சனி, மார்ச் 2

தொலைந்த வார்த்தைகள்

"இப்போதும் 
பேசிக்கொண்டுதானிருக்கிறோம்
மெளனங்களால்…"

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஏதோவொன்றை தேடிக்கொண்டுதானிருப்பார்கள். நான் வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

“புரிந்து கொள்ளப்படாத மொழி
மெளனம்”



வைகறைப்பொழுது, அந்திப்பொழுது, இரவுப்பொழுது, நடுச்சாமம் எந்நேரமும் வார்த்தைகள் என்மீது பிள்ளையார் எறும்பாய் ஊறிக்கொண்டுதான் இருக்கும். சிலநேரங்களில் காக்காய் கடிபோல் கடித்தும் என்மீது துப்பியும் விழுந்துகிடக்கும்.

”பலயுகங்களாய்
காற்றில் பறவைகள் எழுதிக்கொண்டுதான் இருக்கின்றன
தரையில் பல உயிரினங்கள் எழுதுகின்றன
நீரிலும் மீன்கள் எழுதிக்கொண்டுதான் இருக்கின்றன
எதுவும் புரியாமலே தாவரங்கள் தலையசைக்கின்றன”

எந்தப்புத்தகத்திலும் இல்லாத வார்த்தைகளை நான் தேடிக்கொண்டு இருக்கின்றேன். நிறையப்பேர் வார்த்தைகளை விற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். நான் அவற்றை எல்லாம் பொறுக்கிகொண்டு இருக்கிறேன்.

“ வார்த்தைகளுக்கும் கால் முளைக்கும்
பொய்பேசும்போது! “

வார்த்தைகளை கோர்த்துப் படிக்கும்போது அவை ரசிக்க வைக்கிறது. அது ரகசியக்காதலையும் எழுதிச்செல்கிறது.

“ நீ எழுதும் வார்த்தைகளில்
நிச்சயமாய் நானில்லாமல் இருக்கலாம்
ஆனால்..
உன் இதயத்தசைத் துளிகளில்
எங்கேனும் சிறிது ஒட்டிக்கொண்டுதானிருப்பேன் “

நமக்குத் தெரிந்த அத்தனை வார்த்தைகளையும் பேசித்தீர்த்துவிட்டோம். நான் உன்னிடம் கொஞ்சம் கடன் வாங்கிக்கூட பேசியிருக்கிறேன். வார்த்தைகளும் ஒருநாள் தீரும் என்பதை அறிந்துகொண்டேன். எனக்கான வார்த்தைகள் எங்கேனும் ஒழிந்து கொண்டிருக்கலாம். எனக்கான வார்த்தையை நீ எழுதியவற்றில் இருந்தே நான் அறிந்துகொண்டேன். அது மெளனம்…

”காதலித்துப்பார்
பேசிக்கொண்டே இருப்பாய்
காதலில் தோற்றுப்பார்
மெளனமாய் இருப்பாய்”






16 கருத்துகள்:

  1. காற்றின் மொழி ஒலியா...? இசையா...?
    பூவின் மொழி நிறமா...? மணமா...?
    கடலின் மொழி அலையா...? நுரையா...?
    காதல் மொழி விழியா...? இதழா...?

    இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
    மனிதரின் மொழிகள் தேவையில்லை...
    இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
    மனிதர்க்கு மொழியே தேவையில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
      மனிதரின் மொழிகள் தேவையில்லை...// நிஜம்தான் தனபாலன்.

      நீக்கு
  2. பெயரில்லா02 மார்ச், 2013

    மிக வித்தியாசமான பாணியில் எழுதியுள்ளீர்கள்.
    எனக்குப் பிடித்துள்ளது.
    பல விதமாக வித்தியாச முயற்சிகளோ!
    இனிய வாழ்த்து!
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. உங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது என்பதே எனக்கு சந்தோசம்தான்.

      நீக்கு
  3. என்னது பேசி பேசி வார்த்தைகள் தீர்ந்துவிட்டதா? வேணும்னா நான் கொஞ்சம் அனுப்பவா விச்சு?

    எனிவே பதிவு ரொம்ப சூப்பரா, உணர்வுபூர்வமா இருந்திச்சு விச்சு!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மணி. நிறைய வார்த்தைகள் அனுப்புங்க.

      நீக்கு
  4. அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்! அருமை. ரசித்தேன் உங்கள் பதிவை.
    வாழ்த்துக்கள் சகோ!

    மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும் நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்...
    உங்கள் பதிவால் ஞாபகத்திற்கு வரும் பாடலிது...:)

    பதிலளிநீக்கு
  5. ///“புரிந்து கொள்ளப்படாத மொழி
    மெளனம்”///நிச்சயமாக அண்ணா .. அதனால் தானோ என்னவோ அந்த மௌனத்துக்கு பெறுமதி அதிகம்.
    அழகாக சொல்லியிருக்கிறீர்கள் அண்ணா. அருமை!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோதை. மெளனமாக இருப்பதும் ஒரு அளவுக்குத்தான். அதிகமாக இருந்தாலும் ஆபத்துதான். அழகானதும் ஆபத்தானதும் மெளனம்.

      நீக்கு
  6. வார்த்தைகள் முண்டியடிப்பதும் மெளனம் காப்பதும் காதலின் ஒரு நிலை தான் அருமையான பகிர்வு விச்சு அண்ணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தனிமரம்.. மெளனமாகவே இருந்துவிடக்கூடாது.

      நீக்கு
  7. மனம் கவரும் இந்த எழுத்தை அடை வைத்துக்கொண்டுதானா இத்தனை நாட்கள் தாக்காட்டினீர்கள்.

    பதிலளிநீக்கு