வெள்ளி, செப்டம்பர் 7

சாக்கடை மணம்

                அந்த ஊரில் இது கொஞ்சம் பெரிய பாலம்தான். இரண்டு பகுதிகளையும் இணைக்கும் முக்கியமான பகுதி அது. பாலத்தின் கீழ் ஒரு ஆறு ஓடியதற்கான அடையாளம் இன்னும் மாறவில்லை.  இப்போதெல்லாம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தொடர்ச்சியாக மழை பெய்தால் மட்டுமே அதில் நீர் ஓடும். மற்ற நாட்களில் எல்லா ஊரிலும் ஓடிக்கொண்டேயிருக்கும் அதே சாக்கடைதான் இங்கும் ஓடுகிறது.

                    எல்லா ஊர்களிலும் ஆறு தன் அடையாளத்தினை இழந்து வருகிறது. அது ஓடிய வழித்தடங்களை மனிதன் தனதாக்கிக்கொண்டான். ஆறு தன்னை சுருக்கிக்கொண்டது. தன் உடம்பில் ஓடிய சுத்தமான நீரை அது இழந்து பல காலமாகிவிட்டது. தன் உடம்பையும் வருத்திக்கொண்டு  பல குப்பைகளையும், நாற்றமெடுக்கும் நீரையும் மட்டுமே தன்னுள் அடக்கிக்கொண்டுள்ளது. அதிலிருந்து வரும் வாசனையை ஏற்க மனமில்லாமல் மனிதன் மூக்கைப்போத்திக்கொள்கிறான்.  அத்தனை கழிவுகளும் அவனிடமிருந்துதான் வந்தன என்பதை அறியாமலும் அதனை மனம் ஏற்காமலும் உள்ளான்.
         சாக்கடை என்றாலே அதன் கருப்பு நிறம்தான் மனதுக்கு ஞாபகம் வருகிறது. கருப்பு என்றாலும் இது நல்ல அடர்த்தியான மினுமினுக்கும் கருப்பு. அந்த பாலத்தின் கீழ் இது அமைதியாகத்தான் இத்தனை காலங்களும் ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டு பக்கமும் நிறைய வீடுகள். அவர்களும் ஒருநாளும் மூக்கைப் பொத்தியதில்லை. அவர்களுக்கு பழகிப்போன ஒன்றுதான் இந்த மணம். பாலத்தின்மீது பலதரப்பட்டவர்கள் பயணம் செய்கிறார்கள். அவர்களின் மீது பல வாசனைகள். எல்லாமே செயற்கையாகத் தயாரிக்கப்பட்டவை. அந்த மணம் இந்த மணத்தின் வாசனையை அமுக்கிவிடுகிறது போலும்.

           இத்தனை நாளும் அமைதியாக இருந்த அந்த சாக்கடையை இன்று ஒருவன் கிளறிக்கொண்டிருந்தான். உள்ளிருந்த அதன் அத்தனை வாசனையும் விடுதலையாகி வெளியேறியது. அங்கு பயணித்துக்கொண்டிருந்த அத்தனை பேரின் கைகளின் விரல்களும் இப்போது மூக்கின்மீதுதான். பாலத்தின்மீது பயணித்துக்கொண்டே அவனை ஏதோ வெளிக்கிரகவாசியை பார்ப்பதுபோல் பார்த்தனர்.

     அவன் கருமமே கண்ணாக இருந்தான். அவனைச்சுற்றியும் வர்ணிக்கமுடியாத அளவு கழிவுகள். அவன் அதனை அலட்சியப்படுத்திவிட்டு கையில் ஒரு இரும்பு தட்டுடன் சாக்கடையின் உள்ளே இறங்கினான். அவன் சாக்கடையில் இடுப்பு மூழ்கும் அளவுக்கு இறங்கினான். கையில் வைத்திருக்கும் தட்டால் உள்ளேயிருந்து மண்ணை அள்ளி வெளியில் குமித்தான். கருப்பு மணல் போன்று சொதசொதவென மண்ணை அள்ளி வெளியில் வாரிப்போடுவதை தொடர்ந்து செய்தான். அவன் அந்த சாக்கடையில் முழ்கி அள்ளும்போதும் மூச்சினை அடக்கிக்கொண்டு அள்ளிப்போட்டுவிட்டு இழுத்து மூச்சு விட்டுக்கொள்வான். பாலத்தின்மீது நடந்து செல்வோர் மூக்கினைப்பொத்திக்கொண்டு இவனையையும் ஒரு பார்வை பார்த்துக்கொண்டே சென்றனர். தொடர்ந்து வாரினான். போதுமென்று மனசுக்குப் பட்டதும் வெளியில் ஏறி வந்தான்.

          குவித்து வைத்திருந்த மண்ணை கிளறிவிட்டு உட்கார்ந்து சலிக்கலானான். அவன்மேல் அங்கிருந்த அத்தனை ஈயும் அப்பியது. கொசுக்கள் ஒரு பக்கம் படையெடுத்து அவன் மேல் உட்கார்ந்தது. அதைத் தடுக்க அவனுக்க விருப்பமில்லை. பொறுமையாகச் சலித்தான். ஏதாவது கிடைத்தால் அதை எடைக்கு எடை போடலாம். அதிலிருந்து வரும் பணத்தில்தான் குடும்பம் ஓடும். இந்தப்பகுதிக்கு பெரும்பாலும் வரமாட்டான். மனதில் பல எண்ணங்கள் ஓடியது. இது எல்லோருக்கும் இயற்கைதான். ஒரு வேலை செய்யும்போது மனதில் பல ஆயிரம் எண்ண ஓட்டங்கள் ஓடிக்கொண்டுதான் இருக்கும். அவன் மகளுக்கு குழந்தை பிறந்து மூன்று மாதங்களாகி விட்டது. புருசன் வீட்டிற்கு அனுப்பவேண்டும். குழந்தைக்கு ஏதாவது போட்டு அனுப்பலாமென்றால் வாயுக்கும் வயித்துக்குமே பெரும்பாடாயுள்ளது.

    வெறிகொண்டு சலித்தான். வழக்கம்போல கண்ணாடி வளையல் துண்டு, இத்துப்போன பழைய நாணயம், மருந்து பாட்டில்கள், ஊசி,இரும்புத்துண்டு, வளையம், உடைந்த கண்ணாடி, சீப்பு, கம்பி, பிய்ந்துபோன செருப்பு, ஒயர் இன்னும் ஏதேதோ பொருட்கள் கிடைத்தன். இரும்பாலான பொருட்களை மட்டும் தனியாக சேமித்தான். இன்னும் அரைகிலோகூட தேறவில்லை. மீண்டும் சாக்கடையில் இறங்கினான். மறுபடியும் தூர்வாரினான். பாலத்தின்மீது செல்வோர் வசைபாடிக்கொண்டே சென்றனர். அருகருகே உள்ள வீட்டிலுள்ளவர்கள் ஜன்னலை இறுகி சாத்தினர். இவன் கண்டுகொள்ளவில்லை. ஆனால் மனம் விம்மியது. எனக்கு மட்டும் ஏன் இந்ததொழிலைக் கற்றுகொடுத்தாய் ஆண்டவா! மனதின் எண்ண ஓட்டம் ஓடியது. மீண்டும் சலிக்க அமர்ந்தான்.

                      அவன்மீது நீர் வழிந்தோடியது. சாயநீர், பாத்திரம் கழுவிய நீர், மலஜலம் கழித்த நீர்,குளித்து அழுக்கை வெளியேற்றிய நீர், துணிகளைத்துவைத்து வெளியேறும் நீர் இன்னும் பலவகை நீர் அவன் உடம்பில் வழிந்தது. சில கண்ணாடி பொருட்கள் காலில் கிழித்து ரத்தம் எட்டிப்பார்த்தது. அவனுக்கு எதுவும் உறைக்கவேயில்லை. சலித்தான்.. முடிந்தமட்டும் வேகமாக சலித்தான். பழையபொருட்கள்... அவன் பார்த்து பார்த்து பழகிப்போன அதே பழைய பொருட்கள்.

            இரும்பின் அளவைப்பார்த்தான். ம்ம்... மனசு திருப்திப்படவில்லை. சூரியனைப்பார்த்தான். மணி மூன்றிருக்கும் என்று நினைத்து கையை சாக்கடையில் ஓடும் நீரிலேயே கழுவினான். உடம்பினை துண்டால் துடைத்தான். கொண்டு வந்திருந்த கஞ்சியைக் குடித்தான். மீண்டும் கையை அந்த நீரிலேயே கழுவிவிட்டு வேலையைத் தொடங்கினான். மனசும் கையும் வலிக்கும்வரைத் தொடர்ந்து செய்தான்.

             மாலை நேரமும் வந்தது. பள்ளி சென்றவர்கள், அலுவலகம் சென்றவர்கள் அதே பாலம் வழியே திரும்பினர். இவன் இறுதியாக ஒரே ஒரு தடவை முயற்சி செய்வோம் என்று அள்ளினான். எல்லாவற்றையும் கரையில் வாரிக்கொட்டினான். மீண்டும் சலித்தான். நம்பிக்கை வீண்போகவில்லை. இதுவரை அவனுக்கு சிக்கியதெல்லாம் வீணான பொருட்கள். இப்போது அதிர்ஷ்ட தேவதை இவன் பக்கம்.  ஒரு வளையம் சிக்கியது. அதை கையில் எடுத்துப்பார்த்து  சாக்கடை நீரில் அலம்பினான்.  அந்த வளையம்  மின்னியது. நிச்சயம் தங்கமாகத்தான் இருக்கவேண்டும். இப்போது அவனின் கண்களும் மின்னியது. அதை முகர்ந்து பார்த்தான். ஆம்...சாக்கடையும் இப்போது மணத்தது.

9 கருத்துகள்:

  1. நிச்சயம் தங்கமாக இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு கதை! நிஜமனிதனை உள்வாங்கி எழுதப்பட்ட சிறந்த படைப்பு! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    காசியும் ராமேஸ்வரமும்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_7.html
    உலகின் மிகச்சிறிய பைக்கும் கடவுள் நம்பிக்கையும்
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_4275.html

    பதிலளிநீக்கு
  3. முயற்சிக்கு ஒரு 'மணம் வீசும்' கதை...

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா07 செப்டம்பர், 2012

    ம்ம்ம் நன்றாக இருந்தது ரசித்தேன்....

    பதிலளிநீக்கு
  5. நிஜம் தான். இயற்கையைச் சீரழித்துக் கொண்டிருக்கிறோம். எல்லா ஊரிலும் இது தான் கதை.
    அருமையான பதிவு. வாழ்த்துகள் திரு மாரிமுத்து.

    பதிலளிநீக்கு
  6. குப்பை கூழங்களைப் மக்கள் குடியிருப்புகள் மத்தியில் குவிப்பது சூழல் அசுத்தமடைகிறது.ஆனாலும் அதிலும் நல்லது நடந்திருக்கு !

    பதிலளிநீக்கு
  7. மிகவும் நிதர்சனம் அண்ணா! அவன் முயற்சிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்! நல்ல பதிவு அண்ணா!

    பதிலளிநீக்கு