வெள்ளி, ஏப்ரல் 6

கடவுள் படைப்பு

      அன்று பிள்ளையார் சதூர்த்தி. காலையில் விக்னேஷ் சீக்கிரம் எழுந்துவிட்டான். அவனுக்கு பிள்ளையார்மீது எப்போதும் ஒரு ஈர்ப்பு உண்டு.
பிள்ளையாரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல இருக்கும்.    

பிள்ளையாரைப்பற்றி அவன் நண்பன் சதீஸிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பான். போதும்டா! உன் புராணத்தை ஆரம்பிச்சுட்டியா... என்பான் சதீஸ்.

  விக்னேஷ் நான்காம் வகுப்பு படிக்கிறான். எப்பவும் துறுதுறு என்று இருப்பான். படிப்பில் படு சுட்டி. அவன் ஒரே பிள்ளை என்பதால் வீட்டில் பயங்கர செல்லம். என்னடா செல்லம் சீக்கிரம் எந்திரிச்சுட்ட? ஹோம்வொர்க் செய்யனுமா? என்று சமையல் வேலையில் இருந்த கீதா கேட்டாள். இல்லம்மா... அம்மா பிள்ளையார் சதூர்த்தினா என்னமா? என்று கேட்டான் விக்னேஷ்.

கீதாவிடம் எபோதும் கேள்விகளால் துளைத்துக் கொண்டிருப்பான். பிள்ளையார் அவதரித்த தினம்தான் பிள்ளையார் சதூர்த்தி என்று கீதா சொன்னாள். 

அவதரித்ததுனா என்னம்மா? 

 ம்ம்ம்... உருவாகியதுனு வச்சுக்கலாம். 

அப்போ பிள்ளையாரை யாரு உருவாக்கினா? 

கீதா யோசிக்கத் தொடங்கினாள். முதலில் இவனை அவங்க அப்பாகிட்ட கோர்த்துவிட்டுறனும். மனுசன்... இன்னும் குறட்டை போட்டு தூங்கிக்கிட்டு இருக்கார். நான் ஒருத்தி முழிபிதுங்கி நின்னுகிட்டு இருக்கேன்.

 டேய்! விக்னேஷ் போய் அப்பாகிட்ட கேட்டுக்க... அம்மாவுக்கு நிறைய வேலை இருக்கு.. என் செல்லம்ல... என்று கெஞ்சினாள்.

விக்னேஷ் நேராக அப்பாவிடம் சென்றான். 

அப்பா எந்திரிப்பா.. ப்ளீஸ்பா... என்று விக்னேஷ் எழுப்பினான். 

சிவா ரொம்பவே எரிச்சலானான். கீதா பையன் என்னமோ கேட்குறான். 

அவன்கிட்ட என்னனு கேளுடி என்று கத்தினான். 

நீங்க என்னனு கேட்டுக்கோங்க எனக்கு நிறைய வேலை இருக்கு என்று தப்பித்துக் கொண்டாள்.

சே...லீவு நாள்ல நிம்மதியா தூங்க முடியாது என்று புலம்பிக்கொண்டே ... என்னடா செல்லம் தூக்கம் வரலியா என்று விக்னேஷிடம் கேட்டான்.

அப்பா பிள்ளையாரை யாரு உருவாக்கினா? என்று கேட்டான். 

அப்போதுதான் சிவாவுக்கு ஞாபகம் வந்தது. ஓ! இன்னைக்கு பிள்ளையார் சதூர்த்தியா? 

அதுவாடா செல்லம் அவங்க அம்மா பார்வதி தேவிதான் உருவாக்கினாங்க. ஒருநாள் அவங்க குளிக்கும்போது பிள்ளையாரை காவலுக்கு நிப்பாட்டினாங்க. அப்போ சிவபெருமான் வந்து உள்ள போகனும்னு சொன்னாரு. பிள்ளையார் விடவேயில்ல. சிவபெருமான் கோவத்துல பிள்ளையாரோட தலையை வெட்டிட்டாரு. பார்வதிதேவி ரொம்ப அழுதாங்க... அப்புறம் ரொம்ப கோவமாகி என் மகன் எனக்கு இப்பவே வேணும்னு சொன்னாங்க. உடனே சிவபெருமான் யானையோட தலையை வெட்டி பிள்ளையார் கழுத்துல மாட்டிட்டாங்க என்று வேகமாக விளக்கம் கொடுத்துவிட்டு மறுபடியும் தூங்கப்போனான்.

அப்பா பிள்ளையாரும் கடவுள்தான...? என்றான். 

ஆமாண்டா செல்லம் பிள்ளையார், சிவபெருமான், முருகன், பார்வதி எல்லோருமே கடவுள்தான். 

எல்லா கடவுளையும் யாருப்பா உருவாக்கினா? என்று அடுத்த கேள்வியை கேட்டான். 

சிவாவுக்கு முழி பிதுங்க ஆரம்பித்தது. எப்படியும் சமாளிக்கனுமே என்று நினைத்துக்கொண்டு கடவுளை யாரும் உருவாக்கவில்லை. நம்மளைத்தான் கடவுள் உருவாக்கினார் என்று சொல்லிவிட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் தூங்கிவிட்டான்.

சிவா மறுபடியும் தூக்கமா? கீதா கத்தினாள்.  

போய் குளிச்சிட்டு வாங்க. அப்படியே இன்றைக்காவது விக்னேஷை நீங்க குளிப்பாட்டி ட்ரெஸ் மாத்தி விடுங்க. சாமி கும்பிட நேரமாச்சு என்றாள்.

 சிவா அலுத்துக்கொண்டே எல்லா வேலைகளையும் முடித்தான். விக்னேஷ் நிறைய கேள்விகள் கேட்டான். 

யாரும் உருவாக்காம கடவுள் எப்படிப்பா வந்திருப்பார்? 

சிவா பதில் பேசாமல் சோப்பினை தேய்த்துவிட்டான். விக்னேஷுக்கு மனதில் பிள்ளையாரைப்பற்றியே எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. 

அப்பா சொல்லுப்பா.. கடவுள் எப்படி உருவானார்? ப்ளீஸ்... சொல்லுப்பா...

 அவர் கடவுள் இல்லையா! அதனால அவரா தோன்றியிருப்பார் என்று சொல்லி சமாளித்தான்.

குளித்து முடித்தவுடன் ட்ரெஸ் மாற்றிக்கொண்டு விக்னேஷ் வேகமாக பூஜை அறையினுள் ஓடினான். பிள்ளையார் போட்டோவை எடுத்து பார்த்தான். அழகாகக் காட்சியளித்தார். பெரிய வயிறு. யானை காது.  முகத்தினைப் பார்த்தான். அதிலிருந்து தும்பிக்கை நீண்டு வந்திருந்தது. கழுத்தில் தலையை ஒட்டியிருப்பதற்கான அடையாளம் இருக்கிறதா என்று பார்த்தான். அப்படியேதும் தெரியவில்லை.

பிள்ளையாருக்கு ஏன் இத்தனை கைகள் என்று தனக்குதானே கேட்டுக்கொண்டான். 

தலையில் ஒரு அழகான கிரீடம். அது பிள்ளையாருக்கு பொருத்தமாக இருந்தது. கிரீடம் இல்லையென்றால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்த்தான். அவனுக்கு யானையின் தலைதான் ஞாபகம் வந்தது.  

பக்கத்தில் எலி நின்றுகொண்டிருந்தது. எலியைப் பார்த்தாலே பயந்து ஓடிவிடுவான். ஆனால் இந்த எலி அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது.

 கீதா சாமி கும்பிட தேவையானவற்றை எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள். 

அம்மா பிள்ளையார் பக்கத்துல இந்த எலி எதுக்கும்மா இருக்கு? என்று கேட்டான். 

அது அவருடைய வாகனம் என்று பதில் சொன்னாள். 

அதுல எப்படிம்மா அவரு உட்காருவார் என்று கேட்டான். 

அவர் கடவுள் எதுலனாளும் போவாரு... இந்தா... சந்தனம் இதுல இருக்கு .இன்னைக்கு நீயே பிள்ளையார் பிடிச்சு வை என்று பேச்சை மாற்றினாள்.

எனக்கு பிள்ளையார் செய்யத்தெரியாது என்றான் விக்னேஷ்.  

டேய் செல்லம் நீ எப்படி செஞ்சாலும் அது பிள்ளையார்தான்...  என்று சொன்னாள். 

விக்னேஷ் தன் குட்டிக் கைகளால் சந்தனத்தினை எடுத்து உருட்டினான். முதலில் வயிறு செய்தான் அப்புறம் சிறிதாக உருட்டி தலையை ஒட்டவைத்தான். சந்தனத்தை நீளமாக உருட்டி தும்பிக்கையும், கைகளும் செய்தான்.  

கீதா அதைப்பார்த்துவிட்டு அழகா இருக்கு... போதும் விக்னேஷ் என்று சொல்லிக்கொண்டே அதனை வாங்கி இலையின் ஓரத்தில் வைத்தாள்.

 சிவா உடையை மாற்றிக் கொண்டு வந்தான்.

 வாங்க.. வாங்க.. சாமி கும்பிடலாம் என்றான். 

நாங்க அப்பவே ரெடி. நீங்கதான் லேட் என்றான் விக்னேஷ்.

இலையில் பிள்ளையாருக்குப் பிடித்த கொழுக்கட்டை, அவல், பொரி, தேங்காய், பழம் எல்லாமும் படைக்கப்பட்டிருந்தது.

 சிவா இலையில் உள்ள பிள்ளையாரைப் பார்த்தவாறே கேட்டான். பிள்ளையார் சூப்பரா இருக்கார்... யார் செஞ்சது? என்றான். 

அப்பா பிள்ளையாரை நான்தான் உருவாக்கினேன் என்றான் விக்னேஷ். 

சிவாவும் கீதாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். 

கள்ளமில்லால் சிரித்தான் விக்னேஷ்.

14 கருத்துகள்:

  1. துரைசாமி06 ஏப்ரல், 2012

    vichu sir,
    உங்களுக்கு இப்படியெல்லாம் யோசிக்க யார் சார் சொல்லித்தர்ராங்க?
    உங்க பையனா?
    சூப்பர் சார்.
    குழந்தையும் தெய்வமும் ஒன்று
    குழந்தையை படைத்தது கடவுள்
    கடவுளைப் படைத்தது குழந்தை

    பதிலளிநீக்கு
  2. கூகுள் வழங்கும் சேவையால் யாருக்கு பயன்?

    Read This True Story : http://mytamilpeople.blogspot.in/2012/04/wazzub-opportunity-of-lifetime.html

    பதிலளிநீக்கு
  3. அருமை. குழந்தைகள் குழந்தைகளே. அவர்களின் புதுப்புதுப் பார்வைகளும் எண்ணங்களும் நம்மால் சுலபத்தில் புரிந்துகொள்ள முடியாதவை. சிலசமயங்களில் பிரமிக்க வைக்கக்கூடியவையும் கூட.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா...

      நீக்கு
  4. குழந்தைகளின் செயல்களில் பொய் இருக்காது விச்சு !

    பதிலளிநீக்கு
  5. பிரச்சினைக்குத் தீர்வு சொல்ல இயலாத நிலையில், ‘நழுவும்’ உத்தியைக் கையாளும் கதைகளில் இதுவும் ஒன்று.
    மன்னியுங்கள் நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தமாதிரி பிரச்சினைகளுக்கு பெரிய ஞானிகளாலே தீர்வு வழங்க இயலவில்லை. அதனால் சிறுகதையாகப் படைத்து விட்டேன். தங்கள் கருத்துக்கு நன்றி முனைவர் அவர்களே.

      நீக்கு
  6. பிள்ளையார்கள் எப்போதும் மனம் கவர்ந்தவர்களாகவே/

    பதிலளிநீக்கு
  7. சிறுவனின் கேள்விகள் சிந்திக்க வைப்பவை... ஒவ்வொரு மனிதனும் இப்படித்தான் கேள்வி கேட்பதில் தன் வாழ்க்கையை ஆரம்பிக்கிறான். ஆனால் இந்த பள்ளிக்கூடங்கள்தான்... அவனது கேள்வி கேட்கும் திறமையை அடியோடு ஒளித்துவிடுகின்றன.

    உங்கள் பிளாக் இணையதளத்தின் செய்திகள் ஆயிரக்கணக்கான வாசகர்களை எளிதில் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் செய்திகளின் லிங்கை உடனுக்குடன் இணைத்திடுங்கள்

    பதிலளிநீக்கு