சனி, செப்டம்பர் 1

குரங்குகள் மனிதரைப்போல் இருப்பது ஏன்

குரங்குகள் மனிதரைப்போல் சில சேஷ்டைகளை செய்யும். அதைத்தான் நாம் குரங்குச் சேட்டை எனச்சொல்லுவோம். சில குரங்குகள் மனிதருடன் சினேகமாகவும் பழகும். ஆனால் பெரும்பாலான குரங்குகள் பிடுங்கித்தின்னும் குரங்குகள்தான். கோபம் வந்தால் கடித்துவிட்டும் செல்லும். இது மனிதர்களுக்கும் பொருந்தும்.குரங்குகள் ஏன் மனிதரைப்போல் இருக்கின்றன என ஆராய்ச்சியில் இறங்கியபோது கிடைத்த அரிய தகவல் இது. குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற கான்செப்டை உடைத்து மனிதரில் ஒரு பிரிவினர் குரங்குகளாக மாறினர் என்று கூறும் வித்தியாசமான கதை இது. படித்துப்பாருங்கள்...
VERVET MONKEY
இது ஷோனா இன மக்களின் கட்டுக்கதை என்ற உண்மையைக்கூறி கதையை ஆரம்பிக்கிறேன். (நன்றி: சிங்கம் பறந்த போது. நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா)
பல வருடங்களுக்குமுன் ஒருநாள் மழையில்லாமல் பஞ்சம் தலைவிரித்தாடியது. பயிர், பச்சையே இல்லாமல் மக்கள் உணவின்றி வாடினர்.
ஊர் பெரியவர்கள் ஒன்றுகூடி எஞ்சிய தானியத்தை பத்திரமான ஓர் இடத்தில் வைத்து திருடர்களும், மிருகங்களும் தொடாதபடி பாதுகாக்க முடிவெடுத்தனர். பொறுப்பான நம்பிக்கைக்குரிய போர் வீரர்களைத் தேர்ந்தெடுத்து, தானியத்தை பாதுகாக்க நியமித்தனர்.
நாட்கள் சென்றன. பஞ்சம் தீர்ந்தபாடில்லை.சிறிதளவு தானியமே மிஞ்சின. எல்லோருக்கும் முறைவைத்துக் கொடுக்க தானியம் யார் பசிக்கும் போதவில்லை. பசியைத் தாங்க முடியாமல், காவல் காத்த வீரர்களில் ஒருபிரிவினர் தானியத்தை எடுத்து உண்ண ஆரம்பித்தனர். இந்த வீரர்களுக்கு அடுத்துக் காவல் காக்க வந்த அடுத்த பிரிவினர் இவர்கள் சாப்பிடுவதைப் பார்த்து கோபமுற்றனர். இவர்களை இழுத்துப்போய் ஊர் பெரியவர்கள் முன் நிறுத்தினர்.
ஊர் பெரியவர் “ நீங்கள் அனைவரும் திடகாத்திரமாக இருக்கிறீர்கள். நாங்கள் நம்பி ஒப்படைத்த தானியத்தை திருடித் தின்று உங்கள் உடலை வளர்த்துக்கொண்டீர்கள். ஆனாலும் இந்த வெட்கக்கேடான செயல்களுக்கு உங்களை கொல்லப்போவதில்லை. ஆனால் உங்கள் வாழ்நாளில் மறக்காதபடி உங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கப்போகிறோம். நீங்கள் மனிதர்களைப்போலவே தோற்றமளிக்கும் விலங்குகளாக மாறப்போகிறீர்கள். மனிதர்கள் உங்களை சேர்த்துக்கொள்ளமாட்டார்கள். ஏனெனில் உங்களுக்கு திருட்டுப்புத்தி இருக்கும்! குளிர்காலத்தில் இருக்க வீடுகளின்றி நடுநடுங்கி மரங்களில் வாழ்வீர்கள்” என்றார். கிராமத்தின் நகங்கா மருத்துவர் தன் மருந்தால் இந்தத் திருடர்களைக் குரங்குகளாக மாற்றினார். தங்கள் மாற்றத்தைக் கண்டதும் வெட்கமுற்றுப் புதர்களில் தங்களை மறைத்துக்கொள்ள ஓடினர்.
இப்போதும் வெர்வெட் குரங்குகளை ஊன்றிக்கவனித்தால் மனிதர்களின் சாயலைக்காணலாம். தாய்க்குரங்குகள் தம் குட்டிகளைப் பேணும் விதமும், குறும்பு செய்யும் குட்டிகளைக் கண்டிக்கும் விதமும் மனிதர்களை நினைவூட்டும்.