வெள்ளி, ஆகஸ்ட் 15

தேவை ஒரு மணப்பெண்


தேவை
ஒரு மணப்பெண்
கொஞ்சம் அழகுடன்
நிறைய பொறுமையுடன்

கல்யாண வியாபாரத்தில்
அதிக தொகைக்கு யாராவது
அவனை ஏலம் எடுத்துக்கொள்ளுங்கள்

உன்னை முடிந்தவரை நகைகளால்
உன் வீட்டிலிருந்து பூட்டிக்கொள்
எதற்கென்று கேட்காதே
தேவை உனக்கு பொறுமை

வீட்டிற்கு தேவையான
அத்தனையும் சீராய் கொண்டுவந்துவிடு
எல்லாம் நானே என்றால்
அவன் எதற்கு 
என்று எதிர்கேள்வி கேட்காதே
தேவை உனக்கு பொறுமை

இரவுப்பசிக்கு உன்னைக்கேட்காமல்
எடுக்க அனுமதி
ஏனென்று கேட்காதே
தேவை உனக்கு பொறுமை

புகுந்தவீட்டில் எல்லோரையும்
அனுசரித்துப்போ
ஏனென்று கேட்காதே
தேவை உனக்கு பொறுமை

வீட்டு வேலைகள் அத்தனையும்
எதிர்கேள்வி கேட்காமல் செய்துவிடு
தேவை உனக்கு பொறுமை

ஏன் லேட்டு 
ஏன் குடித்தாய்
சம்பளம் எங்கே
எதையும் கேட்டுவிடாதே
தேவை உனக்கு பொறுமை 

அவனின் காலை அமுக்கிவிடு
பாவம் அவன் மட்டும்தானே
நாளெல்லாம் வேலை பாக்குறான்
தேவை உனக்கு பொறுமை 

உன் உடல்நலத்தை உடைத்து
குடும்பத்தாரின் உடல்நலம் பேண்
தேவை உனக்கு பொறுமை 

இப்படிப்பட்ட குணவானுக்கு
தேவை ஒரு மணப்பெண்
கொஞ்சம் அழகுடன்
நிறைய பொறுமையுடனும்..!