ஆண்களுக்கு மட்டும் அழகா தாடி மீசை முளைக்குதே. பெண்களுக்கு ஏன் முளைப்பதே இல்லை!! என்று நானும் விவரம் தெரிந்த நாள் முதல் யோசித்ததுண்டு. ஹார்மோன்கள் ,உடற்கூறு என்று பல காரணங்கள்
கூறப்பட்டாலும் பெண்களுக்கும் தாடி, மீசை முளைத்தால் இன்னும் அழகாக இருப்பார்கள் அல்லவா! மீசையை முறுக்கிக்கொண்டு பெண்கள் நடந்தால் இன்னும் கூடுதல் அழகுதானே. அந்தப்பயத்திலேயே ஆண்களும் பெண்களிடம் வாலாட்டமாட்டார்கள். கடவுளுக்கு இரக்கமே இல்லையா என்று நினைத்ததுண்டு. ஆண்கள் தினமும் தாடியை ஷேவ் செய்வதற்கே கால்மணிநேரம் ஆகிறது. பெண்களுக்கும் தாடி முளைத்தால் தாடியை இன்னும் அழகாக்கவேண்டும் , தேவர்மகன் மீசை போன்று ஸ்டைலாக ஏதாவது மீசை வைக்கவேண்டும் என்று பியூட்டி பார்லரில் இன்னும் கூடுதல் நேரம் செலவழிப்பார்கள் என்றுகூட மீசை, தாடி முளைக்காமல் இருந்திருக்கலாம் என நான் எண்ணுவதுண்டு. ஆனால் வெரியர் எல்வினின் உலகம் குழந்தையாக இருந்தபோது என்னும் நூலைப்படித்தபின் காரணம் புரிந்தது. வேடிக்கையான கதைதான்.
ஆதிகாலத்தில் பெண்களுக்கும் ஆண்களைப்போன்று தாடியும், மீசையும் இருந்தன. அக்காலத்தில் புலியே காட்டு விலங்குகளின் அரசன். இந்தப்புலி அரசனுக்கு ஒரு மகன் இருந்தானாம். மகனுக்கு மணம் முடிக்க பெண் தேடினான் அரசன். காட்டு விலங்குகளிடம் ‘ அழகிய பெண் ஒருத்தி கிடைத்தால் என் மகனுக்கு அவளையே மணமுடிப்பேன். அவளே அரசனின் பிரியமான மருமகள்; காட்டின் இளவரசியும் அவள்தான்’ என்றது புலியரசன்.
பெண் ஆடு ஒன்று இந்த அறிவிப்பை கேட்டதும் தன் எஜமானியிடம் சென்றது. “அம்மா, உன் அழகிய மீசை, தாடியை எனக்கு கடனாகக் கொடு. நான் புலியரசனின் மனதை வென்று அவன் மருமகளான பின் இரண்டு அல்லது நான்கு நாட்களில் மீண்டும் வந்து உன் மீசை, தாடியை உன்னிடமே ஒப்படைக்கிறேன்.” என்றது ஆடு. எஜமானியும் தனது தாடி மீசையை வெட்டி எடுத்து ஆட்டிற்கு ஒட்டவைத்து அழகாக்கினாள். ஆட்டை வழியனுப்பியும் வைத்தாள். இப்போது எஜமானி அம்மா மீசை, தாடி இல்லாமல் அசிங்கமாக இருந்தாள். சென்ற ஆடும் புலியரசனின் மகளைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்தது. ஆடு மீண்டும் திரும்பவேயில்லை. வெட்டப்பட்ட தாடி, மீசையும் மீண்டும் முளைக்கவேயில்லை. அது முதல் பெண்களுக்கு தாடி, மீசை முளைப்பதே இல்லையாம். பின்னாளில் அதுவே அழகாகிவிட்டது போலும்.
இந்தக் கதையைப் படித்தபின்பு வீட்டுக்காரி மீசையை முறுக்கிக்கொண்டு என்முன்னால் காபியை கொண்டுவந்து நிற்பதுபோன்று நினைத்துப்பார்த்தேன். பயங்கர காய்ச்சல் வந்துவிட்டது.