ஞாயிறு, ஜனவரி 22

உதிர்ந்த சிறகுகள் - நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை

              சுவர் ஓரத்தில் பழமையான மரநாற்காலி சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. அதனருகே நிறைய நெல்லுடன் ஒரு நாளி இருந்தது. அதன் மேலே ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. வீட்டின் வெளியே சிறிய பந்தல் போடப்பட்டிருந்தது. அதன்கீழ் ஐந்தாறு பிளாஸ்டிக் சேரும், ஒரு நீளமான மரப்பெஞ்சும் போடப்பட்டிருந்தது. கவலையான முகத்துடன் சில பெருசுகள் அதில் அமர்ந்திருந்தனர். சிலபேர் உட்கார இடமில்லாமல் பக்கத்து வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தனர். வெளியூரிலிருந்து வந்த சொந்தங்கள் ஊருக்குப் போகும் அவசரத்தில் இருந்தனர்.

     ஈர வேட்டியில் நெற்றியில் காய்ந்துபோன திருநீருடன் சங்கையா அமர்ந்திருந்தான். அழுது அழுது வீங்கிப்போன கண்களுடன், மீசையும், தலைமுடியும் வழிக்கப்பட்டு கவலைதோய்ந்த முகத்துடன் பந்தலையே உற்றுப் பார்த்துக்கொண்டு மரப்பெஞ்சின் ஓரத்தில் அமர்ந்திருந்தான். இப்போதுதான் சுடுகாட்டுக்கு நீண்ட தூரம் நடந்து கொள்ளி வைத்துவிட்டு  வந்த களைப்பும், பசியும் சேர்ந்து அவனை சோர்வாக்கியிருந்தது. வியர்வை பிசுபிசுப்பாய் தலையிலிருந்து வடிந்தது. முடியை எடுத்திருந்ததால் அந்த சிராய்ப்பில் பட்டு எரிந்தது. அது எரிந்து கொண்டிருக்கும் மீனாட்சியை  மறுபடியும் ஞாபகமூட்டி அழுகையை பொத்துக்கொண்டு வரவைத்தது. வெள்ளைத் துண்டை எடுத்து வாயைப்பொத்திக்கொண்டான்.
       வீட்டினுள் சாப்பிட கூப்பிட்டனர். அவனுடைய காதில் கேட்கவில்லை. மீண்டும் அவன் கையைப்பிடித்து ஒருவர் அழைத்துச்சென்றார். காலில் நீர் ஊற்றிக் கழுவிவிட்டு உள்ளே சென்றான்.
       அனைவருக்கும் இலையைப்போட்டு அதன்முன்பாக அமர்ந்திருந்தனர். எல்லோருக்குமே பசி அதிகமாக இருந்தது. முந்தின நாள் இரவு ஏதோ கொஞ்சம் சாப்பிட்டதுதான். காலையில் காபி என்று தண்ணியாய் ஏதோ ஒன்றைக் குடித்திருந்தனர்.இரவு முழுவதும் பிணத்தின் முன்பாகவே அமர்ந்திருந்தனர். இரவு முழுவதும் அந்த ஊர்க்காரன் ஒருத்தன் ஒப்பாரி பாடலை அழ வைக்கும் தோணியில் பாடிக்கொண்டேயிருந்தான்.
          சங்கையா ஒரு இலையின் முன்பாக அமர்ந்தான். பசியிருந்தும் இல்லாதது போன்று இருந்தது. இட்லியைக் கொண்டு வந்து வைத்தனர். இரண்டு இட்லி வைத்தவுடன் போதும் என்று சைகை காமித்தான்.யாரும் அவனை வற்புறுத்தவில்லை. ஒருவாய் எடுத்து வைத்தவுடன் அழுகை மீண்டும் வந்தது. கண்ணீரை அடக்கிக் கொண்டு சாப்பிட்டான். வேகமாகச் சாப்பிட்டு எழுந்துவிட்டான். கையைக் கழுவிவிட்டு மீண்டும் அந்தப் பெஞ்சில் அமர்ந்து கொண்டான்.
         நேரம் செல்லச்செல்ல உறவினர்கள் ஒவ்வொருவராக சொல்லாமல் கிளம்பிவிட்டனர். இரவு எழு மணியானது. உள்ளூர் சொந்தங்கள் சிலபேர் தவிர அனைவரும் கிளம்பி போய் விட்டனர். சங்கையா உட்கார்ந்திருந்த இடத்தை மாற்றி வெளித்திண்ணையில் அமர்ந்தான்.
       மீனாட்சியும் இவனும் இரவாகிவிட்டால் வெளித்திண்ணையில்தான் அமர்வார்கள். அவள் அமரும் இடத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். வெறுமை என்றால் என்னவென்று இப்போது புரிந்தது. தலையைக் கவிழ்ந்து கொண்டான்.
      பந்தலில் டியூப்லைட் ஒன்று எரிந்து வெளிச்சம் தந்தது. அதைச்சுற்றிலும் ஈசல் பறந்து கொண்டிருந்தது. சில ஈசல்கள் இறக்கையை உதிர்த்துவிட்டு கீழே ஊர்ந்து சென்றது.அதனையே உற்றுப் பார்த்தான். ஈசலின் ஆயுள் ஒருநாளிலேயே முடிந்து விடுமாமே. எனக்கும் இப்போதே முடிந்துவிட்டால் அவள் கூடவே சென்று விடலாம்.
        சங்கையா... கவலைப்படாத! எல்லாரும் பூமியிலேவா இருந்திடப்போறோம். ஒருநாளைக்கு எல்லோரும் சாவத்தானப் போறோம் என்று ஒரு பாட்டி சாவை மீண்டும் ஞாபகப்படுத்தினாள்.  அவன் தலையை ஆட்டினான். எதுக்காக ஆட்டினான் என்று தெரியாது. அந்த ஒருநாள் ஏன் இன்னிக்கே இருக்கக் கூடாது? இன்னும் நான் யாருக்காக இருக்கப்போறேன்.
         இருந்த சிலபேரும் அவரவர் வீடு போய் சேர்ந்தனர்.  நான்தானே அண்ணியைக்கொன்னுட்டேன். இந்தப்பாவியை மன்னிச்சிரு என்று அவன் தங்கை தாயம்மாள் காலில் விழுந்து கதறினாள். சங்கையா அசைவற்று அமர்ந்திருந்தான்.  தாயம்மாள் அழுதுகொண்டே நான் காலையில வெள்ளனமா வாரேன் என சொல்லிவிட்டு சென்று விட்டாள்.
         தனித்துவிடப்பட்டான் சங்கையா.இதுவே அவன் மனதுக்கு இதமாக இருந்தாலும் மீனாட்சி இல்லாத தனிமை. சத்தம்போட்டு அழவேண்டும் போல இருந்தது. செத்த நேரம் தலைசாய்க்கலாம் போல இருந்தது.தோளில் கிடந்த துண்டை திண்ணையிலேயே விரித்துப் படுத்தான்.
       திருமணமாகி இருபத்தைந்து வருடங்கள் சென்றுவிட்டன. ஏனோ தெரியவில்லை. அவர்களுக்கு குழந்தை பாக்கியமே இல்லை. சும்மா வருத்தப்பட்டுக்கிட்டே இருக்காதய்யா.உனக்கு நான் குழந்தை , எனக்கு நீ குழந்தைனு வாழலாம் மீனாட்சியின் குரல்தான் காதில் ஒலித்தது. என் குழந்தை செத்துப்போச்சேனு சொல்லி அழலாம்தான். ஆனால் யாராவது எதுவும் நினச்சுக்கிடுவாங்கன்னு பயம்.
      மீனாட்சி எப்பவுமே ஐயா'னுதான் கூப்பிடுவா. அவனுக்கும் அதுதான் பிடித்தது.கல்யாணம் என்னவோ வீட்டில பெரியவங்களா பார்த்துதான் முடிச்சு வச்சாங்க. பக்கத்து ஊர்தான் பொண்ணு. பார்த்தவுடன் பிடித்துவிட்டது என்று சங்கையா சொல்லிவிட்டான். ஆனால் மீனாட்சி மாப்பிள்ளையை சரியாகப் பார்க்கவில்லையென இப்போதும் அவனிடம் சொல்லி நக்கல் பண்ணுவாள்.
         கல்யாணத்துக்கு அப்புறம் அவர்களின் வாழ்வில் சந்தோஷம் இருந்தாலும் சங்கையாவின் அம்மா மீனாட்சியைத் திட்டிக்கொண்டேயிருப்பாள்.எதுக்கு திட்டுகிறாள் என்று மீனாட்சிக்கும் , சங்கையாவுக்கும் தெரியாது.ஒருவேளை திட்டிக்கொண்டேயிருந்தால்தான் மாமியாவோ என நினைத்துக்கொள்வாள்.
