செவ்வாய், மே 22

தனித்த மரம்

அலையல்லசுனாமி

            சிறுவயதில் எங்களுக்கு பொழுதுபோக்கே மாரியம்மன் கோவிலில் இருக்கும் வேப்பமரத்தடியில் விளையாடுவதுதான். பொழுதுபோக்கிற்கென்று எந்த விசயமும் கிடையாது. தொலைக்காட்சி, சினிமா தியேட்டர், பத்திரிகை என்று எதுவுமே பார்த்தறியாத நாட்கள் அவை. தினமலர் பத்திரிகை மட்டும் வசந்தா சைக்கிள் கடையில் வாங்குவார்கள். ஆனால் அதைப்படிக்க மதியம் ஆகிவிடும். சின்னப்பையன்களைத் துரத்திவிடுவார்கள். மதியம் வந்தால் தலைப்புச் செய்திகள் மட்டும் புரட்டிப் பார்த்துக்கொள்ளலாம். வெள்ளிக்கிழமையானால் காலையில் சீக்கிரம் சென்று க்யூவில் நிற்க வேண்டும். சிறுவர் மலர் அப்போதுதான் கைகளில் கிடைக்கும். இல்லையென்றால் இரவு ஏழுமணிக்குத்தான் கிடைக்கும். நிறைய பசங்க படிக்க காத்துக் கொண்டிருப்போம். 
            மற்றபடி கீழத்தெருவில் கிருஷ்ணசாமி ஆசிரியர் வீட்டில் பூந்தளிர், அம்புலிமாமா, ரத்தினபாலா புத்தகம் வாங்குவார்கள். அவருக்கு ஒரே பையன். எங்கள் ஊரில் அவன் மட்டும்தான் ஸ்கூல் யூனிபார்ம் அயர்ன் பண்ணி போடுவான். அந்தப் புத்தகங்களைப் படிப்பதற்காக அவனிடம் நண்பனாகச் சேர்வதற்கு போட்டி அதிகமிருக்கும். தினமலர் பத்திரிகையும் தொந்திரவு இல்லாமல் படிக்கலாம். எனக்கு அவன் நண்பனாக கிடைத்துவிட்டான் என்பதே பெரும்பாக்கியம். சிலநேரம் வீட்டிற்கும் புத்தகம் படித்துப்பார்க்க கொடுப்பான். ஆனால் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும்தான். நானும் அந்த லிஸ்டில் வந்துவிட்டேன்.
          மற்ற நேரங்களில் விளையாட்டுத்தான். விளையாட்டு என்றாலும் காரியத்தில் கண்ணாயிருப்போம். வேறென்ன? வேப்பங்கொட்டை சேகரிப்பதுதான். இதற்கு கடும்போட்டி இருக்கும். இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக வேப்பங்கொட்டையை சேகரித்து வீட்டில் பேப்பரை கூழாக அரைத்து செய்த பெட்டியில் சேகரித்து பத்திரப்படுத்தியிருப்போம்.  சிலநேரம் வேப்பம்பழங்கள் உதிர்ந்து கிடக்கும் . அவற்றினை பிய்த்து உள்ளேயிருக்கும் கொட்டை எடுத்து காய வைத்திருப்போம். அவை கொஞ்சம் சேர்ந்தவுடன் பள்ளக்குடி தெருவிலிருக்கும் ஒரு கடையில் சென்று கொடுத்தால் கைநிறைய கருப்பட்டி மிட்டாய் கொடுப்பார். அதிகமாக வேப்பங்கொட்டை கொடுத்தால் ஒரு பேப்பரில் நாம் கேட்டதை சுற்றி கொடுப்பார். கருப்பட்டி மிட்டாய், சீனிமிட்டாய், சீனிச்சேவு, எள்ளுமிட்டாய், காராச்சேவு இதுதான் எங்களது ஃபேவரைட். 
            சிலநேரம் அவர் எங்கள் ஊர் பாறையில் டெம்பொரரியாக கடை போட்டிருப்பார். அப்போது நெல் அறுவடைக்காலமாக இருக்கும். கொஞ்சம் கைநிறைய நெல் கொடுத்து சீனிமிட்டாய் வாங்கிக்கொள்ளலாம். இதற்காகவே நெல் திருட்டு சாதாரணமாக இருக்கும். நெல்சீசன் முடிந்தவுடன் காட்டில் பருத்தி போட்டிருப்பார்கள். பருத்தியை சிலபேர் அன்றாடம் சேகரித்து விலைக்குப்போடுவார்கள். சிலர் வீட்டில் மொத்தமாக சேகரித்து வைத்து நல்ல விலைவரும் என்று எதிர்பார்த்து கடைசியில் குறைந்த விலைக்கு போடுவார்கள். எங்கள் வீட்டிலும் அப்படித்தான். அந்த சமயங்களில் வீட்டில் திண்பண்டம் எதுவும் கேட்டால் கொஞ்சம் பருத்தி அள்ளி கொடுப்பார்கள். கடையில் கொடுத்து காராச்சேவு வாங்கிக்கொள்ளலாம். வீட்டிற்கு தெரியாமல் பாலவர் கடையில் பருத்தியைக் கொடுத்து வாங்கித்தின்ற நாட்களும் உண்டு. பாலவர்கடை என்று பெயர்வந்தது எப்படி என்றே தெரியவில்லை. ஆனால் பாலவர் கடை என்றே சொல்லிப் பழகிவிட்டது. காராச்சேவினை அவர் பேப்பரில் சுருட்டிக்கொடுக்கும் லாவகமே தனி.
             எங்களது நண்பர்கள் ஒன்று சேர்ந்துவிட்டால் பருத்தி ஓய்ந்துபோன காடுகளில் சென்று பருத்தியை சேகரிப்பது, வேப்பங்கொட்டைகளை சேகரிப்பதுதான் பொழுதுபோக்கு. சின்ன சிரட்டைகளில் வேப்பங்கொட்டைகளை வேகமாகப் பொறுக்கி சேகரிக்கவேண்டும். பின்பு அவற்றினை காயவைத்து பெட்டியில் பொட்டு வைத்திருப்போம். காயவைக்கும்போது கொஞ்சூண்டு யாருக்கும் தெரியாமல் திருடுவதும் உண்டு. ஊரில் அவர்கடை ஒன்றில் மட்டும்தான் வேப்பங்கொட்டைகளை வாங்குவார். எனவே அவருக்கு எப்போதும் மவுசு உண்டு.
     அந்த கருப்பட்டி மிட்டாய் எங்கிருந்துதான் வாங்கி வருவாரோ!! அவ்வளவு டேஸ்டாக இருக்கும்.
          இப்போதும் வேப்பங்கொட்டைகள் கீழே விழுந்து சிதறிக் கிடக்கின்றன. அதனைப் பொறுக்குவதற்கு சிறுவர்களும் தயாரில்லை. அவர்கள் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் அடைந்து கிடக்கிறார்கள் அதனை சீனிமிட்டாயும், கருப்பட்டி மிட்டாயும் கொடுத்து வாங்குவதற்கானபள்ளக்குடி கடையும், பாலவர் கடையும் இல்லை. வேப்பமரமும் தனித்த மரமாய் நிற்கிறது.

6 கருத்துகள்:

  1. நானும் நினைச்சன் எங்கட தனிமரம் நேசனைப் பற்றி என்னமோ சொல்லப்போறீங்களாக்குமெண்டு.ஆனால் நினைக்க நினக்க இனிக்கும் அருமையான நினைவலைகள்.வேம்பின் காற்றும் அந்த வாசனையும்.....மரங்களோடு கண் பொத்திக் கதை பேசியதை இப்ப உள்ள குழந்தைகளுக்குச் சொன்னால் ’உங்களுக்கு விசர்’ என்கிறார்கள் விச்சு.நான் என்ன விசரோ !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹேமா... அந்த பழைய நாட்கள் இனிமையானவை. மீண்டும் அவை வராது. நீங்கள் புத்திசாலி ஹேமா.

      நீக்கு
  2. அருமையான நினைவுகளை மீட்டெடுக்கும் பதிவு. சின்ன வயதில் வீட்டுக்குப் பின்னாலிருந்த அரச மரம் இந்த வேம்பைப் போல மறக்க முடியாத ஒன்று.

    பதிலளிநீக்கு
  3. வேப்பமரம் தனித்தாவது நிற்கிறதே தங்கள் ஊரில்.., பல ஊர்களில் பல தலைமுறைகளை சந்தித்த நிறைய மரங்கள் இப்போது இல்லை நண்பரே ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேப்ப மரங்களின் நினைவுகள் மட்டுமே இப்போது பல ஊர்களில் எஞ்சி இருக்கின்றன.

      நீக்கு