வியாழன், ஏப்ரல் 12

மாணவர்களை மனிதனாக்கும் கல்வி

        இன்றைய கல்வி முறை சரியா? தவறா? என்ற விவாதத்திற்குள் நான் வரவில்லை. ஆனால் இன்றைய கல்வி முறையில் இன்னும் நிறைய விசயங்களைச் சேர்த்திருந்தால் சிறப்பாக இருக்கும். வெறும் தமிழும், அறிவியலும், கணிதமும் ஒருநாளும் மாணவனை மனிதனாக மாற்றாது. செத்துப்போனவர்களைப் பற்றியே படிப்பதால் அவனுக்குள் மனமாற்றம் நிச்சயம் வரப்போவதில்லை. பழமையோடு புதுமையையும் கொஞ்சம் கற்றுக்கொடுத்தால் நன்றாக இருக்கும். மாணவர்களின் விருப்பங்கள் இங்கு மதிக்கப்படுவதில்லை. வரும் அதிகாரிகளும் வெறும் புள்ளிவிபரங்களை மட்டுமே பார்த்து திருப்திப்பட்டுக்கொள்கிறார்கள் அல்லது திட்டிவிட்டுச் செல்கிறார்கள். பாடத்தினைத் தவிர்த்து மாணவன் பெரும்பாலும் வேறு எதனையும் கற்றுக்கொள்வதில்லை. 

          ஆனால் தற்போது நிறைய மாற்றங்களை அனைவருக்கும் கல்வி திட்டம்  மற்றும் மத்திய இடைநிலை கல்வித்திட்டம் மூலம் அரசு செய்துவந்தாலும் ( செயல்வழிக்கற்றல்,  படைப்பாற்றல் கல்வி முறை) அவை முழுமையாக மாணவர்களைச் சென்று சேர்வதில்லை. தவறு எங்கேயோ உள்ளது. மாணவர்கள் முன்பைவிட அறிவாளியாக உள்ள அதே சமயத்தில் ஆசிரியர்களையும், சக மாணவர்களையும் மதிக்கும் எண்ணம் வரவில்லை. காரணம் கற்றுக் கொடுப்பதில் உள்ள பிரச்சினை. 
        அனைத்துப்பள்ளிகளிலும் முன்பைவிட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. கணினி வழங்கப்பட்டுள்ளது. அதனைப்பயன்படுத்த பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. தையல், பெண்களுக்கு தேவையான கல்வி அனைத்தும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஆனால் பல பள்ளிகளில் அவை பெயர் அளவில் மட்டுமே உள்ளது. காரணம் என்ன? ஆசிரியர்களுக்கு ஆர்வமின்மையா? அல்லது மாணவர்களுக்கு ஆர்வமின்மையா? அல்லது அது தேவையற்ற ஒன்று என நினைப்பதினாலா?
         நன்னெறிக்கல்வி என்ற ஒரு பாடப்பிரிவையே இன்று இல்லாமல் போய்விட்டது. மாணவர்களுக்கு நன்னெறி , ஒழுக்கம் என்பது தேவையற்ற ஒன்று என நினைத்துவிட்டார்கள் போலும். உடற்கல்வி என்பது நிறைய பள்ளிகளில் மற்ற பாடப்பிரிவுகளுக்கு தாரை வார்க்கப்படுகிறது. எந்த நேரமும் விளையாட்டுத்தான்... இதெல்லாம் எங்க படிச்சு உருப்படப்போகுது என்ற வசனம் பள்ளியிலும் வீட்டிலும் அடிக்கடி கேட்கும் ஒன்றுதான்.
       தமிழ், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கு நேரம் ஒதுக்குவது போல் அனைத்து நாட்களுக்கும் மற்ற நிகழ்வுகளுக்கும் நேரம் ஒதுக்கினால் சிறப்பாக இருக்கும். பேசுதல் திறன், எழுதுதல் திறன், விளையாட்டுத்திறன், ஓவியம்,  இசை, கணினி பயிற்சி,தையல் இன்னும் இன்னும்....  அந்தப்பாட வேளைகளில் மட்டும் மாணவன் அவனுக்குப் பிடித்த வகுப்புகளுக்குச் செல்லும் உரிமையை வழங்கலாம். அதற்கான மதிப்பெண்களும் வழங்கவேண்டும். ஏனெனில் மதிப்பெண்கள்தான் மாணவனை சிற்ந்தவனாக காட்டுகின்றன என்ற மனப்பக்குவத்திற்கு நாம் பழகிவிட்டோம். அதிக மதிப்பெண் எடுப்பவன் அறிவாளி மாதிரியும் மற்ற மாணவர்கள் முட்டாள் போலவும் ஒரு மாயையை உருவாக்கி விட்டோம். அனைத்து மாணவர்களுக்கும் அவரவர் திறமைக்கு ஏற்ப மதிப்பெண் கொடுக்கும் முறையை அமுல்படுத்த முயற்சிக்கலாம்.
           ஆயிஷா என்ற கதையில் வரும் மாணவி சொல்வதுபோல் ”புத்தகத்தில் உள்ள மாதிரியே எழுதனுமாம். சொந்த சரக்கிற்கு மதிப்பெண் கிடையாதாம்” என்று ஆதங்கப்படுவாள். பள்ளியிலும் கல்லூரியில் உள்ளதுபோல் மற்ற புத்தகங்களை படித்து அது சம்பந்தமான தகவல்களைத் திரட்டும் பயிற்சியை கொடுக்கலாம். அதனையே தேர்வுகளிலும் எழுத வைத்து மதிப்பெண்ணும் வழங்கும் முறையைக் கொண்டு வரலாம். இது தொடக்கப்பள்ளிகளில் சாத்தியம் இல்லையெனினும் உயர்நிலைப்பள்ளிகளில் கொண்டு வரலாம்.
           மாணவர்களுக்கு சிந்திக்கும் திறன் வளர்வதற்குரிய பயிற்சியை வழங்கலாம். பத்து பள்ளிகளை இணைத்து ஒரு உளவியல் மருத்துவரை நியமித்து மாணவர்களுக்கு பயிற்சி வழங்கலாம் . விளையாட்டுத்துறையில் இந்த முறை உள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள் தாங்கள் செய்யும் தவறுகளைத்திருத்திக் கொண்டு மன அளவில் புது உத்வேகத்துடன் விளையாடுகின்றனர். இதுபோல் பள்ளிகளில் செய்வதால் மாணவர்களும் படிப்பினில் ஆர்வம் கொள்வார்கள்.
          பள்ளிகளில் போட்டித்தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான பயிற்சியை அளிக்கலாம். இதனால் மாணவர்களின் தன்னம்பிக்கை வளரும். இன்னும் கல்லூரி மாணவர்களிடம்கூட எந்தெந்த போட்டித்தேர்வுகளில் கலந்துகொள்ளலாம் என்ற விழிப்புணர்ச்சி கூட இல்லை.
     முன்பு விவசாயக் கல்வி என்று ஒரு பாடப்பிரிவு உண்டு. தற்போது அது நடைமுறையில் இல்லை. இடம் அதிகமாக உள்ள பள்ளிகளில் இது போன்று ஒரு ஆசிரியரை நியமித்து விவசாயத்தின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு உணர்த்தலாம். 
    சமீபத்தில் ஒரு திரைப்படம் பார்த்தேன். அதில் ஒரு வசனம் மனதைக் கவர்ந்தது. தஙகளுக்கு சாதகமானதை மட்டும் கேட்டு போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் கல்வியில் மாற்றம் வேண்டும் என்றோ... மாணவர்களின் நலன் கருதியோ, பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தோ போராட்டம் நடத்துவதில்லை.  பல தனியார் பள்ளிகள் நன்றாக படிக்கும் மாணவர்களை மட்டும் பள்ளியில் சேர்த்துக்கொண்டு நூற்றுக்குநூறு என்று மார்தட்டிக்கொள்கின்றன. தனியார் பள்ளிகளில் ஒதுக்கிவிடப்பட்ட மாணவர்கள்தான் அரசுப்பள்ளிகளில் படிக்கிறார்கள். சரியாக வாசிக்ககூட தெரியாத மாணவனையும் தேர்ச்சி பெற வைக்கும் திறமை ஆசிரியர்களுக்கு உள்ளது. எனவே திறமையானது மாணவர்களுக்கும் உள்ளது. ஆசிரியர்களுக்கும் உள்ளது. ஆனால் எங்கோ ஓரிடத்தில் தவறு உள்ளது. அதனைக் கண்டறிய வேண்டிய பொறுப்பு மக்களிடமும் ,அரசாங்கத்திடமும், கல்வியாளர்களிடமும் உள்ளது. கிரேடு சிஸ்டம் முறை அடுத்த கல்வியாண்டு முதல் வர உள்ளது. இதுபோன்ற சிறிய மாற்றங்கள் வர ஆரம்பித்திருப்பது ஒரு நல்ல அறிகுறி. 


        இது சினிமாவில் உள்ள வசனம் என்றாலும் உண்மையான ஒரு விசயம்தான். இன்றைய கல்வி முறையால் மாணவர்கள் நூற்றுக்கு நூறு தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக சக்கையாக பிழியப்படுகிறார்கள். 24 மணி நேரத்தில் அவன் அதிகமாக யோசிப்பது பள்ளிப்பாடங்களை மட்டுமே. எந்த ஆசிரியரோ பெற்றோரோ பிள்ளைகளின் திறமை என்ன என்பதை இறுதி வரைக்கண்டுகொள்வதே இல்லை.இதனால் மாணவனின் திறமை மழுங்கி மறக்கடிக்கப்படுகிறது. பாடங்கள் மட்டும்தான் அறிவு பெறத் தேவையான ஒன்றா? எந்த மாணவனையும் ஃபெயிலாக்ககூடாது என்று சொல்கிறார்கள். ஆனால் அவனுக்கு என்ன தேவை என்பதை மறந்து விடுகிறார்கள். மாணவனை அடிக்கக் கூடாது வேலை வாங்கக்கூடாது என்கிறார்கள். ஆனால் வேதகாலக் கல்வி முறையில் குருவிற்கும் ஆசிரமத்திற்கும் தேவையான தொண்டினை செய்யும் முறை இருந்தது. இதனால் அவன் வாழ்க்கைக்கு தேவையான விசயத்தினைக் கற்றுக்கொள்ள முடிந்தது. தவறு செய்யும் மாணவர்களை தண்டிக்கும் பழக்கமும் இருந்தது. இதனால் மாணவர்கள் நல்லவர்களாகத்தான் திகழ்ந்தார்கள்.கல்வியில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தும் படங்கள் இப்போது கொஞ்சம் வர ஆரம்பித்துள்ளன. இது மாற்றத்திற்கான சிறிய அறிகுறி எனக்கொள்ளலாம். ஆனால் உண்மையான மாற்றம் அவை வகுப்பறைக்குள் நிகழும்போது மட்டுமே சாத்தியம்.
     

அன்புடன்
விச்சு

12 கருத்துகள்:

 1. ஆனால் இன்றைய கல்வி முறையில் இன்னும் நிறைய விசயங்களைச் சேர்த்திருந்தால் சிறப்பாக இருக்கும்.

  கருத்தான பகிர்வு.. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 2. உண்மையான மாற்றம் அவை வகுப்பறைக்குள் நிகழும்போது மட்டுமே சாத்தியம்.

  >>>>>>>>
  சரியாக் சொன்னீங்க சகோ. மாற்றங்கள் இளைய தலைமுறகளிடத்திலிருந்து வரும்போதுதான் வீரியமானதாகவும், உண்மையானதாகவும் இருக்கும். அதுக்கு பாதை வகுக்க நல்ல வகுப்பறையால் மட்டுமே முடியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 3. //மாற்றம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தும் படங்கள் இப்போது கொஞ்சம் வர ஆரம்பித்துள்ளன. இது மாற்றத்திற்கான சிறிய அறிகுறி எனக்கொள்ளலாம். ஆனால் உண்மையான மாற்றம் அவை வகுப்பறைக்குள் நிகழும்போது மட்டுமே சாத்தியம்.//

  ஆமாம். நல்ல பதிவு.

  பதிலளிநீக்கு
 4. மிகத் தெளிவான பதிவு !

  பதிலளிநீக்கு
 5. super post

  இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

  இன்றைய பதிவு50 தேடுஇயந்திரங்களில் உங்கள் பதிவுகளை இனைக்கலாம்

  பதிலளிநீக்கு
 6. சிறப்பான பதிவு ! புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 7. அருமையான பதிவு.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. வாஸ்தவமான விசயம் தான்… என்னை பொருத்த வரை ஆசிரியர்களை மட்டுமே குறை கூறுவேன். நன்னெறி கல்வி தேவையில்லை என்று முடிவெடுத்து , அதை பாடத்துடன் இணைந்து நடத்த முடிவெடுத்தவர்கள் ஆசிரியர்கள் தான். ஆனால் அவர்கள் அதை மறந்து நூறு சதவீத தேர்ச்சியை மட்டுமே குறிவைத்து செயல் படுவதால் , விளையாட்டு , நன்னெறி, தையல் என எல்லா பிற பாடம் சாரா நடவடிக்கைகள் குறைந்து விட்டன. செயல் வழிக் கல்வி பொருத்த மட்டில் துவக்கப் பள்ளி அளவில் செயல் படுகிறது. அதுவும் ஆசிரியரை பொருத்தும் , தலைமையாசிரியரைப் பொருத்தும் சந்தேகமான சூழலில் உள்ளது. ஊதியம் பெறும் ஊழியராக ஆசிரியர்கள் மாறிவிட்டனர். அவர்களை அடக்கு முறையில் வேலை வாங்கினால் மட்டுமே நம் மாணவர்களை காப்பாற்ற முடியும். கட்டாய கல்வி சட்டம் சரியான முறையில் செயல் பட்டால் நாம் பள்ளிகளில் மட்டுமல்ல, கல்வி முறைகளிலும் மாற்றம் கொண்டு வரலாம். பகிர்வுக்கும் உங்கள் கனவுக்கும் நன்றீ…!

  பதிலளிநீக்கு