புதன், ஜூலை 4

புத்தகச் சுமை

தனியார் பள்ளிகள், தேவையில்லாத நோட்டுப் புத்தகங்களை மாணவர்கள் கொண்டுவர நிர்பந்தம் செய்யாமல், தேவையானவற்றை மட்டுமே கொண்டு வர, பள்ளி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா உத்தரவிட்டார்.
இளம் வயதிலேயே, அதிகமான புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை சுமப்பதால், மாணவ, மாணவியர், முதுகு தண்டுவடம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.




முப்பருவ கல்வித்திட்டம்: இந்தப் பிரச்னை குறித்து ஆய்வு செய்த தமிழக அரசு, புத்தகச் சுமையை குறைத்து, அவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தவும்; ஒட்டுமொத்த கல்வித் தரத்தை அதிகரிக்கும் வகையிலும், முப்பருவ கல்வி திட்டத்தை அமல்படுத்தியது. இதன்படி காலாண்டுத் தேர்விற்கான பாடங்களை அரையாண்டுக்கும், அரையாண்டு வரைப் படித்த பாடங்களை முழு ஆண்டுத் தேர்வுக்கும் படிக்கத் தேவையில்லை. இதற்காக புத்தகங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி ஒவ்வொரு பருவத்திற்கான பாடங்கள் அனைத்தும் ஒரே புத்தகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அந்தந்த பருவத்திற்குரிய தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களும் இடம் பெற்றிருக்கும். முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஒரு புத்தகமும், 6,7,8 ஆகிய வகுப்புகளுக்கு இரண்டு புத்தகம் வழங்கப்படும்.
இதில் தமிழ், ஆங்கிலம் பாடத்தை சேர்த்து ஒரு புத்தகமும், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடத்தை சேர்த்து ஒரு புத்தகமாக வழங்கப்படுகிறது. மூன்று பருவத்திற்கும் தனித்தனியாக புத்தகம் வழங்கப்படும். இதன் மூலம் மாணவர்களின் புத்தகச்சுமை குறைந்துள்ளது. இந்தப் புத்தகங்கள் சராசரியாக 600 கிராம் எடையளவே உள்ளன. இதுவரை மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களின் திறன் பார்க்கப்பட்டதால் மாணவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மை யும் நிலவி வந்தது. இந்நிலையை மாற்ற சிபிஎஸ்இ பள்ளிகளில் பின்பற்றப்படுவது போல் கிரேடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ஜூன் மாதம் முதல், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இத்திட்டம் அமலுக்கு வந்தது. ஆனால், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர் மட்டுமே பலன் பெற்று, எடை குறைந்த புத்தகப் பையை எடுத்துச் செல்கின்றனர். அதேசமயம், மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளில், படிக்கும் மாணவர்களுக்கு, புத்தகச் சுமை குறைந்தாலும், நோட்டுப்புத்தகச் சுமை குறையவில்லை. பள்ளி நிர்வாகங்கள் தரும் நோட்டுப் புத்தகங்களில், 60 சதவீதம் மட்டுமே பயன்படுகிறது. மீதமுள்ள 40 சதவீத நோட்டுப் புத்தகங்களை, மாணவர்கள் பயன்படுத்துவதில்லை.



ஆய்வில் வெட்ட வெளிச்சம்: மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இணை இயக்குனர் கார்மேகம், சமீபத்தில் ராமநாதபுரத்தில், மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றில் ஆய்வு நடத்தியபோது, 30 கிலோ எடையுள்ள மாணவரின் பையில், 10 கிலோ எடையுள்ள நோட்டுப் புத்தகங்கள் இருந்தன. அன்றைய நாளுக்கு தேவையான நோட்டுப் புத்தகங்கள் தானா என, ஆய்வு செய்ததில், பாதி நோட்டுப் புத்தகங்கள் தேவையற்றது என தெரிய வந்தது. அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியருடைய, பிள்ளையின் பையை, இணை இயக்குனர் சோதனையிட்ட போது, அன்றைய பாட வேளைகளுக்கு தேவையான நோட்டுப் புத்தகங்கள் மட்டும் இருந்தன. அவற்றின் எடை, 3.5 கிலோ இருந்தது. இதுகுறித்து விசாரித்ததில், அந்த ஆசிரியர், தினமும் காலையில், தேவையான நோட்டுப் புத்தகங்களை மட்டும் வைப்பது தெரிய வந்தது. இதையடுத்து, தேவையற்ற நோட்டுப் புத்தகங்களை கொண்டு வருமாறு மாணவர்களை நிர்ப்பந்தம் செய்யக் கூடாது என, பள்ளி நிர்வாகத்திடம் இணை இயக்குனர் கண்டிப்புடன் கூறினார்.



விரைவில் சுற்றறிக்கை: பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதாவிடம் கேட்டபோது, ""தேவையில்லாத நோட்டுப் புத்தகங்களை கொண்டு வருமாறு, தனியார் பள்ளி நிர்வாகங்கள் நிர்ப்பந்தம் செய்வதாக தகவல்கள் வருகின்றன. அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் எடுத்துச் செல்வது போல், தேவையான நோட்டுப் புத்தகங்களை மட்டும் கொண்டு வருமாறு பள்ளி நிர்வாகங்கள் கூற வேண்டும். இது குறித்து, அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்படும்,'' என்றார்.

புத்தகப்பை எடை பழையது முப்பருவக்கல்வி முறை
வகுப்பு 1- 3 கிலோ 1.50
வகுப்பு 2- 3 கிலோ 1.50
வகுப்பு 3- 4 கிலோ 2
வகுப்பு 4- 4 கிலோ 2
வகுப்பு 5- 5 கிலோ 2.50
வகுப்பு 6- 7 கிலோ 3.25
வகுப்பு 7- 7 கிலோ 3.35
வகுப்பு 8- 7 கிலோ 3.75

நன்றி : தினமலர்

5 கருத்துகள்:

  1. நிறைய விஷயங்கள்
    சிறந்த அலசல்
    நல்ல பயனுள்ள கட்டுரை சார்

    பதிலளிநீக்கு
  2. நல்ல் பயனுள்ள திட்டம்,இதுபோல நிறைய மாற்றங்கள் கொண்டு வரவேண்டும்.
    நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. படிப்புச் சுமையை விட புத்தகச் சுமை தானே அதிகம். குறைந்தால் நலம்

    பதிலளிநீக்கு
  4. நல்ல திட்டம்! இனியாவது அவர்களுக்கு விடிவு காலம் வரட்டும்! அருமையான பதிவு அண்ணா! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு