கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஆகஸ்ட் 17

செத்தாள் சப்பரம்

               சூரியன் கத்தரிக்கோலை எடுத்து வெட்ட ஆரம்பித்தால் அதிகபட்சம் அஞ்சு நிமிசம்தான்.. தலையிலுள்ள முடி காணாமல் போய் கிட்டத்தட்ட மொட்டைபோட்டு ஐந்து நாள் கழித்து தலையைப் பார்த்தால் எப்படி இருக்குமோ அவ்வளவுதான் முடி இருக்கும். இதற்காகவே அந்த ஊரிலுள்ள பெருசுகள் அவனிடம்தான் முடி வெட்டச் செல்வார்கள். அவர்களின் விவரம் அறியாத பேராண்டிகளையும் உடன் கூட்டிச் செல்வார்கள். விவரமறிந்த வாலிபர்கள் அவனிடம் முடி வெட்டச்செல்வதில்லை.

           சூரியன் வயிறு ஒட்டிப்போய் இருப்பான். அவனுக்கு எதற்கு அந்தப்பெயர் வந்தது என யாருக்கும் தெரியவில்லை. யாரும் அவனிடம் கேட்டதுமில்லை. அவனுக்கு முடி அடர்த்தியாய் நரைத்துப்போய் பரட்டைத்தலையுடன்தான் இருப்பான். ஒரு வேட்டி மட்டும் சுருட்டி சுருட்டி கட்டியிருப்பான். அந்த சுருட்டுக்குள்தான் முடிவெட்ட, மொட்டைபோட வேறெங்கும் போகும்போது தேவையான சாமான்களை வைத்திருப்பான்.
              
            சூரியனுக்கு தனியாகக் கடை எதுவுமில்லை. அந்த ஊரில் செத்தாளைத் தூக்கிச்செல்லும் சப்பரம் இருக்கும் இடம்தான் அவனது கடை. ஒரு மரப்பலகையில் அவன் இலாவகமாக குத்தவைத்து அமர்ந்து கொள்வான். இன்னொரு பலகையில் முடி வெட்ட வருபவர்களை அமரவைத்து வெட்டுவான். சின்ன பிள்ளைகளை அவன் மகனிடம் முடிவெட்ட வைப்பான். அவன் மகன் அப்போதுதான் முடி வெட்ட பழகி வந்தான். தன்னிடம் சிக்கும் சின்ன பையன்களின் இரத்தத்தை கண்டிப்பாக பார்க்காமல் அனுப்பமாட்டான்.

         அந்த இடத்தினை ஞாயிற்றுக்கிழமையில் பார்த்தால் கூட்டம் அதிகமாக இருக்கும். ஒருபக்கம் தினத்தந்தி பேப்பரை ஆளுக்கொரு பக்கமாக எடுத்து வாசித்துக்கொண்டிருப்பார்கள். மறுபக்கம் வெட்டப்பட்ட முடி குவித்து வைக்கப்பட்டிருக்கும். அதில் சேவிங்கிரீம் அப்பிய காலண்டர் தாள்கள் கலந்து கிடக்கும். உள்ளே உயரமான சப்பரம் நிக்கும். அது இறந்தவர்களை சுமந்து செல்வதால் செத்தாள் சப்பரம் என்று பெயர். அந்த ஊரில் யாரிடம் கேட்டாலும் செத்த ஆளைத் தூக்கிச்செல்லும் சப்பரம் அதனால்தான் செத்தாள் சப்பரம் எனப் பெயர்க்காரணம் கூறுவார்கள்.

         செத்தாள் சப்பரத்தில் துரு ஏறியிருந்தது. அதன் நீலவண்ணம் மங்கிப்போய் இருந்தது. தூசு கொஞ்சம் படிந்திருந்தது. அந்த சப்பரத்தில் பிணத்தினை அமரவைக்கும் இருக்கை கழட்டி மாட்டும் வகையில் இருந்தது. அதன் கைப்பிடி தன் பளபளப்பினை இழந்திருந்தது.

           ஊரில் யாராவது இறந்துவிட்டால் சூரியன்தான் சப்பரத்தினை தள்ளிச்செல்வான். அதில் பூ அலங்காரம் எல்லாம் செய்யப்பட்டு ரெடியாகும். இறந்தவர்கள் அந்த சப்பரத்தில் இருக்கும்போது கொஞ்சம் இராஜ தோரணைதான். என்ன...! கையை காட்டி வணக்கம் எல்லாம் போட முடியாது. இறுக்க வேட்டியை சுருட்டி கட்டப்பட்டிருக்கும். சூரியன் சப்பரத்தினை தள்ளிக்கோண்டு மயானம் கொண்டு சேர்ப்பான். அதைத்தள்ளும்போதே கெத்தாக உணர்வான்.  உடன் சிறுவர்களும் தள்ளிச் செல்வார்கள்.

        மயானத்தில் ஈமச்சடங்குகள் எல்லாம் அவன்தான் முன்னின்று முடிப்பான். அதில் அவனுக்கு பெருமையாகவே இருந்தது. ஊரில் யாராவது இறந்து விட்டால் சூரியன் ஒருவன் மட்டும் ரொம்ப சந்தோசமாகவே இருப்பான். சில நேரம் ஊரில் சாவே விழாது. அப்போதெல்லாம் முடிவெட்ட வருபவர்களிடம் எரிந்து விழுவான். மயானத்திலேயே சப்பரத்தில் கட்டிய பூவை எல்லாம் அறுத்து எரிந்துவிட்டு சுத்தம் செய்துவிட்டு காசுக்காக சண்டை போடுவான். சண்டை போடாமல் எந்த ஈமச்சடங்கையும் அவன் செய்ததில்லை. இறுதியில் அவன் கேட்ட காசு கிடைக்காவிட்டால் அசிங்க வார்த்தைகள் காதில் வந்து விழும். அவன் பேசும் வார்த்தைகளைச் செத்தவன் கேட்டால் மீண்டும் செத்துவிடுவான்.

          சூரியன் கடையில் இருக்கும்போது சப்பரத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவான். தான் அதில் எப்போது போவோமோ என நினைத்து சிரித்துக்கொள்வான். விதவிதமான பிணங்களை அந்த சப்பரம் சுமந்து சென்றுள்ளது. அந்த பிணங்கள் சப்பரத்தில் உட்காரும் தோரணையும் விதவிதமாகவே இருக்கும். கைகட்டு, கால்கட்டு, வாய்கட்டு எல்லாம் போட்டுத்தான் பிணம் அதில் அமர்ந்திருக்கும். சூரியன்தான் சப்பரத்தில் இருக்கும் இருக்கையில் பிணத்தினை அமரவைத்து இறுக்கி கட்டி ஆகவேண்டிய காரியங்களைப் பார்ப்பான். துக்க வீட்டில் அதிகமாக ஒலிக்கும் பெயர் சூரியனாகத்தானிருக்கும்.

                சூரியன்தான் அந்த ஊரின் ஆஸ்தான முடி வெட்டுபவனாக இருந்தான். ஆனால் இப்போது புதிதாக ஒருவன் கடை ஆரம்பித்து நடிகைகளின் அரைகுறை ஆடைகளுடன் உள்ள படங்களைத் தொங்கப்போட்டு வாலிபர்களை கவர்ந்திழுத்தான். விதவிதமாக முடியை வெட்டி அழகுபடுத்தினான். முடியில் கலரிங் செய்தான். இப்போதெல்லாம் அந்த ஊரில்  கலர் கலர் தலைகளோடு இளைஞர்கள் வலம் வந்தார்கள். சூரியனின் மவுசு குறைந்தது.

     காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறித்தான் போய்விட்டது. இறந்தவர்களைத் தூக்குவதற்கும் இப்போதெல்லாம் டவுனிலிருந்து சொர்க்க ரதத்தை கொண்டு வந்தார்கள். வாடகை மூவாயிரமோ , நாலாயிரமோ அவரவர் வசதிக்கேற்ப வண்டியை அமர்த்தினார்கள். அதில் ஒப்பாரி பாடலையும் ஒலிக்கவிட்டு சோகத்தை இன்னும் கூட்டினார்கள். செத்தாள் சப்பரத்தின் மவுசும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. அதனால் மயானத்தில் சூரியன் சண்டைபோட்டு காசு வசூல் பண்ண முடியவில்லை.

      சூரியனிடம் முடி வெட்ட வருபவர்கள் எண்ணிக்கை குறைந்ததில் அவனுக்கு வருத்தம்தான். சில பெருசுகள் மட்டும் நரைத்தலையுடன் முடிவெட்ட வருவார்கள். அவன் கருத்த முடியைப் பார்த்தே மாசக்கணக்கில் ஆனது. அதுவும் சொர்க்க ரதத்தில் இவன் ஆற்ற வேண்டிய கடமைகளும் அதிகமில்லை. எல்லாமே ரெடிமேடாக இருந்தது. இவனை யாரும் அவ்வளவாகத் தேடவில்லை. வண்டியின் முன்புறம் சங்கினை ஊதிச் செல்லுவான். மயானத்தில் இவனின் வேலையை அந்த ஊரில் உள்ள சில பெருசுகளே இவனைவிட அழகாகவே செய்ததால் இவனின் பெயரைக்கூறி யாரும் அழைக்கவில்லை.

         செத்தாள் சப்பரத்தினை ரொம்ப நாளாக வெளியே எடுக்காததால் பெயிண்ட் எல்லாம் உதிர்ந்து விட்டிருந்தது. துரு அதிகமாக ஏறியிருந்தது. சக்கரங்கள் இத்துப்போய்விட்டன. ஊரில் யாரும் பெரிதாக அதைக் கண்டுகொள்ளவில்லை. சூரியனுக்கும் வயதாகிக்கொண்டிருந்தது. அவனின் நடையும் தளர்ந்துவிட்டது. கூடவே அவனை யாரும் அவ்வளவாக கண்டுகொள்ளாததால் கவலைவேறு சேர்ந்துவிட்டிருந்தது. சூரியனும் பலமுறை ஊர் பெரியவர்களிடம் செத்தாள் சப்பரத்தின் நிலையை எடுத்துக்கூறி கொஞ்சம் புதுப்பித்துத் தரும்படி கூறினான்.

             “இப்போ எல்லாம் யாருப்பா இந்த வண்டியை எடுக்குறாங்க...                                 எல்லோரும் சொர்க்க ரதத்தினை வாடகைக்கு கொண்டு வாராங்க...
    அந்த வண்டிதான் பிணத்தினை கொண்டுபோக வசதியாவும் இருக்கு...
       நாம எதுக்கு இந்த வண்டிக்கு வெட்டியா செலவு செஞ்சுக்கிட்டு.. 
       பேசாம விடுப்பா.. அதுவாட்டுக்கு இருக்கட்டும்”... என்றனர்.

தன்னையும் செத்தாள் சப்பரத்தினையும் ஊர்க்காரர்கள் தனித்து விடப்பட்டதாய் அவன் நினைத்தான். செத்தாள் சப்பரம் கொஞ்சம் கொஞ்சமாய் செத்துக்கொண்டிருந்தது சூரியனைப்போலவே...

வெள்ளி, மார்ச் 24

கடவுள் இருக்கான் குமாரு

                    சாலையோரம் சோலை ஒன்று வாடும்.. சங்கீதம் பாடும்.. பாடல் வரிகளை பாடிக்கொண்டே சாலையில் ஒரு மாலை நேரம் நடந்து சென்றேன். மக்கள் வேகமாக காரிலும், பைக்கிலும் எங்கோ விரைந்து செல்கின்றனர். நான் மட்டுமே இந்த உலகத்தில் வேலை இல்லாதவன்போல உணர்ந்தேன். வேலை இல்லாததன் கொடுமை என்னவென்று எனக்கு மட்டுமே தெரியும் என நினைக்கிறேன். அப்பாவிடம் தினச்செலவுக்கு காசுவாங்கக்கூட கை கூசுகிறது. கல்யாணம் செய்து கொள் என்று வீட்டில் வற்புறுத்துகின்றனர். மனைவிக்கு மல்லிகைப்பூ வாங்குவதற்குகூட என் அப்பாவிடம்தான் காசு வாங்க வேண்டும். என்ன கொடுமை சரவணா!! என என்னை நானே நொந்துகொண்டு மறுபக்கம் அழகான பெண்களை மட்டுமல்ல அனைத்து பெண்களையும் ரசித்துகொண்டு மனதில் உற்சாக ஊற்று பீறிட நடப்பது எனக்கு மட்டுமே வாய்த்தது. இந்த நேரத்தில் எனக்கு அவசர தேவை ஐம்பதாயிரம் ரூபாய். ஏதாவது ஒரு சிறு தொழில் ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வெறி என்னுள் இருந்தது.
     
            அப்போது  சற்றும் எதிர்பாராமல் ஒரு காரும் பைக்கும் மோதிக்கொண்டது. பைக்கில் கணவன், மனைவி, ஒரு சிறு குழந்தை இருந்தனர். பைக் கீழே வழுக்கி ரோட்டில் சரசரவென்று ஓடியது. கார் டிரைவர் சட்டென்று காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான். கணவனுக்கு காலில் பயங்கர அடி. மனைவி ஒரு பக்கம் விழுந்து கிடந்தாள். நல்லவேளையாக குழந்தைக்கு எந்த அடியும் படவில்லை. அதிர்ச்சியில் குழந்தை சத்தம்போட்டு அழுதது. மனைவி கத்தினாள், கணவன் மயங்கி கிடந்தான். நாட்டில் நிறைய நல்லவர்கள் உள்ளனர், உடனே ஆம்புலன்சுக்கு போன் பண்ணி வரவழைத்து அனுப்பி வைத்தனர். மனைவி அழுதுகொண்டே குழந்தையை தூக்கிக்கொண்டு கணவனுடன் ஆம்புலன்சில் சென்றாள். 
      
                சத்தியமாக சொல்கிறேன்  நானும் அவர்களுக்கு ஆம்புலன்சில் ஏற்றிவிடும்வரை உதவி செய்தேன். பைக்கின் அருகில் சென்று பார்த்தேன். பளபளவென்று மின்னியபடி தங்கச்செயின் என்னைப்பார்த்து பல்லிளித்தது. அவள் அணிந்து வந்ததாகத்தான் இருக்கும். யாரும் என்னை கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு செயினை எடுத்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன். சற்று தூரம் சென்று செயினை எடுத்துப்பார்த்தேன். கண்டிப்பாக பத்து பவுன் தேறும். கடவுள் இருக்கான் குமாரு என்று மனசுக்குள் ஒளிந்திருக்கும் சாத்தான் சொல்லியது.
   
                       அதே உற்சாகத்துடன் சாலையில் நடந்து சென்றேன். உற்சாகம் குறைந்து மனசுக்குள் குழப்பம் ஓடியது. அடிபட்ட அவனின் மனைவியின் முகம் வந்தது. அவனுக்கு என்ன ஆச்சோ என்ற கவலையும் மனதில் தோன்றியது. மருத்துவச்செலவுக்கு என்ன செய்வாளோ என்றபடியே யோசனையுடன் சென்றேன். இப்போது மனசுக்குள் இருக்கும் கடவுள் செயினை உடனே சென்று அவளிடம் ஒப்படத்துவிடு என்றார்.  
         
                சாத்தான் மறுபடியும் சிரித்துக்கொண்டே அருமையான வாய்ப்பை நழுவவிடாதே என்றான். குழப்பம் அதிகமானது. இந்த குழப்பத்தில் என்னை அறியாமல் எதிரே வரும் பைக்கில் உரசிக்கொண்டேன். ஐம்பத்தைந்து வயதைத் தொட்ட அந்த மனிதர் ”சாரி தம்பி”,  தப்பு என்மேலதான், பதட்டத்தில் போறதால கவனிக்கல என்று மன்னிப்பு கேட்டார். பரவாயில்ல சார், எனக்கு ஒன்னும் ஆகல என்றேன். மறுபடியும் அவர் என் மருமகனும் மகளும் பைக்கில் செல்லும்போது ஆக்ஸிடன்ட் ஆயிருச்சு. என்னாச்சோ! ஏதாச்சோனு பதட்டத்துல ஹாஸ்பிட்டல் போறதால கவனிக்கலை, மன்னிச்சிருங்க தம்பி என்றார். எந்த ஹாஸ்பிட்டல் என்றேன். தெரியல தம்பி, இப்போதான் நண்பர் ஒருத்தர் சொன்னார். ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு போனாங்க என்றார். உடனே நான் எனக்கு தெரியும் சார். நானும் கூடவே வருகிறேன் என்று அவருடன் பைக்கில் சென்றேன்.
               
                         மருத்துவமனையில் அவரின் மகள் ஓ!வென்று அழுதாள். என்னவென்று மருத்துவரிடம் சென்று விசாரித்தேன். பயப்படும்படி ஒன்றுமில்லை. காலில் சின்ன பிராக்சர்,, சின்ன ஆப்பிரேசன் செய்தால் சரியாகிவிடும், வேறெதுவும் பிரச்சனை இல்லை என்றார். நேராக அந்த பெண்ணிடம் சென்றேன். பயப்படாதீங்க சிஸ்டர், ஒன்னும் ஆகாது...  நீங்க இந்த செயினை தவற விட்டுட்டீங்க, அதான் கொடுத்துவிட்டு போகலாம்னு வந்தேன் என்றேன். நன்றியுடன் அந்த பெண்மணி என்னை வணங்கினாள். கடவுள் இருக்கான் குமாரு என்று மனசுக்குள் இருக்கும் கடவுளே இப்போது சொன்னார்.  சந்தோசமாக வீடு வந்து சேர்ந்தேன்.

சனி, அக்டோபர் 24

பேய்க்கதை

                      ஒரு பேய்க்கதை எழுதலாம் என்று ஆசையாக மேஜையின்முன் அமர்ந்தேன். எப்படி ஆரம்பிப்பது எனத்தெரியவில்லை. பேய்க்கதைகள் நிறையப் படித்துள்ளேன். பேய்ப்படங்களும் பார்த்துள்ளேன். ஆனால் பேய் என்று எதையும் நேரிடையாகக் கண்டதில்லை. ஆனாலும் பேய் பற்றிய பயம் மனதில் எப்போதும் உண்டு. கொஞ்சம் பேப்பரும் ஒரு பேனாவையும் எடுத்து வைத்துக்கொண்டு தைரியமாக அமர்ந்தேன். அப்படியே எனக்குத்தெரிந்த ஒவ்வொரு பேய் சம்பவமாக ஞாபகப்படுத்திப் பார்த்தேன்.

                       நான் சிறுவனாக இருந்தபோது ஒரு இரவு வேளையில் துக்க செய்தி ஒன்று சொல்வதற்காக என்னையும் மற்றொரு பையனையும் பக்கத்தில் உள்ள துலுக்கன்குளம் ஊருக்கு அனுப்பிவிட்டார்கள். அப்போது தொலைபேசி வசதியெல்லாம் கிடையாது. அது ஐப்பசி மாதம் என்று நினைக்கிறேன். மழைவரும்போல இருந்தது. இரவு மணி ஒன்பது அல்லது ஒன்பதரை இருக்கலாம். காற்று கொஞ்சம் பலமாக வீசியது. எங்கள் ஊருக்கும் துலுக்கன்குளத்திற்கும் இடையில்தான் மயானம் உள்ளது. எனக்கு மனதில் பயமிருந்தாலும் கூடவே ஒரு பையனும் வருகிறான் என்ற தைரியத்தில் கிளம்பியாச்சு. மயானம் நெருங்கும்போது திரும்பிப்பார்க்ககூடாது என்று நினைத்தாலும் மயானம் பக்கம் திரும்பிப் பார்த்தேன். பிணம் ஒன்று எரிந்துகொண்டிருந்தது. மனதில் கிலி பிடித்தது. சைக்கிளை சற்று வேகமாக மிதித்தேன். கிழக்குப்பக்கம் இருந்து வீசிய காற்று சைக்கிளை நகரவிடவில்லை. மனதிற்குள் இனம்புரியாத பயம். பேய் வந்து சைக்கிளைப் பிடிக்குமோ! முடிந்தமட்டும் பெடலை மிதித்தேன். சைக்கிள் மெதுவாக நகர்கிறது. டேய்! முருகேசா.. என்று அவனை அழைத்தேன். அவன் ம்ம்.. என்ற சத்ததுடன் பயந்து என் சைக்கிளின்பின் அவன் ஒரு சைக்கிளில் வருகிறான். எப்படியோ பயத்துடனே துலுக்கன்குளம் சென்று செய்தியை சொல்லிவிட்டு ஊருக்குத்  திரும்பினோம். 

                        இப்போது மணி பதினொன்று இருக்கும். திரும்பவும் மயானத்தின் வழிதான் வரவேண்டும். இப்போது பயம் மனதில் அதிகரித்திருந்தது. வயிற்றுக்கும் தொண்டைக்கும் ஒரு உருண்டை உருண்டு கொண்டிருந்தது. அவனை முன்னே போகச்சொல்லி நான் பின்னாடியே வந்தேன். இப்போது மயானத்தில் தீ மளமளவென்று எரிந்து கொண்டிருந்தது. வெள்ளையாக புகை வேறு வந்துகொண்டிருந்தது. ஏதோ சினிமா பாடலை சத்தமாக பாடியபடி பயத்தைக் காட்டிகொள்ளாமல் ஊர்வந்து சேர்ந்தோம். 

                இதேபோல பள்ளிப்பருவத்தில் ஒருநாள் இரவு எங்கள் பாட்டி ஒரு பேய்க்கதை சொன்னாள். அது கதை என்று சொல்லவில்லை. நிஜ சம்பவம் என்று கூறினாள். எனக்கு ஆவாத்தா பாட்டி ஒருத்தி இருந்தாள். அவள் அதிகாலை நான்கு மணிக்கு குப்பை போடுவதற்காக ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடத்திற்கு சென்றாள். அப்போது கொள்ளிவாய் பேய் ஒன்று வந்து ஆவாத்தா பாட்டியின் காதில் கிடந்த நகையை பறித்துக்கொண்டது( திருட்டு கொள்ளிவாய் பேய்). அவள் பயந்து ஓடிவந்து தனது கணவனிடம் கூறினாள். 

                            அவர் என்னைப்போல் இல்லாமல் கொஞ்சம் தைரியசாலி. உடனே ஒரு போர்வையை போர்த்திக்கொண்டு அந்த இடத்திற்கு சென்றார். கொள்ளிவாய் பேய்கள் அந்த நகையை நடுவில் வைத்து சுற்றிநின்று ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தனவாம். இவரும் போர்வையைத்தூக்கி எறிந்துவிட்டு தனது வேஷ்டியை அவிழ்த்துப் போட்டுவிட்டு பேயோடு பேயாக கூட்டத்துடன் சேர்ந்து ஆடினாராம். நகையை ஒவ்வொரு பேயாகத் தூக்கிப்போட்டு விளையாடினவாம்.  இவரிடம் நகை வந்தவுடன் ஒரே ஓட்டமாக தூக்கிக்கொண்டு ஓடிவந்து விட்டாராம். 

                     இப்படியாக யோசனை செய்யும்போதுதான் வீட்டில் யாருமேயில்லை என்பது ஞாபகம் வந்தது. இப்போதும் ஐப்பசி மாதம்தான். காற்று ஊ... என்று ஊளையிட்டதுபோல வீசியது. லேசாக தூறல் விழுந்து கொண்டிருந்தது. மனதில் பயம் வந்துவிட்டது. உடம்பு பயத்தில் லேசாக புல்லரித்தது. அந்த நேரம் பார்த்து கரண்ட் கட்டாகிவிட்டது. பயத்துடன் சென்று பேட்டரியை எடுத்தேன். ஜன்னல் கதவு  மூடியுள்ளதா எனப் பார்த்துவிட்டு திரும்பவும் வந்து நாற்காலியில் அமர்ந்தேன். ஊது பத்தியின் மணம் காற்றில் கலந்து வந்தது. அது மல்லிகைப்பூவின் வாசம் தந்தது. பேயினைப்பற்றிய பயம் மனதில் வந்துவிட்டது. லேசான நடுக்கத்துடன் கரண்ட் எப்போது வருமோ என்று காத்திருந்தேன். பேய்க்கதை இன்னைக்கு எழுதவேண்டாம் என்ற முடிவுடன் அமர்ந்து இருந்தேன். சற்றுநேரத்தில் கரண்ட் வந்துவிட்டது. அப்பாடா!! என்று மேஜையில் இருந்த பேப்பரை பார்த்தேன். அதில் மேலேகண்ட பேய்க்கதை எழுதப்பட்டிருந்தது.

புதன், ஆகஸ்ட் 12

ஒரு கதை எழுதப்போறேன்

                     எப்படியும் ஒரு நல்ல  கதை எழுத வேண்டுமென்று ரொம்பநாளாக ஆசை. இன்றைக்குத்தான் அந்த எண்ணம் வந்தது. சிலுசிலுனு காத்து. இலேசாகத் தூறல். மயங்கும் மாலை நேரம். இப்படியான ஒரு அருமையான சூழ்நிலை அமைவது ரொம்ப கஷ்டம். இதை பயன்படுத்தாமல் விடக்கூடாது. இன்று மனைவி என்ன திட்டினாலும் சரி. கதையை எழுதி முடித்துவிடவேண்டும். பேப்பரும் பேனாவுமாக நாற்காலியில் அமர்ந்துகொண்டு கதையை யோசிக்க ஆரம்பித்தேன்.

                 ஒரு கார் வாசற்படியை முத்தமிட்டு வந்து நின்றது...ம்ம்ம்கூம்.. ஒரு பயங்கரமான காடு...ம்ம்ம்.. எப்படி கதையை ஆரம்பிப்பது எனப் பலமாக யோசித்துக்கொண்டிருந்தேன். ஒரு ஊரில் ஒரு கணவனும் மனைவியும் என்று குடும்பக்கதை எழுதலாமா!! அல்லது ஒரு பயங்கரமான காட்டுப்பங்களா என்று  பேய்க்கதை எழுத ஆரம்பிக்கலாமா! ம்ம்.. என்ன செய்யலாம்!!

               அங்க என்ன பண்ணுறீங்க? என்று மனைவியின் அதட்டல் சத்தம் கேட்டது. ஆஹா ஐடியா கிடைச்சிருச்சு. ஒரு பயங்கரமான மனைவி என்று கதையை த்ரிலிங்காக ஆரம்பிக்கலாம். உடனே எழுத ஆரம்பித்தேன்.

               சீக்கிரம் வாங்க. அழுக்குத்துணி அதிகமா இருக்கு. வந்துகூடமாட உதவி பண்ணுங்க என்று கெஞ்சலும் அதட்டலுமாக இடையிடையே மனைவியின்  சத்தம் கொல்லைப்புறத்தில் இருந்து கேட்டுக்கொண்டிருந்தது. அதை நான் அலட்டிக்கொள்ளவே இல்லை. 

               எனக்கு எப்படி இம்புட்டு தைரியம் வந்தது. என்னை நானே பாராட்டிக்கொண்டேன். இன்றைக்கு அவள் என்ன வேலை சொன்னாலும் சரி. செய்யக்கூடாது. நமக்கு கதைதான் முக்கியம். எம்புட்டு நேரம் ஆனாலும் சரி. கதையை முடித்துவிடவேண்டும்.

             நேரம் ஓடிக்கொண்டிருந்தது. கதையை அழகாக எழுதிக்கொள்வதாக நினைத்து கிட்டத்தட்ட மூன்று பக்கம் எழுதிவிட்டேன். கதையை முடிக்கும் நேரம் நெருங்கியது. இந்தக் கதையை எப்படி முடிக்கலாம் என யோசனையைத் தூண்டிவிட்டேன். ஏங்க துணியை துவைத்துவிட்டேன். வந்து அலசியாவது போடுங்க. 

               ஆங்! ஐடியா.. மனைவி வந்து கணவனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள். அவர்கள் முகத்தில் சந்தோசம் பொங்கியது என்று சந்தோசமாக கதையை முடிப்போமா அல்லது மனைவி கணவன் பிடித்திருந்த கையை விலக்கிவிட்டு தனியே நடக்க ஆரம்பித்தாள் என்று சோகமாக முடிப்போமா! என்ன செய்யலாம் என்று யோசனையில் மூழ்கினேன்.

           என் மனைவி இரும்பு வாளியை தூக்கிக்கொண்டு தூக்கிச்சொருகிய சேலையுடன் தண்ணீர் வடிய வடிய கோபப்பார்வையுடன் கையைத் தூக்கிக்கொண்டு என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள். ஆஹா! மையம் கொண்டிருந்த புயல் துரத்த ஆரம்பித்துவிட்டது என்று எண்ணிக்கொண்டே பேனாவையும் பேப்பரையும் தூக்கி கடாசிவிட்டு எழுந்து ஓட ஆரம்பித்தேன். இரும்பு வாளி என்னை நோக்கி பறந்து வந்தது. ஐயோ! என் கதை முடியப்போகிறதே....

ஞாயிறு, ஜூன் 28

எனக்கு ஒரு டொக்கு

                         

                    ஒரு ஊரில் கத்தரிக்காய் அப்பாவும் மிளகாய் அம்மாவும் இருந்தனர். அவர்களுக்கு சுண்டைக்காய் பையன். அவன் ரொம்ப சுட்டிப்பையன். அவர்களுக்கு உள்ளங்கை அளவு நிலம் இருந்தது. அதில் திணை பயிரிட்டிருந்தனர். அதில் குருவி வந்து திணையை தின்றது. அதை விரட்ட கத்தரிக்காய் அப்பா சுண்டைக்காய் பையனை காவலுக்கு அனுப்பினார்.
         சுண்டைக்காய் பையனும் குருவியை ச்சூ.. ச்சூ... என்று விரட்டிப்பார்த்தான். குருவிகள் கண்டுகொள்ளாமல் உணவினைத் தின்றது. சுண்டைக்காய் பையனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. கடவுளிடம் வேண்டினான். கடவுள் வந்து அவன் கஷ்டத்தினை உணர்ந்து நீ யாருக்கு டொக்கு என்று சொல்கிறாயோ அவர்கள் தூங்கி விடுவார்கள் என்ற வரத்தினை கொடுத்து மறைந்துவிட்டார்.
                       வயலில் மேயும் குருவிகளைப்பார்த்து “எனது வயலில் மேயும் குருவிகளுக்கு ஒரு டொக்கு என்றான்” குருவிகள் அனைத்தும் தூங்கிவிட்டன. சந்தோசமாக வீட்டிற்கு வந்தான். மிளகாய் அம்மா மீன்குழம்பு சமைத்திருந்தார்கள். அவன் பசியுடன் அமர்ந்தான். புளிய மரத்தின் இலையில் ஒரு பருக்கையும் ஒரு சொட்டு மீன்குழம்பும் வைத்தார்கள். அவன் கோபமாகி எனக்கு மீன்குழம்பு நிறையவைக்காத கத்தரிக்காய் அப்பனுக்கும் மிளகாய் அம்மாவுக்கும் ஒரு டொக்கு என்றான். இருவரும் தூங்கிவிட்டனர்.
                          பசியுடன் வெளியே வந்தான். ஒரு கல்யாணவீட்டில் புகுந்து நிறைய சாப்பிட்டான். இவன் சாப்பிடும் அளவைப்பார்த்து பயந்து கல்யாணவீட்டினர் துரத்தினர். இவன் கோபமாக எனக்கு உணவு தராத கல்யாண வீட்டினருக்கு ஒரு டொக்கு என்றான். கல்யாண வீட்டில் அனைவரும் தூங்கிவிட்டனர். மணப்பெண் மணமகன் காலடியிலேயே விழுந்து தூங்கிவிட்டாள். பாவம் இப்படி காலில் விழுந்தால்தான் உண்டு.
                       நிறைய உணவு உண்டதால் வயிறு பெரிதாகி உருண்டு உருண்டு வந்தான். ஒரு பள்ளத்தில் விழுந்து மாட்டிக்கொண்டான். ஒரு பெரியவர் அந்த வழியாக வந்தார். அவரிடம் காப்பாற்றும்படி கேட்டான். அவர் காதில் வாங்கவில்லை. என்னைக் காப்பாற்றாமல் போகும் மொட்டைத் தாத்தாவுக்கு ஒரு டொக்கு என்றான். அவரும் தூங்கிவிட்டார். கஷ்டப்பட்டு பள்ளத்தில் இருந்து வெளியே வந்து ஒரு மரத்தடியில் அமர்ந்தான். அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. எல்லோரையும் டொக்கு சொல்லி தூங்கவைத்து விட்டோம். எனக்கு சொன்னால் என்னவாகும் என நினைத்துப்பார்த்தான். எனக்கு ஒரு டொக்கு என்றான். சுண்டைக்காய் பையனும் தூங்கிவிட்டான்.
                   இந்தக்கதையை நீங்கள் ரசித்து படித்திருந்தால் பதினைந்து வயது குறைந்து விடுமாம். நான் இரண்டு தடவை ரசித்துப் படித்ததால் இப்போது தொட்டிலில் தூங்கும் அளவுக்கு வயது குறைந்துவிட்டது. கதையை ரசித்து படிக்காதவர்களுக்கு ஒரு டொக்கு....

புதன், பிப்ரவரி 11

அப்பாவி அப்புச்சாமி

தன் நண்பனிடம் பீற்றிக்கொண்டிருந்தான் அப்புச்சாமி.

என் மனைவி என்னைக்கண்டாலே பயப்படுவா தெரியுமா!
பகல் முழுவதும் வேலை செய்கிறாளே.. பாவம்னு நான்தான் காலையில் அவளுக்கு டீ போட்டு கொடுத்து எழுப்புவேன். அப்புறம் அவளுக்கு வெந்நீர் வைத்துக்கொடுத்துவிட்டு காய்கறி வெட்ட ஆரம்பித்துவிடுவேன்.

ஓ! அதுசரி.. மனைவிக்காக இதுகூட செய்யக்கூடாதா! என்றான் நண்பன்.

காய்கறி வெட்டியபின் போனால்போகுது என்று சமையலையும் நானே செய்துவிடுவேன். என் சமையலை சாப்பிட்டுதான் அவள் இப்படி அழகா இருக்கிறாள் தெரியுமோ! என்றான் அப்புச்சாமி.

அப்போ உன் மனைவி என்னதான் செய்வாள் என்று அப்பாவியாக கேட்டான் நண்பன்.

அவளுக்கு நிறைய வேலை இருக்கும். அதான் பிள்ளைகளைக்கூட நானே பள்ளிக்கு கிளப்பிவிடுவேன் என்று அப்புச்சாமி கூறினான்.

ஆமா.. உன்னைக்காண்டாலே உன் மனைவி பயப்படுவான்னு சொன்னியே!


ஆமா! என் மனைவி என்னையைக் கண்டாலே பயப்படுவா! அதான் நான் காலையில் எல்லா வேலையும் முடித்துவைத்துவிட்டு உடனே ஆபிஸுக்கு கிளம்பிவிடுவேன். அப்புறம்தான் அவள் எந்திருப்பாள் தெரியுமா?

ஓ! உன் மனைவிக்கு உன்மேல் அவ்வளவு பயமா! என்று ஆச்சரியப்பட்டன் நண்பன், சரி...மாலையிலாவது அவள் வேலை செய்வாளா?


நோ..நோ.. அவள் வேலை செய்து ஏதாவது தப்பாகிவிட்டால் நான் பொல்லாதவனாகிவிடுவேன். அதான் நான் வரும்வரை அவள் எந்த வேலையும் செய்யமாட்டாள். 

ஓஹோ... நீ வந்தப்புறம் செய்வாளோ?

என்ன இப்படி கேட்டுவிட்டாய். நான் வந்தப்புறம் அவள் எதுக்கு வேலை செய்யனும். நானே பார்த்துக்கொள்ள மாட்டேனா!
மாலையில் வந்தபின் பாத்திரம் விளக்கிவைத்துவிட்டு டீ போட்டு கொடுப்பேன். என்னுடைய டீயை ரசித்து குடிப்பாள் தெரியுமா!

அவ்வளவு நல்லா டீ போடுவியோ என்றான் நண்பன்.


பின்ன டீ நல்லாயில்லைனு அவ சொல்லிட்டா பின்ன எப்பவுமே போடமாட்டேன் என்று கோபமாக அப்புச்சாமி சொன்னான்.
இரவு டிபன் நான் நல்லா செய்வேன்னு என் மனைவி அடிக்கடி சொல்வாள். தினமும் விதவிதமா அவளுக்கு சமைத்து கொடுப்பேன். இதுக்காகவே சமையல் குறிப்பு பத்து புத்தகம் வைத்திருக்கிறேன் தெரியுமா! அப்புறம் டிவியில் சமையல் நிகழ்ச்சி போட்டால் தவறாம நான் பார்ப்பேன் என்று அப்புச்சாமி தம்பட்டம் அடித்தான்.

அவன் நண்பனுக்கு சிரிப்பதா அழுவதா எனத்தெரியாமல் முழித்தான்.

நீ சொல்வதைப்பார்த்தால் உன் மனைவி உனக்கு பயப்படுற மாதிரி தெரியலையே.
பயங்கரமா பயப்படுவா..! அதான் இரவுகூட அவ என்கூட தூங்க மாட்டாள். நான் வராந்தாவில் படுத்துக்கொள்வேன். என்னைக் கண்டால் அவளுக்கு அவ்வளோ பயம் என்று சொல்லிக்கொண்டே போனான் அப்புச்சாமி.

நண்பன் தலையைச்சொறிந்து கொண்டான். 

அப்போது அப்புச்சாமியின் மனைவியின் குரல் கேட்டது.

இன்னுமா பேசிக்கிட்டு இருக்கீங்க. வந்து பிள்ளைகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுங்க என்று கத்தினாள்.

பார்த்தியா நண்பா.. வீட்டுபாடம் அவள் சொல்லிக்கொடுத்தால் மார்க் குறைஞ்சிரும்னுதான் என்னைச் சொல்லி கொடுக்கச் சொல்றா. என்மீது அவளுக்கு அவ்வளவு பயம் .


ஆமா அப்புச்சாமி . உண்மையிலேயே  உன்மீது உன் மனைவிக்கு ரொம்பவும் பயம்தான். கொஞ்சம் கோவம் வராமல் பார்த்து நடந்துக்க என்று நண்பன் அப்புச்சாமியை பார்த்து கவலைப்பட்டான்.


அப்புறம் நண்பா.. நீதான் நிறைய ஊர் சுத்துறயே... அதனால் எங்காவது ”வெயிட்லெஸ் பூரிக்கட்டை கிடைச்சா ஒன்னு வாங்கிட்டு வா” என்று அப்பாவியாகத் தலையைத் தேய்த்துக்கொண்டே அப்புச்சாமி கூறவும் அவன் மனைவியின் குரல் திரும்பவும் ஒலிக்கவும் சரியாக இருந்தது. 
இதோ வந்துட்டேன்  என்று அப்புச்சாமி வேகமாக வீட்டிற்குள் ஓடினான்.

ஞாயிறு, பிப்ரவரி 1

தாடியுள்ள பெண்கள்

                          ஆண்களுக்கு மட்டும் அழகா தாடி மீசை முளைக்குதே. பெண்களுக்கு ஏன் முளைப்பதே இல்லை!! என்று நானும் விவரம் தெரிந்த நாள் முதல் யோசித்ததுண்டு. ஹார்மோன்கள் ,உடற்கூறு என்று பல காரணங்கள்
 கூறப்பட்டாலும் பெண்களுக்கும் தாடி, மீசை முளைத்தால் இன்னும் அழகாக இருப்பார்கள் அல்லவா! மீசையை முறுக்கிக்கொண்டு பெண்கள் நடந்தால் இன்னும் கூடுதல் அழகுதானே. அந்தப்பயத்திலேயே ஆண்களும் பெண்களிடம் வாலாட்டமாட்டார்கள். கடவுளுக்கு இரக்கமே இல்லையா என்று நினைத்ததுண்டு. ஆண்கள் தினமும் தாடியை ஷேவ் செய்வதற்கே கால்மணிநேரம் ஆகிறது. பெண்களுக்கும் தாடி முளைத்தால் தாடியை இன்னும் அழகாக்கவேண்டும் , தேவர்மகன் மீசை போன்று ஸ்டைலாக ஏதாவது மீசை வைக்கவேண்டும் என்று பியூட்டி பார்லரில் இன்னும் கூடுதல் நேரம் செலவழிப்பார்கள் என்றுகூட மீசை, தாடி முளைக்காமல் இருந்திருக்கலாம் என நான் எண்ணுவதுண்டு. ஆனால் வெரியர் எல்வினின் உலகம் குழந்தையாக இருந்தபோது என்னும் நூலைப்படித்தபின் காரணம் புரிந்தது. வேடிக்கையான கதைதான்.
                         ஆதிகாலத்தில் பெண்களுக்கும் ஆண்களைப்போன்று தாடியும், மீசையும் இருந்தன. அக்காலத்தில் புலியே காட்டு விலங்குகளின் அரசன். இந்தப்புலி அரசனுக்கு ஒரு மகன் இருந்தானாம். மகனுக்கு மணம் முடிக்க பெண் தேடினான் அரசன். காட்டு விலங்குகளிடம் ‘ அழகிய பெண் ஒருத்தி கிடைத்தால் என் மகனுக்கு அவளையே மணமுடிப்பேன். அவளே அரசனின் பிரியமான மருமகள்; காட்டின் இளவரசியும் அவள்தான்’ என்றது புலியரசன்.
                     பெண் ஆடு ஒன்று இந்த அறிவிப்பை கேட்டதும் தன் எஜமானியிடம் சென்றது. “அம்மா, உன் அழகிய மீசை, தாடியை  எனக்கு கடனாகக் கொடு. நான் புலியரசனின் மனதை வென்று அவன் மருமகளான பின் இரண்டு அல்லது நான்கு நாட்களில் மீண்டும் வந்து உன் மீசை, தாடியை உன்னிடமே ஒப்படைக்கிறேன்.” என்றது ஆடு. எஜமானியும் தனது தாடி மீசையை வெட்டி எடுத்து ஆட்டிற்கு ஒட்டவைத்து அழகாக்கினாள். ஆட்டை வழியனுப்பியும் வைத்தாள். இப்போது எஜமானி அம்மா மீசை, தாடி இல்லாமல் அசிங்கமாக இருந்தாள். சென்ற ஆடும் புலியரசனின் மகளைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்தது. ஆடு மீண்டும் திரும்பவேயில்லை. வெட்டப்பட்ட தாடி, மீசையும் மீண்டும் முளைக்கவேயில்லை. அது முதல் பெண்களுக்கு தாடி, மீசை முளைப்பதே இல்லையாம். பின்னாளில் அதுவே அழகாகிவிட்டது போலும். 
    இந்தக் கதையைப் படித்தபின்பு வீட்டுக்காரி மீசையை முறுக்கிக்கொண்டு என்முன்னால் காபியை கொண்டுவந்து நிற்பதுபோன்று நினைத்துப்பார்த்தேன். பயங்கர காய்ச்சல் வந்துவிட்டது.

சனி, ஜனவரி 31

நான் யார்?

2175ம் ஆண்டு  ஒருநாள்  மாலை 5.00 மணி :
மூளை மாற்று அறுவை சிகிச்சையில் பெரிய கில்லாடிதான் விஷ்ணு. இவர் ஒருவர்தான் இந்தியாவிலேயே மிகச்சிறப்பாக இந்த அறுவை சிகிச்சையை செய்யக்கூடியவர். அவரைத்தேடி உடம்பெல்லாம் மூடிக்கொண்டு ஒருவர் வந்தார்.
வணக்கம் சார்(நல்லவேளை... தமிழ் இன்னும் வாழ்கிறது) என்னை ஞாபகம் இருக்கிறதா?
நன்றாக ஞாபகம் இருக்கிறது சதிஷ். உங்களை மறக்க முடியுமா. ஆறு மாதத்திற்கு முன்னாடிதானே உங்களது மூளையில் அறுவை சிகிச்சை செய்தேன். எப்படி இருக்கிறீர்கள்?
ம்.. நலம்தான். ஆனால் என் மூளைதான் நான் சொல்வதை கேட்க மாட்டேங்குது.
விஷ்ணு சிரித்தார். நீங்கள் சொல்வதை மூளை கேட்கவில்லையா!!
ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கவேண்டும் என தீர்மானிப்பதே மூளைதான். அதன் சொல்படிதான் நீங்கள் நடந்து கொண்டிருக்கிறீர்கள்.
அப்போ நான் யார் டாக்டர்!
புரியவில்லையே என்றார் விஷ்ணு.
மூளை சொல்படிதான் நான் கேட்கவேண்டும் என்றால் நான் யார். நான்தான் மூளையா!  பிறகு ஏன் நான் சொல்வதை மூளை கேட்கவில்லை.
விஷ்ணு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தார். நீங்கள் ஏதோ சொல்ல வருகிறீர்கள். எனக்கு புரியவில்லை என்றார்.
எனக்குள்ள பிரச்சனையை தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். ஆறு மாதத்திற்கு முன் என்னால் கடந்த ஒரு வருடமாக சரியாக எழுதவோ, வாசிக்கவோ முடியவில்லை. மேலும் எனக்கு பிடித்த பாடகர்களின் பாடலை கேட்கும்போது மூளை தன் கவனத்தை மாற்றிவிடுகிறது. எனக்கு பிடித்த சாப்பாட்டை சாப்பிட முடியவில்லை என்ற பிரச்சனைகளுடன் நான் இங்கு வந்தேன்.
ஆமாம் .. நன்றாக ஞாபகம் உள்ளது . உங்களது மூளையில் உள்ள நியூரோடிரான்ஸ்மீட்டரில் பிரச்சனை. மேலும் விசுவல் சிஸ்டம், சினாப்ஸ் சரியாக இயங்கவில்லை என பல பிரச்சனை இருந்தது. அதைத்தான் நான் சரிபண்ணி விட்டேனே என்றார் விஷ்ணு.
சரிதான் டாக்டர். நீங்கள் ஆப்பிரேசன் பண்ணிய நாளிலிருந்து நான்கு மாதங்கள் எந்த பிரச்சனையும் எனக்கு வரவில்லை. நீங்கள் கொடுத்த மருந்தையும் தவறாமல் சாப்பிட்டு வந்தேன். ஆனால் இந்த இரண்டு மாதங்களாக என் மூளை எனது கட்டுப்பாட்டில் இல்லை.
டாக்டர் சிரித்தார். தவறாகச் சொல்கிறீர்கள். மூளையின் கட்டுப்பாட்டில் நீங்கள் இல்லை என்று சொல்லுங்கள்.
ஏதோ ஒன்று டாக்டர். எனக்கு பிடித்ததை என்னால் செய்யமுடியவில்லை. செய்யவிடாமல் மூளைத் தடுக்கிறது.
எனக்கு புரிகிறது. மீண்டும் மூளையில் உள்ள நியூரான்களில் ஏதோ பிரச்சனையாகி இருக்கும். கவலைப்படாதீர்கள். சரிப்படுத்திவிடலாம்.
அப்படியே சாய்ந்து அமருங்கள். இப்போதே ஆப்பிரேசன் செய்து அரை மணி நேரத்தில் சரிசெய்கிறேன். சதீஷுக்கு ஏதோ மயக்க மருந்தை செலுத்திவிட்டு ஸ்டீரியோடேக்டிக் சர்ஜரி போன்ற ஏதோ செய்ய ஆரம்பித்தார். மூளையின் நியூரான்களை ஆராய்ந்தார். நிறைய ஒயர் கனெக்‌ஷன் பண்ணியிருந்தார். நியூரான்களின் நினைவுகளை கம்ப்யூட்டர் மொழியில் மொழிபெயர்த்தார். முடிவுகளைப் பார்த்தபின் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தார்.
மூளையின் நினைவுகளில் எனக்கு இந்த உடல் பிடிக்கவில்லை. அதனால் என்னால் சிறப்பாக செயல்படமுடியாது என்று இருந்தது. அவரின் மூளை பற்றிய ஆராய்ச்சிக்கு ஒரு அருமையான மூளை கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை அவர்விட தயாரில்லை. மூளைக்கு சில சமிஞ்கைகளை கொடுத்துப்பார்த்து அதன் முடிவுகளை பெற்றார்.
எனக்கு இந்த சதீஷின் உடல் பிடிக்கவில்லை. என்னை வேறொரு நல்ல உடம்பில் அதுவும் அழகான உடம்பில் பொருத்தினால்தான் நான் இன்னும் சிறப்பாக செய்ல்படுவேன். அதுவரை காலவரையற்ற ஸ்டிரைக் என்றது மூளை. விஷ்ணு ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்தார். உடனே அவர் மூளை வேகமாக வேலை செய்தது.
சதீஷின் மூளையை எடுத்து பத்திரப்படுத்தினார். அவனது உடல் தூக்கி எறியப்பட்டது. வேறொரு நல்ல அழகான உடல் கிடைக்குவரை காத்திருக்கவேண்டும் என்று விஷ்ணு முடிவு செய்தார்.
இப்போது மூளை யோசித்தது. இதுவரை நான் சதீஷ். வேறொரு உடலில் என்னை பொருத்தினால் இனி நான் யார்?

ஞாயிறு, ஜனவரி 18

பழகிய நாட்கள்

                          இரவு புரண்டு படுத்துப்பார்த்தேன். தூக்கம் வரவில்லை. நான் அடுத்து அப்பா, அம்மா அதன்பின் தங்கை என்று வரிசையாக படுத்துத்தான் தூங்குவோம். தனியாக படுக்கையறை என்று எதுவும் கிடையாது. தரையில் வரிசையாக போர்வை விரித்து நான்கு தலையணைகளையும் வரிசையாக போட்டு எல்லோரும் ஒன்றாகத்தூங்குவோம். எனது கல்லூரி நாட்களிலும் தனியாகத் தூங்கவேண்டும் என்ற எண்ணம் வந்ததில்லை. அவர்களைவிட்டு என்னால் தூங்கவும் இயலாது. கண்களில் நீர் வடிந்தது. துடைக்க மனமின்றி படுத்திருந்தேன். 
                        என்னைப்போல்தான் எல்லோரது மனநிலையும் இருக்கும் என்று எனக்குத்தெரியும். ஆனால் எல்லோருமே தூங்குவது போலவே படுத்திருந்தோம். சிறிது நேரத்தில் யாரோ ஒருவரின் விசும்பல் சத்தம் கேட்டது. நிச்சயம் அம்மாவாகத்தான் இருக்கும். அப்பா எந்தவிதமான துன்பத்தையும் அடக்குபவர். ஆனால் அவரது கண்ணிலும் கண்ணீர் கசிந்துகொண்டிருப்பதை நிச்சயம் என்னால் உணரமுடிந்தது.
                    அன்று காலையில்தான் தங்கையை பெண்பார்க்க மானாமதுரையில் இருந்து வந்திருந்தார்கள். மாப்பிள்ளை பையனுக்கு மின்சார வாரியத்தில் வேலையாம், கொஞ்சம் குண்டாக இருந்தார். தங்கைக்கு முழுதாக மாப்பிள்ளையை பிடிக்கவில்லை. இதோடு ஆறாவதாக பெண்பார்க்கும் படலம் நடந்துவிட்டது. ஏதோ சில காரணங்களால் ஒவ்வொரு இடமும் நின்றுவிட்டது.அதனாலோ என்னவோ மாப்பிள்ளை எனக்குப்பிடித்து விட்டது என தங்கை கூறினாள். 
              ஒவ்வொருவராக தங்கையிடம் வற்புறுத்தி கேட்டாகிவிட்டது. குண்டாக இருந்தாலும் பரவாயில்லை. மாப்பிள்ளை எனக்கு பிடிக்கிறது என அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டாள். எங்களுக்குத்தெரியும். அப்பா அம்மாவை இதற்குமேல் கஷ்டப்படுத்தக்கூடாது என்பதற்காகவே அவள் மாப்பிள்ளையை பிடிப்பதாகக்கூறினாள். வயதான காலத்தில் எத்தனை மாப்பிள்ளைதான் அவர்கள் பார்த்து நமக்காக அலைவார்கள் என்று அவள் எண்ணியிருக்கவேண்டும். ஆனால் மற்ற யாருக்கும் மாப்பிள்ளை பையனை அவ்வளவாக பிடிக்கவில்லை. அதுவும் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.                             எங்கள் வீட்டில் யாரும் அவ்வளவு குண்டு கிடையாது என்பது முதல் காரணம். அடுத்த காரணம் எல்லோருக்கும் உள்ளதுபோல் மாப்பிள்ளையின் ஊர் தூரமாக உள்ளது. நிச்சயம் எங்கள் ஊரிலிருந்து மானாமதுரைக்கு எட்டுமணி நேரம் ஆகும்.
                      தங்கையுடன் சண்டை போடாத நாட்களில்லை. இரத்தம் வருமளவு நான் அடித்திருக்கிறேன். ஆனால் என்மீது அவளுக்கு அளவுகடந்த பாசம். அப்பா தின்பண்டம் எது வாங்கிவந்தாலும் எனக்காக பத்திரப்படுத்தி வைப்பாள். என்னுடன் மணிக்கணக்காக பேசுவாள். நான் நண்பர்களுடன் சுற்றும்போது அப்பா என்னைத்திட்டுவார். தங்கை அப்பாவிடம் எனக்காக சண்டை போடுவாள். எல்லோருமே இரவு உணவை சேர்ந்துதான் சாப்பிடுவோம். எவ்வளவு பசித்தாலும் இதுவரை யாரும் தனியாக சாப்பிட்டது கிடையாது. சாப்பிடும்போது சந்தோசமாக பேசிக்கொண்டும் எங்கள் அம்மாவை நக்கலடித்து சிரித்தும் சாப்பிடுவோம். பொறியல், கூட்டு எது இருந்தாலும் அவளுக்கு அதிகமாகவே வைப்போம். அவளுக்குப்பிடித்த உணவாக அம்மா பார்த்து பார்த்து வைப்பார்கள். எல்லோருக்குமே அப்பா மீது அளவுகடந்த மரியாதை. அம்மாவைப்பற்றி சொல்லவே வேண்டாம். எங்கள்மீது உயிரையே வைத்திருப்பார்கள். எங்கள் அப்பாவிற்கு என் தங்கைமீது அவ்வளவு பாசம். எங்கள் வீட்டின் செல்லப்பிள்ளை எனது தங்கை. எந்தப்பண்டிகை ஆனாலும் அவளுக்கு புத்தாடை கண்டிப்பாக வாங்கிவிடுவார்கள்.
                        மானாமதுரைக்கு அவள் வாக்கப்பட்டு போய்விட்டால் அவளது படுக்கை இடம் வெறிச்சோடி இருக்கும். இரவு உணவு உண்ணும்போது அவளது தட்டு காலியாக இருக்கும். அதை நினைக்கும்போது மனது என்னனவோ செய்தது. அவள் எங்கள் மூன்று பேரையும் நினைத்து நிச்சயம் அழுவாள். இப்படியாக எண்ண ஓட்டம் சுழன்றடித்தது. ஏனோ அவளது பிரிவை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மணி நிச்சயம் இரண்டு ஆகியிருக்கும் என்று தோன்றியது.
                    நாளை மானாமதுரை மாப்பிள்ளைக்கு போனில் பதில் சொல்வதாகச் சொல்லியிருந்தோம். நிச்சயமாக மாப்பிள்ளை வேண்டாம் எனச்சொல்லிவிடவேண்டும் என்று முடிவேடுத்து தூங்க ஆரம்பித்தேன். எல்லோரது முடிவும் அதுவாகத்தான் இருக்கும்போல. எல்லோருமே தூங்க ஆரம்பித்திருந்தனர்.

ஞாயிறு, டிசம்பர் 28

வடை பாயாசம்

விச்சு(அட நான் இல்லீங்கோ.. இவர்தான் இந்தக் கதையின் நாயகன்) தரகரிடம் சொல்லிக்கொண்டிருந்தான். 
ஏழு கழுதை வயசாச்சுன்னு எங்க அம்மா அடிக்கடி சொல்லிக்கிட்டு இருக்காங்க. சீக்கிரமா கல்யாணம் முடிக்கனும்.
உடனே தரகரும் அட! அதுகென்ன நல்ல கழுதையா ஒன்னு பாத்துட்டா போச்சு என்றார்.
நீங்கவேற அண்ணாச்சி. ஒரு நல்ல அடக்கமான பொண்ணா பாருங்களேன். 
அடக்கமான பொண்ணு வேணுமின்னா மயானத்துக்குத்தான் போகனும்.
யோவ் தரகர்.. நான் சீரியஸா ஆயிடுவேன்.
அப்போ ஹாஸ்பிடலுக்கு போங்க தம்பி.
வேற வழியில்லாமல் சிரித்துவிட்டு..படாரென அவர் காலில் விழுந்தான்.
அவரும் மொக்கையை நிப்பாட்டிவிட்டு கல்யாணம்கிறது ஆயிரம் காலத்துப் பயிர் தம்பி என்றார்.
அப்போ ஆடு, மாடெல்லாம் மேய்ஞ்சிடாதா என்று அப்பாவியாக கேட்டான். பாடாரென அவர் விச்சுவின் காலில் விழுந்துவிட்டார். உங்க அறிவுக்கு நயன்தாரா மாதிரி பொண்ணு கொண்டு வாரேன் என்று உறுதிமொழி கொடுத்தார்.

விச்சுவுக்கு அன்று இரவு தூக்கம் வரவில்லை. நயன்தாராவுடன் டூயட் பாடுவதாக நினைத்துப்பார்த்தான். கூடவே பிரபுதேவா, சிம்பு, ஆர்யா என்று வரிசையாக ஹீரோக்கள் வர தனது முடிவை மாற்றிக்கொண்டான். நயன்தாரா வேண்டாம்... நம்ம ஊரு கருவாச்சி மாதிரி பொண்ணு கிடைத்தால்கூட போதும். அவளுக்கு காளியாத்தா மாதிரி கோபம் வருமே..! பரவாயில்லை..  கோபத்தில்கூட அழகுதான் என நினைத்துக்கொண்டே அசந்து தூங்கிவிட்டான்.

மேளதாளங்கள் முழங்க பச்சைக்கலர் பட்டுப்புடவையில் மணப்பெண் வர தாலிகட்டினான். மூன்றுமுடிச்சும் நான்தான் போடுவேன் என்று அடம்பிடித்துப்போட்டான்.

முதலிரவு அறையில் விச்சு சீரியஸாக புத்தகம் படித்துக்கொண்டிருந்தான். 
மணப்பெண் பால்சொம்புடன் வந்து பக்கத்தில் அமர்ந்தாள். 
ஏங்க.. என்ன படிக்குறீங்க?
புத்தகம்...
உங்க அறிவைக்கண்டு வியக்குறேன். 
படிச்சு முடிச்சிட்டு என்னங்க பண்ணுவீங்க?
மூடிதான் வைக்கனும்.
பால் சொம்பு டமாரென கொட்டியது.
ஓ..! அவள் கோபத்தில் இருக்கிறாள். 
நீ கோபப்படுவியா செல்லம்.
கோபம் வந்தா நான் காளியா மாறிடுவேன்
அய்யோ.. அப்போ நானு?
நீங்க காலிதான்.
ஹாஹா.. கஸ்டப்பட்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கவலைப்படாத.. உனக்கு கோபம் வர்ற மாதிரி நான் நடந்துக்கமாட்டேன் என்றான் .  புத்தகத்தின் பக்கத்தை புரட்டுவதை நிறுத்திவிட்டு 
என்னைப்பிடிச்சிருக்கா? என்று அப்பாவியாய் கேட்டான்.
பிடிக்காமலா...உங்கள் பக்கத்தில் இம்புட்டு நெருக்கமா உட்கார்ந்திருப்பேன்.

ம்ம்.. நாம ஹனிமூன் போக ஊட்டிக்கு ஒரு டிக்கெட் எடுத்திருக்கேன்.
ஒரு டிக்கெட்டா..!
அய்யோ சந்தோசத்துல தலைகால் புரியாம ஒரு டிக்கெட் மட்டும் எடுத்துட்டேனே..
பரவாயில்லைங்க.. நாளைக்கே இன்னொரு டிக்கெட் எடுத்திருங்க.

ஆமா! நீங்க நிறையா படிப்பீங்களா?
ம்ம்.. கவிதைகூட எழுதுவேன்.
நீங்க எழுதுனதை கொடுங்க. நானும் உங்கள் கவிதையை படிச்சுப்பாக்குறேன்.
இதோ..இந்த நோட்டு முழுவதும் என்னுடைய கவிதைதான். ரசனையா இருக்கும். நீயும் படித்துப்பார் என்றான் விச்சு.
என்னங்க கவிதை. ஒன்னுலகூட உப்புச்சப்பே இல்லை.
அடியே நான் படிக்கத்தான் கொடுத்தேன். உன்னை யார் தின்னு பாக்கச்சொன்னா..!
ஏங்க ..நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன். காளியா மாறிடுவேன்னு..

அப்புறம்.. 
அப்புறம்..
அப்புறம்..
இப்படியே பேசினா விடிஞ்சிரும். எனக்கு பத்து மணிக்கெல்லாம் தூக்கம் வந்திரும்ங்க..
பரவாயில்ல.. பட்டுக்குட்டி. இம்புட்டு நேரம் உன் தொல்லையை தாங்கிக்கிட்டேன், இன்னும் அரைமணி நேரம்தான.. என்றான் விச்சு.
வேண்டாம்.. நான் காளியா மாறிடுவேன்.

சரி அதைவிடு செல்லம். நான் இறந்திட்டா நீ என்ன பண்ணுவ?
நானும் உங்கள் கூடவே வந்திருவேன். நீங்க இல்லாத உலகத்துல நான் மட்டும் என்ன பண்ணப்போறேன்.
சரிதான்...அப்பவே அந்த ஜோசியக்காரன் சொன்னான். நீ செத்தாலும் சனியன் உன்னை விடாதுன்னு.
ஏங்க நான் காளியா மாறிட்டேன்.  இன்னும் ஒருவார்த்தைகூட பேசாமல் திரும்பி படுத்து தூங்குங்க. குட்நைட்.. என்று போர்வையை போர்த்தி படுத்துவிட்டாள்.

ஆஹா..! காளி தன் சுரூபத்தைக்காட்டிவிட்டாள். பயந்துபோய் அவனும் தூங்கினான்.
தூக்கத்தில் புலம்பினான்.
ஏங்க.. என்னங்க புலம்புறீங்க?
கனவுல நயன்தாரா வந்தாள்.
அப்புறம் திடீர்னு எதுக்கு கத்துனீங்க?
கனவுல நீயும் வந்துட்ட...
’நங்’கென்று மண்டையில் விழுந்தது.

காலையில் அம்மாதான் காபி கொண்டுவந்து விச்சுவை எழுப்பினார்கள்.
விச்சு பதறியபடி எழுந்தான். 
காளி எங்க? என்று அம்மாவிடம் கேட்டான்.
காளியா..! யார்ரா அது?
அடச்சே! எல்லாம் கனவா...! கல்யாணம் நினைப்புலேயே படுத்ததால கனவு வந்திருக்கும்போல என்றபடியே தலையைத்தடவினான்.
தலை புடைத்து வீங்கியிருந்தது.

வியாழன், நவம்பர் 27

கையளவு நீர்

                   
ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பாடா! கொளுத்தும் வெயிலில் வெளியில் அலைந்துவிட்டு வீட்டில் நுழைந்து நாற்காலியை இழுத்துப்போட்டு அதில் அமர்ந்தேன். முன்னாடி மேஜையில் அன்றைய நாளிதழ் கிடந்தது. எடுத்து வழக்கம்போல் தலைப்புச்செய்தியாக வாசித்தேன். வழக்கமான செய்திகள்தான். மேஜையில் சின்ன டம்ளரில் நீர் இருந்தது. யாரும் அருந்திவிட்டு மீதம் வைத்திருந்தார்களா எனத் தெரியவில்லை. எடுத்து அருந்தலாமா என யோசித்தேன்.
                   அப்போது மெலிதாக சிரிப்பு சத்தம் கேட்டது. யாரென்று சுற்றும் முற்றும் பார்த்தேன்.  டம்ளரில் உள்ள நீர்தான் சிரித்தது. எனக்கு பயமாகிவிட்டது. பேய் ஏதாவது பிடித்திருக்குமோ என்று. சின்ன வயதில் அம்மா வெளி அறையிலிருந்து உள்ளே போய் கொஞ்சம் சொம்பில் தண்ணீர் கொண்டு வாடா என்றால்... முடியாது என்று மறுத்துவிடுவேன். உள் அறைக்குத் தனியாக சென்றால் பேய் பிடித்துக்கொள்ளும் என்ற பயம். நான்காம் வகுப்பு படிக்கும்போது யாருமில்லா ஒரு மதியப்பொழுதில் டவுசர் மாத்துவதற்காக கொடியில் கிடந்த டவுசரை எட்டி எடுத்தேன். அப்போது கிரீச் என்ற சத்தம். எங்கிருந்து வந்தது எனத்தெரியவில்லை. அலறியடித்து வாசலில் வந்து நின்றுகொண்டேன். பக்கத்துவீட்டு மாமா என்னடா.. அம்மணமா நிக்குற என்ற விசாரிப்பில் எனக்கு சின்னதாக ஒரு அவமானம்தான். இல்ல மாமா  டவுசர் கொடியில் கிடக்குது... எனக்கு எட்டல என்றேன். அவர் வந்து எடுத்துக்கொடுத்தார். உடனே டவுசரை மாட்டிக்கொண்டு வெளியில் ஓடிவந்துவிட்டேன். அந்த சத்தம் எனக்குள் இன்னும் ஒலிக்கிறது . பேயை நினைத்து பயந்ததுதான் காரணம்.
                      அப்புறம்  சூரியன் மறையும் ஒரு மாலைப்பொழுதில் மக்காச்சோளத்துக்காக காவல் காக்கும்போது ஏதோ சத்தம் கேட்டதற்காக பயந்து நடுங்கியிருக்கிறேன். பேயை நினைத்து பயந்துகொண்டிருக்கும் காலம் மாறவே இல்லை.
                    நண்பனின் அம்மா இறந்த அன்று நல்லமழை. மயானத்தில் சடலம் எரிந்துவிட்டதா என்று பார்ப்பதற்காக நாலைந்துபேர் சென்றார்கள். அவர்களுடன் நானும் மயானத்திற்கு சென்று அரைகுறையாக எரிந்த சடலத்தைப்பார்த்து பயப்படாத மாதிரி காட்டிக்கொண்டேன். உள்ளூர நடுங்கியது வேறுவிசயம். மயானத்திற்கு சென்றுவந்த வீரக்கதையை நீண்டநாட்களாக  நண்பர்களிடம் சொல்லி நானும் வீரமானவன்தான் பேய்க்கு பயப்படாதவன் எனக்காட்டிக்கொண்டேன்.
                    இப்போதுவரை பேயை பார்த்தது இல்லை. ஆனால் பேயை நினைத்து மனதில்  ஏற்படும் பயம் இன்றுவரை மாறவில்லை. இது இப்படி இருக்க திடீரென யாருமற்ற அறையில் சிரிப்பு சத்தம் கேட்டால் பயப்படாமல் இருக்க முடியுமா! டம்ளரில் இருக்கும் நீர் நான்தான் சிரித்தேன் என்றவுடன் பயத்தைவிட ஆச்சரியம்தான் அதிகமாகியது. நானில்லாமல் நீங்கள் இருக்கமுடியாது என்று தலைக்கனத்துடன் பேச ஆரம்பித்தது. நான் பூமியில் ஏறத்தாழ 2/3 மடங்கு இருக்கிறேன் என்று இருமாப்பு காட்டியது. எல்லோரும் என்னை நீர் என்று மரியாதையுடன் அழைப்பார்கள் என்று இன்னும் அகம்பாவத்துடன் கூறியது.
                 நானும் பொறுமையாக கேட்டுக்கொண்டு ஆமாம்! நீர் இல்லாமல் எங்களால் இருக்கமுடியாது என்பது உண்மைதான். ஆனால் உன்னை பயன்படுத்தத்தான் எங்களைப்போன்ற உயிர்களை கடவுள் படைத்தார் என்றேன். அது வாய்விட்டு சிரித்தது. நாங்கள் இல்லாத இடமே இல்லை. ஆறு, குளம், ஏரி, கிணறு, கடல் என்று எங்கும் வியாபித்திருப்போம். மழை பெய்யவில்லையென்றால் விவசாயம் பொய்த்து மனிதர்கள் இறக்கவேண்டிவரும் என்று அகம்பாவம் குறையாமல் கூறியது.
                 இவ்வளவு அகம்பாவத்துடன் பேசுகிறாயே.. நீ நல்லவர்களுடன் மட்டும் சேராமல் கெட்டவர்களுடனும் சேருகிறாய். யாருடனும் எளிதில் கலந்துவிடுகிறாய் என்றேன். அது என்னுடைய இயல்பு என்று நீர் கூறியது. எனக்கு எல்லோரும் ஒன்றுதான். எல்லோரும் எனக்கு கீழ்தான். நான்தான் உயர்ந்தவன் என்றது. நான் பொறுமையில்லாமல் அதன் கர்வத்தை அடக்க படக்கென்று டம்ளரை எடுத்து நீரை அருந்திவிட்டேன். 
                     இப்போது டம்ளர் சிரித்தது. நீ எதற்கு சிரிக்கிறாய் என்று வெறுப்புடன் கேட்டேன். மனித மனத்தை நினைத்து சிரித்தேன் என்றது. எல்லோரையும் அடக்கி ஆள நினைக்கும் மனம் மனிதனுக்கு மட்டுமே உண்டு என்றது.  எந்த ஒரு உயிரினமும்  பாத்திரத்திற்குள் நீரை அடக்குவதில்லை. மனிதன்தான்
 நீரை மட்டுமல்ல எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து அடக்குபவன். எல்லோரையும் அடக்கி ஆள நினைக்கும் நீங்கள்தான் அகம்பாவம் பிடித்தவர்கள் என்றது. அமைதியாக நான் தலை கவிழ்ந்து கொண்டேன்.

வியாழன், செப்டம்பர் 4

கடவுள் மீது சத்தியம்

             ரஷ்யாவில் சொல்லப்படுவதாக ஒரு கதை. இந்தக்கதையை எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய “கேள்விக்குறி” என்னும் நூலில் படித்தேன். பொய் சொல்லும் கலையை எளிதாகச் சொல்லக்கூடிய ஒரு கதை. படித்துப் பாருங்கள். சுவையாக இருக்கும்.
               ஒரு விவசாயி இருந்தான். அவனுக்கு ஒரு மகன். அவன் சோம்பேறியாகவும் சாப்பாட்டு ராமனாகவும் இருந்தான். மகனுக்கு ஒரு திறமையும் இல்லையே என் விவசாயி கவலைப்பட்டான்.
              ஒருநாள் அந்த கிராமத்திற்கு வந்த யாத்ரீகன் அந்த விவசாயியைப் பார்த்து “ நீ ஏன் கவலைப்படுகிறாய்? உன் மகனுக்கு பொய் சொல்லக் கற்றுக்கொடு. பிறகு அவன் திறமைகள் தானே வளர்ந்துவிடும்” என்றான்.
               தன் மகனை பயிற்சியில் சேர்ப்பதற்கு விவசாயி தன் ஊரில் அதிகம் பொய் சொல்பவன் எவன் என்று தேடினான். ஒரு குடிகாரனைக்கண்டு தன் நிலைமையை சொன்னான். அவனோ நான் பிழைப்புக்காக பொய் சொல்பவன். என்னைவிட அதிகம் பொய் சொல்பவன் கிராம நிர்வாகி. அவனிடம் சேர் என்றான். கிராம நிர்வாகியிடம் சென்றான். அவரோ நான் எம்மாத்திரம். என்னைவிட அதிகம் பொய் சொல்பவன் நாட்டின் மந்திரிதான். அவரிடம் அழைத்துச்செல் என்றார்.
                மந்திரியோ வெட்கத்துடன் அப்படியெல்லாம் நான் நிறைய பொய் சொல்லிவிடவில்லை. என்னைவிட அதிகம் பொய் சொல்பவது இந்த நாட்டின் ராஜாதான். அவரிடம் அழைத்துச்செல் என்றார். ராஜாவோ பெருமையோடு ”நான் பொய் சொல்வதில் கில்லாடியாக இருந்தாலும் அவ்வளவு பொய் எல்லாம் சொல்லிவிடவில்லை”. ஆனால் நான் செத்தபிறகு என்ன ஆவேன்? சொர்க்கம் எப்படி இருக்கும்? நரகம் எப்படி இருக்கும்? கடவுளைக்கண்டிருக்கிறேன். இப்படியெல்லாம் தினமும் பொய்கூறி என்னையும் நம்பவைக்கிறாரே  மதகுரு. அவர்தான் உலகிலேயே அதிகம் பொய் சொல்பவர். அவரிடம் அழைத்துச்செல் அன்றார். 
               விவசாயிக்கு தலை சுத்தியது. விடாமுயற்சியாக தன் மகனை மதகுருவிடம் அழைத்துச்சென்றார்.
                      மதகுரு சொன்னார். எனக்கு பொய் சொல்லும் திறமை எல்லாம் கிடையாது. ஒரே ஒரு பொய்தான். அதை வேண்டுமானால் நான் கற்றுத்தருகிறேன். “ நான் சொல்வதெல்லாம் கடவுள் மீது சத்தியம்!”.
ஆஹா! இந்த ஒரு பொய் போதுமே வாழ்நாளை ஓட்டுவதற்கு என்று விவசாயி சந்தோசமாக தன் மகனை அழைத்துச்சென்றான்.
                     என்ன நீங்க எங்க கிளம்பிட்டீங்க? பொய் சொல்லவா! ம்ம்ம்... ஆனால் எனக்கு கடவுள் மீது சத்தியமா பொய் சொல்லவெல்லாம் தெரியாதுங்க.

வெள்ளி, ஆகஸ்ட் 29

வேரறுந்த மரம்

             

                 முகமும் தளர்ந்திருக்கும் அவருடைய உடலும் மூக்கையா பிள்ளைக்கு எண்பெத்தி எட்டு வயதிருக்கும் எனக்காட்டியது. தன்னுடைய நான்கு பிள்ளைகளில் ஏற்கனவே இரண்டு பிள்ளைகளைப் பறிகொடுத்து விட்டிருந்தார். இப்போது அறுபத்தைந்து வயதான தனது மூத்த பிள்ளையும்  ஹார்ட் அட்டாக்கில் உயிரை விட்டிருந்தபடியால் கொஞ்சம் கண்ணீரோடு வாசலில் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் சேரில் அமர்ந்திருந்தார் மூக்கையா பிள்ளை. 

                மூக்கையா பிள்ளை அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர்களுக்கெல்லாம் ஓரளவு தெரிந்த பெரிய மனிதர்தான். இருந்தாலும் வீம்பும் பிடிவாதமும் பிடித்தவர். கதர் சட்டை வேட்டிதான் அணிவார். இன்றும் அந்த ஆடையைத்தவிர வேறு அணிந்ததில்லை. ஒரு காலத்தில் வியாபாரத்தில் உச்சத்தில் இருந்தார். தன்னுடைய பணத்தை எல்லாம் நிலங்களாக வாங்கி குவித்திருந்தார். இன்னும் மண்ணாசை அடங்கவில்லை.

                  பிள்ளைகள் நான்கு பேரும் அவ்வளவு வசதியானவர்கள் என்று சொல்லிவிட முடியாது. இரண்டு பெண் பிள்ளைகள் கல்யாணம் முடித்துக்கொடுத்து மாப்பிள்ளைகளின் தயவில் சந்தோசமாக குடும்பம் நடத்திவிட்டு பிள்ளைகளையும் பெற்று சின்ன வயதிலேயே நோயின் காரணமாக அடுத்தடுத்த சில வருடங்களில் இறந்துவிட்டனர்.

              மூக்கையா பிள்ளை தன்னுடைய மனைவி இருந்தவரை கம்பீரமாக சுற்றித்திரிந்தவர். தன்னுடைய பணத்தினை யாருக்காகவும் செலவழிக்காதவர். தன் உடம்பு சரியில்லாவிட்டால்கூட பணம் தராமல் சரியாகவேண்டும் என நினைப்பவர். இப்போதுகூட இறந்த தனது மூத்த பிள்ளையின் மருத்துவ செலவுக்குகூட சல்லிக்காசு செலவழிக்காதவர். மூத்த பிள்ளையின் மனைவிக்குச் சொல்லி அழக்கூட உறவினர்கள் யாருமில்லை. அமைதியாக வழியும் கண்ணீரோடு கணவனை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

          துக்கம் விசாரிக்க வந்தவர்கள் அனைவரும் மூக்கையா பிள்ளையை மறைமுகமாக வசைபாடிக்கொண்டிருந்தனர். 

                        ”இம்புட்டு பணத்தையும் வச்சுக்கிட்டு மனுசன் என்ன பண்ணப்போறாராம்.

                                        இவர் மட்டும் கொஞ்சம் பணம் செலவழித்திருந்தால் இதய ஆப்பிரேஷன் பண்ணி அவரைக்காப்பாற்றி இருக்கலாம். வயசாக வயசாக இம்புட்டு பிடிவாதம் இருக்கக்கூடாது”

                 புள்ளைகளுக்குகூட உதவாத அந்தப்பணம் எதுக்கு! 

                       நிலமா வாங்கி குவிக்கிறாரே! இவரு சாகுறப்போ கொண்டா போகப்போகிறார்!  என்று ஆளாளுக்கு அவரைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தனர்.

                        எந்தச் சலனமும் இன்றி மூக்கையா பிள்ளை அமர்ந்திருந்தார். இறந்த உடலை தூக்குவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

                  மூக்கையாபிள்ளையின் பால்ய தோழரான சுப்பையா நாயக்கர் துக்கம் விசாரிக்க அப்போதுதான் காரில் வந்து இறங்கினார். அவரும் மூக்கையாபிள்ளைக்கு ஈடான வசதி படைத்தவர்தான். பிள்ளைகளை நன்கு படிக்கவைத்து நல்ல வேலையில் அமர்த்தி திருமணமும் முடித்துக் கொடுத்துவிட்டார்.

                 அவரைப்பார்த்தவுடன் மூக்கையாபிள்ளைக்கு ஒரு பக்கம் சந்தோசம். அவருடைய இடம் ஒன்றினை ஏற்கனவே விலைக்கு கேட்டிருந்தார். அதை வாங்குவதற்கான சந்தர்ப்பம் இதுவரை அமையவில்லை. அந்த எண்ணம் மூக்கையாபிள்ளையின் மனதில் ஓடி மறைந்தது. சில சம்பிரதாய விசாரிப்புகளுக்குப்பின் சுப்பையா நாயக்கர் அவசர வேலை இருப்பதாகக்கூறி கிளம்பிவிட்டார்.

                     உறவினர்கள் அனைவரும் வந்து சேர்ந்திருந்தனர். பொழுது சென்றுகொண்டிருந்தபடியால் உடம்பினை சீக்கிரம் தூக்கவேண்டும் என்றனர். அனைவருக்கும் பசி வேறு வயிற்றைக்கிள்ளியது. வந்தவர்களுக்கும் அழுது கொண்டிருப்பவர்களுக்கு சுக்கு காப்பி கொடுத்தால் நல்லாயிருக்கும் என்று தோன்றியது. மூக்கையா பிள்ளையிடம் உறவினர் ஒருவர் கொஞ்சம் பணம் கொடுங்கள்... வந்தவர்களுக்கு காப்பித்தாண்ணி வாங்கித்தரனும் என்று கேட்டார். அதெல்லாம் எதுக்குய்யா.. இப்போதான் கிளம்பிருவோம்ல.. என்று மூக்கையா பிள்ளை மறுத்துவிட்டார். உறவினர் முணுமுணுத்துக்கொண்டே துண்டை வாயில் பொத்தியபடி மரப்பெஞ்சின் ஒரு ஓரத்தில் அமர்ந்துவிட்டார். மற்ற செலவுகளை இன்னொரு மகன்தான் செய்து கொண்டிருந்தார்.

                 உடம்பு தூக்கப்பட்டது. மலர்களைத் தூவி விட்டபடி முன்னாடி ஒருவன் செல்ல உடம்பின் பின்னே அனைவரும் வரிசையாகச் சென்றனர். மூக்கையா பிள்ளையும் மெதுவாக நடந்து சென்றார். இப்போது மனதில் சுப்பையா நாயக்கர்தான் இருந்தார். அவரின் இடத்தை வாங்குவதற்கு இன்னும் கொஞ்சம்தான் பணம் தேவை. என்ன செய்யலாம் என்ற யோசனையிலேயே வந்தார்.

                 மயானத்தில் எல்லாச்சடங்குகளும் முடிந்து கொள்ளி வைக்கப்பட்டது. 
                             மூக்கையாபிள்ளைக்கு திடீரென ஒரு யோசனை வந்தது. இறந்த மூத்த மகன் கொடுத்து வைத்திருந்த பணம் இவரிடம்தான் இருந்தது. அதையும் சேர்த்தால்  எப்படியும் சுப்பையா நாயக்கரின் இடத்தை வாங்கி விடலாம் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

                தீ இப்போது ”மளமளவென..” எரியத்தொடங்கியிருந்தது.

வியாழன், ஏப்ரல் 10

வேப்பமரத்தின் மனம்

    ப்ஊ.. ப்ஊ... தூசியை வாயால் ஊதினேன். அப்பப்ப்ப்பா.. மேஜையில் எவ்வளவு தூசு. ஒருவழியாக சுத்தம் செய்தபின் மேஜையையும் நாற்காலியையும் இழுத்துப்போட்டு அமர்ந்தேன்.
ஜன்னலின் ஓரம் அமர்ந்து கவிதை எழுதுவது எனக்கு பிடித்தமான ஒன்று.
கவிதையா..! 
என்று புருவம் உயர்த்துவது தெரிகிறது.
கவிதை மாதிரி ஏதோ எழுதிக்கொண்டிருந்தேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

வேப்பமரத்தின் ஒரு சிறிய கிளை ஜன்னலின் அருகே என்னையே உற்று பார்ப்பதுபோல் இருந்தது. அதை சட்டை செய்யாமல் எழுதினேன். மீண்டும் மனசுக்குள் ஒரு உறுத்தல். என்னைத்தான் பார்க்குமோ என்று சற்று நிமிர்ந்து பார்த்தேன். தலையைத் திருப்பிக்கொண்டது.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மீண்டும் எழுதத்துவங்கினேன். இப்போது மெல்லிய குரலில் சத்தம் கேட்டது. 
யாரது? என்பதுபோல் நிமிர்ந்து பார்த்தேன். 
மரமேதான்... ஆச்சரியம் மேலிட என்ன என்று புருவம் உயர்த்தினேன்.
எப்போது பார்த்தாலும் எழுதுகிறாயே..! அப்படி என்னதான் எழுதுவாய் என்று கேட்டது.
என் தனிமையை போக்கவும், எனக்குள் தோன்றும் சில கருத்துக்களையும் எழுதுவேன் என்றேன்.
எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்ற வேப்பமரம்..
நீ கருக்கொண்டிருப்பாயோ!
இத்தனை வார்த்தைகள்
உனக்குள் பிறக்கின்றன.
என்று கூறியது.
வேப்பமரத்தின் பேச்சு எனக்கு வியப்பினை தந்தது.
என் மனதில் வார்த்தைகள் ஊறிக்கொண்டிருக்கும் என்றேன்.
உடனே அது மனத்தினை எப்போதும் குப்பைபோல நிறைத்திருப்பாயோ என்று கேட்டது.
எனக்கு பதில் சொல்லத்தெரியவில்லை.
காலியான மனம் ஒன்று உண்டா? என்று கேட்டது.
கண்டிப்பாக இருக்க முடியாது என்றேன்.
அது சிரித்தபடியே பொருட்களை வாங்கி வீட்டினை நிரப்புகிறீர்கள். சொற்களை வாங்கி மனசை நிரப்புகிறீர்கள் என்றது.
எண்ணங்களும் மனசை நிரப்பும் என்றேன்.
எதை எண்ணுவீர்கள்?
காதலி, குடும்பம், ஊர், வேலை பார்க்கும் இடம், அன்றாட நிகழ்வுகள் இப்படி எதையாவது எண்ணுவேன். மனம் எப்போதும் எதையாவது அசைபோட்டுக்கொண்டு இருக்கும்.
நடந்தவை
நடந்துகொண்டிருப்பவை
நடக்கப்போகின்றவை
யோசித்துக்கொண்டேயிருக்கும்
மனம்.
அதற்கு ஓய்வில்லை என்று சொன்னவுடன்…
வேப்பமரம் ஆமோதிப்பதுபோல் கிளையை அசைத்தது.
மனிதன் மட்டுமே இப்படி மனசை உலட்டியபடி அலைகிறான். அவனுக்குள் எப்போதும் திராவகம்போல் எண்ணங்கள் அரித்துக்கொண்டே இருக்கவேண்டும். மனம் வெறுமையாய் இருந்தால் அவன் இறந்துபோய்விடுவான். அவன் உயிருடன் இருப்பதற்கான ஆதாரம் மனம் மட்டுமே என்றது.
வெறுமையான மனம் என்று ஒன்று கிடையாது. மனிதர்கள் குப்பைகள் என்றது.
நான் என்னுடைய எண்ணங்களை இலைகளாக முளைக்கச்செய்து, தேவையில்லாதவற்றை உதிரச்செய்வேன் என்றது. நாங்கள் அதனால் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
நீங்கள் எண்ணங்களை வார்த்தைகளாக்கி மனசுக்குள் புதைத்துவைக்கிறீர்கள். அவை கை கால்களுடன் முளைத்துக்கொண்டே இருக்கின்றன என்று சொல்லிக்கொண்டிருந்தது.
அப்போது ஓங்கி வீசிய காற்றில் அந்தக்கிளை முறிந்து விழுந்தது.
நான் அமைதியானேன்.
மனம் மீண்டும் யோசிக்கத்தொடங்கியது.

சனி, ஆகஸ்ட் 31

மனசை அரித்தவள்

மனசு

ஒளிவெள்ளத்தில்
நிழல் வராது
இருப்பினும்
வருகின்ற திசையினை
நோக்கி தேடுகிறேன்
நேரம் செல்லச் செல்ல
இருட்டத்தொடங்கியது
அறிவு உரைத்தது
இருட்டிலும் நிழல்
வராது என்று..!

மனசு எதையாவது தேடிக்கொண்டே இருக்கிறது. தேடல் நல்லதுதான். அலைபாயும் கடலையும் மனசையும் கட்டுக்குள் கொண்டு வருவது இயலாத.. இயலவே இயலாத காரியம். இருந்தும் இருட்டில் திசையே அறியாத அவள் வரும் திசையினை நோக்கித் தேடுகிறது மனசு.

சனி, பிப்ரவரி 16

நானும் ஆவிதான்


      என்னுடைய பிரச்சனையைத் தீர்க்க மருத்துவரிடம் சென்றுதான் ஆகவேண்டும் என முடிவெடுத்துவிட்டேன். விசாரித்துப் பார்த்ததில் டாக்டர் ஆவிதாசன்தான் சிறந்த மருத்துவர் என எல்லோரும் கூறினர். அவருடைய பெயரே வித்தியாசமாக இருந்தது. அவர்தான் ஆவிகளுடன் பேசுபவராம். இரவு எட்டு மணிக்கு அவருடைய மருத்துவமனைக்குச் சென்றேன். மருத்துவமனையைச் சுற்றிலும் புகைமண்டலமாக இருந்தது. எனக்கு மட்டும்தான் இப்படி தெரிகிறதா ! யோசித்தவாறே சென்றேன்.
     மருத்துவர் என்னை அழைத்து இருக்கையில் அமரவைத்தார்.
    " உங்களுக்கு என்ன பிரச்சனை?" டாக்டர் விசாரித்தார்.
     எனக்கு சில வாரங்களாக எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது.
     என்ன வித்தியாசம்?
     யாரைப்பார்த்தாலும் பேய் மாதிரி தெரிகிறது. பல் நீண்டும், முடியை விரித்துப் போட்டவாரும் தெரிகிறது. எங்குபார்த்தாலும் புகை மண்டலமாக இருக்கிறது.

         எப்போதிருந்து?
     இரண்டு வாரத்திற்குமுன் டூவீலரில் செல்லும்போது கீழே விழுந்துவிட்டேன். தலையில் அடிபட்டது. அப்போதிருந்துதான்…
ஓ! அப்போ இது சாதாரண பிரச்சனைதான்.
     “சாதாரண பிரச்சனையா !” என்னுடைய நிலைமையில் நீங்கள் இருந்தால்தான் உங்களுக்கு இந்த பிரச்சனையின் வீரியம் புரியும்.
      சரி...! வேறெதாவது உங்களுக்கு வித்தியாசமாகத் தோணுகிறதா?
    ஆமாம்.. முருங்கை மரத்தினைப்பார்த்தால் தொங்கவேண்டும்போல் உள்ளது. யாரையாவது பிடித்து ஆட்டவேண்டும்போல் இருக்கிறது. எதுவும் சாப்பிட பிடிக்கவில்லை. சிலநேரம் ரத்தம் குடிக்கவேண்டும்போல் உள்ளது. இப்போது உங்களைப் பார்த்தால்கூட ஆவி மாதிரிதான் தெரிகிறது.
      டாக்டர் சிரித்தார்.
      சார்.. நான் சீரியசா பேசிக்கிட்டு இருக்கேன்.. நீங்க சிரிக்கிறீங்க !
      “வீட்டிற்கு போக பிடிக்காதே?” டாக்டர் அன்பாக விசாரித்தார்.
      அட! ”ஆமாம் சார்” என்றேன்.
      சுடுகாட்டுக்கு இப்போ தனியா பயமில்லாமல் போவீங்களே?
      ஆமாம்..ஆமாம்.. இதுக்கு என்ன சார் ட்ரீட்மெண்ட்? சரியாயிடுமா?
    இதுக்கு மருந்து மாத்திரை எதுவும் தேவையில்லை. இது நார்மல்தான்..
    என்னது நார்மலா!
    ஆமாம் ஆவியா இருந்தால் இது நார்மல்தானே.. மனிதர்கள்தான் பயப்படுவார்கள்.
    “ஆவியா? நானா?” ஆச்சரியமாகவும் பயத்துடனும் கேட்டேன்.
    ஆமாம்.. நீங்கள் தலையில் அடிபட்டு இறந்துவிட்டீர்கள். இப்போது ஆவிகள் உலகத்தில் இருக்கிறீர்கள்.
     அப்போ நீங்கள் மட்டும் எப்படி இங்கே? ஆவிகளுடன் பேசுகிறீர்கள்...
    ஹாஹா....ஹா.. என சிரித்துக்கொண்டே சொன்னார். நானும் ஆவிதான். புதிதாக ஆவிகள் உலகத்திற்கு வருபவர்களுக்கு இதுதான் பிரச்சனை. அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கத்தான் இந்த டாக்டர் ஆவிதாசன்.
     ஆவி அரண்டு போய் அமர்ந்து இருந்தது.



வெள்ளி, டிசம்பர் 21

வழிப்போக்கனின் கதை

திசை தெரியாத பறவை
ஒன்று பறந்து கொண்டிருந்தது
தன் சிறகுகளை வேகமாக
உதிர்த்தபடி....




                    எங்கே போய் சேரவேண்டும் என்பது தெரியாமலேயே பயணம் செய்தான் வழிப்போக்கன் ஒருவன். நீண்ட தனிமைப் பயணம் அது. வெற்று மனிதனாகத்தான் சென்றான். வழியில் பூஞ்சோலைகள், அருவிகள், மரங்கள், பறவைகள் என வரிசையாக ரசித்துக்கோண்டே சென்றான். இடையிடையே பழங்களை உண்டு பசியாறினான். 

         ஒரு பனிக்கால காலைப்பொழுதில் இன்னுமொரு வழிப்போக்கனைக் கண்டான். தனிமையில் இருந்த அவனுக்கு அது நிச்சயமாக மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்தது. இதுவரை தேக்கி வைத்திருந்த பேச்சினை எல்லாம் அவனிடம் பேசினான். அவனும் பொறுமையாகக் கேட்டான். அவன் திறமைசாலி போலும். நிறைய நாட்டுப்புற பாடல்கள் பாடினான். உண்பதற்கு சில வித்தியாசமான உணவுகளையும் கொடுத்தான். அவனுடைய காதல் கதைகளைக் கூறினான். இடையிடையே அழகான கவியும் படைத்தான்.

”என் விழிகளின் மூலம் 
நீ கனவு கண்டுபார்
என் அன்பு உனக்கு விளங்கும்”

       அவன் பேச்சினை ரசித்தான். இதுவரை அதிகமாக யாருடைய பேச்சினையும் கேட்டறியாத இவனுக்கு அவன் பேச்சு பிடித்திருந்தது. இரவும் பகலும் அவன் பேச்சினைக் கேட்டான். சந்தோசத்தில் இரவினில் புரண்டான். அவன் அழுக்கினை பவுர்ணமி நிலா வந்து கழுவியது. அவன்மீது அன்பு அதிகமானது. சண்டைகள் போட்டனர், சந்தோசங்களைப் பகிர்ந்தனர், இவன்மீது உரிமை எடுத்து திட்டினான். அது இவனுக்கு புதிதாக இருந்தது. அனைத்தையும் ரசித்தனர். இருவரிடமும் பரஸ்பரம் அன்பு அதிகரித்தது. திகட்டவில்லை இந்த வழிப்போக்கனுக்கு. 

”ஊமை பேசும் மொழிகளை
புரிந்து கொள்ளும் எனக்கு
நீ பேசும் மொழி 
புரிந்து கொள்ள இயலவில்லை”

       திடீரென அவன் செல்லுமிடத்திற்கான வழி ஒரு இடத்தில் பிரிந்தது.  அவனை அழைத்துச்செல்ல நண்பர்கள் நிறைய காத்திருந்தனர். தனிமையில் செல்லும் இவனுக்கு அது ஆச்சரியமாக இருந்தது. அனைவரும் சற்று நேரம் அமர்ந்து பேசினார்கள். அவன் நண்பர்களுடன் செல்லும் நேரம் நெருங்கியதால் இவனைத் தவிர்த்தான். 

       வெற்று மனிதனாக வந்த இந்த வழிப்போக்கன் திரும்பவும் வெற்று மனிதனாகவே புறப்பட்டு சென்றான். ஈசல் மடியுற மாதிரி சடக்குனு மடிஞ்சுட்டா அவனின் நினைவுகளை அவமதித்தது போலாகிவிடும். எனவே இனிமையான நினைவுகளுடன் திசை தெரியாத அவன் பயணமும் தொடர்ந்தது. கற்களும், முற்களும், கொடூர விலங்குகளும் இருக்கும் பாதையைத் தேர்ந்தெடுத்து நடந்தான். இனி யாருமற்ற தனிமைப்பாதையிலே சந்தோசமாகவே சென்றான். அவனின் நினைவுகளும் இவனுடன் பயணித்தன.

சனி, செப்டம்பர் 8

கழுதையும் குருவியும்

                             ஆளுக்கொரு உரிமை என நாடுகளுக்கிடையேயும் உலக வர்த்தக அமைப்புடனும்  போடப்படும் ஒப்பந்தத்தினை கேலி செய்யும் வகையிலும் அது ஒரு ஏமாற்று வேலை என்பதையும் சொல்லும் விதமாக ஒரு கதை. ”முதலாவது”,  “இரண்டாவது” என்று சொல்லப்படுவதன் அர்த்தமின்மையையும் இந்தக் கதையின்மூலம் விளங்கிக் கொள்ளலாம். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் அறிவொளி கற்போர் கூறிய கதையின் தொகுப்பிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. இது ஒரு எளிய கதைதான் என்றாலும் பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது.

             
     கழுதையும் குருவியும் நண்பர்களாம். இரண்டும் சேர்ந்து விவசாயம் செய்ய ஒப்பந்தம் செய்துகொண்டன. ஒப்பந்தத்தில் ஆளுக்கு ஒரு உரிமை தரப்பட்டது.