செவ்வாய், ஜனவரி 8

இறுதிப்பயணம்


அதிகாலை நேரம்

கதிரவனின் கதிர்கள்
சிறகை விரித்து வெப்பம் பரப்பியது
முகவரி இல்லாத இடத்திற்கு
தனிமைப்பயணம் மேற்கொள்ள
ஆயத்தப்படுத்திக்கொண்டேன்
பயணத்திற்கு தேவையானவற்றை
தயார்செய்தேன்
எடுத்துச்செல்ல ஒன்றுமில்லைதான்
சில மாதங்கள் முன்பு
சுற்றுலா கிளம்பும் ஒரு வேளையில்
என் ஒல்லியான தேகத்தினை
கண்ணாடியில் பார்த்தபோது
மூக்கு கொஞ்சம் அளவாக
இருந்தால் நன்றாகயிருக்கும்
இன்னும் கொஞ்சம் குண்டாக
இருந்தால் நன்றாகயிருக்கும்
கொஞ்சம் சிவப்பாக 
இருந்திருக்கலாமோ என
எல்லாம் குறைகளாகவே தெரிந்தன
இப்போது எதைப்பற்றியும் யோசிக்கவே இல்லை
மதியம் தாண்டிவிட்டது
என்னை வழியனுப்ப பலர்
வெளியூரிலிருந்தும் வந்துவிட்டனர்
வீட்டைவிட்டு வெளியே வந்தேன்
சூரியனின் வெப்பம் 
தகிப்பது போல 
வந்தவர்கள் உணர்ந்தனர்
தெருவில் ஒரு பெண் அழுதுகொண்டிருந்தாள்
தன் காதலன் மறைந்துவிட்டதாக
ஒரு பெரியவரும் அழுதார்
தன் மகன் இறந்துவிட்டதாக
ஒரு சிறுமி அழுதாள்
தன் சித்தப்பா செத்துவிட்டதாக
ஒரு பாட்டி அழுதாள்
தனக்கு முன் பேரன் இறந்துவிட்டதாக
எல்லாம் ஒருவர்தான்
முகமூடிகள்தான் வேறு
பயணத்தினை தொடர்ந்தேன்
கூடவே சிலர் வந்தனர்
செத்ததூரம் துணைக்கு
வருவதாகக் கூறினர்
சிலர் அழுவதும் 
பலர் மனதுக்குள்
சந்தோசப்படுவதுமாக இருந்தனர்
காதலனை இழந்த பெண்
மட்டும் உயிரைக்கொடுத்து
அழுதுகொண்டிருந்தாள்
யாரும் சட்டை செய்யவில்லை
வழியில் மணக்கோலத்தில்
ஒரு ஊர்வலம்
என்னைப்பார்த்ததும் திகைத்து
ஒதுங்கி வழிவிட்டனர்
மணமகனும் மணமகளும் 
சந்தோஷத்தில் திளைத்தனர்
பலர் வியர்வை வழிய வழிய
என் உடன் வந்தனர்
என்னை மகிழ்ச்சியாக்க 
முயன்று தோற்றனர்
மலர் தூவியும்
சத்தங்கள் எழுப்பியும்
வெடிபோட்டும் வந்தனர்
மாலைநேரம்
சூரியன் ஓய்வெடுக்கவும்
நிலவு தன் பணியைத் 
தொடரவும் தயாராகியது
நேரமாகிவிட்டது
என சிலர் அவசரப்படுத்தினர்
ஒவ்வொருவரும் 
பரபரப்பாக அவரவர் 
வேலையில் இயங்கினர்
இரவு கருப்பு நிறத்தை 
தன்மேல் பூசிக்கொண்டது
நிலவு யாருக்காகவோ
ஒளிபாய்ச்ச தொடங்கியிருந்தது
எப்போதும்போலவே
மிகவும் குளிர்ச்சியாக இருந்தது
பின்பு பிரயாணக்களைப்பில்
எனக்கான இடத்தில் படுத்துக்கொண்டேன்
சுத்தமாக இருட்டியிருந்தது
காற்றும் இன்னபிற
சத்தங்களும் அடங்கிவிட்டிருந்தன
வந்தவர்கள் நேரமாகிவிட்டது
எனப் புலம்பியபடியே
கிளம்பிவிட்டிருந்தனர்
தனிமையில் என் பயணத்தினைத்
தொடர்ந்தேன் இனிமையாகவே!

6 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தனிமையிலே இனிமை காண முடியுமா! என்ற பாடல்தான் ஞாபகம் வருகிறது. நன்றி அம்மா.

      நீக்கு
  2. போனவருக்குத் தனிமை இனிமைதான்...
    “உள்ள“வருக்குத்தான் கொடுமையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உள்ளவர் என்றாலே கொடுமைதான்.. அவருக்கு சொன்னேன். நன்றி அருணா செல்வம்.

      நீக்கு
  3. ஆவ்வ்வ் இதுக்கு அங்கே பதில் போடுவிட்டேன் என நினைக்கிறேன்.. அருமையான கற்பனை.. ஆனா இப்படி ஒரு கற்பனை இப்ப போய் எதுக்கு விச்சுவுக்கு வந்தது?:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்றாவது ஒருநாள் தனிமைப்பயணம் எல்லோரும் போகும் இடம்தானே. நன்றி அதிரா..

      நீக்கு