ஞாயிறு, ஏப்ரல் 22

பச்சோந்தி பொழுதுகள்

நேரம் : அதிகாலை 4.00 மணி

இரவு முழுவதும் மொட்டைமாடியில் தூக்கம் வராமல் புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன். காற்று சில்லென்று வீசிக்கொண்டிருந்தது. உடம்பு குளிர்ச்சியாக இருந்தது. ஆனால் மனம் இன்னும் சூடாக இருந்தது. முந்தைய இரவில் உணவு உண்ணாததால் வயிறு பசிப்பதுபோல் இருந்தது.

நாலு மணி இருக்குமா என எண்ணிக்கொண்டிருக்கும்போதே பால்காரனின் சைக்கிள் சத்தம்.

ம்ம்ம்... மணி நாலு ஆயிடுச்சு.

இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் இன்று தீர்ந்துவிட்டது. வேறு வழியே இல்லை.இன்று இரவு நிச்சயம் அதனை முடித்துவிடவேண்டும். கயிறுதான் சரியான வழி. நம் வீட்டில் அதற்கு சரியான கயிறு இல்லை.

இன்று இரவு வரைதான் இந்த உலகத்தில் நான் இருப்பேன். அப்புறம் சொர்க்கமோ நரகமோ! இந்த உடம்பினை நிச்சயம் எரித்துவிடுவார்கள்.

நட்சத்திரம் மின்னிக்கொண்டு இருந்தது. எல்லா நட்சத்திரங்களும் என்னையவே பார்த்துக்கொண்டிருந்தது.அழகாய்தான் இருக்கிறது.ஆனால் ஒருநாளும் அதனை ரசித்ததில்லை.

இன்று ஆபிஸ் போகவா? வேண்டாமா?

ஆமா.. உலகத்தை விட்டே போக முடிவு செய்தாகிவிட்டது. இன்று ஒருநாளாவது நம்ம இஷ்டப்படி சுற்றுவோம்.

என் எண்ணமும் பின்னோக்கி சுற்றியது. கீதாவை இருவர் வீட்டினையும் எதிர்த்து காதலித்துதான் திருமணம் செய்தேன். இரண்டு வருடங்கள் சந்தோஷமாகத்தான் சென்றது. ஆனால் இப்போது இரண்டு மாதமாக சந்தேகமாகத்தான் செல்கிறது. குழந்தையில்லாததுதான் காரணமா? அதற்கு எதுக்கு என் மீது சந்தேகம்?

தினமும் சண்டை.... ஒவ்வொரு நாளும் சண்டையில் ஆரம்பித்து சண்டையிலேயே முடிகிறது. வேறு வழியில்லை... இதற்கு ஒரே தீர்வு நான் நிரந்தரமாகச் செல்வதுதான்.

புரண்டு படுத்தேன். தூக்கம் வரவில்லை. திருமணம் முடிந்ததிலிருந்து தனியாக ஒருநாளும் படுத்து தூங்கியதே இல்லை. இந்த இரண்டு வாரமும் மொட்டை மாடிதான்.இப்போது லேசாக குளிர ஆரம்பித்தது. போர்வையை எடுத்து கழுத்துவரை போர்த்திக்கொண்டேன்.

நேரம்: காலை 6.00 மணி 

பறவைகள் ஒவ்வொன்றாக பறக்க ஆரம்பித்திருந்தன.  இதனை இதுவரை பார்த்திருந்தும் அவ்வளவாகக் கண்டுகொண்டதில்லை. அனைத்து பறவைகளும் வரிசையாகப் பறந்தன.  எப்படி என்பதுதான் ஆச்சரியமாக இருந்தது. ஒரு உடற்கல்வி ஆசிரியர் இருந்து இதனை கவனிப்பாரோ? நிச்சயம் இருக்காது... இருந்திருந்தால் கையில் ஒரு பிரம்பு இருந்திருக்கும்.

எழுந்திருப்போமா... வேண்டாமா என எண்ணிக்கொண்டிருந்தேன். மொபைல் போன் ஒலித்தது. சிவாதான் பேசினான். டேய் சதீஷ்... இன்னைக்கு ஆபிசுக்கு லீவு சொல்லிடு. நானும் என் மனைவியும் புதுப்படத்துக்குப் போகிறோம் என்றான்.

இல்ல சிவா... இன்னைக்கு நானும் லீவுதான்.

எதுக்கு?

சும்மா ஒரு வேலை இருக்கு அதான்.

ஒரு நிழல் மாடிப்படி அருகே அசைந்தது.

வேறு யாரு என் மனைவிதான். போன் அடித்தவுடன் உளவு பார்க்க வந்துவிட்டாள்.

எரிச்சலாக இருந்தது.

போனைத் துண்டித்தேன்.

நன்றாக கிழக்கு சிவத்திருந்தது. இத மாதிரியான சிவப்பினை நான் பார்த்ததேயில்லை. கூடவே மஞ்சள் கலரும் கலந்து அழகாகக் காட்சியளித்தது.

மனமில்லாமல் எந்திரித்தேன். அவள் மாடிப்படிகளில் இறங்கிவிட்டாள்.

இன்று சண்டை போடக்கூடாது.கீழே இறங்கினேன்.

போன்ல யாரு?

நான் எதுவும் பேசவே இல்லை.

இந்த திமிர்தான் உங்ககிட்ட எனக்குப் பிடிக்காத ஒன்று. வழக்கம்போல் கத்தினாள். தொடர்ந்து ஹலோ எப் எம் வர்ணனையாளர் போல பேசிக்கொண்டிருந்தாள். நான் இன்றைக்கு எதுவும் பேசக்கூடாது என்று முடிவெடுத்து விட்டேன்.

தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்த எப் எம் கரண்ட் போனதுபோல் திடீரென்று அமைதியானது.

நேரம் : காலை 9.00 மணி

வழக்கம்போல் கிளம்பினேன்.

எங்க ஆபீசா?
...
எதுவும் கேட்டா பதில் சொல்லக்கூடாதா?
...
எதுவும் எடுத்துக்கிட்டு போகலயா? கொஞ்சம் சாப்பிட்டு போங்களேன். என் மேல உள்ள கோபத்துல வயிற காயப்போடாதீங்க.
..........
அப்போ நீங்க எங்க போனாலும் நான் கேள்வி கேட்கக்கூடாது. அப்படித்தானே...
...
நீங்க இப்போ என்கூட பேசாம போனீங்கனா வீட்டுக்கு வரும்போது கேள்வி கேட்க நான் இருக்க மாட்டேன். 
.........

வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பிவிட்டேன்.

நேரம் : மதியம்1.00 மணி

வெயில் சுரீரென்று அடித்தது. எனக்கு உறைக்கவேயில்லை.

எங்கெங்கோ சுற்றிவிட்டேன்.போகும் வழியில் ஒரு கடையில் வண்டியை நிறுத்தி ஒரு சிவப்பு கலர் நைலான் கயிறு வாங்கினேன்.

 அதனை இழுத்துப்பார்த்தேன். நிச்சயம் என் உடம்பினைத் தாங்கும்.

அப்போதுதான் கவனித்தேன். ரோட்டில் கூட்டமாக இருந்தது. கீதாவும் நின்று கொண்டிருந்தாள்.

ஒரு குடிகாரனும் அவன் மனைவியும் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்.
அவன் அவள் முடியைப்பிடித்து தரதரவென்று இழுத்துப்போனான்.

அவள் கத்தினாள். 

என்னைய என்னவேனாலும் செஞ்சுக்கோயா...  ஆனா என்னைய சந்தேகம் மட்டும் படாதீங்க. நான் அப்படிப்பட்டவள் இல்லை. அரற்றினாள்... கத்தினாள்... சத்தம் போட்டு அழுதாள்.

கூட்டம் வேடிக்கை மட்டும் பார்த்தது.

அவன் ஆவேசமாகத் தாக்கினான். எல்லா வீட்டிலயும் இதே பிரச்சினைதான் போலும் மனதில் நினைத்துக் கொண்டேன்.

ஒரு பிச்சைக்காரன் வேகமாக வந்தான்.

குடிகாரனுக்கு ஒரு அறை விட்டான். உன்னோட வாழ்கிற பொண்டாட்டிய சந்தேகப்படுறயே. நீ வீட்டுல குடிச்சிட்டுக் கிடந்தாலும் அவ வேலைக்குப் போயி உன்னையும் உன் குடும்பத்தையும் காப்பாத்துறா. 

சந்தேகம் குடும்பத்தை அழிச்சிடும். நீயா உன் மனசுல பொய்யான கற்பனையை வளர்த்துக்கிடாத. வாழப்போறது கொஞ்ச நாளு.

புருசனும் பொண்டாட்டியும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு வாழ்வதுதான் வாழ்க்கை என்று கத்தினான்.

பின்பு அவள் பக்கம் திரும்பி உன் புருசன் சந்தேகப்படுறான்னா அவன் உன் மேல வச்சிருக்கிற அன்பு, ஆசை... அத நீ புரிஞ்சுக்கோ. 

