வெள்ளி, டிசம்பர் 9

பிஞ்சுவிரலின் பென்சிலோவியம்

நீ வரையும் 
ஓவியத்தின் வடிவம்...

அப்போது பெய்த 
மழையில் கரையும் 
செம்மண் புழுதியைப்
பார்த்து வரைந்ததா?

ஒரு வாழ்ந்து
மக்கிப்போன பரம
ஏழையின் மண்குடிசையைப்
பார்த்து வரைந்ததா?

தன் வாழ்நாளினை
முடித்து உதிரும் 
பழுத்த இலையினைப்
பார்த்து வரைந்ததா?

தன் அனுபவங்களை
ரேகைகளாக முகத்தில்
கொண்டிருக்கும் முதியவனைப்
பார்த்து வரைந்ததா?

அப்போது கூடிய
வேகமாக நகரும்
மழைமேகங்களின் 
கரிய வண்ணங்களைப் 
பார்த்து வரைந்ததா?

உன் சட்டையில்
கிறுக்கியிருக்கும்
கிறுக்கல்களைப்
பார்த்து வரைந்ததா?

இது அர்த்தமுள்ள
ஓவியமா?
உன் எண்ணத்தின்
வண்ணக்குமுறலா?

எதுஎப்படியாயினும்
நீ வரைந்த ஓவியத்தின்
உள்ளர்த்தம் என்னறிவுக்கு
எட்டவில்லை!

இப்போதிருந்தால் உன்னிடம் 
ஓவியம் கற்றுக்கொள்ள
பிகாசோவும் ரவிவர்மாவும்
நேரம் கேட்டு
காத்துக்கொண்டிருப்பார்கள்!