செவ்வாய், செப்டம்பர் 20

நன்றே... இன்றே...

          ஒரு    பணக்காரர்    தன்     குடும்பத்துடன்      தலயாத்திரை புறப்பட்டார்.எத்தனையோ புனிதத்தலங்கள்! சில பார்த்தாலே முக்தி தருவன. சில நினைத்தாலே முக்தி தருவன. அந்த வரிசையில் காசியைப்பற்றி, அங்கு இறந்தாலே 'முக்தி' என்பார்கள்.
          அந்த பணக்காரர் காசிக்கு வந்தார். புனித கங்கையைத் தரிசித்தார். அதன்பின்,    அக்கரைக்குச்    செல்ல   அனைவரும்   படகில்      ஏறினர். படகுப்பயணத்தின்போது, புனித கங்கை நீரைத் தொட விரும்பி வளைந்து குனிந்த அந்தப் பணக்காரர், தவறி கங்கை ஆற்றில் விழுந்துவிட்டார். நீரில் மூழ்கி, மூச்சுத்திணறி உயிருக்குப்போராடினார்.
            படகில் இருந்த அனைவருக்கும் பதற்றம், பயம்...ஒரே கூச்சல்!
           அப்போது    கல்லூரி   மாணவன்    ஒருவன்   உடனே    குதித்து, மூழ்கிக்கொண்டிருந்த அவரைப் படகில் இழுத்துப் போட்டுக் காப்பாற்றினான்.
        அந்தப் பணக்காரர் உணர்ச்சிவசப்பட்டு. "என் உயிரையே காத்த உனக்கு, என் நன்றியைக் காட்ட என்ன கொடுத்தாலும் ஈடாகாது. நான் தங்கியிருக்கும் சத்திரத்துக்கு வா! லட்ச ரூபாய் தருகிறேன்!" என்றார்.
          சத்திரம் போய் சேர்ந்ததும் அவர் மனம் பேச ஆரம்பித்தது. " அவன் உன் உயிரைக் காத்தது உண்மைதான். அதற்காக லட்ச ரூபாய் அதிகம்!" என்றது.
          அவர் யோசிக்க ஆரம்பித்தார். "உண்மைதான்! ஆனாலும் துணிந்து நீரில் குதித்து என்னைக் காப்பாற்றியிருக்கிறானே! வரட்டும், பாவம்....ஐம்பதாயிரம் ரூபாய் தரலாம்!".
         அவன் வரவில்லை! மனம் தொடர்ந்து பேசப்பேச....ஐம்பதாயிரம், பத்தாயிரம், ஐந்தாயிரம் எனக் குறைந்துகொண்டே வந்தது.
           அவன் வரவில்லை!. கடைசியில் அவரே வாய்விட்டுச்சொன்னார்...." நல்ல பையன்! வந்திருந்தால், நம்மைக் காப்பாற்றியதற்கு நன்றியாக வயிறார ஒருவேளை சாப்பாடு போட்டு அனுப்பியிருக்கலாம்"!.
         இது எப்படி இருக்கு? இதுதான் நம் மனத்தின் விசித்திரம்!
        ஆதலால், யாருக்காவது நல்லது செய்ய நினைத்தால், அதை உடனே, மனம் குறிக்கிடும் முன்னே செய்திடுங்கள்.

                                                                                     -  நன்றி கவிஞர் பெருமாள்ராசு

3 கருத்துகள்:

  1. அருமையான செய்தி. ஆமாம் மனம் ஒரு குரங்கு, அது எப்போ வேனுமானாலும் மாறலாம். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. அழகாகச் சொன்னீர்கள்..
    அருமையான பதிவு..

    உண்மைதான் நண்பா..

    பதிலளிநீக்கு