ஞாயிறு, அக்டோபர் 23

நாற்று

       அக்டோபர் 22 சனிக்கிழமை இராஜபாளையத்தில் நாற்று என்ற இலக்கிய அமைப்பின் மூலம் செவ்வந்தி மாலை என்ற நிகழ்ச்சி ஸ்ரீ பி.எஸ்.கே. திருமண மண்டபத்தில் நடத்தப்பட்டது. அவர்கள் வழங்கிய பிரசுரத்தில்

"அணுகுண்டுக்கும் புத்தகத்துக்கும்
ஒரேயொரு வித்தியாசம்தான்
அணுகுண்டு ஒருமுறைதான் வெடிக்கும் - ஆனால்
புத்தகம் திறக்கும் போதெல்லாம் வெடிக்கும்" என்ற ஜெயகாந்தனின் முத்தான வரிகள் இடம்பெற்றிருந்தன.நிகழ்ச்சியில் திண்டுக்கல் சக்தி போர்ப்பறையின் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் தப்பாட்டம், கைச்சிலம்பாட்டம், களியாட்டம் மற்றும் துடும்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகளை அருமையாக வழங்கினார்கள்.


அடுத்ததாக நிகழ்ச்சியில்  பிள்ளைகளை படிக்க வைக்க கஷ்டப்படும் ஒரு ஏழைத்தாய்க்கும், முதியோர் இல்லத்தை நடத்தி வரும் ஒரு அமைப்பிற்கும் நன்கொடையை நாற்று அமைப்பின் மூலம் வழங்கினார்கள்.
       நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக எழுத்தாளர்,சிந்தனையாளர் திரு. பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் 'நின்னைச் சில வரங்கள் கேட்பேன்' என்ற தலைப்பில் பேசினார். அவருடைய மடை திறந்த பேச்சில் அரங்கமே அமைதி காத்து கேட்டது.அவருடைய பேச்சில் சில - 
        "அசுரர்கள் வரங்களைச் சாபமாகப் பெறுவார்கள், முனிவர்கள் சாபங்களைக்கூட வரமாகப் பெற்றிருப்பார்கள் என்பதை பீஸ்மர் ,இரணியன் போன்றோர்களின் உதாரணங்கள் மூலம் அருமையாகப் பேசினார். சக்ரவர்த்திகள் பெற்ற வரங்களில் முகலாயர்களின் கடைசி மாமன்னர் பகதுர்ஷாவைப் பற்றி சொல்லும் போது சிலிர்ப்பாக இருந்தது.அவரை ஆங்கிலேயர்கள் சிங்கப்பூருக்கு கடத்திச் சென்று மிரட்டி இந்தியாவை எழுதி வாங்க கையொப்பம் கேட்பார்கள். அவர் அசைந்து கொடுக்க மாட்டார். பின்பு அவருடைய  இரண்டு  பிள்ளைகளின் தலைகலை  வெட்டியும்   மிரட்டி பார்ப்பார்கள். அவர் அடிபணியமாட்டார். அப்போது ஒரு ஆங்கிலேயன் கேட்பான். உன் பிள்ளைகளின் தலையை வெட்டியும் கூட உனக்கு அழுகை வரவில்லையா? அப்போது மாமன்னர் சொல்லுவார் சக்ரவர்த்திகள் எப்போதும் அழுவதில்லை, அதுவும் எதிரிகளின் முன்னால் அழுவதேயில்லை. பின்பு  அவரை தூக்கிலிடும்போது உன் கடைசி ஆசை என்ன? என்று கேட்கும்போது அவர் தன் அங்கியிலிருந்து மண்ணை எடுப்பார். என்னை என் மண்ணில் சாவதற்கு கூட நீங்கள் அனுமதிக்கவில்லை. என்னை புதைக்கும்போதாவது என் தாய்த்திரு நாட்டின் இந்த மண்ணையும் சேர்த்துப் புதையுங்கள் என்ற வரம் கேட்பார். சாமானியர்கள் பெற்ற வரங்களில் சர்தார் பகத்சிங்கைப் பற்றி  குறிப்பிட்டார். ஆங்கிலேயர்கள் இவரைத் தூக்கிலிடும்போது தயவுசெய்து என் கண்களை கருப்புத் துணி கொண்டு மூடாதீர்கள். என் தாய்நாட்டை கண்கொண்டு பார்த்துகொண்டே சாகவேண்டும் என்ற வரம் கேட்பார். ஆனால் ஆங்கிலேயர்கள் அவருடைய ஆசையை நிராகரித்து விடுவார்கள். இப்படி பல வரங்களைப் பற்றிப் பேசினார். கடைசியாக அவருடைய வரமாக அன்பையும், பிறருக்கு உதவி செய்வதையும் கேட்டார். குழந்தைகளின் பிறந்த நாள் விழாவினை அனாதை இல்லங்களில் அல்லது முதியோர் இல்லங்களில் கொண்டாடுங்கள். அப்போதுதான் குழந்தைகளுக்கு அவர்களின் மீதான அன்பு வளரும் என்றார். குழந்தைகள்தான் அறிவாளிகள், அவர்களின் கேள்விகளுக்கு நமக்கே பதில் தெரியாது, அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள், அவர்களை அவர்களாகவே வளர விடுங்கள், குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கும் எந்த ஆசிரியரும் சொர்க்கத்திற்கு செல்ல மாட்டார் என்ற அவருடைய பேச்சு நகைச்சுவையாக இருந்தாலும் சிந்திக்க வைத்தது.  பேச்சினிடையே அமெரிக்காவில் எப்போதும் 'கரெண்ட் கட்' என்பதே இருக்காது. ஆனால் வருடத்தின் ஒரு தடவை தாமஸ் ஆல்வா எடிசனின் பிறந்த நாளன்று அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக ஒரு இரண்டு நிமிடம் 'கட்' செய்வார்கள். அமெரிக்கர்கள் நன்றி கெட்டவர்கள்...   வருடத்தின் ஒரு தடவை மட்டும்தான் நினைக்கிறார்கள்.  நன்றியுள்ள தமிழர்கள்தான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்  அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக 'கரெண்ட் கட்' பண்ணுவார்கள் என்ற அவருடைய நகைச்சுவையான பேச்சு ரசிக்கும்படி இருந்தது. 
                      நாற்று   அமைப்பின்   நிர்வாகிகளான    கவிஞர் ஆனந்தி   மற்றும் திரு வெங்கிடேசன் LIC  அவர்கள் நிகழ்ச்சி சிறப்புற நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தனர். மேடை அமைப்பு அருமையாக இருந்தது. 

4 கருத்துகள்:

  1. பாரதி கிருஷ்ணா குமாருக்கு சொர்க்கம் நரகத்தில் எல்லாம் நம்பிக்கை இருக்கிறதா? அடடே

    பதிலளிநீக்கு
  2. அணுகுண்டுக்கும் புத்தகத்துக்கும்
    ஒரேயொரு வித்தியாசம்தான்
    அணுகுண்டு ஒருமுறைதான் வெடிக்கும் - ஆனால்
    புத்தகம் திறக்கும் போதெல்லாம் வெடிக்கும்" என்ற ஜெயகாந்தனின் முத்தான வரிகள்

    அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. தகவலுக்கு நன்றி நண்பரே ,

    அணுகுண்டுக்கும் புத்தகத்துக்கும்
    ஒரேயொரு வித்தியாசம்தான்
    அணுகுண்டு ஒருமுறைதான் வெடிக்கும்-ஆனால்
    புத்தகம் திறக்கும் போதெல்லாம் வெடிக்கும்"

    மனம் கவர்ந்த வரிகள்

    பதிலளிநீக்கு
  4. நான் ராசபாளையத்துக்காரன் தான், இந்த இலக்கிய அமைப்பில் ஒரு உறுப்பினன் ஆகவேண்டும். msrdmk1991@gmail.com என்னுடைய மெயில் ஐ.டி தொடர்புகொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு