இதுக்கு மேலேயும் நான் உயிர் வாழ என்ன தகுதி உள்ளது. நான் இனிமேல் வாழ்ந்து என்ன பிரயோசனம். தன்னை நினைத்து தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் அம்மாவினை நினைத்ததும் வழக்கம்போல கண்ணீர் தழும்பியது. கண்ணீரைத் துடைத்தாள். விரல்களில் கண்ணுக்கு கீழிருக்கும் தழும்பின் ஸ்பரிசம் பட்டது. சொரசொரப்பான கன்னத்தினை நினைத்ததும் அவமானமும் அழுகையும் பொத்துக் கொண்டு ஒருசேர பீறிட்டது.
அந்த ஊரிலேயே நிச்சயமாக இவள் அழகுதான். ஏழையின் அழகுதான் கண்களுக்குத் தெரியாதே. பணக்கார ஒருத்திக்கு பற்கள் லேசாக எத்திக் கொண்டிருந்தால் அதுதான் அழகான தெற்றுப்பல் என்பார்கள். வளர்ந்தும் வளராத எண்ணை தேய்க்காத முடியினை என்ன! அழகான ஹேர்ஸ்டைல் என்பார்கள். அதுவே ஏழைப்பெண்ணுக்கென்றால் பல் எத்திக்கிட்டு... பரட்டைத்தலையோடு... என ஆகிவிடும்.
சாந்தி நிஜமாகவே அழகுதான். இவள் அழகு இல்லையென்று சொன்னால் அவன் நிச்சயம் ஆணில்லை. அளவான் உடல். நெற்றியில் சரிந்துவிழும் சுருண்ட முடி. பளபள கன்னம். அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். முதலில் பார்ப்பவருக்கு திராட்சைப் பழம் உருளுகிறதோ எனச்சந்தேகம் வரும். மார்பகத்தினை மறைக்கத்தான் பெரும்பாடு பட்டாள்.ஜாக்கெட்டில் அவ்வளவு ஒட்டு.
தீப்பெட்டி ஆபிஸிற்கு பஸ்சில்தான் செல்ல வேண்டும். நெரிசலான பஸ்சில்அவள் ஏறியதும் கம்பியினைப் பிடிக்க கையைத் தூக்கும்போது ஜாக்கெட் கிழிந்துவிடுமோ எனத் தினமும் பயப்படுவாள். ஐந்து ஜாக்கெட் வைத்திருந்தாள். அவளுடைய அனைத்து ஜாக்கெட்டுகளும் சிறிய பெரிய துணிகளால் ஒட்டுப்போட்டதுதான் . தாவணி கொஞ்சம் பரவாயில்லை. சாயம் வெளுத்திருந்தாலும் கிழியவில்லை. அந்த ரோஸ் கலர் தாவணிதான் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். வாரத்தின் பாதிநாள் அதைத்தான் அணிவாள். அவளுடைய தாய்மாமா பையன் அவன் அம்மாவிற்குத் தெரியாமல் அவளின் பூப்புனித நீராட்டு விழாவிற்கு ஆசையாக வாங்கிக்கொடுத்தான்.சாந்தியின் உதட்டின் மேல் சிறிய மச்சம் இருந்தது. அது மச்சமா இல்லை கடவுள் படைத்திட்ட அழகின் எச்சமா என எண்ணத்தோன்றும்.
அந்த ஊரில் சாந்தியின் அழகினைப் பார்க்காத கண்கள் இல்லை. அவளின் தாய்மாமன் கொடுத்துவைத்தவன் என இளசுகள் பெருமூச்சு விட்டுக்கொள்வார்கள். அவள் தெருவீதியில் நடக்கும்போது அனைத்துக் கண்களும் தன்னையே உற்றுப்பார்ப்பதாய் தெரியும். தன் ஆடையினுள்ளே பார்வை ஊடுருவிச்செல்வதாய் உணர்வாள். வெட்கம் பிடுங்கித் தின்னும். நல்லவேளை ஏழையாய் பிறந்தாலும் கடவுள் அவள் தோலினை வெள்ளையாகப் படைத்து விட்டான். அவள் அதனைப் பெருமையாக உணர்வாள்.
தோல்தான் அனைவருக்கும் ஆடை. யாருக்குமே தோல் என்று ஒன்று இல்லாவிட்டால் எப்படி இருக்கும். அனைத்து முகமும் ஒன்றுபோலத்தான் இருக்கும்.தோலாடை என கற்பனையாக நினைத்து சிரித்துக் கொள்வாள்.
தீப்பெட்டி ஆபிஸ் அவள் ஊரிலிருந்து பத்துகிலோமீட்டர் தொலைவு. மருந்தின் வீச்சம் அவளுக்குப் பழகிவிட்டது. தீப்பெட்டி ஆபிஸில் எல்லா வேலையும் தெரிந்திருந்தாலும் கட்டை அடுக்கத்தான் செய்வாள். தீக்குச்சிகளை எடுத்து மார்பின் அருகில் ஒன்று திரட்டி கட்டையில் அவள் அடுக்கும் லாவகம் பார்த்து பெண்களே பொறாமைப்படுவர். இதனாலேயே அவளுக்கு ஜாக்கெட் விரைவில் கிழிந்துவிடும்.
பஸ்சில் இவள் வயதொத்தப் பெண்கள் விதவிதமாக உடையணிந்து வரும்போது இவள் மனதில் ஏக்கம் குடி கொள்ளும்.அம்மாவிடம் நீலக்கலர் சேலை ரொம்ப நாளாகக் கேட்டுக் கொண்டே இருக்கிறாள். நம்ம ஊர் பொங்கலுக்கு வாங்குவோம்... அடுத்த தீபாவளிக்கு... தைப்பொங்கலுக்கு... இப்படியே எல்லா நாளும் கடந்துதான் போகின்றன. சேலைதான் கிடைக்கவில்லை.
அப்பா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் கண்டிப்பாக கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்திருப்பார். அவளுக்கு அப்பாவைத்தான் ரொம்ப புடிக்கும். அப்பா காலை எழுந்தவுடன் இவள் முகத்தில்தான் விழிப்பார். நல்லா படிக்க வைக்கணும் எனத் தினமும் மந்திரம்போல் சொல்லிக்கொண்டே இருப்பார்.
அப்பா அந்த ஊரில் சின்ன டீக்கடை வைத்திருந்தார். அந்த ஊர் பெருசுகள் முதலில் விழிப்பது சின்னச்சாமியின் டீக்கடையில்தான். அவர் நாலு மணிக்கெல்லாம் பாய்லரை வைத்து அடுப்பினை கரிபோட்டு சூடுபடுத்திக்கொண்டே அனைத்து வேலைகளும் பார்ப்பார். அவளின் அம்மாவினைக் கூட வேலை ஏவமாட்டார்.
சாந்தி அப்போது ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். சாந்தி ஒரே பெண் என்பதால் அவ்வளவு செல்லமாக வளர்த்தார். அவள் பள்ளி செல்லும் அழகினைப் பார்த்து ரசிப்பார். சாந்திக்கு பட்டுப்பாவாடைரொம்ப புடிக்கும் என சொன்னவுடன் அதனை வாங்கப் போனவர்தான் திரும்ப வரவேயில்லை. சாலையில் குடிபோதையில் லாரி ஓட்டி வந்தவன் சின்னச்சாமியின் கனவுகளை அழித்தான். சாந்தியின் கனவையும் சேர்த்துதான்.
அம்மா டீக்கடை நடத்தமுடியாமல் வாங்கின கடனுக்கு வட்டியும் கட்டமுடியாமல் கடையினை விற்றார். சாப்பாட்டிற்கே வழியில்லாமல் போனது. அப்புறம் எங்கே சாந்தியினைப் படிக்க வைப்பது. அந்த ஊரில் பெண் பிள்ளைகளுக்கு உள்ள ஒரே தொழில் தீப்பெட்டி ஆபிஸ் செல்வது. என்னுடைய பையனைக்கு உன் மகளைக் கட்டி வைக்கிறேன் என்று அப்பா இறந்த அன்று தாய்மாமா சொல்லிவிட்டுப் போனார். ஆனால் அத்தைக்கு விருப்பமே இல்லை. ஒன்னும் இல்லாத வீட்டுல பொண்ண எடுத்து எம்மவன் கஷ்டப்படவா என வருவோர் போவோரிடம் சொல்வாள்.
ஆனால் ஒருவழியாக சாந்தியின் இருபத்துநாளு வயதில் தாய்மாமன் மகனுக்கும் சாந்திக்கும் வரும் ஞாயிறுக்கிழமை நிச்சயம் நடப்பதாக முடிவு செய்யப்பட்டது. சாந்திக்கு என்றைக்கும் இல்லாத சந்தோசமாய் இருப்பதிலேயே கொஞ்சமான கிழிசல் உள்ள உடையாய் உடுத்திக் கொண்டு தீப்பெட்டி ஆபிசுக்குச் சென்றாள். அன்று விதியும் சேர்ந்து விளையாடியது. மருந்து வைத்திருக்கும் அறையில் தீப்பிடித்து தீப்பெட்டித் தொழிற்சாலையே பற்றிக் கொண்டது. சாந்தியின் முகத்தையும் சேர்த்து தீ எரித்தது. ஆறுபேர் உடல் கருகி எரிந்தனர். சாந்தி உயிர் பிழைத்ததே அதிசயம் எனப் பேசிக்கொண்டனர்.
ஐந்து மாதம் கழித்துதான் புண் ஆறியது. சாந்தியின் அழகான முகத்தில் மேடு பள்ளங்கள். வழவழப்பான தோல் சொரசொரப்பாய் மாறியது. அதனைவிட மேலும் ஒரு வடுவாய் உன் அழகுக்குத்தான் என் அம்மாவின் பேச்சினை மீறி உன்னைக் கல்யாணம் கட்டிக்கச் சம்மதித்தேன். ஆனால் இப்போ நீ பழைய சாந்தி இல்லை. தயவு செய்து என்னை மன்னித்துக் கொள் என மாமன்மகன் தீயினை மனதில் எரிய வைத்தான்.
சாந்தி இப்போது வெளியில் அவ்வளவாகச் செல்வதில்லை. முன்னே பார்த்ததுபோல்தான் அனைவரின் பார்வையும் அவளை ஊடுருவி சென்றது. ஆனால் அவளின் அழகினை இல்லை. உடம்பினுள் வேறு எங்கெங்கு தழும்பு இருக்கும் என மனக்கண்ணில் கொண்டு வந்து பேசிக்கொள்வார்கள். தன் அழகுக்காக தன் பின்னே சுத்தியவர்கள் இப்போது பயத்தினால் ஒதுங்கினார்கள். சாந்தி தன்னை நிர்வாணப்படுத்தியதாய் உணர்ந்தாள். சாந்திக்கு கல்யாணம் நின்றுபோன வருத்தத்தில் சாந்தியைவிட அவளின் அம்மா உடைந்துபோனாள்.
மணி இப்போது காலை நாலுமணி ஆகியிருந்தது. தன் கண்களில் வந்த கண்ணீரை மறுபடியும் துடைத்தாள். முகம் முழுவதும் தழும்பு. கண்ணாடியினை எடுத்துப்பார்த்தாள். கருமை நிறத்தில் முகம் இருந்தது. இப்போது தோலாடையினைப் பற்றி நினைத்தாள். இரண்டு கன்னங்களிலும் செதில்செதிலாய் தோல் உறிந்திருந்தது.
ஒரு நாளைக்கு நாற்பது தடவையாவது கண்ணாடினை எடுத்துப் பார்த்துவிடுவாள். தழும்புதான் மாறவில்லை. இனியும் உயிரோடு இருந்தால் அனைவருக்கும் பாரமாகிவிடுவோம். மாமன் மகனே வேண்டாமென்று சொன்னபின் எவன் என்னைக் கட்டிக் கொள்வான். தனியாய் ஒதுங்கி இருந்த அடுப்பங்கரையில் கயிற்றினை எடுத்துக் கழுத்தில் மாட்டினாள்.முடங்கிக் கிடந்த அம்மா தண்ணீர் குடிக்க அடுப்பங்கரை வந்து பார்த்தபின்தான் தெரிந்தது சாந்தி உயிரை விட்டு ஒருமணிநேரம் ஆகியிருந்தது.
நன்றாக பொழுது விடிந்திருந்தது. செய்தியை அறிந்த சொந்தபந்தங்கள் கூடி அழுதனர். அவள் உள்ளத்தினைப் பார்த்திராத ஊர் அன்று அவள் முகத்தையாவது பார்த்தனர். சாந்தியின் முகத்தில் இப்போதும் ஒரு ஏக்கம் தெரிந்தது.சாந்திக்கு அவள் ஆசைப்பட்ட நீலக்கலர் சேலை கட்டியிருந்தனர். இப்போது அவள் ஆடை அணிந்திருந்தாள். ஆனால் ஊர்தான் நிர்வாணமாகக் காட்சியளித்தது.
கதையின் கருவும் சொல்லிச் சென்றவிதமும் அருமை
பதிலளிநீக்குஇறுதி வரிகள் ஈட்டிபோல் நெஞ்சைத் துளைத்தது
மனம் கனக்கச் செய்து போகும் அருமையான பதிவு
தொட்ர வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சார்.
நீக்குநல்ல கதைகரு,இதுமாதிரியான கதைகளை சொல்லி சொல்லும் உங்களது அருகாமை ஊர்க்காரர் "மேலான்மை பொன்னுச்சாமி"யின் எழுத்தை நினைவு படுத்துகிற பதிவு,வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி விமலன் சார்.
நீக்குஅருமையான கருவை கயில் எடுத்து அற்புதமான சிறுகதையை படைத்த விச்சுவுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமனசை ரசிக்காத உலகம்.சாந்தியைப்போல எத்தனைபோ பேர் வறுமையால் வாழ்க்கையை இழக்கிறார்கள்.மனதை நெகிழ வைத்த கதை !
பதிலளிநீக்குமனதை நெகிழ வைத்த கதை !
பதிலளிநீக்குகடினமான கதைக்கருவும், ஆங்காங்கே பெண்ணின் ஏழ்மை + இளமை + வறுமை பற்றிய வர்ணிப்புகளுடன், கதையை நகர்த்திச்சென்ற நடையழகும் .... பாராட்டும்படி உள்ளன.
பதிலளிநீக்குதுரதிஷ்டமான + மிகவும் சோகமான அந்தப்பெண்ணின் முடிவும் மிகவும் மனதைக் கலங்க வைத்தன.
தலைப்பும் தலைப்புக்கு ஏற்ற கடைசி வரிகளும் மிக நல்ல தேர்வு.
[இதுபோன்ற சோக முடிவுடன் கூடிய பல கதைகள் நான் எழுதியிருப்பினும், சோகமான முடிவுகளை பலரும் வரவேற்காமல் இருப்பதால், அவற்றை வெளியிட விரும்புவது இல்லை.]
//விமலன்
நல்ல கதைகரு,இதுமாதிரியான கதைகளை சொல்லி செல்லும் உங்களது அருகாமை ஊர்க்காரர் "மேலான்மை பொன்னுச்சாமி"யின் எழுத்தை நினைவு படுத்துகிற பதிவு//’
திரு. விமலன் அவர்கள் கூறியுள்ளதும் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
திரு. மேலான்மை பொன்னுச்சாமி அவர்கள் போலவே தங்களுக்கும் விரைவில் சாஹித்ய அகடெமி என்ற மிகச்சிறந்த இலக்கிய விருது கிடைக்க என் அட்வான்ஸ் வாழ்த்துகள்.
இந்த சிறுகதைப் பகிர்வுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். vgk
ஐயா உங்கள் ஆசிர்வாதத்திற்கு மிக்க நன்றி.
நீக்குஅண்ணா, கதையின் முடிவை படித்தப்பின் வழியும் கண்ணிரை கட்டுப்படுத்த என்னால் இயலவில்லை. நெஞ்சை கணக்க செய்த கதை. பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குநன்றி தங்கச்சி...
நீக்குகுடிவை படித்தவுடன் கனத்துப் போனது நெஞ்சம் . ஏங்க முடிவை திருமணத்தில் முடித்திருக்கலாமே சுபம் என்று என்னினும் அழுதபடி அருமை என பதிவிடுகிறோம் .
பதிலளிநீக்குதிருமணத்தில் முடித்திருந்தால் இன்னும் சோகமாக மாறியிருக்கும்.
நீக்குமனதை நெகிழ வைக்கும் அருமையான கதை.
பதிலளிநீக்கு