சனி, மே 5

ஆனந்த விகடன் கவிதைகள்

2002ம் ஆண்டு ஆனந்த விகடன் ஒரு கவிதைப்போட்டி நடத்தியது. அதில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை 17.11.2002 அன்று ஒரு சிறு இணைப்பாக 75முத்திரை கவிதைகள் என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தார்கள். அவற்றில் எனக்குப் பிடித்தமான பத்து கவிதைகள் உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு பகிர்ந்துள்ளேன். விருப்பமிருந்தால் உங்களுக்குப் பிடித்த ஒரு கவிதையின் பொருள் வருமாறு நீங்கள் உங்கள் படைப்பினை (கவிதையினை) பகிர்ந்துகொள்ளலாம். பகிர்வு நகைச்சுவையாகவோ , சோகமாகவோ, கிண்டலாகவோ அல்லது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்(ஆத்தாடி எம்புட்டு சாய்சு).


வலி
விழுங்கிய மீன்
தொண்டையில் குத்துகையில்
உணர்கிறேன்
தூண்டிலின் ரணம். 
-ஜீ.ஆர்.விஜய்

மாற்றங்கள்
பிரகாரம் நுழைந்தவுடன்
கனியாகி விடுகிறது 
எலுமிச்சை...

தீர்த்தமாகி விடுகிறது
தண்ணீர்...

பிரசாதமாகி விடுகிறது
திருநீரும் பொட்டும்...

எந்த மாற்றமுமின்றி
வெளியேறுகிறான்
பக்தன்.   
-புன்னகை சேது

விற்ற காசு
தோப்பும் துரவும்
வீடும் கிணறும்
விற்று வாங்கிய 
தொகையை
எண்ணிக்கொண்டிருக்கையில்
ஐந்நூறு ரூபாய் நோட்டுக்கள்
அனைத்திலும்
அப்பாவின் முகம்.
-ந.கண்ணன்

உயிர்ப்பு
‘ஒன்பது நாளுக்குள்ளே
உன் வீட்டிலே 
உசிரொண்ணு போகுமின்னு
ஜக்கம்மா சொல்றா...’
குடுகுடுப்பை சத்தத்தில்
கைவிடுகிறேன்
தற்கொலை முடிவை.
-சே.சதாசிவம்

பங்கு
தாத்தா செத்ததும்
ஒலக்க ஒரல்
அம்மி ஆட்டுக்கல்லுனு
ஒவ்வொண்ணுக்கும் போட்டி.
கறவமாடும் கண்ணும் எனக்கு
காளையும் கிடாரியும் எனக்குன்னு
அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும்
அத்தன அடிதடி.
பாயில சுருண்டு கிடக்கும் பாட்டிய
எனக்கு எனக்குன்னு
யாரும் சொல்லக் காணோம்...
-விஜிலா தேரிராஜன்

திணை மயக்கம்
அந்தப் புறாக்கள்
அஃறிணை

குருத்வாரா ஓரமும்
கூட்டமாய் இரை தேடலாம்

சிலுவைகள் மீதமர்ந்தும்
சிறகுகள் கோதலாம்

தாகமா..
தர்க்கா வாசலில்
தண்ணீர் பருகலாம்

ஊர்வலமாய்
தெரு எது வழியும்
திரும்பலாம்

எல்லாம் முடிந்து
கோபுர உச்சியில்
கூட்டில் அடியலாம்

தெரிந்தால் சொல்
திணை மாறும் வழி.
-நெல்லை ஜெயந்தா.

வலி
ஓங்கி ஒலிக்கும்
கெட்டிமேளத்தில்
அமுங்கிப் போகிறது
யாரோ ஒருத்தரின்
விசும்பல் சத்தம்
எப்போதும்!
-வித்யாஷங்கர்

அகத்தகத்தகத்தினிலே...
காதலர் தினம்
அன்னையர் தினம்
என வரிசையாய்
எல்லா தினங்களின் போதும்
நீ கொடுத்த முத்தங்கள், கடிதங்கள்,
வாழ்த்து அட்டைகள், பரிசுகள்
என எல்லாவற்றையும்
அடிக்கடி நினைத்துப் பார்த்து
உயிர்த்திருக்கிறேன் பலமுறை.
வழக்கமானதொரு 
மாலைப்பொழுதில்
என் தலை கோதி, உச்சி முகர்ந்து
‘........ப் போல இருக்கிறாய்’
என்று அனிச்சையாய்
யாரோ ஒரு நடிகனின் பெயரை
நீ சொன்னபொது
செத்துப்போய்விட்டேன்
ஒரேயடியாக.
-ஆதி

சந்தர்ப்பங்கள்
எடுப்பதற்குள்
நின்றுவிடும் தொலைபேசி மணி

சற்று வெளியே சென்றபோது
அப்போதுதான் வந்துவிட்டுப்போன யாரோ

அந்தமுகம்தானா என்று நினைவூட்டிக் கொள்வதற்குள்
சிக்னலில் விழும் பச்சை

வந்து சேர்வதற்குள்
சற்றுமுன் எரியூட்டப்பட்ட உடல்
எப்போதும் 
ஒருகணம்தான் தாமதமாகிறது.
-மனுஷ்ய புத்திரன்

திருடர்கள் ஜாக்கிரதை
சொக்கத் தங்கம் நூறு பவுன்,
ரொக்கப்பணம் ஐம்பதாயிரம்,
ஸ்கூட்டர்,டி.வி.என
பட்டியலிடும் பொழுதுதான்
கண்டுகொள்ள முடிந்தது என்னால்.

ஆனால்...
கதவு திறக்கும் பொழுதே
கண்டுகொண்டு குரைத்தது
என் வீட்டு நாய்!
-தாமிரபரணி

படங்கள் அனைத்து கூகுளில் சுட்டவை. சிறந்த கவிதை பகிர்பவர்களுக்கு எங்கள் ஊர் (திருவில்லிபுத்தூர்) பால்கோவா தரப்படும்.  தயவுசெய்து நீங்களே எடுத்துக்கோங்க...



30 கருத்துகள்:

  1. ஒவ்வொரு கவிதையும் அழகு அருமை .

    பதிலளிநீக்கு
  2. பகிவிற்கு நன்றி விச்சு.

    பதிலளிநீக்கு
  3. ரசனையான கவிதை..

    ருசியான பால்கோவா..

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இராஜராஜேஸ்வரி மேடம்.பால்கோவா உங்களுக்குத்தான் எடுத்துக்கோங்க..

      நீக்கு
  4. எல்லாமே சிவகாசி பட்டாசு ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  5. கவிதைகள் அனைத்துமே அருமை.

    பதிலளிநீக்கு
  6. அத்தனை கவிதைகளும் சூப்பர் விச்சு... எப்பவும் படிப்பு சம்பந்தமாகப் போடும் நீங்க, இப்போ இப்படியெல்லாம் வித்தியாசமாகப் போடுவது, பாராட்டுக்குரியதே....

    சில கவிதைகள் உண்மையில் மனதைக் கலங்க வைக்குது... அருமை.

    எனக்குப் பால் கோவா வாணாம்..:)) சிக்கின் பக்கோறா இருந்தால் குடுங்கோ:)).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு சிக்கன் பக்கோறா அனுப்பி வைக்கிறேன் ஆதிரா.

      நீக்கு
  7. வாழ்த்துகள் விச்சு.

    பதிலளிநீக்கு
  8. அட...அதிரகூட வந்திட்டுப் போய்ட்டா.

    விச்சு....முதல்ல பால்கோவா பழுதாகாமல் பார்சலில அனுப்புவனெண்டு சத்தியம் பண்ணினா கவிதை முயற்சி செய்து பாக்கிறன் !

    பதிலளிநீக்கு
  9. //வலி
    ஓங்கி ஒலிக்கும்
    கெட்டிமேளத்தில்
    அமுங்கிப் போகிறது
    யாரோ ஒருத்தரின்
    விசும்பல் சத்தம்
    எப்போதும்!//

    ஓங்கி ஒலிக்கும்
    கெட்டிமேளத்தில்
    அடக்கப்படுகிறது
    பெண்ணின் அத்தனை
    ஆசைகளும்!

    பதிலளிநீக்கு
  10. விழுங்கிய மீன்
    தொண்டையில் குத்துகையில்
    சத்தியம் செய்துகொள்கிறேன்
    கொலைகளை
    இனி மன்னிப்பதில்லையென்று !

    பதிலளிநீக்கு
  11. சந்தர்ப்பங்கள்...
    ~~~~~~~~~~~~~~~~

    வரிசையில் நிற்கும்போதே
    முடிந்துவிடும் பிடித்த சாப்பாடு.

    சற்று வெளியே சென்றபோது
    அப்போதுதான் வந்துவிட்டுப்போன
    கடன்காரன்.

    அந்தமுகம்தானா என்று
    நினைவூட்டிக் கொள்வதற்குள்
    ’இஞ்சாரப்பா’
    என்று கூப்பிடும் கணவன்.

    படம் பார்த்துவிட்டு
    வந்து சேர்வதற்குள்
    வீடு வந்து சேரும்
    பக்கத்துவீட்டுக்காரரின்
    காட்டிக்கொடுப்பு
    பிரம்போடு அப்பா....

    எப்போதும்
    ஒருகணம்தான் தாமதமாகிறது...!

    ஹேமா.

    இஞ்சாரப்பா - மனைவியை அன்பாகக் கூப்பிடுவது யாழ் தமிழில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹேமா வழக்கம்போல உங்கள் பாணியிலேயே கலக்கிட்டீங்க.

      நீக்கு
  12. போதும் போதும் ஹேமா நிப்பாட்டு !

    பதிலளிநீக்கு
  13. நல்ல கவிதைகள்.படித்திருக்கிறேன்.பழைய படியும் அவைகளை நினைவில் ஆடச்செய்ததற்க்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. ஹேமாவுக்கு பால்கோவா உண்டு. அவ்வளவு பெரிய பார்சலை எப்படி அனுப்புறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விச்சு அனுப்புங்கோ...அனுப்புங்கோ....ஆனா பழுதாகினா...எப்பிடியும் உங்கட அன்பே இனிப்பாயிருக்கு.சந்தோஷமாயிருக்கு.ஒரு முயற்சிதானே.குட்டியாய் இரண்டு கவிதையும் நல்லாவே வந்திருக்கு.டச்சிங்.உங்களுக்கும் நன்றி !

      நீக்கு
  15. நிச்சயமா நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேணும். நீங்கள் வந்து வாழ்த்துவதே மனசுக்கு சந்தோஷமாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  16. பாயில சுருண்டு கிடக்கும் பாட்டிய
    எனக்கு எனக்குன்னு
    யாரும் சொல்லக் காணோம்.
    ///

    அருமையான கவிதைத்தேர்வுகள்.பகிர்தலுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  17. அருமையான கவிதை தொகுப்பு.
    உயிப்பு
    ‘ஒன்பது நாளுக்குள்ளே
    உன் வீட்டிலே
    நல்லது நடக்குமின்னு
    ஜக்கம்மா சொல்றா...’
    குடுகுடுப்பை சத்தத்தில்
    கைவிடுகிறேன்
    தற்கொலை முடிவை.

    வலி
    விழுங்கிய மீன்
    தொண்டையில் குத்துகையில்
    உணர்கிறேன்
    மீனின் மரணம்.

    ஒரு வரியை மாற்றி நீங்கள் கொடுத்த கவிதையை கருத்து மாறாமல் தந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரி மாறினாலும் அர்த்தம் மாறாமல் அழகான கவிதை.

      நீக்கு
  18. மிக அருமையான கவிதைகள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு