எப்படியும் ஒரு நல்ல கதை எழுத வேண்டுமென்று ரொம்பநாளாக ஆசை. இன்றைக்குத்தான் அந்த எண்ணம் வந்தது. சிலுசிலுனு காத்து. இலேசாகத் தூறல். மயங்கும் மாலை நேரம். இப்படியான ஒரு அருமையான சூழ்நிலை அமைவது ரொம்ப கஷ்டம். இதை பயன்படுத்தாமல் விடக்கூடாது. இன்று மனைவி என்ன திட்டினாலும் சரி. கதையை எழுதி முடித்துவிடவேண்டும். பேப்பரும் பேனாவுமாக நாற்காலியில் அமர்ந்துகொண்டு கதையை யோசிக்க ஆரம்பித்தேன்.
ஒரு கார் வாசற்படியை முத்தமிட்டு வந்து நின்றது...ம்ம்ம்கூம்.. ஒரு பயங்கரமான காடு...ம்ம்ம்.. எப்படி கதையை ஆரம்பிப்பது எனப் பலமாக யோசித்துக்கொண்டிருந்தேன். ஒரு ஊரில் ஒரு கணவனும் மனைவியும் என்று குடும்பக்கதை எழுதலாமா!! அல்லது ஒரு பயங்கரமான காட்டுப்பங்களா என்று பேய்க்கதை எழுத ஆரம்பிக்கலாமா! ம்ம்.. என்ன செய்யலாம்!!
அங்க என்ன பண்ணுறீங்க? என்று மனைவியின் அதட்டல் சத்தம் கேட்டது. ஆஹா ஐடியா கிடைச்சிருச்சு. ஒரு பயங்கரமான மனைவி என்று கதையை த்ரிலிங்காக ஆரம்பிக்கலாம். உடனே எழுத ஆரம்பித்தேன்.
சீக்கிரம் வாங்க. அழுக்குத்துணி அதிகமா இருக்கு. வந்துகூடமாட உதவி பண்ணுங்க என்று கெஞ்சலும் அதட்டலுமாக இடையிடையே மனைவியின் சத்தம் கொல்லைப்புறத்தில் இருந்து கேட்டுக்கொண்டிருந்தது. அதை நான் அலட்டிக்கொள்ளவே இல்லை.
எனக்கு எப்படி இம்புட்டு தைரியம் வந்தது. என்னை நானே பாராட்டிக்கொண்டேன். இன்றைக்கு அவள் என்ன வேலை சொன்னாலும் சரி. செய்யக்கூடாது. நமக்கு கதைதான் முக்கியம். எம்புட்டு நேரம் ஆனாலும் சரி. கதையை முடித்துவிடவேண்டும்.
நேரம் ஓடிக்கொண்டிருந்தது. கதையை அழகாக எழுதிக்கொள்வதாக நினைத்து கிட்டத்தட்ட மூன்று பக்கம் எழுதிவிட்டேன். கதையை முடிக்கும் நேரம் நெருங்கியது. இந்தக் கதையை எப்படி முடிக்கலாம் என யோசனையைத் தூண்டிவிட்டேன். ஏங்க துணியை துவைத்துவிட்டேன். வந்து அலசியாவது போடுங்க.
ஆங்! ஐடியா.. மனைவி வந்து கணவனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள். அவர்கள் முகத்தில் சந்தோசம் பொங்கியது என்று சந்தோசமாக கதையை முடிப்போமா அல்லது மனைவி கணவன் பிடித்திருந்த கையை விலக்கிவிட்டு தனியே நடக்க ஆரம்பித்தாள் என்று சோகமாக முடிப்போமா! என்ன செய்யலாம் என்று யோசனையில் மூழ்கினேன்.
என் மனைவி இரும்பு வாளியை தூக்கிக்கொண்டு தூக்கிச்சொருகிய சேலையுடன் தண்ணீர் வடிய வடிய கோபப்பார்வையுடன் கையைத் தூக்கிக்கொண்டு என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள். ஆஹா! மையம் கொண்டிருந்த புயல் துரத்த ஆரம்பித்துவிட்டது என்று எண்ணிக்கொண்டே பேனாவையும் பேப்பரையும் தூக்கி கடாசிவிட்டு எழுந்து ஓட ஆரம்பித்தேன். இரும்பு வாளி என்னை நோக்கி பறந்து வந்தது. ஐயோ! என் கதை முடியப்போகிறதே....