ஞாயிறு, நவம்பர் 27

பேச்சு

பேச்சக் குறைங்கடா...
அவன் பேச்சைக் கொண்டுபோய் குப்பைல போடு...
பேச்சு பேச்சாதான் இருக்கணும்...
இப்படியே பேசிக்கிட்டேப் போனா எப்படி?...
பேசியேக் கொல்லாதடா...
பேச்சு...அதுலதான் எத்தனை வகை. எத்தனை விதமாகப் பேசுகிறோம்.
வாழ்க்கை முழுவதும் பேசுகிறோம்.பேச்சு மட்டும் இல்லையென்றால் உலகத்தில் பாதிப் பிரச்சினை இல்லை.இருந்தாலும் "பேச்சு அது  உயிர் மூச்சு(பெண்களுக்கு)".
'அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் 
கடுத்தது காட்டும் முகம்'          - குறள்.
அடுத்தவர்களின் குறிப்பறிந்து பேசினால் அது நலம்.
ஒருவர் போனில் பேசிக்கொண்டிருக்கும் போது அவரது நண்பர் பார்க்க வந்தார்.ரொம்ப நேரமாகப் பேசினார். கடைசியாக அவரது நண்பர் கேட்டார். உங்கள் மனைவியிடமா இவ்வளவு நேரம் பேசினீர்கள். ஆமாம் எப்படி கண்டுபிடித்தீர்கள். இது என்ன பெரிய விசயமா? ஒருமணி நேரமா பேசியிருக்கீங்க. ஆனா நீங்க ஒரு வார்த்தை கூட பேசவே இல்லையே!.
நம்மில் பலபேர் இப்படித்தான்.இப்போதெல்லாம் தனியாகவே பேசிக்கொண்டு இருக்கிறோம். வேறெங்கு? போனில்தான்.
சிலபேர் போனே இல்லாமலும் தனியாகப் பேசுவார்கள். அது ஒரு மன நோய். மனசுக்குள்ளே அடக்கி வச்சிருக்கிற  எரிச்சல், கோபம், வெறுப்பு, பிரச்சினைகள் அளவுக்கு மீறிப் போச்சுனா அது மன நோயில கொண்டு போய் விடும். அதுதான் Depressive  disorder.மனசுல உள்ள பிரச்சினைகளுக்கு ஒருவடிகால் தனியாகப் பேசுவது. சிலபேர் கண்ணாடியப் பார்த்தாகூட பேச ஆள் கிடச்சிருச்சுனு பேச ஆரம்பிச்சிடுவாங்க.
சிலபேர் பேசும்போது ரசித்து கேட்கலாம்.காமெடியாகவும் இருக்கும். சிலபேரின் பேச்சு காமநெடியாகவும் இருக்கும்.
ஒரு பெண் கேட்டாள். உன் புடவை மட்டும் எப்படி இவ்வளவு பளிச்சுனு இருக்கு?
வெள்ளை வெளேர் சலவைக்கு நான் எப்பவும் நம்புறது 'சந்திரனை'த்தான்.
அது என்ன சோப்பா?
இல்லை என் கணவர் பேர் சந்திரன்.
சிறு குழந்தைகள் கூட இப்போது  நயமாகப் பேசுகிறார்கள்.
ஒரு குழந்தையிடம் ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். அவர் தற்கொலை செய்து கொண்டாராம் என்று கதையை ஆரம்பித்த உடனேயே ஒரு ஊர்ல ஒரு ராஜா மட்டும் இருந்தா அவருக்குப் பயமா இருக்காதா?அதுதான் அவரு தற்கொலை பண்ணிக்கிட்டாரு எனக்கேட்டு நம்மைத் திணறடிக்கும்.
சிலபேரின் மேடைப்பேச்சு ரசிக்கவைக்கும்.பேச்சின் பொருள் புரிந்தவன் சிரிப்பான். பொருள் புரியாதவன் முறைப்பான். சில பேர் தன்னையே கேலிப்பொருளாக்கி மகிழ்வூட்டுவார்கள்.