சந்தேகப்படுற மாதிரி நீ நடந்துக்காத... என்று தலை முடியை முடிந்து கொண்டிருந்த அவளிடமும் சொல்லிவிட்டுவேகமாக நடந்துபோனான்.

கூட்டம் ஒரு சண்டையை பார்க்க முடியாமல் போய்விட்டதே என ஆதங்கத்துடன் கலைந்தது. கீதாவும் விறுவிறு என்று சென்று விட்டாள்.

இவள் எதுக்கு இங்கு வந்திருப்பாள் என எண்ணியவாறு பைக்கினை ஸ்டார்ட் செய்தேன்

நேரம் :சாயந்திரம் 6.00 மணி

வெயில் குறைந்து விட்டிருந்தது. ஆனால் வெக்கை குறையவில்லை.

ஊரில் எல்லா இடமும் சுற்றியாகிவிட்டது. கடைசியாக ஒரு கோவிலுக்கு போவோம் என நினைத்தேன். 

சாகப்போறவனுக்கு எதுக்கு சாமி. நாம என்ன சாமிக்கிட்ட எதுவும் கேட்கவா போகிறோம். இருந்தாலும் நேரம் போக வேண்டும் வேறு வழியில்லை. அநேகம்பேர் நேரம் போவதற்குத்தான் கோவிலுக்குச் செல்கிறார்கள்.

கோவில் வாசலில் மதியம் தத்துவம் பேசிய அதே பிச்சைக்காரன். கூடவே ஒரு இளம்பெண். கிழிசலான சட்டையுடன்...அழுக்கான உடம்புடன் இருந்தாள்.

அவனிடம் அவள் யாரெனக்கேட்டேன். 

என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தவன் என் மனைவி என்றான்.

இரண்டு பேருமே நல்லாத்தான இருக்கீங்க. உழைச்சு சாப்பிடலாமே என்றேன்.

அவன் என்னிடம் ஒன்றும் பேசவில்லை.

பின்பு கலங்கிய கண்களுடன் தொழுநோய்காரனுக்கு வேலை கிடைப்பதில்லை என்றான்.

அப்போதுதான் அவன் விரல்களைக் கவனித்தேன். 

சாரி ... நான் கவனிக்கல...

மேற்கொண்டு அவன் என்னிடம் எதுவும் பேச விரும்பாதவனாய் திரும்பிக்கொண்டான். 

நான் தட்டில் பத்து ரூபாய் தாளினைப் போட்டேன்.

அதை அவன் என்னிடமே திரும்பக்கொடுத்தான். 

பரிதாபப்பட்டு போடவேண்டாம் என்று சொல்லிவிட்டு வானத்தினை அண்ணாந்து பார்த்தான்.

நான் எதுவும் பேசாமல் நடந்து கோவிலுக்கு வெளியே உள்ள மண்டபத்தில் இடம் தேடி அமர்ந்தேன்.

அவன் தன் மனைவியை அழைத்துக்கொண்டு அந்த இடத்தினை விட்டு நகர்ந்தான். அவன் மனைவிக்கு கண் தெரியாது என்பது இப்போதுதான் என் கண்களுக்குத் தெரிந்தது. 

நான் கோவிலுக்குள் செல்லவில்லை. அவனை வணங்க வேண்டும்போல் இருந்தது.

நேரம் : இரவு 9.00 மணி

பகலை இரவு போர்த்திக்கொண்டதுபோல் நன்றாக இருட்டியிருந்தது. கோவில் கோபுரம் நிலவு வெளிச்சத்தில் இவ்வளவு அழகாக இருக்குமா! இன்றுதான் அதனைப்பார்க்கிறேன்.

எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தேன் என்பதே எனக்குத்தெரியவில்லை. 

வீட்டிற்கு கிளம்பிச் சென்றேன். 

கீதா வாசலில் அமர்ந்திருந்தாள். ஆச்சரியமாக இருந்தது. அவள் எதுவும் என்னிடம் பேசவில்லை. நான் அமைதியாக வண்டியை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்று உடையினை மாற்ற மனமில்லாமல் படுக்கையறைக்குச் சென்று படுத்தேன்.

கொஞ்சம் சாப்பிடுங்களேன். காலையிலும் சாப்பிடவில்லை.
..........

கீதா அமைதியானாள்.

மனதினுள் ஆயிரம் எண்ணங்கள் உலட்டின.பிச்சைக்காரன்தான் மனம் முழுவதும் ஆக்கிரமித்திருந்தான். நைலான் கயிற்றைப் பார்த்தேன்.

