்தன. மனதுக்குள் சிரித்துக் கொண்டார்.
அவர் தினமும் பார்க்கும் போதெல்லாம் இந்த எறும்புகள் இப்படித்தான்.
அவை எங்குசெல்லும்? மனதுக்குள்ளேயே யோசிப்பாரே தவிர ஒருநாளும் அவற்றைப் பின்தொடர்ந்ததில்லை.
மனதில் நினைத்துக்கொண்டார்...யாரும் யாரையும் பின்தொடர முடியாது. 
இல்லேனா...பார்வதி கூடவே போயிருக்கலாமே!

தூக்கம் வரவில்லை.
முன்பெல்லாம் படுத்தவுடன் குறட்டை போட்டு தூங்கிவிடுவார்.
பார்வதி இறந்ததிலிருந்து தூக்கம் அவரை விட்டு எங்கோ போயிருந்தது.
மறுபடியும் வானத்தைப் பார்த்தார்.
ஒரு மின்னல் கீற்று 'பளிச்'சென வெட்டியது.
உடம்பு லேசாக சுட்டது.
வெறும் வயிற்றுடன் படுத்ததால் பசிப்பது போலிருந்தது.
தண்ணீர் குடிக்கலாமென நினைத்தார். தண்ணிய மட்டுமே எத்தன தடவதான் குடிக்கிறது.
பார்வதி இறந்ததிலிருந்து அவர் சரியாக சாப்பிடுவதில்லை.
அதைப் பற்றிக் கவலைப்படவும் யாருமில்லை.
லேசாக கண்ணில் நீர் கசிந்தது.
 மழை லேசாக தூறியது.
தூறலுடன் கண்ணீரும் கலந்தது.
எந்திருக்க மனமில்லை.
துணியை எடுத்து மூடிக்கொண்டார். தூறல் நின்றது.
அப்படியே தூங்கிப்போனார்.

யேய்! மொக்கராசு.. இன்னிக்கு என்ன இவ்வளவு நேரம் தூக்கம்..  நைட்ல மழை வேற தூறுச்சு..எந்திரிக்கவே இல்லையா? வேப்பங்குச்சியை ஒடித்தவாறே சங்கையா கேட்டான்.
பதிலே இல்லை.
மொக்கராசு அஞ்சு மணிக்கு அப்புறம் தூங்கியதே இல்லை.
இன்னைக்கு விடிஞ்சு மணி ஆறாயிடுச்சு.
சங்கையா சந்தேகம் அடைந்தவனாய் மொக்கராசுவைத் தொட்டுப் பார்த்தான்.
உடம்பு நன்கு சுட்டது.
அடடா.. நல்ல காய்ச்சலா இருக்கே.. என மொக்கராசுவின் தோளைத்தொட்டு
திருப்பி பார்த்தான்.
மொக்கராசு சொரணையே இல்லாமல் படுத்திருந்தார்.

அக்கம்பக்கத்தினர் கூடி விட்டனர்.
கட்டிலோடு வீட்டுக்குள் தூக்கிக் கொண்டு வந்து வைத்தனர்.
மருமகள் கஞ்சித்தண்ணி கொண்டு வந்தாள்.
மாமியா இறந்து அஞ்சு மாசம் கழிச்சு இன்னிக்குதான் இந்த வீட்டுக்குள்ள வந்திருக்கா.
மொக்கராசுவின் தொண்டைக்குள் கஞ்சி இறங்கவில்லை.
மகன் ஓரமாக உட்கார்ந்திருந்தான்.
டவுனு ஆஸ்பத்திரிக்கு கூட்டுகிட்டு போகலாம்னு பார்த்தா அவர் எந்திரிக்க முடியாம கிடக்கார் என்று ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து கூறினான்.

மொக்கராசு மொகட்டை பார்த்தபடியே படுத்துக்கிடந்தார்.
இன்னியோட ஏழு நாளாயிடுச்சு.
உடம்பில் எலும்பு துறுத்திக் கொண்டிருந்தது.
கண்கள் பார்த்தபடியே இருந்தன.
கஞ்சியும் இல்லாம...தண்ணியும் இல்லாம... படுத்தபடியே இருந்தார்.
இனி பிழைப்பார் என்ற நம்பிக்கை யாருக்குமில்லை.
இனி எங்கப்பா மொக்கராசு பிழைக்க போறான்! உடம்பு கட்டில்லயே கிடக்க கூடாது... புண்ணாகிப் போயிடும். பேசாம கீழ இறக்கிப் போடுங்கப்பா.
மொக்கராசுவின் மகனிடம் யாரோ கூறுவது கேட்டது. 
மனசு வேண்டாம்! என்று அலறினாலும் உடம்பு  வாயைத்திறக்க ஒத்துழைக்கவில்லை.
அவரைத் தூக்கினர்.
கீழே பழைய பாய் விரிக்கப்பட்டது. அதில் ஒரு துணியை விரித்து அவரைத் தூக்கிப் போட்டனர்.
கட்டிலைக் கண்ணீருடன் பார்த்தார்.
அவரைத் தூக்கியவுடன் சும்மா இருந்த கட்டிலில் குழந்தைகள் ஏறி விளையாடினர்.
மொக்கராசுவைப் போலவே பலவீனமாக இருந்த கட்டில் 'படார்' என ஒடிந்து விழுந்தது.
அவரது மனசும் ஒடிந்தது.
அட! இது இன்னும் என்னத்துக்கு ஆகும். பேசாம அடுப்பெரிக்க வச்சுக்கோங்க. எவனோ ஊர்க்காரன் சொன்னான்.
மொக்கராசுவிடம் லேசான முனகல் சத்தம் மட்டும் வந்தது. யாரும் பொருட்படுத்தவில்லை.

இரவு பலமான காத்து வீசியது.
மின்னல் 'பளிச் பளிச்சென' வெட்டியது. ஊதக்காத்து வேகமாக வீசியது.
டமார்' என்ற சத்தத்துடன் வேப்பமரம் ஒடிந்து விழும் சத்தம் பலமாகக் கேட்டது.
அதிகாலையில் மொக்கராசுவின் உடம்பை சுற்றி நிறைய ஈ மொய்த்தது. 
வேப்பமரத்தின் இலைகள் அவர் மீது பறந்து வந்து விழுந்தன.


25 கருத்துகள்:

 1. மொக்கை ராசு,சங்கையா அருமையாக கதாபாத்திரங்கள்.மறந்து போனவைகளை நினைவு படுத்தும் விதமாய் கதையின் ஓட்டம்,மிக உயிருள்ள எழுத்து.பாராட்டுக்கள்.கதையின் கருவும் முடிவும் மனதை பிசைந்தன..

  பதிலளிநீக்கு
 2. உயிரோட்டமுள்ள அருமையான கதை. பாராட்டுக்கள்.

  கட்டிய மனைவியோடு அனைத்தும், ஆவியும் போயிற்றே!

  பதிலளிநீக்கு
 3. அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்
  அலையல்ல தங்கள் எழுத்துக்கள் சுனாமிதான்
  த.ம 2

  பதிலளிநீக்கு
 4. asiya omar,இராஜராஜேஸ்வரி ,Ramani அனைவருக்கும் எனது நன்றி.

  பதிலளிநீக்கு
 5. முதுமையில் பிள்ளைகளால் புறக்கணிக்கப்படும் பெற்றவர்களின் பரிதாப நிலையை மொக்கைராசு மூலம் வெளிப்படுத்தியுள்ளீர்கள். அக்கம்பக்கத்தவரிடம் இருக்கும் கரிசனம் கூட பெற்ற பிள்ளைகளிடம் இல்லாமற்போவது வேதனைதான். மனம் தொட்ட கதை.

  பதிலளிநீக்கு
 6. கதை அருமை !..தங்களின் எழுத்துநடை கதையில் உள்ள உயிரோட்டத்தை நன்கு உணரவைத்தது .மனம் கனக்கவைத்த அழகிய கதைக்கு வாழ்த்துக்கள் சகோ ............

  பதிலளிநீக்கு
 7. எழுத்து நடை அருமை... கட்டிலின் மேல் உள்ள அவரது ஈர்ப்பை கோடிட்டு காட்டி உள்ளீர்கள்.. பல சமயங்களில் நாம் சில பொருட்களுக்கு அடிமை பட்டு கிடப்போம்... ஒவ்வொருவரும், விதி விளக்கு இல்லை...

  பதிலளிநீக்கு
 8. விதி விலக்கு இல்லை...

  பதிலளிநீக்கு
 9. கதை நல்லா இருக்கு கணவன் மனைவி இருவரில் ஒருவர் போனால் மற்றவரின்பாடு திண்டாட்டம்தான்.

  பதிலளிநீக்கு
 10. மொக்கராசு கதை நடை அருமை.முடிவு கண்களை நனைத்தது.

  பதிலளிநீக்கு
 11. சி.பி.செந்தில்குமார் ,ஸாதிகா,தமிழ்வாசி - Prakash, Lakshmi, !* வேடந்தாங்கல் - கருன் *! ,suryajeeva, அம்பாளடியாள் ,கீதா அனைவரின் கருத்துக்கும் எனது மனமுவந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 12. தமிழ்மணம் 7
  அருமையான வாழ்க்கைச்சித்திரம்.

  பதிலளிநீக்கு
 13. கட்டில் வேப்பமரம் இரண்டும் எங்கள் சிற்றூரை நினைவில் நிறுத்தியது. அழகிய ஒரு கிராமத்துச் சித்திரம் உணர்வுடன் வரையப்பட்டுள்ளது. தொடர வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 14. சென்னை பித்தன் மற்றும் ஆதிராவுக்கு எனது நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 15. டச்சிங்கா இந்தது,,,,,,நண்பா.........

  பதிலளிநீக்கு
 16. இன்றைய சூழலுக்கு ஏற்ற கதை அமைப்பு பாராட்டுகள் நல்ல சிந்தனை தொடர்ந்து பதிவு செயுங்கள்

  பதிலளிநீக்கு
 17. மொக்க ராசு .. செம ரவுசு

  பதிலளிநீக்கு
 18. ! ஸ்பார்க் கார்த்தி, மாலதி ,"என் ராஜபாட்டை"- ராஜா அனைவருக்கும் நன்றி...

  பதிலளிநீக்கு
 19. அருமையான கதை.
  மனசு நெகிழ்கிறது.
  நன்கு எழுதுங்கள்; நிறைய எழுதுங்கள்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 20. வலைசரத்தில் கோகுல் அறிமுகப் படுத்தி இங்கு வந்தேன்.

  எளிய மனிதரின் வாழ்க்கையை எளிய நடையில் சொல்லி இருக்கிறீர்கள்.

  நல்ல கதை. அழகாக சொன்னதற்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 21. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரசிகன் அவர்களே.

  பதிலளிநீக்கு