புதன், செப்டம்பர் 5

ஒரு டன் மரமும் ஒரு டன் இரும்பும்

           எது அதிக கனமானது?-- ஒரு டன் மரமா? ஒரு டன் இரும்பா? சிலர் யோசிக்காமல் ஒரு டன் இரும்புதான் என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் ஒரு டன் மரம்தான் அதிக கனமானது. நம்பமுடியாவிட்டாலும் இதுதான் உண்மை.

         அதாவது ஆர்க்கிமிடிஸ் விதியின்படி (திரவங்களுக்கு மட்டுமல்ல.. வாயுக்களுக்கும் பயன்படுத்தலாம்) காற்றில் ஒவ்வொரு பொருளும் தனது எடையில் ஒரு பங்கை “இழக்கிறது”; இந்த எடையிழப்பு அப்பொருளினால் இடம்பெயர்க்கப்பட்ட காற்றின் எடைக்குச் சமமாகும். மரமும் இரும்பும்கூட தத்தம் எடையில் ஒரு பங்கை இழக்கின்றன. எனவே, அவற்றின் உண்மையான எடையைக் கண்டுபிடிக்க வேண்டுமானால், எடை இழப்பை கூட்டிக் கொள்ளவேண்டும். எனவே மரத்தின் உண்மையான எடை ஒரு டன் + அது இடம்பெயரச்செய்யும் காற்றின் எடை ஆகும்.
      அதுபோல இரும்பின் உண்மையான எடையும்  ஒரு டன் + அது இடம்பெயரச்செய்யும் காற்றின் எடை ஆகும். எனினும் ஒரு டன் இரும்பைவிட ஒரு டன் மரம் அதிக சுமார் 15 மடங்கு அதிகமான இடத்தினை அடைத்துக்கொள்ளும். ஆகவே  ஒரு டன் மரத்தின் உண்மையான எடை ஒரு டன் இரும்பின் உண்மையான எடையைவிட அதிகமாயிருக்கிறது. அல்லது, அதை வேறுவிதமாகச்சொன்னால் காற்றில் ஒரு டன் மரத்தின் உண்மையான எடை, காற்றில் அதே டன் எடையுள்ள இரும்பின் உண்மையான எடையைவிட அதிகமாயிருக்கிறது என்று சொல்லலாம்.
    ஒரு டன் இரும்பின் கனபரிமாணம் 1/8 கனமீட்டர்; ஒரு டன் மரத்தின் கன பரிமாணம் 2 கனமீட்டர். ஆதலால் இடம் பெயர்க்கப்பட்ட காற்றின் எடைகளில் உள்ள வித்தியாசம் கிட்டத்தட்ட 2.5 கிலோகிராம். ஒரு டன் மரம் ஒரு டன் இரும்பைவிட உண்மையிலேயே இவ்வளவு அதிக கனமுள்ளதாயிருக்கிறது!

நன்றி : பொழுதுபோக்குப் பெளதிகம்
                யா.பெரெல்மான்