ஞாயிறு, நவம்பர் 9

பந்தக்கால்

                 

                      விளையாட்டும் பேச்சுமாய் கலவையினூடாக கீழே கிடக்கிற செய்தித்தாள் கிழித்துப்போடப்பட்ட வாராந்திர, மாதந்திரிகளின் பக்கங்களை சேகரித்தெடுத்து அவைகளில் சிலவற்றை எனது சட்டைப்பையிலும் புத்தகப்பையிலுமாய் வைத்து பாதுகாத்த பழக்கத்தின் நீட்சியே என்னை ஓரளவு இலக்கியம் படிக்க வைத்தது எனலாம்... அப்படியான நாட்களின் நகர்வுகளில் உருவான வாசிப்புப்பழக்கம் இயக்கமும் என்னை கைப்பிடித்து இழுத்துக் கொண்டுபோய் இலக்கியத்தில் அனா, ஆவன்னா  எழுத வைத்தது என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் விமலனை அநேகமாய் பதிவுலகில் நிறையப்பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.

                 அவர் எழுதிய பந்தக்கால் என்னும் புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன். தொகுப்பில் மொத்தம் இருபத்திரெண்டு கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். இந்நூலினை “என்னை  சற்றே ஆழமாக இம்மண்ணில் பதியனிட்ட எனது பெற்றோர்களுக்கு” என அழகாக சமர்ப்பித்துள்ளார்.இந்நூலினை சரவணா பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். எளிமையான வடிவமைப்பில் அழகாக உள்ளது.                         பாலம் எனும் சிறுகதையில் வர்ணனை அருமை. ஒரு சின்ன நிகழ்வை அழகான கதையாக வடிவமைத்துள்ளார். வானத்திற்கும் பூமிக்கும் நட்டு வைத்த வெள்ளிக்கம்பிகளாய் இறங்கிக்கொண்டிருந்தது மழை.அடித்த காற்று மொத்த மழையையும் இங்கிட்டும் அங்கிட்டுமாய் தாலாட்டிக் கொண்டிருந்தது. என்று அழகான வர்ணனையுடன் ஆரம்பித்து விளாரான ரத்தக்காயங்களுடன் படுத்துக்கிடக்கிறது என்று பாலத்தின் மோசமான இயல்பையும் ரசிக்கும்படி எழுதியுள்ளார். கதையின் முடிவில் ஒரு சின்ன நிகழ்வை கோடிட்டு காட்டி கதையை முடித்துள்ளார். அதுவும் நெஞ்சைத்தொடும்படி..

                   பதியம் எனும் கதையில் மரக்கன்றுகள் நடுதல், மீதமான மரக்கன்றை யாருக்கு கொடுப்பது என்ற குழப்பம், “பெரும்பாலும் செடிகளையும், மரக்கன்றுகளையும் பார்த்தே பேசினாள்..” என்று மரக்கன்று வாங்கும்போது நர்சரிப்பெண்ணின் இயல்பு என்று கலந்து கட்டுகிறார். 

                                குருத்து எனும் கதையில் மருத்துவமனைகளில் மனிதர்களை நடத்தும்விதம் அதுவும் அவர்களின் பிரத்தியோக பாஷையான ’கேஸ்’ என்ற வார்த்தையின் வலியை சொல்லியுள்ளார். ஒரு பெண் குழந்தை பெத்துக்கனும் எனும் முடிவு வெகு அழகு.

                            பன்றிகள் மேயும் பெருவெளியில் ஒரு பன்றிக்குட்டி அது வாழும் இடம் அதனால் எரிச்சலுறும் ஒரு மனிதமனம் என கதை நகழ்கிறது. முடிவில் அடிபட்டுக்கிடக்கும் பன்றிக்குட்டியை நாயை விரட்டியதின்மூலம் காப்பாற்றப்பட்டதாய் நினைக்கும் மனித மனத்தை என்னவென்று சொல்வது.

                  எனது மனதை பாதித்த கதைகளில் ‘சாயங்களில்..!’ எனும் ஒரு கதை. தவசிலிங்கத்தின் கதாபாத்திரத்தை நம்மோடு அழகாக அழைத்துச்சென்று அவர்மீது ஒரு பரிதாபத்தையும் உண்டாக்குகிறார். பெரும்பாலும் இவரின் கதைகளில் அது ஒரு நிகழ்வாகவே பதியப்பட்டிருக்கும். வாசிக்கும்போது கதாபாத்திரங்களினூடே நாமும் பயணிக்கலாம். ஐந்து பைசாவுக்கு கை நிறைய அள்ளித்தரும் பெட்டிக்கடை தவசிலிங்கம் இறுதியில்கால் ரூபாய் பிச்சை எடுப்பது நெஞ்சை அழுத்தும்.

                        சைக்கிள்காரக்கா கதாப்பாத்திரத்தின் மன உறுதியை ‘ஒற்றைச்சிறகு எனும் கதையில் காணலாம். இன்றும் பல பெண்கள் அந்த மன உறுதியுடன்தான் வாழ்க்கையை வாழ்கின்றனர்.

                பந்தக்காலு எனும் கதையில் ‘நாம ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு கண்ணுமணிகளா ரெண்டு பையங்களை பெத்தெடுத்து இந்த ஊரையே என்னன்னு கேக்கனும்’ என்ற வார்த்தை ஏனோ நண்பா! அந்தப்பெண்ணை பார்த்ததும் மின்வெட்டாய் இந்த வார்த்தைகள் வந்து போனது எனக்குள் என்று  நண்பனிடம் கூறுவது உணர்ச்சிபூர்வமாக இருக்கும். 

                   பசி என்ற கதை படிப்பதற்கு சற்று அயர்வைத் தந்தது. பெரிய பத்தியாக இருந்ததே காரணம் என நினைக்கிறேன். ஆனால் கதையும் கதையின் முடிவும் வெகு அழகு. இவருக்குப்பிடித்தமான டீக்கடையின் வர்ணனை இந்த நூலில் அவ்வளவாக இல்லை. எல்லா கதைகளைப்பற்றியும் எழுத ஆசைதான். எனக்குப்பிடித்த பல கதைகளை எழுதிவிட்டேன். மற்ற கதைகளை மற்றவர்களும் படிக்கட்டும் என்று விட்டுவிட்டேன். விமலனைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள பூப்பதெல்லாம்... என்ற என் பழைய பதிவைக்காணலாம். விமலன் அவர்களின் சிட்டுக்குருவி என்னும் தளத்தில் அவரின் எழுத்துக்களை வாசிக்கலாம்.

9 கருத்துகள்:

 1. நண்பர் விமலன் அவர்களின் எழுத்துத் திறமையே அலாதியானது

  பதிலளிநீக்கு
 2. விமலன் அவர்களின் கதைகளை அழகாக விமர்சித்து இருக்கிறீர்கள். படிக்க ஆவலாய் இருக்கிறது. நன்றி சகோ

  பதிலளிநீக்கு
 3. நன்றி விச்சு சார்,இது போலான விமர்சனங்களும்,பரஸ்பரமான தோள்தட்டல்களுமே என்னை எழுத வைக்கிறது தொடர்ந்து என நினைக்கிறேன்.நன்றி சார்,மாறாத அன்பிற்கும்,நட்பிற்குமாய்/

  பதிலளிநீக்கு
 4. விமலன் சாருக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

  பதிலளிநீக்கு
 5. ஆவ்வ்வ்வ் விச்சு இங்கதான் இருக்கிறீங்களோ? உங்கட பெயரைக் கிளிக் பண்ணினால் அது கூகிள் + க்கு அழைத்துச் செல்லுதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

  பதிலளிநீக்கு
 6. பந்தக்கால்.. பற்றிய உங்கள் தகவல் பகிர்வு அருமை.

  பதிலளிநீக்கு
 7. விமலனின் எழுத்துக்களில் எப்போதும் ஒருவித வசீகரமிருக்கும். வர்ணனையாகட்டும், சம்பவப் பகிர்வாகட்டும்... எழுதும் விதத்தில் வாசகரை வசியப்படுத்தும் எழுத்துவன்மை. அவரது நூலறிமுகத்துக்கு மிகவும் நன்றி விச்சு. மிக அழகாக விமர்சித்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 8. ஶ்ரீமத் பாகவதம் - (தமிழில்)புக் தரவிறக்கம் லிங்க் தெரிந்தால் தெரிவியுங்கள்.சகோ நன்றி. -

  பதிலளிநீக்கு
 9. அருமையான மதிப்புரை.
  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு