வெள்ளி, செப்டம்பர் 7

சாக்கடை மணம்

                அந்த ஊரில் இது கொஞ்சம் பெரிய பாலம்தான். இரண்டு பகுதிகளையும் இணைக்கும் முக்கியமான பகுதி அது. பாலத்தின் கீழ் ஒரு ஆறு ஓடியதற்கான அடையாளம் இன்னும் மாறவில்லை.  இப்போதெல்லாம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தொடர்ச்சியாக மழை பெய்தால் மட்டுமே அதில் நீர் ஓடும். மற்ற நாட்களில் எல்லா ஊரிலும் ஓடிக்கொண்டேயிருக்கும் அதே சாக்கடைதான் இங்கும் ஓடுகிறது.

                    எல்லா ஊர்களிலும் ஆறு தன் அடையாளத்தினை இழந்து வருகிறது. அது ஓடிய வழித்தடங்களை மனிதன் தனதாக்கிக்கொண்டான். ஆறு தன்னை சுருக்கிக்கொண்டது. தன் உடம்பில் ஓடிய சுத்தமான நீரை அது இழந்து பல காலமாகிவிட்டது. தன் உடம்பையும் வருத்திக்கொண்டு  பல குப்பைகளையும், நாற்றமெடுக்கும் நீரையும் மட்டுமே தன்னுள் அடக்கிக்கொண்டுள்ளது. அதிலிருந்து வரும் வாசனையை ஏற்க மனமில்லாமல் மனிதன் மூக்கைப்போத்திக்கொள்கிறான்.  அத்தனை கழிவுகளும் அவனிடமிருந்துதான் வந்தன என்பதை அறியாமலும் அதனை மனம் ஏற்காமலும் உள்ளான்.