நம்மை அடையாளப்படுத்துவதே நம்முடைய பெயர்தான். பெயர் வைப்பதையே ஒரு விழாவாகக் கொண்டாடுகிறோம். அதுவும் தாய்மாமன் மடியில் குழந்தையை அமரவைத்து மொட்டைபோட்டு , காதுகுத்தி பெயர்வைப்பார்கள். பெயரில்தான் எத்தனை சுவராஸ்யங்கள் உள்ளன.
அடைமொழி என்பது ஒருவரின் திறமையின் அடிப்படையில் வழங்கும் சிறப்பு பெயராகவும் உள்ளது. அதே நேரத்தில் கேலிக்காக வைக்கும் பெயராகவும் உள்ளது. கிராமத்தில் கேலிக்காக வைக்கும் பட்டப்பெயர்தான் அதிகம். சிலர் குழந்தைகளுக்கு தங்களின் குலதெய்வத்தையும், சிலர் தங்களின் மூத்தோரையும் இன்னும் சிலர் தங்களுக்கு பிடித்த தலைவர்கள் அல்லது நடிகர்கள் அல்லது தங்களுக்கு உதவி செய்த நண்பர்கள் ஆகியோரின் பெயர்களை வைப்பதுண்டு. சிலர் தான் காதலித்த நபரின் பெயரை வைப்பதுண்டு. அப்படி வைத்து மாட்டிக்கொண்டவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். சமீபத்தில் நல்ல தமிழ் பெயர்களை நாம் குழந்தைகளுக்கு வைப்பதில்லை.
மகாத்மா என்றால் காந்தி அடிகள்தான். அன்னை என்றாலே தெரஸாதான். இப்படி சில அடைமொழிகளைச்சொன்னாலே வரலாற்றில் உள்ள பெரியவர்களின் பெயர்கள் ஞாபகம் வருகிறது. கப்பலோட்டிய தமிழன் வ உ சி, கர்ம வீரர் காமராஜர், மக்கள் தில்கம் எம்ஜிஆர் , சுரதாவை உவமைக்கவிஞர் என்றும், தமிழ்த்தென்றல் என்று திருவிக வையும் , பன்மொழிப்புலவர் என்றால் கா.அப்பாதுரை, குட்டித்திருக்குறள் என்றால் ஏலாதி, கவிஞர் என்றாலே கண்ணதாசனையும், இசைஞானி என்றால் இளையராஜா இப்படி அடைமொழிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படி நூல்கள், கவிஞர்கள், தலைவர்கள், பெரியவர்கள் என் பலருக்கும் அடைமொழி வைப்பதுண்டு. ஆனால் பட்டப்பெயர் என்பது அந்தப்பெயர் கொண்டு மட்டும் நாம் அழைப்போம். சில பெயர்களை நாம் கேலிக்கூத்தாக்கவும் செய்கிறோம். அதுவும் சினிமாவில் நடிகர்கள் தங்களுக்கென்று ஒரு அடைமொழி (பட்டப்பெயர்) வைத்துக் கொள்(ல்)வதுண்டு. வானத்தில்கூட அத்தனை ஸ்டார்கள் இருப்பதில்லை. சமீபத்தில் ”மம்மி ரிட்டன்ஸ்” என்ற அடைமொழியுடன் பல இடங்களில் போஸ்டர்கள். இதன் அர்த்தம் தெரிந்துதான் சொல்கிறார்களா! என்பது சந்தேகமே.
ஒரு தம்பதிக்கு தங்களின் குழந்தைக்கு பெயர் வைப்பதில் பெரிய சண்டையே வந்துவிட்டது. மனைவி தன்னுடைய அப்பாவின் பெயராகிய முத்தையா என்பதை வைக்கவேண்டும் எனவும் கணவன் தன் அப்பா பெயராகிய கிருஷ்ணன் பெயரைத்தான் வைக்கவேண்டும் எனவும் கடுமையான வாக்குவாதம். பக்கத்து வீட்டுக்காரர் ஓடோடிவந்து என்ன பிரச்சனை என விசாரித்து பஞ்சாயத்து பண்ணினார். கடைசியில் இருவரது பெயரையும் சேர்த்து முத்துராம கிருஷ்ணன் என வையுங்கள் என்று சொன்னார். இடையில் இது யார் ராமர்? என விசாரித்தால் பக்கத்து வீட்டுக்காரரின் தந்தை பெயராம். இப்படித்தான் பல இடங்களில் பெயருக்காக சண்டையே வந்துவிடும்.
பெயருக்கா இந்த அக்கப்போர் என்று நினைத்தால் அது உண்மைதான். பெயர் என்பது சாதாரண விசயமல்ல. எனக்கு சப்பாணி, பரட்டை என்றாலே 16 வயதினிலே படத்தில் கமல் ரஜினிதான் ஞாபகம் வரும். அந்த அளவுக்கு அந்தப்பெயர் மனதில் ஒட்டிக்கொண்டது.
இவ்வளவு ஏன்..! எங்கள் ஊரில் சிலருக்கு வைத்திருக்கும் பெயரைக்கேட்டாலே சும்மா அதிரும். குண்டாக இருந்த ஒருவருக்கு நோஞ்சாம்பிள்ளை, ஒரு கண் ஒரு மாதிரி இருந்ததால் ஒருத்தருக்கு கண்ணப்பன், தரணி சர்க்கரை ஆலையில் வேலைபார்க்கும் ஒருவருக்கு தரணி, இலஞ்சி ஊரில் இருந்த வந்தவருக்கு இலஞ்சி, பம்பாயில் கொஞ்சகாலம் இருந்துவிட்டு வந்தவருக்கு பெயரே பம்பாய், இப்படி ஊரின் பெயரையும் அடையாளப்படுத்துவதுண்டு. பளிச்சி, புருவண்டு, அத்தக்கா, சீயக்கா, குட்டையன், ஊளைமூக்கன், மண்டையன், அவிச்ச முட்டை, முட்டைக்கோஸ், கத்தரிக்காய், தீவாளி, மண்டிக்காபி, டீக்க, பம்பையன், தவிட்டாயி, செம்பு, சப்பாத்தி இப்படி சில பெயர்கள் கேலியாக உலவுகின்றன. இன்னும் நிறைய பெயர்கள் உண்டு. அவர்களின் சொந்த பெயரை சொன்னால் ஊரில் யாருக்கும் தெரியாது. பட்டப்பெயரைச்சொன்னால் உடனே அடையாளம் சொல்லிவிடுவர். இது படித்து வாங்கும் பட்டம் இல்லை என்றாலும் எப்படியோ இது அவர்களின் அடையாளமாகி விட்டது. இந்தப்பெயர் சொல்லி கூப்பிடுவதால் அவர்கள் வருத்தமும் படுவதில்லை.
ரவுடிகளுக்கும் பட்டப்பெயர் உண்டு. பட்டப்பெயர் இருந்தால் மட்டுமே அவர் ரவுடி என போலீஸாரால் ஒத்துக்கொள்ளப்படுவார். கட்டை ராஜா, காக்கா தோப்பு , செம்பட்டையன், சந்தனக்கடத்தல் மன்னன், ஆட்டோ சங்கர், தாத்தா செந்தில் இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
ஊர்களுக்கும் அடைமொழி உண்டு. பல தின்பண்டங்களுக்கு கூட ஊரின் பெயரை சேர்த்தே வழங்குவதுண்டு. திண்டுக்கல் பிரியாணி, திருவில்லிபுத்தூர் பால்கோவா, மணப்பாறை முறுக்கு, சாத்தூர் சேவு, விருதுநகர் பரோட்டா, திருநெல்வேலி அல்வா இப்படியும் பெயர்கள். திருப்பாச்சி அருவா, திண்டுக்கல் பூட்டு இப்படி பொருட்களுக்கும் பட்டப்பெயர் உண்டு.
இம்புட்டு ஏன் எனக்கே ஒரு அழகான பட்டப்பெயர் உண்டு.
சுவாரஸ்யமாக...இருக்கிறது இப் பதிவு.
பதிலளிநீக்குநன்றி
ஆகா, உங்களின் பட்டை பெயரைச் சொல்லவே இல்லையே
பதிலளிநீக்குகடைசியில் உங்க பட்டப்பெயரைச் சொல்லவே இல்லை வாத்தியாரே???
பதிலளிநீக்குஅருமையான பதிவு எழுதியிருக்கிறீர்கள். நலமாக இருக்கிறீர்களா?
பதிலளிநீக்குஎங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.