ஞாயிறு, ஜனவரி 18

பழகிய நாட்கள்

                          இரவு புரண்டு படுத்துப்பார்த்தேன். தூக்கம் வரவில்லை. நான் அடுத்து அப்பா, அம்மா அதன்பின் தங்கை என்று வரிசையாக படுத்துத்தான் தூங்குவோம். தனியாக படுக்கையறை என்று எதுவும் கிடையாது. தரையில் வரிசையாக போர்வை விரித்து நான்கு தலையணைகளையும் வரிசையாக போட்டு எல்லோரும் ஒன்றாகத்தூங்குவோம். எனது கல்லூரி நாட்களிலும் தனியாகத் தூங்கவேண்டும் என்ற எண்ணம் வந்ததில்லை. அவர்களைவிட்டு என்னால் தூங்கவும் இயலாது. கண்களில் நீர் வடிந்தது. துடைக்க மனமின்றி படுத்திருந்தேன். 
                        என்னைப்போல்தான் எல்லோரது மனநிலையும் இருக்கும் என்று எனக்குத்தெரியும். ஆனால் எல்லோருமே தூங்குவது போலவே படுத்திருந்தோம். சிறிது நேரத்தில் யாரோ ஒருவரின் விசும்பல் சத்தம் கேட்டது. நிச்சயம் அம்மாவாகத்தான் இருக்கும். அப்பா எந்தவிதமான துன்பத்தையும் அடக்குபவர். ஆனால் அவரது கண்ணிலும் கண்ணீர் கசிந்துகொண்டிருப்பதை நிச்சயம் என்னால் உணரமுடிந்தது.
                    அன்று காலையில்தான் தங்கையை பெண்பார்க்க மானாமதுரையில் இருந்து வந்திருந்தார்கள். மாப்பிள்ளை பையனுக்கு மின்சார வாரியத்தில் வேலையாம், கொஞ்சம் குண்டாக இருந்தார். தங்கைக்கு முழுதாக மாப்பிள்ளையை பிடிக்கவில்லை. இதோடு ஆறாவதாக பெண்பார்க்கும் படலம் நடந்துவிட்டது. ஏதோ சில காரணங்களால் ஒவ்வொரு இடமும் நின்றுவிட்டது.அதனாலோ என்னவோ மாப்பிள்ளை எனக்குப்பிடித்து விட்டது என தங்கை கூறினாள். 
              ஒவ்வொருவராக தங்கையிடம் வற்புறுத்தி கேட்டாகிவிட்டது. குண்டாக இருந்தாலும் பரவாயில்லை. மாப்பிள்ளை எனக்கு பிடிக்கிறது என அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டாள். எங்களுக்குத்தெரியும். அப்பா அம்மாவை இதற்குமேல் கஷ்டப்படுத்தக்கூடாது என்பதற்காகவே அவள் மாப்பிள்ளையை பிடிப்பதாகக்கூறினாள். வயதான காலத்தில் எத்தனை மாப்பிள்ளைதான் அவர்கள் பார்த்து நமக்காக அலைவார்கள் என்று அவள் எண்ணியிருக்கவேண்டும். ஆனால் மற்ற யாருக்கும் மாப்பிள்ளை பையனை அவ்வளவாக பிடிக்கவில்லை. அதுவும் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.                             எங்கள் வீட்டில் யாரும் அவ்வளவு குண்டு கிடையாது என்பது முதல் காரணம். அடுத்த காரணம் எல்லோருக்கும் உள்ளதுபோல் மாப்பிள்ளையின் ஊர் தூரமாக உள்ளது. நிச்சயம் எங்கள் ஊரிலிருந்து மானாமதுரைக்கு எட்டுமணி நேரம் ஆகும்.
                      தங்கையுடன் சண்டை போடாத நாட்களில்லை. இரத்தம் வருமளவு நான் அடித்திருக்கிறேன். ஆனால் என்மீது அவளுக்கு அளவுகடந்த பாசம். அப்பா தின்பண்டம் எது வாங்கிவந்தாலும் எனக்காக பத்திரப்படுத்தி வைப்பாள். என்னுடன் மணிக்கணக்காக பேசுவாள். நான் நண்பர்களுடன் சுற்றும்போது அப்பா என்னைத்திட்டுவார். தங்கை அப்பாவிடம் எனக்காக சண்டை போடுவாள். எல்லோருமே இரவு உணவை சேர்ந்துதான் சாப்பிடுவோம். எவ்வளவு பசித்தாலும் இதுவரை யாரும் தனியாக சாப்பிட்டது கிடையாது. சாப்பிடும்போது சந்தோசமாக பேசிக்கொண்டும் எங்கள் அம்மாவை நக்கலடித்து சிரித்தும் சாப்பிடுவோம். பொறியல், கூட்டு எது இருந்தாலும் அவளுக்கு அதிகமாகவே வைப்போம். அவளுக்குப்பிடித்த உணவாக அம்மா பார்த்து பார்த்து வைப்பார்கள். எல்லோருக்குமே அப்பா மீது அளவுகடந்த மரியாதை. அம்மாவைப்பற்றி சொல்லவே வேண்டாம். எங்கள்மீது உயிரையே வைத்திருப்பார்கள். எங்கள் அப்பாவிற்கு என் தங்கைமீது அவ்வளவு பாசம். எங்கள் வீட்டின் செல்லப்பிள்ளை எனது தங்கை. எந்தப்பண்டிகை ஆனாலும் அவளுக்கு புத்தாடை கண்டிப்பாக வாங்கிவிடுவார்கள்.
                        மானாமதுரைக்கு அவள் வாக்கப்பட்டு போய்விட்டால் அவளது படுக்கை இடம் வெறிச்சோடி இருக்கும். இரவு உணவு உண்ணும்போது அவளது தட்டு காலியாக இருக்கும். அதை நினைக்கும்போது மனது என்னனவோ செய்தது. அவள் எங்கள் மூன்று பேரையும் நினைத்து நிச்சயம் அழுவாள். இப்படியாக எண்ண ஓட்டம் சுழன்றடித்தது. ஏனோ அவளது பிரிவை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மணி நிச்சயம் இரண்டு ஆகியிருக்கும் என்று தோன்றியது.
                    நாளை மானாமதுரை மாப்பிள்ளைக்கு போனில் பதில் சொல்வதாகச் சொல்லியிருந்தோம். நிச்சயமாக மாப்பிள்ளை வேண்டாம் எனச்சொல்லிவிடவேண்டும் என்று முடிவேடுத்து தூங்க ஆரம்பித்தேன். எல்லோரது முடிவும் அதுவாகத்தான் இருக்கும்போல. எல்லோருமே தூங்க ஆரம்பித்திருந்தனர்.

12 கருத்துகள்:

  1. கதையா...?
    நிஜமா......?

    நிதர்சனம்.

    பதிலளிநீக்கு
  2. நெகிழ்வுகளின் தருணம்,ஆனாலும் யதார்த்தம் நாற்றை ப்பிடுங்கி வேறோர் இடத்தில் நட்டுத்தான் ஆகவேண்டும்.கொஞ்சம் சங்கடப்பட்டபோதிலும் கூட/நாளை மருமகன்களும்,மருமகள்களுமாய் தோளிலும் கழுத்திலுமாய் ஏறி அமர்ந்து மல்லுக்கட்டும் போது பட்டகஷ்டமும்,வடித்த கண்ணீரும் காணாமல் போய்விடக்கூடும்.நன்றி வணக்கம்/

    பதிலளிநீக்கு
  3. கனவு கண்டால் நான் கனவு என்று சொல்லாமல் சொல்லத் தொடங்கிவிடுவேன் பின்னர் கனவா என்று செம கோபம் வரும் எல்லோருக்கும் முதல்லேயே என் சொல்லலை என்று அது போலவே இதுவும் போகிறது ஆனால் கோபம் வரவில்லை ஆர்வம் பெருகுகிறது இது கதையா நிஜமா என்று தான் சரி சரி தொடர்கிறேன். நெகிழவைக்கிறது கதையாக இருந்தால் மகிழ்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் நீங்கள் மகிழலாம். இது சிறுகதைதான். ஆனால் அதன் பாதிப்பு என்னுள் உண்டு. தங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. உள்ளம் நெருடிப் போகிறது கதை!..

    மிக அருமை! வாழ்த்துக்கள் சகோ!

    பதிலளிநீக்கு
  5. நெஞ்சினை நெகிழ வைக்கும் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    Dear Friend,

    You may like to go through the following Link:

    http://gopu1949.blogspot.in/2015/01/6-of-16-24-30.html

    This is just for your information, please.

    Have a Very Nice Day !

    With kind regards,
    Vai. Gopalakrishnan
    gopu1949.blogspot.in

    பதிலளிநீக்கு
  6. Sir, You may like to go through the following Link:
    http://gopu1949.blogspot.in/2015/01/7-of-16-31-39.html#comment-form

    Please do come if time permits.

    Have a Very Nice Day !

    With kind regards,
    Vai. Gopalakrishnan

    பதிலளிநீக்கு