வியாழன், ஜூலை 12

திரிபுக்காட்சிமுகத்தில் தண்ணீர் பட்டது
என்னவனாகத்தான்
இருக்கவேண்டும்
காலையில் அவன்
என்னை எழுப்பும்
ஸ்டைலே அதுதான்!

”படா”ரென்று நான் பயந்து
எழுவதில்தான்
அவனுக்கு எத்தனை
சந்தோசம்
அவனுக்கு நான் எப்போதும்
எதுக்கும் பயந்து
கொண்டுதான் இருக்கவேண்டும்!


டீ  தயாரித்து
கொடுத்தேன்
குடித்துவிட்டு சொன்னான்
இந்த டீத்தூள் 
டேஸ்ட்தான் என்று!


காலை சமையல்
வழக்கம்போல்
பொங்கல்தான் வைத்தேன்
கூடவே பாசிப்பருப்பு
சாம்பாரும் வெள்ளை
தேங்காய் சட்னியும்
சாப்பிட்டுவிட்டுச் சொன்னான்
நான் வாங்கிய 
இந்த அரிசி சாப்பிட 
நல்லாதான் இருக்கு!


நான் தேர்ந்தெடுத்து கொடுத்த
அழகான வெளிர் 
நீலநிறச்சட்டையும்
அடர்கருப்பு ’பேண்ட்’டும்
அணிந்துகொண்டே சொன்னான்
அந்த கடையில் எடுக்கும்
ஆடைகள் நன்றாகத்தான் 
இருக்கும்  என்று!


என் ஆசைமகள் சொன்னாள்
அப்பா ஸ்கூலில் வைத்த 
போட்டியில் இன்னைக்கு 
நான்தான் பர்ஸ்ட்
அலுக்காமல் சொன்னான்
நீதான் என் மகளாச்சே என்று!


அத்தனையிலும் என்பங்கும்
உண்டென்று அவன் மனம்
ஒத்துக்கொள்வதேயில்லை...
அவனுக்கும் தெரியும்
நானில்லாமல் அவன் 
இல்லையென்று...
இருந்தும்
அவனுக்கு நான் 
எப்போதும் எதுக்கும் பயந்து 
கொண்டுதான் இருக்கவேண்டும்!