நேற்றைய தினத்தந்தி நாளிதழில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால் மாணவன் மரணம் என்ற செய்தி படித்தோர் மனம் நிச்சயம் பதைபதைத்துப் போயிருக்கும். சாப்பிடக்கூடத் தெரியாத வயதில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறோம்.
நிறைய பள்ளிகளில் 'கேஜி'யில் படிக்கும் மாணவர்கள் தங்கள் உடைகளிலேயே 'உச்சா' போவது சகஜம். ஆனால் அதனால் அவர்கள் படும் மனஉளைச்சல் அதிகம். பள்ளிகளில் பணிபுரியும் ஆயாக்களும் அந்தக் குழந்தைகளைத் திட்டியும் அடித்தும் விடுகின்றனர். சிறு குழந்தைகள் அதிகமாகத் தூங்குவார்கள். பள்ளிக்கு அனுப்பித் தூங்காத... படி..வாசி...எழுது... சைலன்ஸ்...கையைக்கட்டி உட்கார்... அப்பப்பப்பா! கொடுமைடா சாமி.
சில குழந்தைகளுக்கு வேறுவிதமான தொல்லைகள். 2 வயது, 3 வயது குழந்தைகளுக்கு கூட பாலியல் தொந்தரவுகள். பெரிய பெண் குழந்தைகளுக்கும் அதேவிதமான பிரச்சினைகள். அதற்கேற்றார்போல் பல தனியார் பள்ளிகள் தாங்கள்தான் 'பெரிய பள்ளிகள்' எனக் காட்டுவதற்காக பள்ளிச்சீருடைகளை வடிவமைக்கின்றனர்.
ஆட்டோவில் குழந்தைகளை அனுப்புகிறோம். சில டிரைவர்களின் பாலியல் சில்மிஷங்கள் குழந்தைகளின் மனநிலையைப் பாதிக்கும். அதைக் கண்காணிக்கவேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்குத்தான். குழந்தைகள் ஏதாவது சொன்னால் என்னவென்று ஆராய வேண்டும்.
பட்டாம்பூச்சிகள் பொதி சுமக்குமா? சுமக்கும் என்று நிரூபிக்கன்றனர் எல்கேஜி, யூகேஜியில் படிக்கும் குழந்தைகள். தங்கள் பள்ளிக்கட்டணத்தை அதிகரிப்பதற்காக 'பை'கொள்ளாத அளவு புத்ததகங்கள்.
வீட்டுப்பாடம் என்ற பெயரில் பிஞ்சு விரல்கள் ஒடியும் வரை எழுத வைக்கி்ன்றனர். ஏனெனில் அந்தப்பள்ளிகள்தான் சிறந்த பள்ளிகளாம்!!! பாரதிகிருஷ்ணகுமார் சொல்வதுபோல் எந்த ஆசிரியர் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கிறாரோ அவருக்கு நிச்சயமாக சொர்க்கத்தில் இடம் கிடைக்காது.
விளையாடும் வயதில் கனவில்கூட காணமுடியாத அளவு EXTRA CURRICULAR ACTIVITY. விபரம் கேட்டால் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? என்கின்றனர். வளைத்தால் பரவாயில்லை. ஒடிக்கவல்லவா செய்கிறார்கள்.
பெற்றோர்களும் மதி மயங்கிக் கிடக்கின்றனர். தன் குழந்தையும் படிக்கவேண்டும் என்ற நல்ல எண்ணம் இருந்தாலும் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பக்கத்து வீட்டுக்காரன் அந்தப்பள்ளியில் சேர்த்துவிட்டானே...நாமும் சேர்ப்போம் என்ற "நல்ல எண்ணம்தான்"(PRESTIGE PROBLEM). பாதிக்கப்படுவது அவர்களுடைய பர்சும், குழந்தையும்தான்.
3 வயது குழந்தைகள் சுயநலவாதிகளாக இருப்பர். கற்றுக்கொள்ளும் ஆர்வம் நிறைய இருக்கும். திரும்பத் திரும்ப செய்வதில் ஆர்வம் கொள்வார்கள். இவர்களுக்கு கூச்சல் போட்டு ஓடியாடி விளையாடவேண்டும். இது நிச்சயமாக வீட்டில் மட்டுமே முடியும். வீட்டிலும் அங்க இங்க ஓடாத.. ஒரு இடத்துல உட்கார்.. என்று நாம் கட்டளைகளாக் கொடுத்துக்கொண்டிருப்போம்.
4 வயதில் தன் உடல் மீதும் தன் மீதும் கட்டுப்பாடு அதிகமாகிறது. கைகளை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த முடிகிறது. சொற்களஞ்சியம் அதிகரிக்கும். விளையாட்டுக்கள் மட்டுமே அவர்களுக்கேற்றது. பாடல்களும் ஏற்றது. அவர்களாகப் பாடிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் நிறையப் பேசுவார்கள். நாம்தான் காது கொடுத்து கேட்பதேயில்லை.
5வயதில் குழந்தைகள் சுதந்திரமாக இயங்குவர். தசைகள் நன்கு இயங்கும். பொறுமை இருக்கும். குழுவாகச் செயல்படுவர். பள்ளிக்கு சென்று எழுதி படிக்க விரும்புவார்கள்.மொழி விளையாட்டுக்கள் பிடிக்கும்.தலைமைப்பண்பு இருக்கும். தாய் மொழிதான் கற்பிக்க ஏற்றது. இந்த வயதில் தன் எண்ணங்களை வெளிப்படுத்த தாய்மொழி உதவும். ஆனால் நாம் 5 வயதில் பள்ளியில் சேர்க்கவேண்டிய குழந்தையை 2 வயதில் அனுப்பிவிடுகிறோம்.
6 வயது முதல் 11 வயது வரையுள்ள குழந்தைகள் கவனமாகக் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள். இந்த வயதில் எதையும் எளிதாகக் கற்றுக்கொள்வார்கள். ஒரு சிறந்த ஆசிரியரும், பெற்றோரும் இந்த வயதில் அமைந்துவிட்டால் அவர்கள் சிறப்பானவர்களாக வருவார்கள். சீனாவில் ஆரம்பப்பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வி கற்றுத்தருகிறார்கள். அதில் எதிர்பாலினத்தவரின் கழிவறையைப் பார்வையிடுவது ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அந்த வயதில் அதன்மீதான ஆர்வம் அதிகமாக இருக்குமாம்.
கேஜி வகுப்புகள் உருவாக்கப்பட்டதன் நோக்கமே மற்ற குழந்தைகளுடன் பழகவும், கை பயிற்சி செய்யவும் (களிமண் பயிற்சி), புதிய விளையாட்டுக்கள் கற்றுக்கொள்ளவுமாகும். ஆனால் தற்போது இவை திசைமாறிப் போய்க்கொண்டிருக்கின்றன. இதில் கொடுமை என்னவென்றால் கேஜி வகுப்பில் சேர்க்கவே நேர்முகத்தேர்வு.
இதற்கு தீர்வுதான் என்ன? இரவு தூக்கத்திற்குமுன் குழந்தைகள் சொல்வதை காது கொடுத்துக் கேட்கவேண்டும். தொலைக்காட்சியே கதி என இருந்தால் குழந்தையின் கதி அதோகதிதான். சின்னச்சின்ன சப்தங்களைக் கவனிக்க சொல்லுங்கள். லைப்ரரிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள்.குழந்தைகளை அவர்கள் மனநிலையிலிருந்து பார்க்கவேண்டும். தினமும் பள்ளியில் நடந்தவற்றையும் மற்ற விபரங்களையும் விசாரிக்கவேண்டும். பள்ளிக்கு மாதம் ஒருமுறையாவது சென்று ஆசிரியரைச் சந்தித்து உரையாடவேண்டும். முன்பருவக்கல்வியை சுமையில்லாத பள்ளியாகப் பார்த்து சேர்க்கவேண்டும். விளையாட முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் (கம்ப்யூட்டர் கேம்ஸ் அல்ல). மாமாவுக்கு அந்தப் பாட்டை பாடிக்காமி, ஆடிக்காமி என கீ கொடுத்த பொம்மையைப் போல செய்யச்சொல்லாதீர்கள்.புத்தகத்தை வாசிக்கக் கற்றுக் கொடுங்கள். அதற்கு முன்னோடியாக நீங்களும் அடிக்கடி புத்தகம் வாசியுங்கள். இயற்கையையும் இசையையும் ரசிக்கக் கற்றுக் கொடுங்கள்.வளமான இளைஞர்களைக் கொண்ட இந்தியாவை உருவாக்க முயல்வோம். பட்டாம்பூச்சிகளாகப் பறக்க வேண்டிய குழந்தைகளை சிறகொடிந்த பட்டாம்பூச்சிகளாக மாற்றிவிடாதீர்கள்.
அவசியம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு...
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி... நண்பரே...
அருமையான பதிவு
பதிலளிநீக்குபட்டாம் பூச்சிகளை ரசிக்கத் தெரிந்தவர்களாக
நாம் மாறினாலே போதும்
நாம் பாதி மனிதர்களாகிவிடுவோம்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1
பதிலளிநீக்குபல பட்டாம் பூச்சிகளுக்கு சிறகொடிகிறது, பல பட்டாம் பூச்சிகள் நிறம் இழக்கின்றது...
பதிலளிநீக்குஒரு விழிப்புணர்வு பதிவு
பதிலளிநீக்குகருத்துள்ள, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. நன்றி நண்பரே!
பதிலளிநீக்கு"இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"
மனதிற்குக் கஸ்டமான பதிவு.இரவு படுக்கைக்குப் போனதும் குழந்தைகளை அணைத்துக்கொண்டு அன்று முழுதும் நடந்த நிகழ்ச்சிகளைக் கேட்டு அதற்கான நல்லது கெட்டதுகளைப் பகிர்ந்துகொள்வது மிக அவசியம் !
பதிலளிநீக்குபதிவில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் யாவும் மறுப்பின்றி ஏற்றுக்கொள்ள வேண்டியவையே. பல பெற்றோரும் புரிந்துகொள்ளாத நிலையில் தொடர்ந்து அவர்களுக்குப் புரியவைப்பது நம் கடமை. பட்டாம்பூச்சிகளை இயன்றவரை சிறகடித்துப் பறக்கவிடுவோம். நல்லதொரு பதிவு. நன்றி.
பதிலளிநீக்குநல்ல பதிவு.
பதிலளிநீக்குநன்றி.