திங்கள், செப்டம்பர் 24

அந்தோ! ஆசிரியர்

      ”பள்ளிக்கூடம் என்பது நாகரீக உலகின் முன் அறிவிக்கப்படாத கொத்தடிமை முறை; குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் சமூகம் அங்கீகரித்த கொடிய வன்முறை” என்றார் ஜான் ஹோல்ட். 1972 ல் பள்ளி மாணவர் உரிமை கோரும் மாநாட்டில் நான்கு விசயங்களை மாணவர்களுக்கு அளிக்ககோரியது.

1. மாணவர்களை அடிப்பது, தண்டனைகள் உடல் ரீதியில் வழங்குவதை உடனே தடை செய்ய வேண்டும்.
2. உணவு இடைவேளையோடு, இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை குறைந்தபட்சம் பதினைந்து நிமிட ஆசுவாசப்படுத்தலை அமல் செய்யவேண்டும்.
3. இடைவேளையின் போது பள்ளியில் எங்கும் சுற்றித்திரியும் சுதந்திரம்.
4. உடனடியாக சீருடை திணிப்பை நிறுத்தி சீருடைகளை தேர்ந்தெடுக்கும் உரிமையை மாணவர்களுக்கு வழங்கவேண்டும்.

      மேலும் அவர் கூறுகையில் “பள்ளிக்கூடத்தில் ஒரே மாதிரி உட்காரும் கொடுமையிலிருந்தும் கட்டுப்பாட்டு பயங்கரத்திலிருந்தும், ஆசிரியரின் கோலிடமிருந்தும் தப்பி உடனடியாக ஒளிய ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சுரங்கப்பாதை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என்றார்.

     பாலீ ஃப்ரையிரே என்ற கல்வியாளர் நடத்திய ஆய்வில் ஆசிரியர் மாணவர் உறவு என்பது....

ஆசிரியர் பாடம் நடத்துபவர் ; மாணவர் நடத்தப்படுபவர்.
ஆசிரியருக்கு எல்லாம் தெரியும்; மாணவருக்கு ஒன்றும் தெரியாது.
ஆசிரியர் பேசுவார்; மாணவர்கள் கவனிப்பார்கள்.
நிகழ்ச்சிப்போக்கை ஆசிரியர் தீர்மானிப்பார்; மாணவர்கள் தங்களை வடிவமைத்துக்கொள்ள வேண்டும்.


      இன்றைய கல்விமுறையை ‘வங்கிமுறை” கல்வி என்று  பாலீ ஃப்ரையிரே அறிவித்தார். வங்கியில் பணத்தினை போட்டு டெபாசிட் செய்வதைப்போல ஆசிரியர் என்பவர் மாணவனின் தலையில் தகவல்களை இட்டு நிரப்பும் முரட்டு அமைப்பிற்கு கல்விமுறை என்று பெயரிடுவதா என்று கொதித்தார்.

          அலெக்ஸாந்தர்யுட்னோவிச் ஸெலென்கோ என்பவர் ஒரு கணக்கீடு மூலமாக பின்வருமாறு சொகிறார். நம்நாட்டில் ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் குறைந்தபட்சம் 2000 முதல் 2200 நாட்கள் பள்ளியில் நாள் ஒன்றுக்கு எட்டுமணிநேரம் செலவிட்டு ஆக 16 ஆயிரம் முதல் 17 ஆயிரத்து 600 மணிநேரம் வரை தனது வாழ்நாளை செலவிட்டு ( எல்கேஜி, யுகேஜி கணக்கில் இல்லை) 14 வயதுக்குள் பள்ளியை விட்டு வெளியே வரும்போது எழுதப்படிக்க தெரிந்ததைத்தவிர வேறு என்ன தெரிகிறது. தானாக ஒரு தொழில் கூட செய்யத்தெரியாத பரிதாப நிலைமை.

         எல்லாம் சரி... உண்மைதான். ஆனால் இன்றைய மாணவர்களின் போக்கும் மிக மோசமாக உள்ளது. நீதிபோதனை என்று பேச ஆரம்பித்தால் ”வந்துட்டார்யா புத்தரு” என்று நக்கலும் நையாண்டியும் மாணவர்களிடம் அதிகமாகவே உள்ளது.

”குழந்தைகள்
பள்ளிக்கு நடந்து செல்கிறார்கள்
ஆனால்...
வீட்டிற்கு ஓடிவருகிறார்கள்!” 
என்றார் ஒரு கவிஞர். ஆசிரியர்களின் நிலைமையும் அதுதான். ஒவ்வொரு நாளும் எந்த மாணவன் எந்தவிதமான பிரச்சினையை கொண்டுவருவானோ என்று பயப்படும் நிலைமை ஆசிரியருக்குள்ளது.

        இன்றைய மாணவர்களின் போக்கு அதிர்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது. ஆசிரியைகளிடத்தில் அவர்கள் நடந்துகொள்ளும்முறை அநாகரீகமானது. பயிற்சிக்கு செல்லும் ஆசிரியைகளிடத்தில் மிக மோசமான நிகழ்வுகளை இன்றைய தலைமுறை மாணவர்கள் செயல்படுத்துகின்றனர். அத்துமீறி நடக்கவும் செய்கின்றனர். அதனை ஆசிரியர்கள் கண்டும் காணாமல்தான் செல்லவேண்டியுள்ளது. மாதா, பிதா வரிசையில் ஆசிரியருக்கு உள்ள இடம் மிக முக்கியமானது. அருணகிரிநாதர் கந்தர் அனுபூதி என்ற நூலில்கூட

”உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே”
என வேண்டுகிறார்.


          ஆனால் மாணவர்கள் ஆசிரியர்களை கேலி செய்கிறார்கள், செல்போனில் படம் எடுக்கிறார்கள், ஆபாசமாக சித்தரிக்கப்படுகிறார்கள் என்றால் அதனைப்பற்றி நிச்சயம் கவலைப்பட்டுத்தான் ஆக வேண்டும். ஜாதி மோதல்கள் பள்ளியிலேயே ஆரம்பிக்கப்படுகிறது. அதற்கான காரணம் ஆசிரியரானாலும் மாணவரானாலும் முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும்.

        இதற்கெல்லாம் காரணம் கல்விமுறையா? ஆசிரியரா? மாணவரா? பெற்றோரா? எனப்பல வினாக்களை எழுப்பினாலும் அனைவருமே காரணம் என்றுதான் சொல்லவேண்டும். அதைவிட முக்கியமாக  தொலைக்காட்சிகளும்,  திரைப்படங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்தக்கால மாணவர்கள் ஆசிரியரிடத்தில் பணிவு கொண்டிருந்தார்கள். எந்த வயதிலும் தனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியரை சந்திக்கும்போது பணிவும் மரியாதையும் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது ஆசிரியரை மதிக்கும் எண்ணம் இல்லை. அவர் சொல்வது எதனையும் காது கொடுத்து கேட்பதும் இல்லை. சில மாணவர்களின் இந்தச்செயல் பல மாணவர்களை பாதிக்கிறது. மீறி கண்டித்தால் மேல கையை வைக்ககூடாது.. தெரியுமில்லை.. போலீஸ் ஸ்டேசன் போக ஆசையா இருக்கா? என்று மிரட்டும் மாணவர்களும், பெண் ஆசிரியர் என்றால் அவர்களை மிக அசிங்கமாக பேசுவதும், பள்ளி சுவர்களில் எழுதுவதும் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிக்கும் இது போன்ற செயல்களை  சில ஊடகங்களும் இதற்காகவே இரண்டாம் பக்கத்தினை ஒதுக்கி செய்தியை பெரிதுபடுத்துகின்றன. 

         எந்த ஆசிரியரும் வேண்டுமென்றே மாணவர்களைத் தண்டிப்பதில்லை. தமது குழந்தைகளை தவறு செய்தால் தண்டிப்பதில்லையா? மாணவர் ஆசிரியரை கத்தியை எடுத்து குத்தினாலும் மாணவரை தண்டிக்ககூடாதாம். மாணவர்களினால் எத்தனை ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள் என ஒரு சர்வே செய்தால் உண்மை விளங்கும். இன்றைய ஆசிரியர்களின் நிலைமை அந்தோ பரிதாபம். மனத்திருப்தியுடன் பணிபுரியும் ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகக்குறைவே. மாணவர்களை கண்டித்தால் பிரச்சினை வரும் என்று எண்ணியே பல ஆசிரியர்கள் எதையும் கண்டுகொள்வதே இல்லை. இதுதான் இன்றைய நிலைமை.


     ஆனால் இப்போது கிராமங்களில் நடைபெறும் உள்ளூர் கலை விழாவானாலும் பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் ஆண்டு விழாவானாலும் குத்தாட்டம் என்ற சிறப்பு நிகழ்ச்சி இடம்பெறாத மேடைகளே இல்லை. எல்லாம் தொலைக்காட்சிகளின் புண்ணியத்தால் அரங்கேறுகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகள் மனதில் விஷத்தினை ஊடகங்கள் ஏற்றுகின்றன. நாமும் துணைபோகிறோம். ஆசிரியர் எது கேட்டாலும் நக்கலாக பேசுதல் அல்லது வடிவேல் பாணியில் பதில் சொல்லுதல் மாணவர்களிடையே அதிகரித்துள்ளது.


      பண்பாடு இல்லாத கல்வி யாருக்கும் பயனில்லை. ஆசிரியர்களிடத்தில் மாணவர்களுக்கு நிச்சயம் மரியாதையும் பணிவும் இருக்க வேண்டும். மாணவனை அடிக்க கூடாது, மிரட்ட கூடாது, மனம் புண்படும்படி பேசக்கூடாது ஒழுங்கு கட்டுப்பாட்டினை வலியுறுத்தகூடாது போன்ற சுதந்திரச் சிந்தனைகளையும், மாணவர்களை எந்த வேலையும் வாங்கக்கூடாது, பள்ளி வளாகத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர்கூட ஊற்றச்சொல்லக்கூடாது, குப்பைகளை அள்ளச்சொல்லக்கூடாது போன்ற பல கூடாதுகள் மாணவர்களை கெட்டுப்போகச்செய்யத்தான் வழிவகுக்கும். இதுமாதிரியான சுதந்திரசிந்தனைகளை கடாசிவிட்டு எதற்கும் கட்டுப்படாத மாணவர்களை படிப்பே தேவையில்லை என்று பெற்றோரை அழைத்து வீட்டுக்கு அனுப்பவும் தயங்கக்கூடாது.

     அந்தக்கால மாணவர்கள் குருகுலத்தில் தங்கியிருந்து அத்தனை வேலைகளையும் செய்வார்கள். ஆனால் இன்று  படிப்பு மட்டுமே போதும் மற்ற எந்த வேலையும் தேவையில்லை என்று அரசும் தீர்மானித்துவிட்டது. நல்லொழுக்கமும், சுத்தமும், சுகாதாரமும் ஏட்டுச்சுரைக்காயில் மட்டும் இருந்தால் பயனில்லை. அதனை அமல்படுத்தவும் வேண்டும்.  ஒரு வகுப்பறையில் கல்வி கற்கும் அனைவரையும் முதல் ரேங்க் வாங்க வைப்பதே பள்ளிகளின் நோக்கமாக பிசகிவிட்டது. பள்ளிக்கூடத்தில் தனது படிப்பை முடித்து வெளியேறும் ஒருவர் தனது இருப்பிடத்தில் ஒரு சிறு தோட்டத்தினை பராமரிக்கக்கூட கற்றுக்கொள்ளாத விட்டேத்தியான நிலையை உருவாக்கும் கல்விமுறையைத்தான் அரசு விரும்புகிறது போலும்.  மாணவர்களை கண்டிக்கும் உரிமையையும், ஆசிரியர் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமையையும் ஆசிரியருக்கு வழங்கவேண்டும்.

         பொறுப்பில்லாத சமூக விரோதிகளை வளர்ப்பதற்கு மக்கள் அரும்பாடுபட்டு கட்டும் வரிப்பணத்தினை வீணாக்கி அழக்கூடாது. ”அனைவருக்கும் கல்வி” என்பதை ”ஆர்வமும் அக்கறையும் உள்ள அனைவருக்கும் கல்வி” என்று திருத்தி அமல் செய்யவேண்டும். செய்வார்களா?

நன்றி:
தினமணி - வி.குமாரமுருகன்
உலகக் கல்வியாளர்கள் - இரா.நடராசன்