வியாழன், நவம்பர் 17

வழிப்போக்கர் மண்டபம் - அழிவை நோக்கி

      இப்போதெல்லாம் நடந்து போவது என்பதே உடற்பயிற்சிக்காக மட்டும்தான். மற்ற நேரமெல்லாம் அடுத்த தெருவிற்கு போவதற்கு கூட பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகிறோம்.     ஆனால்   அந்தக்  காலத்தில் தூர தேசத்திற்கு போவதற்கு கூட நடந்துதான் செல்லவேண்டும். வேறுவழியுமில்லை. இந்தக் காரணத்தில்தான்   அவர்களின்   உடலும்   உள்ளமும்   சுறுசுறுப்பாக இருந்தது.     
            அவர்கள் செல்லும் வழியில் தங்கி இளைப்பாற அருமையான கல் மண்டபங்களை அந்தக்கால மன்னர்கள் கட்டி வைத்திருந்தனர். அதனைப் பராமரிக்கவும் ஆட்கள் இருந்தனர். இப்போதெல்லாம் மழைக்குகூட எங்கேயும் ஒதுங்கி நிற்க முடியவில்லை. இரவு நேரங்களில் மழை பெய்யும்போது எங்கேயும் ஒதுங்கி நிற்க இடம் கேட்டால் திருட வந்தவன் என்ற தவறான பார்வை நம்மேல் விழுகிறது. வழிப்போக்கர்கள் தங்குவதற்காக கட்டி வைக்கப்பட்ட அந்த மண்டபங்கள் இன்றும் உள்ளது. எங்கள் ஊரைச் சுற்றியே எத்தனை மண்டபங்கள் உள்ளன. பல மண்டபங்கள் சாலைப்பணிக்காக இடிக்கப்பட்டுள்ளன. இன்னும் நிறைய மண்டபங்கள் இடிபடக் காத்துக்கொண்டிருக்கின்றன. அவற்றைப் பராமரிக்கவும் ஆட்களில்லை. பாழடைந்த நிலையிலும் இன்றும் கம்பீரமாய் காட்சியளிக்கின்றன. அரசாங்கமும் கண்டுகொள்ளவில்லை. பழமையைப் பேசும் நாமும் பழமையை மதிப்பதேயில்லை. சில மண்டபங்களின் போட்டோக்களை இணைத்துள்ளேன்.
      திருவில்லிபுத்தூரின் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டி கிராமத்தின் அருகேயுள்ள   மண்டபம் .  இப்போது   கொள்ளைக்காரர்களின்   கூடாரமாக இருப்பதாக கூறப்படுகிறது .  மண்டபத்தின்  மேலேயே  மரங்களும் செடிகளுமாய் இடியும் நிலையில் உள்ளது.



     திருவில்லிபுத்தூரிலிருந்து சத்திரப்பட்டி செல்லும் வழியில் மொட்டைமலை அருகே இந்த மண்டபம் உள்ளது. சிறிய மண்டபம்தான். ஆனால் மழை பெய்யும் நேரத்தில் ஒதுங்க இதைத்தவிர வேறு இடம் அங்கு இல்லை.

  திருவில்லிபுத்தூரிலிருந்து மம்சாபுரம் செல்லும் வழியில் இந்த மண்டபம் அமைந்துள்ளது. அழகான மண்டபம். வெளிப்புறமாக இந்த அழகிய யானைச் சிலை அமைந்துள்ளது.

                 செடிகளும் புதர்களுமாய் மண்டிக்கிடக்கும் இந்த மண்டபம் திருவில்லிபுத்தூரிலிருந்து இராஜபாளையம் செல்லும் வழியில் உள்ளது. இங்குதான் வயலில் வேலை செய்வோர் இளைப்பாறுவர். ஆனால் இப்போது வயல்வெளிகளில் எல்லாம் பயிர்களுக்குப்பதில் கட்டிடம் முளைத்துள்ளது.

மக்கள் தங்குமிடத்தில் மக்காத பாலித்தீன் பைகள். மடவார்விளாகத்தின் அருகே




        திருவில்லிபுத்தூரில்   மங்காபுரம்   மேல்நிலைப்பள்ளிக்கு    அடுத்து இந்தமண்டபம்   அமைந்துள்ளது.   மண்டபத்தின்  மேலேயே  புல்வெளி அமைந்து இடியும் நிலையில் உள்ளது.
       கீழுள்ள படம் இந்திராநகர் அருகே அமைந்துள்ள மண்டபம். இது எதற்கு பயன்படுகிறதோ இல்லையோ? விறகு அடுக்கி வைக்க பயன்படுகிறது. மிகவும் மோசமான நிலையில் உள்ளது.




     மேலேயுள்ள மண்டபம் திருவில்லிபுத்தூரிலிருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. அழகான சிற்பங்களுடன், வெளிப்புறம் கம்பீரமாய் காட்சியளிக்கும் யானைகளுடன் பார்ப்பதற்கே அற்புதமாய் இருக்கும். இங்குள்ள ஒவ்வொரு தூணிலும் அழகான சிற்பம் அமைந்துள்ளது .இப்போதுவரை இந்த மண்டபம் கவனிப்பாரற்று கிடந்தது. சென்ற வருடம் 'பழகியதே பிரிவதற்கா' என்ற சினிமா படத்தின் படப்பிடிப்பு இங்கு நடந்தது. அப்போது இது சுத்தம் செய்யப்பட்டது. அதன்பிறகு சிலநாள் கழித்து வள்ளலார் சன்மார்க்கம் அறக்கட்டளையினர் இதை வழிபாட்டுத்தலமாக மாற்றியுள்ளனர்.
     இந்த மண்டபத்தினை கட்டுவதற்காக எத்தனைபேர் உழைத்திருப்பார்கள், இந்த கற்களைக் கொண்டுவர என்னபாடு பட்டிருப்பார்கள். நாம் இதனை அவமரியாதை செய்வது நம் முன்னோர்களை அவமதிப்பது போன்றது.   இதேபோல் தமிழகமெங்கும் நிறைய மண்டபங்கள் உள்ளன.  அரசும் மக்களும் மனது வைத்தால் அவற்றைப் பாதுகாக்கலாம். பழமையை நம் குழந்தைகள் ரசிக்கவும் விட்டு வைக்கலாம்.

19 கருத்துகள்:

  1. டங்களுடன் பதிவு மிக மிக அருமை
    உண்மையில் அதனைப் பராமரித்தால்
    முன்பு போல பாதசாரிகளுக்கும் மிகவும்
    பயனுள்ளதாகவும் இருக்கும்
    பண்டை கலாச்சார பண்பாட்டுச் சின்னங்களை
    பராமரித்து அடுத்த தலைமுறைக்கு
    விட்டுச் செல்வது போலவும் இருக்கு
    அருமையான மனம் கவர்ந்த பயனுள்ள பதிவு
    வாழ்த்துக்கள்
    த.ம 1

    பதிலளிநீக்கு
  2. எதையும் கலை ரசனையோடு செய்தவர்கள் நம் முன்னோர்கள் நாமோ இன்று காலித்தனம் மட்டும் பண்ணிக்கிட்டு இருக்கோம்..

    பதிலளிநீக்கு
  3. இன்று நம் கண் முன் தெரியும் வரலாறு திரிக்கப் பட்டு விடக் கூடாது என்பதற்கு சாட்சியங்கள், தமிழகத்தில் அழிக்கப் படும் வரலாற்று சின்னங்கள்...

    பதிலளிநீக்கு
  4. பழமை அழிந்து கொண்டு வருவதற்கு அரசு மட்டும் காரணமல்ல, அதன் அருமை தெரியாமல் அழிக்கும் நாமும்தான் என்பது வேதனையான உண்மை,
    பதிவில் உள்ள புகைப்படம் அருமை..!

    பதிலளிநீக்கு
  5. எத்தனை அழகான கல்லால் ஆன மண்டபங்கள்,பராமரிக்காமல்:(..

    பதிலளிநீக்கு
  6. தமிழரின் பழமையின் புகழைமட்டுமே பேசத்தெரிந்தவர்கள் இன்றைய தமிழர்கள் அதுவும் பணம்பன்னுவதற்க்காக தான்.
    அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிப்பதோ ஆங்கிலப் பள்ளியில்.
    இதுதான் இன்றைய தமிழரின் அவல நிலை...

    இந்த மண்டபங்கள் இந்த நிலைக்கு வர அரசு மட்டுமே காரணம் என்று சொல்லி விட முடியாது (மக்களும்)சமூகமும்தான். அங்கே சுற்றியுள்ள மக்கள் அக்கரையுடன் சுத்தம் செய்து பாதுகாக்கலாமே...

    தினம் இல்லை என்றாலும் வாரம் ஒருவீட்டில் இருந்து சுத்தம் செய்வது என்று செயல்பட்டால் இன்று இந்நிலையை சந்தித்திருக்காது இந்த வழிப்போக்கர் மண்டபங்கள்...

    இது நம்முடைய இடம் அல்ல எக்கேடுகெட்டா என்ன என்ற மக்களின் அலட்சிய மனநிலையும் காரணம்...

    சினிமா காரர்கள் சுத்தம்செய்து வைத்ததால் இன்று சன்மார்க சங்கம் எடுத்து பராமரிக்கிறது... இதுவே அவர்கள் சுத்தம்செய்யவில்லை என்றால்.. சன்மார்கம் வந்திருக்குமா?
    அவர்கள் வருவதற்கு முன்பே சங்கம் எடுத்து பராமரிக்க தொடங்கி இருக்களாமே? ஏன் செய்யவில்லை?

    பதிலளிநீக்கு
  7. பழமைகள் அழிவது கவலைதரும் விடயம்.

    இறுதி மண்டபம் புத்துயிர் பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது.

    பதிலளிநீக்கு
  8. இவை நம் பாரம்பரிய சொத்துக்கள், இவற்றை பாதுகாப்பது நமது கடமை. இவ்வளவு அழகிய கலைவன்ணங்கள் அழிந்துபோய் விடக் கூடாது.

    பதிலளிநீக்கு
  9. நல்ல முயற்சி.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. அந்தக்காலத்தில் இதை உருவாக்க எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பார்கள்.அழியவிட்டிருக்கிறார்களே !

    பதிலளிநீக்கு
  11. பழமையைப் பேசும் நாமும் பழமையை மதிப்பதேயில்லை//

    மிகவும் உண்மை நண்பா.. வேதனையாகத்தான் இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  12. இது போன்ற எத்தனை எத்தனை விசயங்கள் இல்லாமல் போகப்போகிறதோ... மண்டபங்களை பார்க்கும்பொழுது நீங்கள் சொன்னது போல் முன்னோர்களின் நல்ல எண்ணத்தையும், உழைப்பையும் பாழாக்கிக்கொண்டிருக்கிறோம்....

    பதிலளிநீக்கு
  13. பழமையின் மகத்துவம் உணர்ந்து புதுப்பிப்பதற்க்குப்பதில் பல் ஆஸ்பத்திரி கட்டும் வேலையும்,நூலகத்தை மாற்றும் பணிகளுமே நடைபெறுகிறது.

    பதிலளிநீக்கு
  14. பழமையின் மகத்துவம் உணர்ந்து புதுப்பிப்பதற்க்குப்பதில் பல் ஆஸ்பத்திரி கட்டும் வேலையும்,நூலகத்தை மாற்றும் பணிகளுமே நடைபெறுகிறது.

    பதிலளிநீக்கு
  15. படங்களும்,மண்டபங்களின் கம்பீரமும் கலைய்ழந்து கிடப்பதைப்பார்த்தால் நமது வாழ்வையும் இப்படித்தான் அரசுகள் எடுத்துக்கொள்ளும் போலும்.

    பதிலளிநீக்கு
  16. பழமையைப் பேசும் நாமும் பழமையை மதிப்பதேயில்லை.

    கசப்பான உண்மை!

    அந்தந்தப்பகுதி மக்களே சத்சங்கம் அமைத்து வாரம் ஒருமுறை கூடி தூய்மையாக்கி பயன்படுத்திப் பராமரித்தால் அடுத்ததலைமுறையினர் காணக்கிடைக்கும்..

    நம்மால் படமெடுக்க முடிந்தது
    ந்ம் சந்ததியினரால் முடியாமல் போய்விடும் அபாயம் இருப்பதை
    நினைக்காமல் இருக்க முடியவில்லை..

    பதிலளிநீக்கு
  17. அன்பின் விச்சு - கவனிப்பாரற்றுக் கிடக்கும் மண்டபங்களைத் தேடிப்ப்பிடித்து -பதிவிட்டமை நன்று. அரசு தான் கவனிக்க வேண்டும். ஆனால் இயலாது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  18. கவனிப்பாரற்றுக் கிடக்கும் மண்டபங்களைத் தேடிப்ப்பிடித்து -பதிவிட்டமை நன்று.
    அரசு தான் கவனிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  19. கவனிப்பாரற்றுக் கிடக்கும் மண்டபங்களைத் தேடிப்ப்பிடித்து -பதிவிட்டமை நன்று. அரசு தான் கவனிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு