ஞாயிறு, ஏப்ரல் 15

தொலைந்த முகம்

     என்றைக்கும் இல்லாமல் இன்று சீக்கிரம் வீட்டிற்கு வந்துவிட்டேன். வானம் நீலநிறம் மறைத்து இருட்டினை பூசிக்கொண்டு இருந்தது. வீட்டிற்குள் நுழைந்தவுடன் வழக்கம்போல் டிவி அலறிக்கொண்டு தானும் இந்த வீட்டின் ஒரு அங்கத்தினர் என வெளிப்படுத்தியது. என் மனைவி தேங்காய் நறுக்கிக்கொண்டே டிவி பார்த்துக்கொண்டிருந்தாள்.

வாங்க... இன்னைக்கு என்ன சீக்கிரமே வந்தாச்சு! என் முகம் பார்க்காமல் கேட்டாள். 

 இன்னைக்கு ஆபீஸ் ஸ்டாப் ஒருத்தரோட பொண்ணுக்கு நிச்சயதார்த்தம். 
ஏழு மணிக்கு வரச்சொன்னார்.

மணி இப்பவே ஏழாயிடுச்சு. 

குளிச்சிட்டு சீக்கிரம் கிளம்பணும் என்றபடியே சோபாவில் உட்கார்ந்தேன். 

பார்வதி... சூடா ஒரு கப் காபி போட்டுக் கொடு.

இருங்க நல்ல சீன் ஓடுது. நீங்க குளிச்சிட்டு வாங்க போட்டு வைக்கிறேன் என்று சமாளித்தாள்.

அவள் சொல்லி முடிக்கவும் சரியாக விளம்பர இடைவேளை வந்தது. டிவியில் எனக்குப் பிடித்ததே இந்த விளம்பர இடைவேளைதான்.விளம்பரங்களுக்கு நன்றி.

ம்ம்ம்... அலுத்துக்கொண்டே எழுந்தாள். இருங்க காபி போட்டுத்தாரேன். காபியை குடிச்சிட்டு அப்புறம்போய் குளிங்க என்றாள்.

வீட்டில் என் முகம் பார்த்து பேசக்கூட மனைவிக்கு பிரியமில்லாமல் போய்விட்டது.முகம் பழசாகிவிட்டதோ அல்லது முகம் அலுத்துவிட்டதோ? என்று எண்ணியபடியே சட்டையை கழற்றிக்கொண்டே மொட்டைமாடிக்கு சென்றேன். 

அங்கே சரவணன் உட்கார்ந்து மொபைல் போனை பார்த்துக்கொண்டிருந்தான். 

டேய் சரவணா... இங்க என்னடா பண்ற?

பார்த்தா தெரியல... மொபைல் போனை பார்த்தவாறே பேசினான்.

எப்பவும் மொபைல் போனை நோண்டிக்கிட்டு இருக்கியே... போரடிக்காதா? போய் புக்ஸ எடுத்து படிடா..

எல்லாம் காலேஜ்லேயே படிச்சாச்சு...

என் முகத்தினை இன்னமும் அவன் பார்க்கவில்லை. ஏன் இந்த வயது பசங்களுக்கு அப்பாவை பிடிப்பதில்லை? எதிரி போன்று பார்க்க காரணம்? முகத்தினை பார்த்தாவது பேசக்கூடாதா? பல கேள்விகளுடன் இதற்குமேல் விவாதம் செய்யக்கூடாது என்று கீழே இறங்கினேன்.

காபி டேபிள்மேல் இருந்தது. பார்வதியின் முகம் டிவியை நோக்கி இருந்தது. டிவியில் யாரோ ஒரு பெண் சத்தமாக அழுதுகொண்டிருந்தாள்.நான் அமைதியாக காபியை அருந்திவிட்டு குளிக்கச் சென்றேன்.

குளித்துவிட்டு உடைமாற்றிக்கொண்டேன். மனைவியை அழைக்கலாம் என நினைத்தேன். அவள் டிவியில் ஒன்றிப்போயிருந்தாள். தொந்தரவு செய்ய வேண்டாம் என நினைத்தபடியே வர லேட்டாகும்... நைட் சாப்பாடு எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் பதிலை எதிர்பார்க்காமல் வாசலை நோக்கிச் சென்றேன்.

மனைவியிடமிருந்து ம்ம்...என்ற சத்தம் மட்டும் வந்தது. இப்போது டிவியில் வேறு யாரோ அழுது கொண்டிருந்தார்.

நிச்சயதார்த்தம் மண்டபத்தில் வெகு விமரிசையாக நடந்தது. 

கூட்டம் கூட்டமாக ஆண்கள், பெண்கள், குழந்தைகள்...

பட்டுச்சேலைகள் பளபளத்தன. கழுத்தில் தங்க நகைகள் ஜொலித்தன. அனைவரின் முகத்திலும் சந்தோஷம்.

போலியான விசாரிப்புகள், கைகுலுக்கல்கள்.

குழந்தைகள் சந்தோசமாக விளையாடிக்கொண்டு இருந்தனர். பெரியவர்கள் அனைவரும் சேரில் அமைதியாக அமர்ந்திருந்தனர். பலர் காதில் போனை வைத்துக்கொண்டு பேசிக்கொண்டே இருந்தனர். நேரில் இவ்வளவு பேர் இருந்தும் பேச ஆள் கிடைக்காமல் போன் போட்டு பேசுகிறார்களோ என எண்ணினேன். ஒருவேளை இப்படி இருப்பதுதான் மரியாதையோ என மனதில் நானாக நினைத்துக்கொண்டேன்.

சிலபேர் என்னிடமும் நலம் விசாரித்தனர். நானும் பதிலுக்கு விசாரித்தேன். ஆனால் உண்மையான விசாரிப்பு இல்லை. சிரிப்பும் உண்மையாக வரவில்லை. சிரமப்பட்டு சிரித்தேன்.

சாப்பிட்டுவிட்டு சீக்கிரம் கிளம்பிவிட்டேன்.

நேரம் ஒன்பதரை ஆகியிருந்தது. வண்டியை ஸ்டார்ட் செய்து சாலையில் மெதுவாக வந்துகொண்டிருந்தேன். ரோட்டில் நிலவின் வெளிச்சம் அழகாக விழுந்தது.

எல்லோரும் வேகமாக எங்கோ போய்கொண்டிருந்தார்கள் அல்லது வந்துகொண்டிருந்தார்கள்.

திடீரென சாலையில் பெருங்கூட்டம்.

ஒரு பிணத்தினை வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு சென்றனர். பின்னாடியே கவலை தோய்ந்த முகங்கள்.

தலையைக் குனிந்து கொண்டு சென்றனர். சோகத்தினை இப்படித்தானே காட்ட முடியும் என்பதற்காக கூட இருக்கலாம்.

பிண வண்டியின் முன்புறம் ஒரு கூட்டம் ஆடிக்கொண்டு சென்றது.

 இது சோகமா? சந்தோசமா? புரியவில்லை.

பிணத்தின் முகத்தினைப் பார்க்கவேண்டும் போல் இருந்தது.ஆனால் கூட்டத்தில் விலகி வருவதே பெரும்பாடாய் இருந்தது.

ஒரு வழியாக கூட்டத்திலிருந்து விலகி வந்தேன்.  பிணத்தின் முகத்தினைப் பார்க்காமல் வந்துவிட்டோமே என எண்ணினேன். ஒருவேளை அதுதான் நிஜமுகமாய் இருக்கவேண்டும். போலியான முகத்திலிருந்து தன்னை விடுவிப்பதுதான் மரணமா? பல எண்ணங்களுக்கிடையே வீடு வந்து சேர்ந்தேன்.

வீட்டினுள் நுழைந்தவுடன் இன்னமும் டிவி அலறிக்கொண்டு இருந்தது. டிவியைப் பார்த்தேன். இப்பவும் யாரோ ஒரு பெண் அழுதுகொண்டிருந்தாள். எதற்காக அழுகிறாள்? என மனைவியிடம் கேட்கலாம்தான். ஆனால் முதலில் இருந்து கதை சொல்ல ஆரம்பித்துவிடுவாள்.

என்னங்க பங்சன் எப்படி இருந்தது? என்னைப்பார்த்து பேசுவாள் என்று நினைத்தேன்.  ஏமாற்றம்தான் மிஞ்சியது.

ஒன்றும் சொல்லாமல் சோபாவில் அமர்ந்தேன். பையன் இப்பவும் அதே மொபைல் போனை அமுக்கிக்கொண்டே இருந்தான். 

எல்லாரும் சாப்பிட்டாச்சா? என்றேன்.

யாரிடமிருந்தும் பதில் இல்லை.

சுதா என்ன பண்றா? 

வேற என்ன பண்ணுவா? அவ ரூம்ல கம்ப்யூட்டர பார்த்துக்கிட்டு இருக்குறா என்றாள் பார்வதி.

எப்பவும் கம்ப்யூட்டர்தான்... எங்க படிக்கிறா? இவனுக்கு எப்பவும் போன்தான். என்று அலுத்துக்கொண்டாள் பார்வதி.

 உனக்கு எப்பவும் டிவிதான் எனச்சொல்லலாம் போல இருந்தது. அவள்  சண்டைக்குப் பயந்து அமைதியானேன்.

சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தேன். சிந்தனை எங்கெங்கோ ஓடியது. சிறுவயதில் இரண்டு பிள்ளைகளும் என் பின்னாடியே சுற்றுவார்கள். எப்பவும் அப்பா செல்லம்தான். என்னுடன் விளையாடிக்கொண்டிருப்பார்கள். வண்டியில் அமர்ந்து கொண்டு ஊரைச்சுற்றச்சொல்லுவார்கள். அது சந்தோஷமாக இருந்தது. என் மீது ஏறி விளையாடுவார்கள். தினமும் கதை சொல்ல வேண்டும். என்னுடன் பேசிக்கொண்டு இருப்பதில் அவர்களுக்கு அவ்வளவு சந்தோசம்.

பார்வதியும் அப்படித்தான். கல்யாணமான புதிதில் நான்தான் உலகம் என்று இருந்தாள். அவள் பொறந்த வீட்டிற்கு கூட அவ்வளவாகச் செல்ல மாட்டாள். என்னுடன் இருப்பதில் அவ்வளவு சுகம் என அடிக்கடி சொல்லுவாள்.இப்போது டிவிதான் உலகம் என்றிருக்கிறாள்.

வீடே அமைதியாக இருந்தது. டிவியில் ஒரு பெண் இன்னொரு பெண்ணைத் திட்டிக்கொண்டிருந்தாள்.  அவள் கண்கலங்கி நின்றாள். என் மனைவியின் முகத்தினை பார்த்தேன். இவளும் கண்கலங்கி இருந்தாள்.

டிவியில் இப்போது தொடரும் என்று போட்டிருந்தார்கள்.

பார்வதி என் முகத்தினைப்பார்த்தாள் . டிவியில் இடைவேளை வரும்போதுதான் என் முகத்தினை அதிசயமாகப் பார்ப்பாள்.

என்ன அமைதியா உட்கார்ந்திருக்கீங்க? அப்படி என்ன சிந்தனை என்றாள்?

தொலைந்த என் முகத்தினை தேடிக்கொண்டிருக்கிறேன் என்று அவளிடம் எப்படிசொல்லுவது. சற்று நேரம் யோசித்துக்கொண்டிருந்தேன்.எல்லோருமே உயிரற்ற ஒரு பொருளின்மீது வைத்திருக்கும் தொடர்பை உயிர் உள்ளவர்கள் மீது ஏன் வைப்பதில்லை. எனக்குப் புரியவில்லை.

 பின்பு தலையைக் கவிழ்ந்து கொண்டேன்.

டிவியில் அடுத்த தொடர் ஆரம்பித்துவிட்டது. பார்வதி மறுபடியும் டிவியின் மீது தன் கவனத்தினைத் திருப்பினாள்.

15 கருத்துகள்:

 1. தொலை காட்சி, அலைபேசி, கணிப்பொறி இவை நம்மை தொலைத்துக் கொண்டு இருக்கிறது .அதை அருமையாக சொல்கிறது தொலைந்த முகம்.

  //சிறுவயதில் இரண்டு பிள்ளைகளும் என் பின்னாடியே சுற்றுவார்கள். எப்பவும் அப்பா செல்லம்தான். என்னுடன் விளையாடிக்கொண்டிருப்பார்கள். வண்டியில் அமர்ந்து கொண்டு ஊரைச்சுற்றச்சொல்லுவார்கள். அது சந்தோஷமாக இருந்தது. என் மீது ஏறி விளையாடுவார்கள். தினமும் கதை சொல்ல வேண்டும். என்னுடன் பேசிக்கொண்டு இருப்பதில் அவர்களுக்கு அவ்வளவு சந்தோசம்.//

  காலம் மாறுது ,கருத்து மாறுது., மாற்றங்களை ஏற்றுக் கொண்டு அவரவர்களுக்கு ஏற்ற மாதிரி பேசினால் நம்முடன் பேசுவார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான். இந்த மாற்றம்தான் முதியோர் இல்லங்கள் பெருகவும் காரணம்.

   நீக்கு
 2. இன்றைய பல வீடுகளின் அவல நிலை இதுவே தான்.
  அழகாகச் சொல்லிவிட்டீர்கள். பாராட்டுக்கள்.

  எனக்கு மிகவும் பிடித்த வரிகள்:


  //டிவியில் எனக்குப் பிடித்ததே இந்த விளம்பர இடைவேளைதான்.விளம்பரங்களுக்கு நன்றி.//

  //ஏன் இந்த வயது பசங்களுக்கு அப்பாவை பிடிப்பதில்லை? எதிரி போன்று பார்க்க காரணம்? முகத்தினை பார்த்தாவது பேசக்கூடாதா? //

  //போலியான விசாரிப்புகள், கைகுலுக்கல்கள்.//

  //இவ்வளவு பேர் இருந்தும் பேச ஆள் கிடைக்காமல் போன் போட்டு பேசுகிறார்களோ என எண்ணினேன்.//

  //பிண வண்டியின் முன்புறம் ஒரு கூட்டம் ஆடிக்கொண்டு சென்றது. இது சோகமா? சந்தோசமா? புரியவில்லை.//

  //ஒருவேளை அதுதான் நிஜமுகமாய் இருக்கவேண்டும். போலியான முகத்திலிருந்து தன்னை விடுவிப்பதுதான் மரணமா?//

  //கல்யாணமான புதிதில் நான்தான் உலகம் என்று இருந்தாள். அவள் பொறந்த வீட்டிற்கு கூட அவ்வளவாகச் செல்ல மாட்டாள். என்னுடன் இருப்பதில் அவ்வளவு சுகம் என அடிக்கடி சொல்லுவாள்.இப்போது டிவிதான் உலகம் என்றிருக்கிறாள்//

  //எல்லோருமே உயிரற்ற ஒரு பொருளின்மீது வைத்திருக்கும் தொடர்பை உயிர் உள்ளவர்கள் மீது ஏன் வைப்பதில்லை. எனக்குப் புரியவில்லை.//

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஐயா. உங்களுக்குப் பிடித்த வரிகள் எனக்கும் பிடித்தவையே...

   நீக்கு
 3. நல்ல கதை,இன்றைய சமூக நடப்பை படம் பிடித்துக்காட்டுவதாக/உங்களது கதையில் இன்னோரு சிறபம்சம் உள்ளது,கதையை கீழிருந்தும் படித்துப்போக முடிகிறது,இப்படியான எழுத்து வெகு சிலருக்கே வாய்க்கப்பெரும் என்பார்கள்.அது உங்களுக்கு,,,,/வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விமலன் சார் உங்கள் கருத்துக்கள் எனக்கு புத்துணர்ச்சி ஊட்டுவதாக உள்ளது. நன்றி...

   நீக்கு
 4. தொலைந்த என் முகத்தினை தேடிக்கொண்டிருக்கிறேன் என்று அவளிடம் எப்படிசொல்லுவது. சற்று நேரம் யோசித்துக்கொண்டிருந்தேன்.எல்லோருமே உயிரற்ற ஒரு பொருளின்மீது வைத்திருக்கும் தொடர்பை உயிர் உள்ளவர்கள் மீது ஏன் வைப்பதில்லை. எனக்குப் புரியவில்லை//
  புரிந்து கொள்ள முயற்சித்து அல்லது புரிந்து கொண்டதாக நினைத்து நகர்த்துகிறோம் வாழ்வை . அருமையான பதிவு .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 5. தொலைந்த முகம் நெஞ்சை விட்டு
  தொலையாத முகம்
  விளைந்த வயல்போல வார்த்தை
  விளையாட வரிதோறும்

  உள்ளம் தொடும் நடையே
  உண்மை உரை யிடையே
  வெள்ளம் போல் கருத்தும்
  விளம்பின உரியபொருத்தம்

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 6. .எல்லோருமே உயிரற்ற ஒரு பொருளின்மீது வைத்திருக்கும் தொடர்பை உயிர் உள்ளவர்கள் மீது ஏன் வைப்பதில்லை ---

  pபதிலே கிடைக்கமுடியாத - அலையல்ல சுனாமி - கேள்விகள்..

  பதிலளிநீக்கு
 7. //எல்லோருமே உயிரற்ற ஒரு பொருளின்மீது வைத்திருக்கும் தொடர்பை உயிர் உள்ளவர்கள் மீது ஏன் வைப்பதில்லை. எனக்குப் புரியவில்லை.//
  நல்ல கருத்துள்ள கதை.

  பதிலளிநீக்கு