நடந்துசெல்லும் பாதையில் கையில் கிடைக்கும் மரத்தின் இலைகளை பறிக்கும்போது அதற்கு வலிக்கும் என்று உணர்ந்திருக்கிறீர்களா!
காலில் எறும்புகள் மிதிபடும் என்பதை நாம் ஒருபோதும் யோசிப்பதில்லை.. அதற்கு நேரமும் இல்லை. இயல்பாய் இருப்பவனுக்கே இந்த நிலமை என்றால்.... காதலித்துப்பார் உலகத்தில் நீங்கள் மட்டுமே இருப்பதாய் உணர்வாய். உலகம் மறக்கும். சுற்றம் மறக்கும்.
காதலி
சரியென்று சொன்னால்
புல்லின் நிழலில் கூட
ஓய்வெடுக்கலாம்
எறும்புகளுடன்
ஓட்டப்பந்தயத்தில்
கலந்துகொள்ளலாம்..!
எதிர்வரும் மனிதர்கள் எந்த நிறத்தில் நம்முடன் பழகுகிறார்கள் என்பதை நம்மால் எளிதில் உணரமுடியாது. மனசுக்கு நிறமுண்டு. ஆனால் அந்த நிறம் அவனுக்கு மட்டுமே தெரியும்.
மனசின் நிறத்தை
கண்ஜாடையில்
உணர்ந்துகொள்வான்
காதலன்..!
உலகம் எளியோர்களை எப்போதும் மதித்ததில்லை. தினமும் கோடானகோடி உயிர்கள் இறக்கின்றன. அத்தனையும் நமக்கு செய்திதான். நம்முடைய உறவினர் ஒருத்தர் யாரேனும் இறந்துவிட்டால் துக்கம் தாளாமல் அழுகிறோம்.
காதலி
மனசும் இறக்கிறது
நிராகரிக்கப்பட்ட
காதலால்..!
கோபங்கள் மனசை காயப்படுத்தும். கோபத்தில் வரும் வார்த்தைகளுக்கு முகம் கிடையாது. அது யாரையும் பார்க்காது. அதன் கடிவாளம் நம்மிடம் உள்ளவரை கோபம் நம்வசப்படும். காதலிலும் வரும் கோவம் வார்த்தைகளை வரவிடாது. அது மெளனக்கோபம்...
பறவைகள்
கிளைகளை நம்புவதில்லையாம்
நானும் உன்னை நம்பவில்லை
உன் மனதை மட்டுமே..!
காதலில் காதலியை மட்டுமே அங்குலம் அங்குலமாய் தெரியும். காதலில் தோற்றுப்பார் உலகமும், வாழ்வும் புரியும். வலி என்பதன் அர்த்தமும் புரியும். மெளனத்தில் உள்ள அர்த்தம் புரியும்.
வார்த்தையை கொல்வதும்
மெளனம்
உன்னை கொல்வதும்
மெளனம்தான்
மெளனம் அழகானது
பிரிதொருமுறை
பேசுவாய் எனும்வரையில்
மெளனம் சித்திரவதையானது
பேசவேமாட்டாய் எனும்போது
நானும் மெளனிக்கிறேன்.. !