சுவர் ஓரத்தில் பழமையான மரநாற்காலி சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. அதனருகே நிறைய நெல்லுடன் ஒரு நாளி இருந்தது. அதன் மேலே ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. வீட்டின் வெளியே சிறிய பந்தல் போடப்பட்டிருந்தது. அதன்கீழ் ஐந்தாறு பிளாஸ்டிக் சேரும், ஒரு நீளமான மரப்பெஞ்சும் போடப்பட்டிருந்தது. கவலையான முகத்துடன் சில பெருசுகள் அதில் அமர்ந்திருந்தனர். சிலபேர் உட்கார இடமில்லாமல் பக்கத்து வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தனர். வெளியூரிலிருந்து வந்த சொந்தங்கள் ஊருக்குப் போகும் அவசரத்தில் இருந்தனர்.