      இரண்டு வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லையென சத்திரப்பட்டி ஜோசியரிடம் சென்று கேட்டார்கள். அவர் உங்களுக்கு குழந்தைப் பாக்கியமே இல்லையென சொல்லிவிட்டார். வீட்டில் ஓ'வென சங்கையா அழுதான். அம்மாக்காரிக்கு காரணம் கிடைத்துவிட்டது. தினமும் மீனாட்சிக்கு திட்டுதான். கூட சங்கையாவின் தங்கை தாயம்மாளும் சேர்ந்து கொள்வாள்.       
                  தாயம்மாளுக்கு இரண்டு குழந்தைகள். மாப்பிள்ளை மிகவும் வசதியானவர். ஆனால் மாதத்தில் பாதி நாள் அம்மா வீட்டில்தான் இருப்பாள். சங்கையாவும்,மீனாட்சியும் சுற்றுவட்டாரத்திலுள்ள எல்லா மருத்துவரிடமும் பார்த்துவிட்டார்கள்.இறுதியில் குழந்தையே வேண்டாமென முடிவெடுத்துவிட்டார்கள்.
      சங்கையாவின் அம்மா சாகும்வரை மீனாட்சியை ஒரு பேரப்பிள்ளையைப் பெற்றுத்தர துப்பில்லை. நீயெல்லாம் ஒரு பொம்பளை என காதில் கேட்கமுடியாத வார்த்தைகளில் எல்லாம் திட்டுவாள்.  சங்கையாவின் அம்மா இறந்தபின் தாயம்மாள் அவ்வளவாக வரமாட்டாள். ஆனால் பிள்ளைகளை மட்டும் அனுப்பி வைப்பாள். சொத்து எப்படியும் கிடைக்கும் என்ற ஆசையில்.
       ஒன்றரை வருடத்திற்கு முன்தான் மீனாட்சிக்கு அடிக்கடி வயிற்றுவலி வந்தது. சோடாவைக்குடித்து சமாளிப்பாள். வயலுக்கு போகும்போது வயிற்றுவலியால் துடித்த அவளை டிராக்டரில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டுபோய் சேர்த்தான். அவளைப் பரிசோதித்த டாக்டர் கர்ப்பப்பையை நீக்கவேண்டும் என்று சொன்னார். குழந்தை தராத கர்ப்பப்பை எதற்கென நினைத்து சம்மதம் சொன்னார்கள்.
        ஒருவாரம் கழித்து கர்ப்பபை நீக்கப்பட்டது. இதில் சிறு பகுதியை எடுத்து பரிசோதனைக்கு மதுரையிலுள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பவேண்டுமென டாக்டர் சொன்னார். அங்க எதுக்கு என இருவரும் பயந்துபோய் கேட்டார்கள். பயப்படாதீங்க! சும்மா ஒரு பரிசோதனைதான். அது பத்துநாள்ல முடிவு வந்திரும். நீங்க மறக்காம வந்து கேட்டுக்கோங்க என டாக்டர் சொன்னார். வேற எதுவும் பிரச்சினை இருந்தாமுன்னாடியே நாம அத சரி பண்ணிடலாம் என டாக்டர் தைரியம் சொல்லி அனுப்பினார்.
          வீட்டில் சில நாட்கள் ஓய்வுக்குப்பின் வயிற்றுவலி சற்று சரியாகியிருந்தது. தாயம்மாள் உடனிருந்து பார்த்துக்கொண்டாள். இடையில் ஒருநாள் மருத்துவமனையிலும் பரிசோதித்துக்கொண்டார்கள். இரண்டு வாரங்களுக்கு அப்புறம் சங்கையா மருத்துவமனைக்கு கிளம்பினான்.  எதுக்கு அண்ணே ஆஸ்பத்திரிக்குப் போற? அதுதான் அண்ணிக்கு சரியாயிடுச்சுல்ல என்று தாயம்மாள் சொன்னாள். சங்கையா டாக்டர் வரச்சொல்லியிருந்தார் எனச் சொல்லவும், பேசாம இரு அண்ணே டாக்டர் ஏதாவது சொல்லி பணத்தைப் பிடுங்கிக்குவாங்க. உன் நல்ல மனசுக்கு அண்ணிக்கு எதுவும் வராது. நம்ம வயித்துல புத்து வளர்றதுக்கு நாம  யாருக்கு என்ன கெடுதல் செஞ்சோம். பேசாம போய் வேலையைப்பாரு என்றாள்.
       ஒரு வருடம் மீனாட்சிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. குழந்தை இல்லாத குறையைத்தவிர அவர்களுக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை. பொண்டாட்டியை எப்படி பார்த்துகணும் அப்படினு சங்கையாகிட்டதான் கத்துக்கனும் அப்படினு அந்த ஊர்ல எல்லோரும் பேசிக்குவாங்க.
         மீனாட்சியை எந்த வேலையும் செய்யவிடுவதில்லை. அவர்களின் வயலுக்கு மட்டும் சென்று மரத்தடியில் அமர்ந்து கொள்வாள். நான்கு மாதத்திற்கு முன்தான் மீண்டும் மீனாட்சிக்கு வயிற்றுவலி வந்தது.  சங்கையாவிடம் சொன்னால் வருத்தப்படுவான் என நினைத்து சொல்லாமல் மறைத்தாள். வலி தாங்காமல் கரும்பு தோட்டத்திற்குள் சென்று ஓ'வென கத்தி அழுவாள். ஆனால் சில நாட்களில் வலியின் கொடுமையால் அவனுக்கு விசயம் தெரிந்தது. முதலில் கைவைத்தியம் செய்தது பார்த்தார்கள். ஒன்றும் சரியாகவில்லை. 
       மருத்துவமனை சென்று ஸ்கேன் செய்து பார்த்த போதுதான் விசயம் தெரிந்தது.  புற்றுநோய் பரவிவிட்டிருந்தது. டாக்டர் கர்ப்பப்பை எப்போது எடுக்கப்பட்டது என எல்லா விபரமும் கேட்டறிந்தார். பின் பழைய ரிக்கார்டுகளைப் புரட்டிப் பார்த்ததில் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. சங்கையா அழுது புலம்பினான். அப்போதே நீங்க வந்திருந்தா அத எப்படியாவது குணப்படுத்தியிக்கலாமென சொன்னார்.     
      சங்கையா நிறைய செலவு செய்தும் மீனாட்சியின் உயிரைப்பிடித்து வைக்கமுடியவில்லை. எல்லாம் முடிந்துவிட்டது. மழை லேசாகத் தூற ஆரம்பித்தது. மீனாட்சி சென்ற இடத்துக்கே நாமும் சென்று விடவேண்டும். இனி நமக்கு யார் இருக்கா? மீனாட்சி இல்லாத இந்த வீட்டில் தனிமையில் நிச்சயம் இருக்க முடியாது.
     சங்கையாவுக்கு தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தான். காலை அமுக்கி விடவேண்டும் போல இருந்தது. மீனாட்சி தினமும் சங்கையாவின் காலை அமுக்கி விடுவாள். காலைப் பார்த்துக்கொண்டான். இப்போது மழை அதிகமாகி இருந்தது. அவனது மனம் குழப்பத்தில் தவித்தது.
       லேசாக விடியத்துவங்கியது. தாயம்மாள் காபி கொண்டு வந்து வைத்தாள். அண்ணே கொஞ்சம் காபித்தண்ணியாவது குடி என்றாள். சங்கையாவுக்கு எந்திரிக்க மனம் இல்லை. காபியை வைத்துவிட்டு சென்றுவிட்டாள்.   
             கொஞ்சநேரம் கழித்து எந்திரித்தான். காபி டம்ளரைப் பார்த்தான். அதில் ஒரு ஈ விழுந்து வெளியேறத் துடித்துக்கொண்டிருந்தது. சங்கையா உற்றுப் பார்த்தான் . ஏதோ தெளிவு பெற்றவனாய் நாம போகும்போது எதக்கொண்டு போகப்போறோம். இருக்கிற கொஞ்ச நிலத்தையும் விற்று புற்றுநோயால் அவதிப்படும் சிலபேரையாவது காபபாற்றுவோம் என்ற எண்ணம் வந்தது. மழை இப்போது வெறித்திருந்தது.
    
இந்தக்கதை  ஆறுதல் பரிசு பெற்றுள்ளது. நேசம் அமைப்பிற்கும் மற்றும் யுடான்ஸ் திரட்டிக்கு எனது மனமார்ந்த நன்றி.

19 கருத்துகள்:

  1. பொல்லாத நோய் பற்றி, நல்ல ஒரு கதை. உண்மைச் சம்பவம் போலவே இருக்கு.

    நன்றாக உள்ளது கதை.

    பதிலளிநீக்கு
  2. அருமையான கதை.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல கதை...போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;-)

    பதிலளிநீக்கு
  4. நல்ல கருத்துள்ள கதை.நடையும் இயல்பாய் வந்திருக்கு.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. Follow up check up -இற்குப் போவது முக்கியம என்பதைக் காட்டும் கதை. நல்ல முயற்சி. வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. ஒன்றை இழந்துதான் ஒன்றை பெற வேண்டியுள்ளது. மனைவியை இழந்து தெள்வு பெற்றுள்ளான் சங்கையா

    பதிலளிநீக்கு
  7. "நாம போகும்போது எதக்கொண்டு போகப்போறோம். இருக்கிற கொஞ்ச நிலத்தையும் விற்று புற்றுநோயால் அவதிப்படும் சிலபேரையாவது காபபாற்றுவோம்" என்று எண்ணி தன் முடிவை மாற்றிக் கொண்ட கதை மற்றவர்களுக்கு ஒரு பாடம்.

    பதிலளிநீக்கு
  8. மனதை தொட்டகதை. நல்லா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. விறுவிறுப்பான கதை ! நன்றி நண்பரே !

    பதிலளிநீக்கு
  10. இன்றைய காலத்தில் நோய்களை அலட்சியம் செய்யாமல் ஆரம்பத்திலேயே கவனித்தால் ஓரளவு பலன் கிடைக்கிறது.கவனிக்கத்தக்க நல்லதொரு கதை.வாழ்த்துகள் விச்சு !

    பதிலளிநீக்கு
  11. Rathnavel, கோபிநாத் , Asiya Omar, Gopi Ramamoorthy , ராஜி , வியபதி, Lakshmi , திண்டுக்கல் தனபாலன் மற்றும் ஹேமா அனைவருக்கும் எனது நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  12. இருக்கிற கொஞ்ச நிலத்தையும் விற்று புற்றுநோயால் அவதிப்படும் சிலபேரையாவது காபபாற்றுவோம் என்ற எண்ணம் வந்தது. மழை இப்போது வெறித்திருந்தது./

    மனதையும் கண்களையும் நனைக்கும் கதை..

    பரிசு பெற வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  13. விழிப்புணர்வூட்டும் அருமையான கதை.வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. நன்றி இராஜராஜேஸ்வரி, ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  15. ஏதோ தெளிவு பெற்றவனாய் நாம போகும்போது எதக்கொண்டு போகப்போறோம். இருக்கிற கொஞ்ச நிலத்தையும் விற்று புற்றுநோயால் அவதிப்படும் சிலபேரையாவது காபபாற்றுவோம் என்ற எண்ணம் வந்தது. மழை இப்போது வெறித்திருந்தது.


    ...... நல்ல கருத்துள்ள கதை. பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  16. இந்தக்கதை பரிசு பெற்றதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள். vgk 26.3.12

    பதிலளிநீக்கு
  17. பரிசு பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  18. பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்க.

    பதிலளிநீக்கு