ஞாயிறு, செப்டம்பர் 25

கொஞ்சம் நல்ல கதைகளைப் பற்றி....

         உலகெங்கும் கல்வியாளர்களின் மனசாட்சியைப்  புரட்டிப் போட்டத்  தமிழில்  ஒரு   இலட்சம்    பிரதிகள் விற்பனையான 8 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட  ஒரு குறுநாவல் ஆயிஷா. 1964ல் லால்குடியில் பிறந்த 2008ல் டாக்டர்  ராதாகிருஷ்ணன்   விருதுபெற்ற    ஆசிரியர் இரா.நடராசன் அவர்கள் எழுதிய நூல்.    
       ஆயிஷா நாவல் ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை போன்று அமைந்திருக்கும். ஒரு   10ம்   வகுப்பு    படிக்கும்   மாணவிக்கும்    அவளின் அறிவியல்       ஆசிரியைக்கும்   உள்ள தொடர்பு    மிக     நுட்பமாகக் கையாளப்பட்டிருக்கும். அந்த மாணவியின் பெயர்  ஆயிஷா.   அவளின் தோற்றம், அவள் கேட்கக்கூடிய கேள்விகள்,  மற்ற  ஆசிரியைகள்  அடிக்கும்  கமெண்டுகள்,  ஆயிஷாவின் வினாக்களுக்கு  ஆசிரியைகள்  திணறுவது  என  அத்தனையும்  செதுக்கி எழுதப்பட்டுள்ளன.
      ஆயிஷா  கதையில்  வரும் ஆசிரியையின் எண்ணமாக அவர்   கூறுவது          " பள்ளிக்கூடங்கள்   பலிக்கூடங்கள் ஆகிவிட்டன.   நானும் அவர்களது கூட்டத்தில் ஒருத்தியா?  எல்லாமே முன் தயாரிக்கப்பட்டவை. ரெடிமேட் கேள்விகள், அவற்றிற்கு    நோட்ஸ்களில்  ரெடிமேட்    பதில்கள். வகுப்பறையில் ஆசிரியர்கள் ஓய்வெடுக்கிறார்கள். வெறும் மனப்பாடம்  செய்யும்   எந்திரமாய்   ( அதுவும்   முக்கிய கேள்விகளுக்கு விடைகளை மட்டும்)     மாணவர்கள் உருமாற்றம் அடைந்துவிட்டனர்".
         'சொந்த சரக்குக்கெல்லாம் மார்க் கிடையாதாம். நோட்ஸ்ல இருக்கிறத அப்படியே எழுதணுமாம்.டென்த்துன்னு மிரட்டுறாங்க.   மிஸ்...நோட்ஸ்ல தப்பாயிருந்தா   என்ன    பண்றதுனுட்டு கேட்டேன்...    கெமிஸ்ட்ரி      மிஸ் அடிச்சாங்க'.. என அவள் அப்பாவியாய் கூறுவதும்...கடைசியில் ஆயிஷா'வின் சோகமான முடிவும்.... பிளிஸ் ஆயிஷா புத்தகம் கெடச்சா கொஞ்சம் படிச்சு பாருங்க.

                அடுத்து 'NCERT'யின்  இயக்குநராக இருக்கும் கே.கிருஷ்ணகுமார் அவர்கள் எழுதிய நூல் 'குழந்தை மொழியும் ஆசிரியரும்'. இந்நூலை துளிர் மாத இதழின் ஆசிரியர் உறுப்பினராக உள்ள என்.மாதவன் அவர்கள் தமிழில் அழகாக மொழிபெயர்த்துள்ளார். 
      இந்த நூலில் ஒரு குழந்தையின் பார்வையிலிருந்து மொழியின் பயன்பாடுகள் மற்றும் செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளுதல் பற்றி எழுதியுள்ளார்.
     பேசுதல், வாசித்தல் மற்றும் எழுதுதல் பற்றிய குழந்தைகளின் மனநிலை ,அதனை குழந்தைகளுக்கு ஏற்றவாரு ஆசிரியர் எவ்வாறு கற்றுக்கொடுப்பது என்பது போன்ற விஷயங்களை அழகாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளார்.
               அதிகமான செயல்பாடுகள் மற்றும் பாடல்களைக் கொடுத்துள்ளார். நீ பார்த்தது என்ன?, சொல்வதைச்செய், நடிக்கப் போவது யாரு? , தரையில் வரைபடம் வரைவோம்,வார்த்தை விளையாட்டு, மூன்று கேள்விகள் மற்றும் பேசுவோமா போன்ற செயல்பாடுகள் குறிப்பிடத்தக்கனவாகும்.
       கதையைப் பற்றியும் குழந்தைகளுக்கு அதன் முக்கியத்துவத்தையும் மற்றும் கதை வங்கி உருவாக்குவது பற்றியும் சொல்லியுள்ளார். ஆசிரியருக்குத் தேவையான ஒரு கையேடு இதுவாகும்.

          அடுத்த புத்தகம் "வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம்".    இயற்கையை   நேசிக்கவும்    அதைக் கற்றுக்கொள்ளவும்,    கண்ணைத்திறந்து, காதைத்திறந்து. சுற்றிலும் பார்த்து, கண்டு உற்றுநோக்கி இயற்கை எனும் அந்த   புத்தகத்திற்குள்   நீங்கள்    நுழையவும் கற்றுக்கொடுக்கிறது. 1985ல் வெளிவந்த இந்தப்புத்தகத்தினை எழுதியவர் வேதியியல் பேராசிரியரான எஸ்.சிவதாஸ்.
      இந்தப் புத்தகத்தின் முதல் கதையான ஒரு கழுதையின் கதை நகைச்சுவையான, சிந்திக்க வைக்கும் கதையாகும்.ஒரு கழுதையின் காலடித்தடம், இலைகளை அது தின்றிருக்கும் விதத்தினை வைத்து அந்தக் கழுதையின் குணாதிசியத்தைக் கூறியிருப்பது ஆச்சரியப்பட வைக்கும் ஒன்றாகும். பாம்பு விளையாட்டு, தண்ணீர் பாம்பு பிடித்தல், மான் சிங்க விளையாட்டு...ம்ம்ம்...சொல்லிக்கொண்டே போகலாம்..படித்துப் பாருங்கள்...இந்தப் புத்தகத்தை படித்தால் கண்டிப்பாக நாம் இயற்கையை எவ்வளவு ரசிக்கவேண்டும், அதை இவ்வளவு நாளாகத் தொலைத்து விட்டோமே என நம் மனம் சொல்லும். 
                                                                                            - Thanks google image
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக