சனி, ஜனவரி 31

நான் யார்?

2175ம் ஆண்டு  ஒருநாள்  மாலை 5.00 மணி :
மூளை மாற்று அறுவை சிகிச்சையில் பெரிய கில்லாடிதான் விஷ்ணு. இவர் ஒருவர்தான் இந்தியாவிலேயே மிகச்சிறப்பாக இந்த அறுவை சிகிச்சையை செய்யக்கூடியவர். அவரைத்தேடி உடம்பெல்லாம் மூடிக்கொண்டு ஒருவர் வந்தார்.
வணக்கம் சார்(நல்லவேளை... தமிழ் இன்னும் வாழ்கிறது) என்னை ஞாபகம் இருக்கிறதா?
நன்றாக ஞாபகம் இருக்கிறது சதிஷ். உங்களை மறக்க முடியுமா. ஆறு மாதத்திற்கு முன்னாடிதானே உங்களது மூளையில் அறுவை சிகிச்சை செய்தேன். எப்படி இருக்கிறீர்கள்?
ம்.. நலம்தான். ஆனால் என் மூளைதான் நான் சொல்வதை கேட்க மாட்டேங்குது.
விஷ்ணு சிரித்தார். நீங்கள் சொல்வதை மூளை கேட்கவில்லையா!!
ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கவேண்டும் என தீர்மானிப்பதே மூளைதான். அதன் சொல்படிதான் நீங்கள் நடந்து கொண்டிருக்கிறீர்கள்.
அப்போ நான் யார் டாக்டர்!
புரியவில்லையே என்றார் விஷ்ணு.
மூளை சொல்படிதான் நான் கேட்கவேண்டும் என்றால் நான் யார். நான்தான் மூளையா!  பிறகு ஏன் நான் சொல்வதை மூளை கேட்கவில்லை.
விஷ்ணு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தார். நீங்கள் ஏதோ சொல்ல வருகிறீர்கள். எனக்கு புரியவில்லை என்றார்.
எனக்குள்ள பிரச்சனையை தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். ஆறு மாதத்திற்கு முன் என்னால் கடந்த ஒரு வருடமாக சரியாக எழுதவோ, வாசிக்கவோ முடியவில்லை. மேலும் எனக்கு பிடித்த பாடகர்களின் பாடலை கேட்கும்போது மூளை தன் கவனத்தை மாற்றிவிடுகிறது. எனக்கு பிடித்த சாப்பாட்டை சாப்பிட முடியவில்லை என்ற பிரச்சனைகளுடன் நான் இங்கு வந்தேன்.
ஆமாம் .. நன்றாக ஞாபகம் உள்ளது . உங்களது மூளையில் உள்ள நியூரோடிரான்ஸ்மீட்டரில் பிரச்சனை. மேலும் விசுவல் சிஸ்டம், சினாப்ஸ் சரியாக இயங்கவில்லை என பல பிரச்சனை இருந்தது. அதைத்தான் நான் சரிபண்ணி விட்டேனே என்றார் விஷ்ணு.
சரிதான் டாக்டர். நீங்கள் ஆப்பிரேசன் பண்ணிய நாளிலிருந்து நான்கு மாதங்கள் எந்த பிரச்சனையும் எனக்கு வரவில்லை. நீங்கள் கொடுத்த மருந்தையும் தவறாமல் சாப்பிட்டு வந்தேன். ஆனால் இந்த இரண்டு மாதங்களாக என் மூளை எனது கட்டுப்பாட்டில் இல்லை.
டாக்டர் சிரித்தார். தவறாகச் சொல்கிறீர்கள். மூளையின் கட்டுப்பாட்டில் நீங்கள் இல்லை என்று சொல்லுங்கள்.
ஏதோ ஒன்று டாக்டர். எனக்கு பிடித்ததை என்னால் செய்யமுடியவில்லை. செய்யவிடாமல் மூளைத் தடுக்கிறது.
எனக்கு புரிகிறது. மீண்டும் மூளையில் உள்ள நியூரான்களில் ஏதோ பிரச்சனையாகி இருக்கும். கவலைப்படாதீர்கள். சரிப்படுத்திவிடலாம்.
அப்படியே சாய்ந்து அமருங்கள். இப்போதே ஆப்பிரேசன் செய்து அரை மணி நேரத்தில் சரிசெய்கிறேன். சதீஷுக்கு ஏதோ மயக்க மருந்தை செலுத்திவிட்டு ஸ்டீரியோடேக்டிக் சர்ஜரி போன்ற ஏதோ செய்ய ஆரம்பித்தார். மூளையின் நியூரான்களை ஆராய்ந்தார். நிறைய ஒயர் கனெக்‌ஷன் பண்ணியிருந்தார். நியூரான்களின் நினைவுகளை கம்ப்யூட்டர் மொழியில் மொழிபெயர்த்தார். முடிவுகளைப் பார்த்தபின் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தார்.
மூளையின் நினைவுகளில் எனக்கு இந்த உடல் பிடிக்கவில்லை. அதனால் என்னால் சிறப்பாக செயல்படமுடியாது என்று இருந்தது. அவரின் மூளை பற்றிய ஆராய்ச்சிக்கு ஒரு அருமையான மூளை கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை அவர்விட தயாரில்லை. மூளைக்கு சில சமிஞ்கைகளை கொடுத்துப்பார்த்து அதன் முடிவுகளை பெற்றார்.
எனக்கு இந்த சதீஷின் உடல் பிடிக்கவில்லை. என்னை வேறொரு நல்ல உடம்பில் அதுவும் அழகான உடம்பில் பொருத்தினால்தான் நான் இன்னும் சிறப்பாக செய்ல்படுவேன். அதுவரை காலவரையற்ற ஸ்டிரைக் என்றது மூளை. விஷ்ணு ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்தார். உடனே அவர் மூளை வேகமாக வேலை செய்தது.
சதீஷின் மூளையை எடுத்து பத்திரப்படுத்தினார். அவனது உடல் தூக்கி எறியப்பட்டது. வேறொரு நல்ல அழகான உடல் கிடைக்குவரை காத்திருக்கவேண்டும் என்று விஷ்ணு முடிவு செய்தார்.
இப்போது மூளை யோசித்தது. இதுவரை நான் சதீஷ். வேறொரு உடலில் என்னை பொருத்தினால் இனி நான் யார்?

வெள்ளி, ஜனவரி 23

பெண்பாவம்


படித்த பட்டங்கள்
பரணில்
தூங்குகின்றன

வேலைகளில்
பெரிதாய் மாற்றமில்லை
காலையில் காபி போடுவதில்
ஆரம்பித்து
இரவில் கால் அமுக்குவதில்
முடிகிறது

பாரதிகண்ட புதுமைப்பெண்
நிமிர்ந்த நடை
நேர்கொண்ட பார்வை
நான் நடந்தால் மட்டும்
திமிர்பிடித்தவள்

ஆனாலும்
நவீன ராமன்கள்
நல்லவர்கள்தாம்
வாங்கிய தட்சணைக்கு
விறகைத் தேடுவதில்லை
சிலிண்டர்தான்..!


ஞாயிறு, ஜனவரி 18

பழகிய நாட்கள்

                          இரவு புரண்டு படுத்துப்பார்த்தேன். தூக்கம் வரவில்லை. நான் அடுத்து அப்பா, அம்மா அதன்பின் தங்கை என்று வரிசையாக படுத்துத்தான் தூங்குவோம். தனியாக படுக்கையறை என்று எதுவும் கிடையாது. தரையில் வரிசையாக போர்வை விரித்து நான்கு தலையணைகளையும் வரிசையாக போட்டு எல்லோரும் ஒன்றாகத்தூங்குவோம். எனது கல்லூரி நாட்களிலும் தனியாகத் தூங்கவேண்டும் என்ற எண்ணம் வந்ததில்லை. அவர்களைவிட்டு என்னால் தூங்கவும் இயலாது. கண்களில் நீர் வடிந்தது. துடைக்க மனமின்றி படுத்திருந்தேன். 
                        என்னைப்போல்தான் எல்லோரது மனநிலையும் இருக்கும் என்று எனக்குத்தெரியும். ஆனால் எல்லோருமே தூங்குவது போலவே படுத்திருந்தோம். சிறிது நேரத்தில் யாரோ ஒருவரின் விசும்பல் சத்தம் கேட்டது. நிச்சயம் அம்மாவாகத்தான் இருக்கும். அப்பா எந்தவிதமான துன்பத்தையும் அடக்குபவர். ஆனால் அவரது கண்ணிலும் கண்ணீர் கசிந்துகொண்டிருப்பதை நிச்சயம் என்னால் உணரமுடிந்தது.
                    அன்று காலையில்தான் தங்கையை பெண்பார்க்க மானாமதுரையில் இருந்து வந்திருந்தார்கள். மாப்பிள்ளை பையனுக்கு மின்சார வாரியத்தில் வேலையாம், கொஞ்சம் குண்டாக இருந்தார். தங்கைக்கு முழுதாக மாப்பிள்ளையை பிடிக்கவில்லை. இதோடு ஆறாவதாக பெண்பார்க்கும் படலம் நடந்துவிட்டது. ஏதோ சில காரணங்களால் ஒவ்வொரு இடமும் நின்றுவிட்டது.அதனாலோ என்னவோ மாப்பிள்ளை எனக்குப்பிடித்து விட்டது என தங்கை கூறினாள். 
              ஒவ்வொருவராக தங்கையிடம் வற்புறுத்தி கேட்டாகிவிட்டது. குண்டாக இருந்தாலும் பரவாயில்லை. மாப்பிள்ளை எனக்கு பிடிக்கிறது என அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டாள். எங்களுக்குத்தெரியும். அப்பா அம்மாவை இதற்குமேல் கஷ்டப்படுத்தக்கூடாது என்பதற்காகவே அவள் மாப்பிள்ளையை பிடிப்பதாகக்கூறினாள். வயதான காலத்தில் எத்தனை மாப்பிள்ளைதான் அவர்கள் பார்த்து நமக்காக அலைவார்கள் என்று அவள் எண்ணியிருக்கவேண்டும். ஆனால் மற்ற யாருக்கும் மாப்பிள்ளை பையனை அவ்வளவாக பிடிக்கவில்லை. அதுவும் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.                             எங்கள் வீட்டில் யாரும் அவ்வளவு குண்டு கிடையாது என்பது முதல் காரணம். அடுத்த காரணம் எல்லோருக்கும் உள்ளதுபோல் மாப்பிள்ளையின் ஊர் தூரமாக உள்ளது. நிச்சயம் எங்கள் ஊரிலிருந்து மானாமதுரைக்கு எட்டுமணி நேரம் ஆகும்.
                      தங்கையுடன் சண்டை போடாத நாட்களில்லை. இரத்தம் வருமளவு நான் அடித்திருக்கிறேன். ஆனால் என்மீது அவளுக்கு அளவுகடந்த பாசம். அப்பா தின்பண்டம் எது வாங்கிவந்தாலும் எனக்காக பத்திரப்படுத்தி வைப்பாள். என்னுடன் மணிக்கணக்காக பேசுவாள். நான் நண்பர்களுடன் சுற்றும்போது அப்பா என்னைத்திட்டுவார். தங்கை அப்பாவிடம் எனக்காக சண்டை போடுவாள். எல்லோருமே இரவு உணவை சேர்ந்துதான் சாப்பிடுவோம். எவ்வளவு பசித்தாலும் இதுவரை யாரும் தனியாக சாப்பிட்டது கிடையாது. சாப்பிடும்போது சந்தோசமாக பேசிக்கொண்டும் எங்கள் அம்மாவை நக்கலடித்து சிரித்தும் சாப்பிடுவோம். பொறியல், கூட்டு எது இருந்தாலும் அவளுக்கு அதிகமாகவே வைப்போம். அவளுக்குப்பிடித்த உணவாக அம்மா பார்த்து பார்த்து வைப்பார்கள். எல்லோருக்குமே அப்பா மீது அளவுகடந்த மரியாதை. அம்மாவைப்பற்றி சொல்லவே வேண்டாம். எங்கள்மீது உயிரையே வைத்திருப்பார்கள். எங்கள் அப்பாவிற்கு என் தங்கைமீது அவ்வளவு பாசம். எங்கள் வீட்டின் செல்லப்பிள்ளை எனது தங்கை. எந்தப்பண்டிகை ஆனாலும் அவளுக்கு புத்தாடை கண்டிப்பாக வாங்கிவிடுவார்கள்.
                        மானாமதுரைக்கு அவள் வாக்கப்பட்டு போய்விட்டால் அவளது படுக்கை இடம் வெறிச்சோடி இருக்கும். இரவு உணவு உண்ணும்போது அவளது தட்டு காலியாக இருக்கும். அதை நினைக்கும்போது மனது என்னனவோ செய்தது. அவள் எங்கள் மூன்று பேரையும் நினைத்து நிச்சயம் அழுவாள். இப்படியாக எண்ண ஓட்டம் சுழன்றடித்தது. ஏனோ அவளது பிரிவை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மணி நிச்சயம் இரண்டு ஆகியிருக்கும் என்று தோன்றியது.
                    நாளை மானாமதுரை மாப்பிள்ளைக்கு போனில் பதில் சொல்வதாகச் சொல்லியிருந்தோம். நிச்சயமாக மாப்பிள்ளை வேண்டாம் எனச்சொல்லிவிடவேண்டும் என்று முடிவேடுத்து தூங்க ஆரம்பித்தேன். எல்லோரது முடிவும் அதுவாகத்தான் இருக்கும்போல. எல்லோருமே தூங்க ஆரம்பித்திருந்தனர்.

வியாழன், ஜனவரி 15

மரித்தபின்

நல்லவேளை
நானும் உன்னை
பார்த்ததில்லை
நீயும் என்னை
பார்த்ததில்லை
கம்பியில்லா
தந்தியில் மனம்
அனுப்பும் செய்திகளை
என்னைப்போலவே
நீயும் லாவகமாக
படிக்கிறாய்
ஒவ்வொரு நாளும்
நான் எண்ணும்
நட்சத்திரங்களைத்தான்
நீயும் எண்ணிக்கொண்டிருப்பாய்
அதே தப்பும் தவறுமாக
அடுத்தமுறை
நட்சத்திரத்தை
சரியாக எண்ணிப்பார்
மரித்தபின்னும்
உன்னை மறக்காத
இப்படிக்கு
நான்..!


சனி, ஜனவரி 10

PG TRB 2015 ANSWER KEY

10.01.2015 அன்று நடந்த PG TRB 2015 ANSWER KEY (முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வில்) கேட்கப்பட்ட பொதுவான கல்வியியல் ’ பொதுஅறிவு மற்றும் பல்வேறு பாடங்களுக்கான உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ளது. கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து பார்க்கவும்.

தமிழ் உத்தேச பதில்கள்
பொது அறிவு மற்றும் கல்வியியல்
TAMIL ANSWER KEY
ENGLISH ANSWER KEY
ENGLISH ANSWER KEY
PHYSICS ANSWER KEY
HISTORY ANSWER KEY
BOTANY ANSWER KEY
COMMERCE ANSWER KEY
MATHS ANSWER KEY
ZOOLOGY ANSWER KEY
CHEMISTRY TENTATIVE ANSWER KEY
 Official Tentative Answer Key

சனி, ஜனவரி 3

வா...வா...


எனக்கும் வயசாகின்றது
அவளுக்கும் வயசாகியிருக்கும்
தலைமயிரும் நரைத்துவிட்டது
ஒவ்வொரு முடிக்கும் தெரியும்
உன்னை நான் நினைக்கும்
நினைவுகளை
இப்போதெல்லாம்
அரைத்தூக்கத்தில்
அடிக்கடி விழிப்பு
கால்கை வலி
மூட்டுவலி
தலைவலி
எல்லாமுமாய் சேர்ந்துவந்த
போதிலும் பொறுத்துக்கொள்கிறேன்
உன்னால் வந்த
இதயவலியைத் தவிர
இரத்தக்கொதிப்பு
கூடிவிட்டதாம்
மருத்துவர் சொல்கிறார்
அவருக்கு தெரியுமா
கொதிப்பு வந்தது
எதனால் என்று
என்னை வாவா
என்று அழைப்பதே
இப்போதெல்லாம்
இந்த மண்மட்டும்தான்..!