சிறிய வயதில் காகம் வடையைக் தூக்கிக்கொண்டு போன கதையில்தான் முதன்முதலாக காகம் அறிமுகமானது. அதில் காகமானது மற்றவர்களை ஏமாற்றும் என்றே கற்பித்தார்கள். பின்பு ஒரு கதையில் புத்திசாலியாக சித்தரிக்கப்பட்டது. குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் ஒரு காகம் அலையும் எனவும் சிறிதளவு தண்ணீர் உள்ள ஒரு மண்பானையில் கல்லைத்தூக்கி போட்டு நீரை நிறையவைத்து தண்ணீர் குடித்துவிட்டு செல்லும். அப்போது முதல் காகத்தை நிறையவே நேசித்தேன். எங்கள் வீட்டு எதிரில் செல்லும் மின்கம்பியில் வரிசையாக காகம் அமர்ந்திருக்கும் அழகே தனிதான். ஆனால் இப்போது காகத்தை பார்ப்பதே அரிதாக உள்ளது. உண்மையிலேயே காகம் இனம் அழிந்துகொண்டு வருகிறதா எனத்தெரியவில்லை. வீட்டு மொட்டை மாடியில் வடாம் காயவைக்கும்போது எதுக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ காகத்திற்கு பயப்படுவார்கள். ஆனால் அந்த காகத்தினை கூப்பிட்டு விரதமிடும் நாளில் மட்டும் உணவும் வைப்பார்கள். (ஆனா வடாம் திங்கக்கூடாது.. என்ன ஞாயம் இது) சிலர் தினமும் உணவு வைப்பதை கண்டிருக்கிறேன்.