நிறைய அறிஞர்கள் இருக்கிறார்கள். நம்மை அசைய விடாமல் பேசி ரசிக்க வைப்பார்கள்.சிலபேர் சொன்னதையே திரும்பச் சொல்லி போரடித்து விடுவார்கள். வடிவேலு காமெடில வர்ற மாதிரி 'திரும்ப திரும்பப் பேசுற நீ...
திரும்ப திரும்பப் பேசுற நீ...' என்ற கதை ஆகி விடும்.
பெரும்பாலும் நிறையப் பேச்சாளர்களுக்கு முதல் பேச்சு அனுபவம் அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்காது.அறிஞர்கள் சிலர் அவர்கள் வட்டார மொழியில் பேசுவார்கள். சிலர் இலக்கிய நடையிலும், சிலர் மக்கள் நடையிலும் பேசுவார்கள்.
பேச்சாளனுக்கு வாசிப்பது என்பது ஒரு சுவாசம் போல இருக்க வேண்டும்.
அவையறிந்தும் பேச வேண்டும்.மங்கலமான இடத்தில் அமங்கலமாகப் பேசக்கூடாது.
"சொல்லுக சொல்லிற் பயனுடைய; சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்"   - குறள்.
பயனற்ற சொற்களைப் பேசினால் அது வீண்.
முல்லாவைப் பற்றி ஒரு கதை சொல்லுவார்கள்.அவரை மேடையில் பேசக் கூப்பிட்டு நிறையக் கேள்விகள் கேட்டுத் திணறடிக்க திட்டமிட்டனர். இதையறிந்த முல்லா முதல்நாள் பேசும்போது 'இன்று நான் பேசப் போவது என்ன தெரியுமா?" எனக் கேட்டார்.
கூட்டத்தினர் தெரியாது என்றனர். தெரியாத உங்களுக்குப் பேசி பயனில்லை எனகூறி கிளம்பிவிட்டார். மறுநாள் 'இன்று நான் பேசப் போவது என்ன தெரியுமா?" எனக் கேட்டார்.கூட்டத்தினர் அனைவரும் தெரியும் என்றனர். எல்லாம் தெரிந்த உங்களுக்குப் பேசி பயனில்லை எனகூறி கிளம்பிவிட்டார். 
அடுத்த நாளும் வந்து 'இன்று நான் பேசப் போவது என்ன தெரியுமா?" எனக் கேட்டார்.கூட்டத்தில் பாதிப் பேர் தெரியும் எனவும் பாதிப்பேர் தெரியாது எனவும்  கூறினார். உடனே முல்லா ஒன்றும் பிரச்சினை இல்லை தெரிந்தவர்கள்  தெரியாதவர்களுக்கு கற்றுகொடுங்கள் எனக்கூறி கிளம்பிவிட்டார்.  
காதலர்களின் பேச்சு நிறைய இடத்தில் மௌனமாகவே இருக்கும்.
மீராவின் கவிதை ஒன்றில்...
'உன்னிடம் எவ்வளவோ பேச வேண்டும்
என்று நினைக்கிறேன்.
அரங்கம் ஏறுமுன்
ஒத்திகை பார்க்கும்
ஒரு நல்ல நடிகனைப்போல்
நீ வருமுன் உன்னிடம்
என்னென்ன பேசவேண்டும் என்று
தைரிமாய்த் தீர்மானிக்கிறேன்.
நீ எதிரில் 
தென்பட்ட நிமிடத்தில்
ஆசிரியரின் திடீரென்ற கேள்விக்குப்
பதில் சொல்ல முடியாத
ஒரு பள்ளி சிறுவனைப்போல்
பாவமாய் விழிக்கிறேன்'.
வக்கீலின் பேச்சு வாதமாய் இருக்கும். அவரின் வாழ்க்கைக்கும் அதுதான் தேவை.முதியோர்களின் பேச்சு அர்த்தம் நிறைந்ததாய் இருக்கும்.
பேசியே கொல்லாதடா... என நீங்கள் சொல்லும் முன் முடித்துக்கொள்கிறேன்.

13 கருத்துகள்:

  1. அருமையான பேச்சு..

    கைதட்டி பாராட்டுகிறோம்...

    பதிலளிநீக்கு
  2. நல்ல பேச்சு போரடிக்கவெல்லாம் இல்லை.பேசிக்கோல்லவும் இல்லை.வரவேற்கிறோம்
    கைதட்டி பாராட்டுகிறோம்.
    நீங்க போசுங்க சார்,நாங்க பாத்துக்கிறோம்.என்ன ஆனாலும் பரவாயில்லை)

    பதிலளிநீக்கு
  3. விச்சுவின் பேச்சு சூப்பர்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான கட்டுரை.. கொஞ்சம் பத்திகளுக்கு நடுவே இடை வெளி விட்டிருந்தால் படிக்க எளிதாக இருந்திருக்கும்.. பேசுவதை விட, பேசுவதை கூர்ந்து கவனிப்பது ஒரு கலை... அதை அடுத்த பதிவாக போடுங்களேன், இதன் தொடர்ச்சியாக

    பதிலளிநீக்கு
  5. அருமை அருமை
    பேச்சு குறித்த தங்கள் பதிவு மிக மிக அருமை
    நேரடியாகப் பேசுவதைப் போல சுவாரஸ்யமாக இருந்தது
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 1

    பதிலளிநீக்கு
  6. அருமை... நிறைய யோசித்து எழுதியுள்ளீர்கள். நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  7. நாம் எந்த வேளையும் செய்யும் போதே சாட்சி மாத்திறமாக நம்மை நாமே கவனித்தால் அச்செயலில் இன்னும் சிறப்பாக வெற்றி பெறலாம்...

    பேச்சு என்பது ஒரு கலை...
    அது தங்களிடம் தாராளமாக இருக்கிறது என்பதற்கு இப்பதிவே சாட்சி...

    பதிவு அருமை... நண்பரே...

    பதிலளிநீக்கு
  8. இதைப் பார்த்ததும் பேசவே பயமாயிருக்குங்க...

    அருமை....

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    கடவுள்களை தொலைத்து விட்டோம்

    பதிலளிநீக்கு
  9. அருமையான பதிவு,ரசித்து படிக்கமுடிந்தது.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. விச்சு....நிறையப் பேசினாலும் திட்டறாங்க.பேசாம இருந்தாலும் ஏன் உம்ன்னு இருக்கன்னு திட்டறாங்க.என்னதான் செய்யறது !

    பதிலளிநீக்கு
  11. உண்மைதான் ஹேமா. ஆனால் நிறையப் பேசுவதைவிட மௌனமாய் இருப்பது நல்லது என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  12. இன்னும் பேசவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கும்போதே பேச்சை முடித்துக்கொள்வதுதான் ஒரு நல்ல பேசாளருக்கு அழகு என்பார்கள். பேச்சு பற்றி நல்ல தகவல்களை வழங்கியுள்ளீர்கள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  13. பேச்சக் குறைங்கடா...
    >>
    ஆனால், உங்க பேச்சு(பதிவு) சூப்பர். காரத்தை குறைக்காதீங்க சகோ. த ம 6

    பதிலளிநீக்கு