மனதில் ஒரு தெளிவு பிறந்தது போல் இருந்தது. ஒரு மாதத்திற்கு முன்பு கீதா துணி காயப்போட ஒரு நல்ல கயிறு கேட்டாளே என எண்ணியவாறு தூங்கிப்போனேன்.

நேரம் : மறுநாள் காலை 6.00 மணி

சூரிய வெளிச்சம் வரத் தயாராகிக்கொண்டு இருந்தது. இயற்கை எல்லாமே அதனதன் வேலைகளைச் சரியாகச் செய்கிறது.

இவ்வளவு நேரம் தூங்கிவிட்டேனா என எண்ணியவாறே எந்திரித்தேன்.

முந்தின நாள் வாங்கிய நைலான் கயிற்றின் ஞாபகம் வந்தது. முதலில் இந்தக் கயிற்றை கட்டிவிடவேண்டும். கீதா பார்த்தால் தவறாக நினைப்பாள் என எண்ணிக்கொண்டே கயிற்றை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றேன்.

அங்கே ஏற்கனவே ஒரு மஞ்சள் கலர் நைலான் கயிறு கட்டப்பட்டிருந்தது. திகைத்தவாறே என் கையில் உள்ள கயிற்றினைப் பார்த்தேன். 

நீங்கள் கொண்டு வந்த சிவப்பு கலர் நைலான் கயிற்றினை இந்தப்பக்கம் கட்டுங்கள் என்று சிரித்தவாரே கீதா காபி டம்ளரை என்னிடம் நீட்டினாள்.

கிழக்கே அதே வானம். சிவப்பும் மஞ்சளும் கலந்த வண்ணமாக அழகாக இருந்தது.

இப்படிக்கு
விச்சு...

15 கருத்துகள்:

  1. கிழக்கே அதே வானம். சிவப்பும் மஞ்சளும் கலந்த வண்ணமாக அழகாக இருந்தது.//

    புரிந்து கொண்டால் இன்பம் தான். மனம் நன்றாக இருந்தால் மற்றைவைகளை ரசிக்க முடியும்.

    பதிலளிநீக்கு
  2. மிகவும் அருமையான படைப்பு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    இந்தக்கதையிலிருந்து பலருக்கும் பல வாழ்வியல் உண்மைகள் புலப்பட்டிருக்கும். ‘)))))

    பதிலளிநீக்கு
  3. //அவன் தன் மனைவியை அழைத்துக்கொண்டு அந்த இடத்தினை விட்டு நகர்ந்தான். அவன் மனைவிக்கு கண் தெரியாது என்பது இப்போதுதான் என் கண்களுக்குத் தெரிந்தது.

    நான் கோவிலுக்குள் செல்லவில்லை. அவனை வணங்க வேண்டும்போல் இருந்தது.//

    சூப்பரான வரிகள், சார். ;)))))

    பதிலளிநீக்கு
  4. "புருசனும் பொண்டாட்டியும் சண்டையை மறந்துட்டாங்க" ங்கறதை படிக்கும் போது சந்தோசமாதான்யா இருக்கு.
    //இவள் எதுக்கு இங்கு வந்திருப்பாள்//
    அவள் அங்கே மஞ்சள் கயிற்றை வாங்கி வரத்தான் சென்றிருப்பாள்.

    பதிலளிநீக்கு
  5. இவ்வளவு தூரம் நிதானமாகச் சிந்தித்தால் தற்கொலை செய்யும் எண்ணம் எவருக்குமே வராது.நல்லதொரு வாழ்க்கைப்பாடம் !

    பதிலளிநீக்கு
  6. தற்கொலை என்பது பிளான் பண்ணி செய்ய முடியாது. அது ஒரு எமோஷனல்ல அந்த நொடிகள்ல எடுக்கப்படுறாதுன்னும் அந்த நொடியை கடந்துட்டா, தற்கொலை எண்ணத்தை கைவிட முடியும்ன்னு எதுலயோ படிச்ச ஞாபகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி..

      நீக்கு
  7. எல்லா காட்சிகளும் நன்றாகத்தான் இருக்கிறது..! தலைப்பு முதற்கொண்டு..! ஒரு இடத்தில் மட்டும் இடிக்குது தோழரே..! பரிதாபம் எதிர்பார்க்காதவனுக்கு எதற்கு பிச்சைக்காரன் ரோல் குடுத்தீங்க..!??

    பதிலளிநீக்கு