சனி, ஆகஸ்ட் 17

குரங்கு கூட்டம்

ஆடை அழகுதான்
மனம்தான் அழுக்கு
ஆடை அழுக்குதான்
மனம் வெகு அழகு

            மனிதர்கள் உடலை அழகுபடுத்தும் விதத்தில் பாதிகூட மனம் அழகுபடுத்துவதற்கு நேரம் செலவிடுவதில்லை. இப்போதெல்லாம் விலை உயர்ந்த பொருட்களுக்குத் தரும் மதிப்பில் பாதிகூட மனிதர்களுக்கு தருவதில்லை.



வளைகின்றது
நெழிகின்றது
சுழன்றடிக்கிறது
புரட்டிப்போடுகிறது
குமுறுகிறது
குதூகலிக்கிறது
சொரணையின்றியிருக்கிறது
கவலைகொள்கிறது
ஏதோவொரு தருணத்தில் மனம்..!


          மனசை அழிக்க ஏதாவது அழிப்பான் இருந்தால் வெகு சிறப்பாக இருக்கும்.கொஞ்சம் கிளறினால் சாக்கடை மணமும், சந்தன மணமும் மாறி மாறி  அடிக்கும். ஒருவர் மனசை முழுவதும் புரிந்தவர் இருக்க இயலாது. புரிந்தது போல நடிப்பென்றால் சில காலங்களில் தெரிந்துவிடும்.

மனசைவிட
ஆழமான ஒன்று உலகில்
இதுவரை இல்லை..!

       மனம் வெகு ஆழமானது. தோண்டதோண்ட நினைவுகள் வந்துகொண்டே இருக்கும். மறக்க நினைக்கும் நினைவுகள் ஆழமாகவே புதைந்திருக்கும். மறக்க மறக்க நினைக்கவே தோன்றும். ”மறந்து விடு” என்ற ஒற்றைச் சொல்லில் மனம் படும்பாடு சூறாவளியாய் சுழலும். சொன்னவர்கள் என்றுமே மறப்பதில்லை. அது மனம் படும் பாடு.

கவிதையை நேசித்திருக்கும்
மனசுக்குத் தெரியும்
பொய்களற்ற பூக்கள்
அவையென
முலாம் பூசப்பட்ட மனசு
கொண்டோருக்கு
அவைகள் வெறும் 
வார்த்தைகளாகவே
தெரியும்..!

          நான் படித்த செய்தி ஒன்று.நம் மனம் ஒரு குப்பைத்தொட்டியைப் போல, யார் என்ன சொன்னாலும், அதை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும். ஒரு ஊரில் வேதத்திலும், சைவ சித்தாந்தத்திலும் கைதேர்ந்த ஞானி ஒருவர் இருந்தார். ஒருமுறை அவர் சீடர்களுக்குப் பாடம் எடுத்துக்கொண்டிருந்த போது, அங்கிருந்த பூனை ஒன்று அவர்கள் முன்பு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தது. இதனால் அந்த ஞானியின் கவனத்தில் எந்த மாற்றமும் இல்லை, ஆனால் சீடர்களின் கவனம் சிதறியது. ஆகவே பூனையை பக்கத்தில் இருந்த தூணில் கட்டும்படி ஞானி சொல்ல, அதேபோல் பூனை கட்டப்பட்டது. அடுத்தடுத்த நாட்களிலும் பூனை தொந்தரவு தந்ததால் தினமும் பூனை தூணில் கட்டப்பட்டது. சில வருடங்களில் ஞானி இறந்து விட்டார். சீடர் ஒருவர் ஞானியின் பொறுப்பை ஏற்றார், அவர் பாடம் எடுக்கும்போதும் பூனை தவறாமல் தூணில் கட்டப்பட்டது. சில நாட்களில் பூனை இறந்துவிட, அடுத்தநாள் பாடம் எடுக்க வந்த புது ஞானி, பாடம் எடுக்கும்போது ”தூணிலே பூனை ஒன்று கட்டவேண்டும் என்று தெரியாதா? உடனே போய் புதிய பூனையைக் கொண்டுவந்து கட்டுங்கள்” என்று சீடர்களுக்குக் கட்டளையிட்டார். இந்த ஞானியைப் போன்றுதான், இன்று பலபேர் யார் என்ன சொன்னாலும் அவர்கள் மனம் அதை எற்றுக்கொண்டுவிடுகிறது. அவற்றை விடாமல் மல்லுக்கட்டுகின்றனர். 

மனம் ஒரு குரங்கு என்பர்
இல்லவே இல்லை
மனம் ஒரு
குரங்கு கூட்டம்
ஆடவும் மறுக்கிறது
அடங்கவும் மறுக்கிறது

      இன்னும் சிலவற்றை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறோம். பேசாமலும் சொல்லாமலும் மனசால் மறக்காமலும் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறோம். மனமே பொறு.... போதுமென்ற மனம் என்ற ஒன்று கிடையாது. கிடைக்காத ஒன்றை நினைத்து கிடைக்காவிட்டால் மனசை அடக்கிக்கொள்கிறோம் .  அவ்வளவுதான். ச்சீ.. ச்சீ.. இந்தப்பழம் புளிக்கும்  என்பதெல்லாம் கிடையாது. ”மனதாலும் வாழலாம்...”



மனித முகம் போலியானது
மனம் போல முகமில்லை
உள்ளோன்று வைத்து
புறமொன்று பேசுவார்
முகமூடி அணிந்த முகம்

     குழந்தைக்கு எந்த ஒரு பொருளும் மகிழ்ச்சியை கொடுக்கும். ஒரு கிலுகிலுப்பையை குழந்தையின்முன் ஆட்டினால் வாய்விட்டு சிரிக்கும் . அறுபது வயதில் முகத்திற்கு முன் ஒரு கிலுகிலுப்பையை ஆட்டினால் ரத்தகொதிப்பு கூடுகிறது.  கிலுகிலுப்பை ஒன்றுதான். மனம்தான் மாறியிருக்கிறது. நவம்பரில் இருந்த ஒரு மனம் டிசம்பரில் வேறு மாதிரி இருக்கும். அவ்வளவு ஏன் அடுத்த நிமிடமே கூடமனம் மாறும்.



என் கல்லறையை
உன் “கல்மனசு”
கொண்டு கட்டிவிடு..!

3 கருத்துகள்:

  1. பெயரில்லா17 ஆகஸ்ட், 2013

    வணக்கம்

    அருமையான பதிவு விளக்கங்களும் மிக நன்று வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. மனத்தின் சதிராட்டத்தை
    கவித்துவமாய் விளக்கிப் போனவிதம் அருமை
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு