வியாழன், செப்டம்பர் 22

அதற்கும் அப்பால்....

காலை இளம் வெய்யில் நேரம் காட்டுக்குப் போயிருப்ப
மாட்டுக்குத் தட்டையறுத்து சும்மாடில் கட்டி வருவ
ஊர்கிணத்து தண்ணியெடுத்து குழுதாடி நிரப்பிவப்ப
ஊர்சனங்க சுளுக்குக்கெல்லாம் உருவியேதான் நீ விடுவ!

கண்மாய்க்கரை களத்துமேடு அத்தனையும் போய் வருவ
நல்லா நான் படிக்கணும்னு உம் பாதம் ரணம் படுவ
ஆத்துப் பிஞ்ச நடவுன்னும் சித்தங்குளம் களவெட்டுன்னும் 
                                                             பொழுதெல்லாம் சுத்திவருவ
இருந்தும் உன் மடியில் என்னப்போட்டு தாலாட்டி முழிச்சுருப்ப!

திருவிழான்னா உன்பாட்டு முழப்பாரி முன்னால் போகும்
உன்வெத்தல உரல் சத்தங்கேட்டா என் கவித பின்னால் வரும்
காய்ச்சல் அது எனக்கு வந்தா உங்க்கண்ணு குளமாகும்
ஊர்குளத்து சாமிகிட்ட நேத்திக்கடன் போய்ச்சேரும்!

பல்லு மொத்தம் போனாலும் சொல்லு ஒண்ணும் போனதில்ல
உன் பாம்படத்து காதுபோல அன்பு என்றும் குறஞ்சதில்ல
ஆயிரந்தான் இருந்திடலாம் சொந்தமின்னு எனக்கு
ஆனாலும் அப்பத்தா நீ போதும் எனக்கு!!

                                                                   - கவிஞர்  இராஜபாளையம் நந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக