வெள்ளி, செப்டம்பர் 23

கணவர் எங்கே...

         
      ஓர் ஊரில் ஒரு கணவன், மனைவி.
      அவர்களுக்கு ரொம்ப நாட்களாகவே ஒரு கவலை இருந்து வந்தது. அதாவது அவர்களுக்குக் குழந்தை இல்லை.
      என்ன செய்வது என்று யோசித்தவர்கள் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதன்படி ஒரு ஆன்மீகப் பெரியவரைப் போய் பார்த்தார்கள்.
      "ஐயா! எங்களுக்காக நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்!" என்று கேட்டுக் கொண்டார்கள்.
      அவர் சொன்னார்.
   
  "கவலைப்படாதீர்கள்....இப்போது நான் ஒரு புனிதமான இடத்திற்குத்தான் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அந்த இடம் வெளிநாட்டில் இருக்கிறது. அங்கே புகழ்பெற்ற ஒரு ஆலயம் இருக்கிறது.
     அந்த ஆலயத்தில் விளக்கேற்றி வைத்தால் குழந்தை பிறக்கும். நான் அங்கே சென்றவுடன் உங்களுக்காக விளக்கேற்றி வைத்துப் பிரார்த்தனை செய்கிறேன்!".
      தம்பதி மகிழ்வோடு திரும்பி வந்தார்கள்.
      அந்தப் பெரியவர் வெளிநாடு புறப்பட்டுப் போனார். மூன்றாண்டுகளுக்குப் பிறகு திரும்பி வந்தார்.
     அந்தப் பெண்ணைச் சந்தித்தார்.
     "என்ன ஆயிற்று?" என்று விசாரித்தார்.
      "ஐயா...எனக்கு அடுத்தடுத்து இரட்டைப் பிரசவங்கள்....இப்போதும் வயிற்றில்...!"
     பெரியவருக்கு மகிழ்ச்சி.
      "பரவயில்லையே! நான் அங்கே விளக்கேற்றி வைத்தது இங்கே நல்ல பலனைக் கொடுத்திருக்கிறதே...! உங்கள் கணவர் எங்கே?   உடனே அவரை நான் வாழ்த்தவேண்டும்!"
     "அவர் இங்கு இல்லையே...!"
      "வேறு எங்கே?"
     " நீங்கள் போய் வந்த அதே இடத்திற்குத்தான் அவசரமாகப் புறப்பட்டு போயிருக்கிறார் !"
       "ஏன்?"
       "நீங்கள் ஏற்றி வைத்த விளக்கை அணைத்துவிட்டு வருவதற்காக!"
      நண்பர்களே!
      ஆன்மீக நம்பிக்கை இப்படித்தான் சில சமயங்களில் நம்மை அங்குமிங்குமாக ஓட வைத்து விடுகின்றது. உண்மையை உணர்ந்து கொள்கிற வரையில் இந்த ஓட்டங்கள் நிற்கப்போவதில்லை.
      விளக்கேற்றுவது எதற்காக?
      வழிபாடு செய்வது எதற்காக?
      முஸ்லீம்கள் ஊதுவத்தி கொளுத்துகிறார்கள்.
      கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி கொளுத்துகிறார்கள்.
      இந்துக்கள் சூடம் கொளுத்துகிறார்கள்.
      வழிபாடு முடிந்து கண்களைத் திறக்கிறபோது
      ஊதுவத்தி இருக்காது.
      மெழுகுவத்தி இருக்காது.
      சூடமும் இருக்காது.
      அவை எல்லாமும் தம்மைத்தாமே எரித்துக் கொண்டிருக்கும்.
      நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மை.
     ' தன்னலமற்ற தியாகம்!'

                                                                                -தென்கச்சி கோ.சுவாமிநாதன்


2 கருத்துகள்:

 1. Vetha.Elangathilakam.02 நவம்பர், 2011

  ''...நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மை.
  ' தன்னலமற்ற தியாகம்!'.....''
  தொடருங்கள் சகோதரா. வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு
 2. Vetha.Elangathilakam.02 நவம்பர், 2011

  ''....நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மை.
  ' தன்னலமற்ற தியாகம்!''

  தொடருங்கள் சகோதரா. வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு