திசை தெரியாத பறவை
ஒன்று பறந்து கொண்டிருந்தது
தன் சிறகுகளை வேகமாக
உதிர்த்தபடி....
”என் விழிகளின் மூலம்
நீ கனவு கண்டுபார்
என் அன்பு உனக்கு விளங்கும்”
”ஊமை பேசும் மொழிகளை
புரிந்து கொள்ளும் எனக்கு
நீ பேசும் மொழி
புரிந்து கொள்ள இயலவில்லை”
ஒன்று பறந்து கொண்டிருந்தது
தன் சிறகுகளை வேகமாக
உதிர்த்தபடி....
எங்கே போய் சேரவேண்டும் என்பது தெரியாமலேயே பயணம் செய்தான் வழிப்போக்கன் ஒருவன். நீண்ட தனிமைப் பயணம் அது. வெற்று மனிதனாகத்தான் சென்றான். வழியில் பூஞ்சோலைகள், அருவிகள், மரங்கள், பறவைகள் என வரிசையாக ரசித்துக்கோண்டே சென்றான். இடையிடையே பழங்களை உண்டு பசியாறினான்.
ஒரு பனிக்கால காலைப்பொழுதில் இன்னுமொரு வழிப்போக்கனைக் கண்டான். தனிமையில் இருந்த அவனுக்கு அது நிச்சயமாக மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்தது. இதுவரை தேக்கி வைத்திருந்த பேச்சினை எல்லாம் அவனிடம் பேசினான். அவனும் பொறுமையாகக் கேட்டான். அவன் திறமைசாலி போலும். நிறைய நாட்டுப்புற பாடல்கள் பாடினான். உண்பதற்கு சில வித்தியாசமான உணவுகளையும் கொடுத்தான். அவனுடைய காதல் கதைகளைக் கூறினான். இடையிடையே அழகான கவியும் படைத்தான்.
நீ கனவு கண்டுபார்
என் அன்பு உனக்கு விளங்கும்”
அவன் பேச்சினை ரசித்தான். இதுவரை அதிகமாக யாருடைய பேச்சினையும் கேட்டறியாத இவனுக்கு அவன் பேச்சு பிடித்திருந்தது. இரவும் பகலும் அவன் பேச்சினைக் கேட்டான். சந்தோசத்தில் இரவினில் புரண்டான். அவன் அழுக்கினை பவுர்ணமி நிலா வந்து கழுவியது. அவன்மீது அன்பு அதிகமானது. சண்டைகள் போட்டனர், சந்தோசங்களைப் பகிர்ந்தனர், இவன்மீது உரிமை எடுத்து திட்டினான். அது இவனுக்கு புதிதாக இருந்தது. அனைத்தையும் ரசித்தனர். இருவரிடமும் பரஸ்பரம் அன்பு அதிகரித்தது. திகட்டவில்லை இந்த வழிப்போக்கனுக்கு.
”ஊமை பேசும் மொழிகளை
புரிந்து கொள்ளும் எனக்கு
நீ பேசும் மொழி
புரிந்து கொள்ள இயலவில்லை”
திடீரென அவன் செல்லுமிடத்திற்கான வழி ஒரு இடத்தில் பிரிந்தது. அவனை அழைத்துச்செல்ல நண்பர்கள் நிறைய காத்திருந்தனர். தனிமையில் செல்லும் இவனுக்கு அது ஆச்சரியமாக இருந்தது. அனைவரும் சற்று நேரம் அமர்ந்து பேசினார்கள். அவன் நண்பர்களுடன் செல்லும் நேரம் நெருங்கியதால் இவனைத் தவிர்த்தான்.
வெற்று மனிதனாக வந்த இந்த வழிப்போக்கன் திரும்பவும் வெற்று மனிதனாகவே புறப்பட்டு சென்றான். ஈசல் மடியுற மாதிரி சடக்குனு மடிஞ்சுட்டா அவனின் நினைவுகளை அவமதித்தது போலாகிவிடும். எனவே இனிமையான நினைவுகளுடன் திசை தெரியாத அவன் பயணமும் தொடர்ந்தது. கற்களும், முற்களும், கொடூர விலங்குகளும் இருக்கும் பாதையைத் தேர்ந்தெடுத்து நடந்தான். இனி யாருமற்ற தனிமைப்பாதையிலே சந்தோசமாகவே சென்றான். அவனின் நினைவுகளும் இவனுடன் பயணித்தன.