ஞாயிறு, டிசம்பர் 28

வடை பாயாசம்

விச்சு(அட நான் இல்லீங்கோ.. இவர்தான் இந்தக் கதையின் நாயகன்) தரகரிடம் சொல்லிக்கொண்டிருந்தான். 
ஏழு கழுதை வயசாச்சுன்னு எங்க அம்மா அடிக்கடி சொல்லிக்கிட்டு இருக்காங்க. சீக்கிரமா கல்யாணம் முடிக்கனும்.
உடனே தரகரும் அட! அதுகென்ன நல்ல கழுதையா ஒன்னு பாத்துட்டா போச்சு என்றார்.
நீங்கவேற அண்ணாச்சி. ஒரு நல்ல அடக்கமான பொண்ணா பாருங்களேன். 
அடக்கமான பொண்ணு வேணுமின்னா மயானத்துக்குத்தான் போகனும்.
யோவ் தரகர்.. நான் சீரியஸா ஆயிடுவேன்.
அப்போ ஹாஸ்பிடலுக்கு போங்க தம்பி.
வேற வழியில்லாமல் சிரித்துவிட்டு..படாரென அவர் காலில் விழுந்தான்.
அவரும் மொக்கையை நிப்பாட்டிவிட்டு கல்யாணம்கிறது ஆயிரம் காலத்துப் பயிர் தம்பி என்றார்.
அப்போ ஆடு, மாடெல்லாம் மேய்ஞ்சிடாதா என்று அப்பாவியாக கேட்டான். பாடாரென அவர் விச்சுவின் காலில் விழுந்துவிட்டார். உங்க அறிவுக்கு நயன்தாரா மாதிரி பொண்ணு கொண்டு வாரேன் என்று உறுதிமொழி கொடுத்தார்.

விச்சுவுக்கு அன்று இரவு தூக்கம் வரவில்லை. நயன்தாராவுடன் டூயட் பாடுவதாக நினைத்துப்பார்த்தான். கூடவே பிரபுதேவா, சிம்பு, ஆர்யா என்று வரிசையாக ஹீரோக்கள் வர தனது முடிவை மாற்றிக்கொண்டான். நயன்தாரா வேண்டாம்... நம்ம ஊரு கருவாச்சி மாதிரி பொண்ணு கிடைத்தால்கூட போதும். அவளுக்கு காளியாத்தா மாதிரி கோபம் வருமே..! பரவாயில்லை..  கோபத்தில்கூட அழகுதான் என நினைத்துக்கொண்டே அசந்து தூங்கிவிட்டான்.

மேளதாளங்கள் முழங்க பச்சைக்கலர் பட்டுப்புடவையில் மணப்பெண் வர தாலிகட்டினான். மூன்றுமுடிச்சும் நான்தான் போடுவேன் என்று அடம்பிடித்துப்போட்டான்.

முதலிரவு அறையில் விச்சு சீரியஸாக புத்தகம் படித்துக்கொண்டிருந்தான். 
மணப்பெண் பால்சொம்புடன் வந்து பக்கத்தில் அமர்ந்தாள். 
ஏங்க.. என்ன படிக்குறீங்க?
புத்தகம்...
உங்க அறிவைக்கண்டு வியக்குறேன். 
படிச்சு முடிச்சிட்டு என்னங்க பண்ணுவீங்க?
மூடிதான் வைக்கனும்.
பால் சொம்பு டமாரென கொட்டியது.
ஓ..! அவள் கோபத்தில் இருக்கிறாள். 
நீ கோபப்படுவியா செல்லம்.
கோபம் வந்தா நான் காளியா மாறிடுவேன்
அய்யோ.. அப்போ நானு?
நீங்க காலிதான்.
ஹாஹா.. கஸ்டப்பட்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கவலைப்படாத.. உனக்கு கோபம் வர்ற மாதிரி நான் நடந்துக்கமாட்டேன் என்றான் .  புத்தகத்தின் பக்கத்தை புரட்டுவதை நிறுத்திவிட்டு 
என்னைப்பிடிச்சிருக்கா? என்று அப்பாவியாய் கேட்டான்.
பிடிக்காமலா...உங்கள் பக்கத்தில் இம்புட்டு நெருக்கமா உட்கார்ந்திருப்பேன்.

ம்ம்.. நாம ஹனிமூன் போக ஊட்டிக்கு ஒரு டிக்கெட் எடுத்திருக்கேன்.
ஒரு டிக்கெட்டா..!
அய்யோ சந்தோசத்துல தலைகால் புரியாம ஒரு டிக்கெட் மட்டும் எடுத்துட்டேனே..
பரவாயில்லைங்க.. நாளைக்கே இன்னொரு டிக்கெட் எடுத்திருங்க.

ஆமா! நீங்க நிறையா படிப்பீங்களா?
ம்ம்.. கவிதைகூட எழுதுவேன்.
நீங்க எழுதுனதை கொடுங்க. நானும் உங்கள் கவிதையை படிச்சுப்பாக்குறேன்.
இதோ..இந்த நோட்டு முழுவதும் என்னுடைய கவிதைதான். ரசனையா இருக்கும். நீயும் படித்துப்பார் என்றான் விச்சு.
என்னங்க கவிதை. ஒன்னுலகூட உப்புச்சப்பே இல்லை.
அடியே நான் படிக்கத்தான் கொடுத்தேன். உன்னை யார் தின்னு பாக்கச்சொன்னா..!
ஏங்க ..நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன். காளியா மாறிடுவேன்னு..

அப்புறம்.. 
அப்புறம்..
அப்புறம்..
இப்படியே பேசினா விடிஞ்சிரும். எனக்கு பத்து மணிக்கெல்லாம் தூக்கம் வந்திரும்ங்க..
பரவாயில்ல.. பட்டுக்குட்டி. இம்புட்டு நேரம் உன் தொல்லையை தாங்கிக்கிட்டேன், இன்னும் அரைமணி நேரம்தான.. என்றான் விச்சு.
வேண்டாம்.. நான் காளியா மாறிடுவேன்.

சரி அதைவிடு செல்லம். நான் இறந்திட்டா நீ என்ன பண்ணுவ?
நானும் உங்கள் கூடவே வந்திருவேன். நீங்க இல்லாத உலகத்துல நான் மட்டும் என்ன பண்ணப்போறேன்.
சரிதான்...அப்பவே அந்த ஜோசியக்காரன் சொன்னான். நீ செத்தாலும் சனியன் உன்னை விடாதுன்னு.
ஏங்க நான் காளியா மாறிட்டேன்.  இன்னும் ஒருவார்த்தைகூட பேசாமல் திரும்பி படுத்து தூங்குங்க. குட்நைட்.. என்று போர்வையை போர்த்தி படுத்துவிட்டாள்.

ஆஹா..! காளி தன் சுரூபத்தைக்காட்டிவிட்டாள். பயந்துபோய் அவனும் தூங்கினான்.
தூக்கத்தில் புலம்பினான்.
ஏங்க.. என்னங்க புலம்புறீங்க?
கனவுல நயன்தாரா வந்தாள்.
அப்புறம் திடீர்னு எதுக்கு கத்துனீங்க?
கனவுல நீயும் வந்துட்ட...
’நங்’கென்று மண்டையில் விழுந்தது.

காலையில் அம்மாதான் காபி கொண்டுவந்து விச்சுவை எழுப்பினார்கள்.
விச்சு பதறியபடி எழுந்தான். 
காளி எங்க? என்று அம்மாவிடம் கேட்டான்.
காளியா..! யார்ரா அது?
அடச்சே! எல்லாம் கனவா...! கல்யாணம் நினைப்புலேயே படுத்ததால கனவு வந்திருக்கும்போல என்றபடியே தலையைத்தடவினான்.
தலை புடைத்து வீங்கியிருந்தது.

13 கருத்துகள்:

  1. கனவுலேயே தலை புடைத்துவிட்டதா
    அருமை

    பதிலளிநீக்கு
  2. நகைச்சுவை கதை அருமை! ரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  3. ’நங்’கென்று மண்டையில் விழுந்தது.

    யதார்த்த நடையில்...சிறப்பாக உள்ளது!

    பதிலளிநீக்கு
  4. ப்ளீஸ் ரெண்டு நாள் டைம் கொடுங்க.இந்த பதிவை படிச்சுட்டு சொல்றேன்.இப்போ தங்களுக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  5. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. ஆஹா விச்சு நீங்களா இப்படி எழுதினீங்க அம்மாடியோ செம சகோ காமெடியோட கதையும் சூப்பர் தொடர்ந்து எழுதுங்க வாசிக்கக் கூடிய வகையில் அளவாகவும் இருந்தது.
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  7. கண்டிப்பாக இது பெரிய சுனாமியாத்தான் இருக்கு
    நகைச்சுவையாகவும் சுருக்கமாகவும் இருந்தது
    அதைவிடகரந்தைசகோசொன்னதுஇன்னும் சூப்பர்.

    பதிலளிநீக்கு

  8. பொலிக.. பொலிக.. புத்தாண்டு!

    புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
    சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
    தேனுாறும் வண்ணம் திளைக்கட்டும்! செந்தமிழில்
    நானுாறும் வண்ணம் நடந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  9. எனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,
    அனைவருக்கும் மனங் கனிந்த இனிய இறையருள்மிக்க,

    "புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"

    என்றும் நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    பதிலளிநீக்கு
  10. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரரே!

    நல்ல நகைச்சுவைக் கதை! ரசித்தேன்!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. :))))))) **உங்க அறிவுக்கு நயன்தாரா மாதிரி பொண்ணு கொண்டு வாரேன் என்று உறுதிமொழி கொடுத்தார்.*** அவ்ளோ அறிவுள்ள புள்ள அந்த புள்ளைய கட்டுமா???:))))))
    செம காமெடியான கதை:)

    பதிலளிநீக்கு