சனி, மார்ச் 2

தொலைந்த வார்த்தைகள்

"இப்போதும் 
பேசிக்கொண்டுதானிருக்கிறோம்
மெளனங்களால்…"

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஏதோவொன்றை தேடிக்கொண்டுதானிருப்பார்கள். நான் வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

“புரிந்து கொள்ளப்படாத மொழி
மெளனம்”



வைகறைப்பொழுது, அந்திப்பொழுது, இரவுப்பொழுது, நடுச்சாமம் எந்நேரமும் வார்த்தைகள் என்மீது பிள்ளையார் எறும்பாய் ஊறிக்கொண்டுதான் இருக்கும். சிலநேரங்களில் காக்காய் கடிபோல் கடித்தும் என்மீது துப்பியும் விழுந்துகிடக்கும்.

”பலயுகங்களாய்
காற்றில் பறவைகள் எழுதிக்கொண்டுதான் இருக்கின்றன
தரையில் பல உயிரினங்கள் எழுதுகின்றன
நீரிலும் மீன்கள் எழுதிக்கொண்டுதான் இருக்கின்றன
எதுவும் புரியாமலே தாவரங்கள் தலையசைக்கின்றன”

எந்தப்புத்தகத்திலும் இல்லாத வார்த்தைகளை நான் தேடிக்கொண்டு இருக்கின்றேன். நிறையப்பேர் வார்த்தைகளை விற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். நான் அவற்றை எல்லாம் பொறுக்கிகொண்டு இருக்கிறேன்.

“ வார்த்தைகளுக்கும் கால் முளைக்கும்
பொய்பேசும்போது! “

வார்த்தைகளை கோர்த்துப் படிக்கும்போது அவை ரசிக்க வைக்கிறது. அது ரகசியக்காதலையும் எழுதிச்செல்கிறது.

“ நீ எழுதும் வார்த்தைகளில்
நிச்சயமாய் நானில்லாமல் இருக்கலாம்
ஆனால்..
உன் இதயத்தசைத் துளிகளில்
எங்கேனும் சிறிது ஒட்டிக்கொண்டுதானிருப்பேன் “

நமக்குத் தெரிந்த அத்தனை வார்த்தைகளையும் பேசித்தீர்த்துவிட்டோம். நான் உன்னிடம் கொஞ்சம் கடன் வாங்கிக்கூட பேசியிருக்கிறேன். வார்த்தைகளும் ஒருநாள் தீரும் என்பதை அறிந்துகொண்டேன். எனக்கான வார்த்தைகள் எங்கேனும் ஒழிந்து கொண்டிருக்கலாம். எனக்கான வார்த்தையை நீ எழுதியவற்றில் இருந்தே நான் அறிந்துகொண்டேன். அது மெளனம்…

”காதலித்துப்பார்
பேசிக்கொண்டே இருப்பாய்
காதலில் தோற்றுப்பார்
மெளனமாய் இருப்பாய்”