ஞாயிறு, ஜூலை 29

அன்புடன் காதலிக்கு

நான் நலம்...
உன் நலமறிய ஆவல்...


நீ எப்போதோ 
தப்பும் தவறுமாய் எழுதிய
காதல் கடிதத்தை இப்போதும்
படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்!


நாம் சுற்றி சுற்றி
ஆடிய வேப்பமரமும்
வெட்டப்பட்டுவிட்டது!

நாம் மல்லாக்கப் படுத்து
நிலவை ரசித்த அந்த
வைக்கப்போரையும் காணோம்!


சிரட்டையில் சோறும் குழம்பும்
வைத்து எனக்கு நீயும் 
உனக்கு நானுமாய் ஊட்டிய 
இடத்தில் பெரியதொரு மாடிவீடு!


உன் பெயரையும் 
என் பெயரையும் பொறித்து
வைத்த கள்ளிச்செடி இருந்த இடத்தில்
கான்வெண்ட் ஸ்கூலும் வந்திருச்சு!


பள்ளி முடிந்து வரும்போது
மாங்காய் திருடிய
ஊரின் ஒதுக்கப்புறமாய்
இருந்த மாமரத்தையும் காணோம்!


மரப்பலகையில் அமர்ந்து
எனக்கு முன்பு நீயும் 
உனக்குப் பின்பு நானுமாய் இருந்த 
வகுப்பறையில் வேறு யாரோ!


எல்லாம் மாறினாலும்
உன்னைக்காதலித்த
என் இதயம் மட்டும் அப்படியே!


என்ன என்னத்தையோ நேர்ந்துவிடும்
என் ஆத்தா ஆசையாய் 
கூப்பிட்டும் எங்கள் குலசாமி 
கோவிலுக்கு செல்லாமல்
என்குலசாமியான உனக்கு 
என்னையே நேர்ந்துவிட்டேன்!
என் விருப்பத்தினை
நிறைவேர்த்திடு என் தாயே!


இப்படிக்கு...
காதல் பக்தன்!