சனி, அக்டோபர் 24

பேய்க்கதை

                      ஒரு பேய்க்கதை எழுதலாம் என்று ஆசையாக மேஜையின்முன் அமர்ந்தேன். எப்படி ஆரம்பிப்பது எனத்தெரியவில்லை. பேய்க்கதைகள் நிறையப் படித்துள்ளேன். பேய்ப்படங்களும் பார்த்துள்ளேன். ஆனால் பேய் என்று எதையும் நேரிடையாகக் கண்டதில்லை. ஆனாலும் பேய் பற்றிய பயம் மனதில் எப்போதும் உண்டு. கொஞ்சம் பேப்பரும் ஒரு பேனாவையும் எடுத்து வைத்துக்கொண்டு தைரியமாக அமர்ந்தேன். அப்படியே எனக்குத்தெரிந்த ஒவ்வொரு பேய் சம்பவமாக ஞாபகப்படுத்திப் பார்த்தேன்.

                       நான் சிறுவனாக இருந்தபோது ஒரு இரவு வேளையில் துக்க செய்தி ஒன்று சொல்வதற்காக என்னையும் மற்றொரு பையனையும் பக்கத்தில் உள்ள துலுக்கன்குளம் ஊருக்கு அனுப்பிவிட்டார்கள். அப்போது தொலைபேசி வசதியெல்லாம் கிடையாது. அது ஐப்பசி மாதம் என்று நினைக்கிறேன். மழைவரும்போல இருந்தது. இரவு மணி ஒன்பது அல்லது ஒன்பதரை இருக்கலாம். காற்று கொஞ்சம் பலமாக வீசியது. எங்கள் ஊருக்கும் துலுக்கன்குளத்திற்கும் இடையில்தான் மயானம் உள்ளது. எனக்கு மனதில் பயமிருந்தாலும் கூடவே ஒரு பையனும் வருகிறான் என்ற தைரியத்தில் கிளம்பியாச்சு. மயானம் நெருங்கும்போது திரும்பிப்பார்க்ககூடாது என்று நினைத்தாலும் மயானம் பக்கம் திரும்பிப் பார்த்தேன். பிணம் ஒன்று எரிந்துகொண்டிருந்தது. மனதில் கிலி பிடித்தது. சைக்கிளை சற்று வேகமாக மிதித்தேன். கிழக்குப்பக்கம் இருந்து வீசிய காற்று சைக்கிளை நகரவிடவில்லை. மனதிற்குள் இனம்புரியாத பயம். பேய் வந்து சைக்கிளைப் பிடிக்குமோ! முடிந்தமட்டும் பெடலை மிதித்தேன். சைக்கிள் மெதுவாக நகர்கிறது. டேய்! முருகேசா.. என்று அவனை அழைத்தேன். அவன் ம்ம்.. என்ற சத்ததுடன் பயந்து என் சைக்கிளின்பின் அவன் ஒரு சைக்கிளில் வருகிறான். எப்படியோ பயத்துடனே துலுக்கன்குளம் சென்று செய்தியை சொல்லிவிட்டு ஊருக்குத்  திரும்பினோம். 

                        இப்போது மணி பதினொன்று இருக்கும். திரும்பவும் மயானத்தின் வழிதான் வரவேண்டும். இப்போது பயம் மனதில் அதிகரித்திருந்தது. வயிற்றுக்கும் தொண்டைக்கும் ஒரு உருண்டை உருண்டு கொண்டிருந்தது. அவனை முன்னே போகச்சொல்லி நான் பின்னாடியே வந்தேன். இப்போது மயானத்தில் தீ மளமளவென்று எரிந்து கொண்டிருந்தது. வெள்ளையாக புகை வேறு வந்துகொண்டிருந்தது. ஏதோ சினிமா பாடலை சத்தமாக பாடியபடி பயத்தைக் காட்டிகொள்ளாமல் ஊர்வந்து சேர்ந்தோம். 

                இதேபோல பள்ளிப்பருவத்தில் ஒருநாள் இரவு எங்கள் பாட்டி ஒரு பேய்க்கதை சொன்னாள். அது கதை என்று சொல்லவில்லை. நிஜ சம்பவம் என்று கூறினாள். எனக்கு ஆவாத்தா பாட்டி ஒருத்தி இருந்தாள். அவள் அதிகாலை நான்கு மணிக்கு குப்பை போடுவதற்காக ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடத்திற்கு சென்றாள். அப்போது கொள்ளிவாய் பேய் ஒன்று வந்து ஆவாத்தா பாட்டியின் காதில் கிடந்த நகையை பறித்துக்கொண்டது( திருட்டு கொள்ளிவாய் பேய்). அவள் பயந்து ஓடிவந்து தனது கணவனிடம் கூறினாள். 

                            அவர் என்னைப்போல் இல்லாமல் கொஞ்சம் தைரியசாலி. உடனே ஒரு போர்வையை போர்த்திக்கொண்டு அந்த இடத்திற்கு சென்றார். கொள்ளிவாய் பேய்கள் அந்த நகையை நடுவில் வைத்து சுற்றிநின்று ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தனவாம். இவரும் போர்வையைத்தூக்கி எறிந்துவிட்டு தனது வேஷ்டியை அவிழ்த்துப் போட்டுவிட்டு பேயோடு பேயாக கூட்டத்துடன் சேர்ந்து ஆடினாராம். நகையை ஒவ்வொரு பேயாகத் தூக்கிப்போட்டு விளையாடினவாம்.  இவரிடம் நகை வந்தவுடன் ஒரே ஓட்டமாக தூக்கிக்கொண்டு ஓடிவந்து விட்டாராம். 

                     இப்படியாக யோசனை செய்யும்போதுதான் வீட்டில் யாருமேயில்லை என்பது ஞாபகம் வந்தது. இப்போதும் ஐப்பசி மாதம்தான். காற்று ஊ... என்று ஊளையிட்டதுபோல வீசியது. லேசாக தூறல் விழுந்து கொண்டிருந்தது. மனதில் பயம் வந்துவிட்டது. உடம்பு பயத்தில் லேசாக புல்லரித்தது. அந்த நேரம் பார்த்து கரண்ட் கட்டாகிவிட்டது. பயத்துடன் சென்று பேட்டரியை எடுத்தேன். ஜன்னல் கதவு  மூடியுள்ளதா எனப் பார்த்துவிட்டு திரும்பவும் வந்து நாற்காலியில் அமர்ந்தேன். ஊது பத்தியின் மணம் காற்றில் கலந்து வந்தது. அது மல்லிகைப்பூவின் வாசம் தந்தது. பேயினைப்பற்றிய பயம் மனதில் வந்துவிட்டது. லேசான நடுக்கத்துடன் கரண்ட் எப்போது வருமோ என்று காத்திருந்தேன். பேய்க்கதை இன்னைக்கு எழுதவேண்டாம் என்ற முடிவுடன் அமர்ந்து இருந்தேன். சற்றுநேரத்தில் கரண்ட் வந்துவிட்டது. அப்பாடா!! என்று மேஜையில் இருந்த பேப்பரை பார்த்தேன். அதில் மேலேகண்ட பேய்க்கதை எழுதப்பட்டிருந்தது.

வெள்ளி, அக்டோபர் 2

குழந்தைநிலா ஹேமா

குழந்தைநிலா ஹேமா என்ற பெயரை பதிவுலகில் அனைவரும் அறிந்திருப்பர். வானம் வெளித்த பின்னும் என்னும் வலைப்பூவில் 2008 முதல் கவிதைகள் எழுதி வருகிறார். கவிதைகள் மட்டுமே என்பது கூடுதல் சிறப்பு. இவரின் வார்த்தை பிரயோகங்களைக்கண்டு வியக்காதோர் இருக்க முடியாது.ஒவ்வொரு கவிதையும் படிப்போரின் மனநிலைக்கு ஏற்ப அவர்களுக்கே பொருந்தியதுபோல இருக்கும். தமிழில் இவ்வளவு வார்த்தைகளா என நம்மை ஆச்சரியப்படவும் வைக்கும். இளமை விகடன், திண்ணை, அதீதம்,உயிரோசை, இன்னும் பல இதழ்கள், இணையதள இதழ்கள் போன்றவற்றில்இவருடைய கவிதைகள் வந்துள்ளன. இவருடைய கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இனிப்பு ரகம்.காதல், ஈழம், நகைச்சுவை, குடும்பம், நட்பு, விரக்தி என பல தலைப்புகளில் கவிதைகள் எழுதி திகைக்க வைப்பவர்.இவர் எட்டு வயதிலேயே எழுதிய வாழ்த்து மடல் இதோ...

சின்னஞ்சிறு
பறவை சிறகிருந்தால்
பறந்துவரும்
இன்னும் பிரிந்திருக்க
இயலாமல் வாடுகின்றோம்
அன்பே பிறந்தீரே
அனைத்தும் பெற வாழ்த்துகின்றோம்..
அன்பு மனம் அண்ணா
ஆசை மனம் அக்கா
இங்கிருந்து வாழ்த்துகிறோம்
அங்கிருந்து நலம் பெறுவீர்...

இவரின் முதல் கிறுக்கல் இதுதான். கவிதை வாசிப்பில் ஆர்வம் இருப்போர் இவரின் வலைப்பூ சென்று வாசியுங்கள். நிச்சயம் வியப்பில் ஆழ்ந்துதான் போவீர்கள். வலைப்பூவில்(இதழ்கள் தவிர்த்து) 700க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார். இன்னும் இவரைப் பற்றி நிறைய எழுதலாம். தமிழின்மீது ஆர்வம் உள்ளவர்கள் குழந்தைநிலா ஹேமாவை வாழ்த்துங்கள். அவரைப்பற்றிய சுய அறிமுகத்தில் புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. .நட்போடு ஹேமா.உயிரோசையில் இவர் எழுதிய அவள் அப்படித்தான் எனும் கவிதை

விதிகளை நிர்ணயிக்கும்
நூதன மாத்திரைகளை
விழுங்கியிருந்தாள் அவள்.
வேம்புக் குயில்
மூங்கிலுக்குள் சாரம் அனுப்ப
சுவைத்தவன் நாக்கில்
ஒட்டிக்கொள்கிறது கசப்பு.
மூக்கடைத்திருப்பவனிடம்
மணங்கள் பற்றிக் கேட்டால்...
சகாயங்களேதும் செவிநுழையா
சஞ்சாரப்  பொழுதுகளில்
வெள்ளைச்சுருட்டு
சுட்டுப் புகைக்கிறாள்
சூரியக் கண்களில்.
மூங்கிலிசைத் துவாரம்
நொதித்து நிறம்மாற
நோய் எதிர்ப்புச்சக்தி
அதிகமாய்த் தேவையென
முறைப்பாடு வைக்கிறாள்
மாத்திரைக்கும் 
பின் அவனுக்குமாய்!!!

இதுபோன்ற அறுசுவைகளையும் ருசிக்க வானம் வெளித்த பின்னும் என்னும் அவரின் வலைப்பூ சென்று வாசியுங்கள். நன்றி...

புதன், ஆகஸ்ட் 12

ஒரு கதை எழுதப்போறேன்

                     எப்படியும் ஒரு நல்ல  கதை எழுத வேண்டுமென்று ரொம்பநாளாக ஆசை. இன்றைக்குத்தான் அந்த எண்ணம் வந்தது. சிலுசிலுனு காத்து. இலேசாகத் தூறல். மயங்கும் மாலை நேரம். இப்படியான ஒரு அருமையான சூழ்நிலை அமைவது ரொம்ப கஷ்டம். இதை பயன்படுத்தாமல் விடக்கூடாது. இன்று மனைவி என்ன திட்டினாலும் சரி. கதையை எழுதி முடித்துவிடவேண்டும். பேப்பரும் பேனாவுமாக நாற்காலியில் அமர்ந்துகொண்டு கதையை யோசிக்க ஆரம்பித்தேன்.

                 ஒரு கார் வாசற்படியை முத்தமிட்டு வந்து நின்றது...ம்ம்ம்கூம்.. ஒரு பயங்கரமான காடு...ம்ம்ம்.. எப்படி கதையை ஆரம்பிப்பது எனப் பலமாக யோசித்துக்கொண்டிருந்தேன். ஒரு ஊரில் ஒரு கணவனும் மனைவியும் என்று குடும்பக்கதை எழுதலாமா!! அல்லது ஒரு பயங்கரமான காட்டுப்பங்களா என்று  பேய்க்கதை எழுத ஆரம்பிக்கலாமா! ம்ம்.. என்ன செய்யலாம்!!

               அங்க என்ன பண்ணுறீங்க? என்று மனைவியின் அதட்டல் சத்தம் கேட்டது. ஆஹா ஐடியா கிடைச்சிருச்சு. ஒரு பயங்கரமான மனைவி என்று கதையை த்ரிலிங்காக ஆரம்பிக்கலாம். உடனே எழுத ஆரம்பித்தேன்.

               சீக்கிரம் வாங்க. அழுக்குத்துணி அதிகமா இருக்கு. வந்துகூடமாட உதவி பண்ணுங்க என்று கெஞ்சலும் அதட்டலுமாக இடையிடையே மனைவியின்  சத்தம் கொல்லைப்புறத்தில் இருந்து கேட்டுக்கொண்டிருந்தது. அதை நான் அலட்டிக்கொள்ளவே இல்லை. 

               எனக்கு எப்படி இம்புட்டு தைரியம் வந்தது. என்னை நானே பாராட்டிக்கொண்டேன். இன்றைக்கு அவள் என்ன வேலை சொன்னாலும் சரி. செய்யக்கூடாது. நமக்கு கதைதான் முக்கியம். எம்புட்டு நேரம் ஆனாலும் சரி. கதையை முடித்துவிடவேண்டும்.

             நேரம் ஓடிக்கொண்டிருந்தது. கதையை அழகாக எழுதிக்கொள்வதாக நினைத்து கிட்டத்தட்ட மூன்று பக்கம் எழுதிவிட்டேன். கதையை முடிக்கும் நேரம் நெருங்கியது. இந்தக் கதையை எப்படி முடிக்கலாம் என யோசனையைத் தூண்டிவிட்டேன். ஏங்க துணியை துவைத்துவிட்டேன். வந்து அலசியாவது போடுங்க. 

               ஆங்! ஐடியா.. மனைவி வந்து கணவனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள். அவர்கள் முகத்தில் சந்தோசம் பொங்கியது என்று சந்தோசமாக கதையை முடிப்போமா அல்லது மனைவி கணவன் பிடித்திருந்த கையை விலக்கிவிட்டு தனியே நடக்க ஆரம்பித்தாள் என்று சோகமாக முடிப்போமா! என்ன செய்யலாம் என்று யோசனையில் மூழ்கினேன்.

           என் மனைவி இரும்பு வாளியை தூக்கிக்கொண்டு தூக்கிச்சொருகிய சேலையுடன் தண்ணீர் வடிய வடிய கோபப்பார்வையுடன் கையைத் தூக்கிக்கொண்டு என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள். ஆஹா! மையம் கொண்டிருந்த புயல் துரத்த ஆரம்பித்துவிட்டது என்று எண்ணிக்கொண்டே பேனாவையும் பேப்பரையும் தூக்கி கடாசிவிட்டு எழுந்து ஓட ஆரம்பித்தேன். இரும்பு வாளி என்னை நோக்கி பறந்து வந்தது. ஐயோ! என் கதை முடியப்போகிறதே....

ஞாயிறு, ஜூன் 28

எனக்கு ஒரு டொக்கு

                         

                    ஒரு ஊரில் கத்தரிக்காய் அப்பாவும் மிளகாய் அம்மாவும் இருந்தனர். அவர்களுக்கு சுண்டைக்காய் பையன். அவன் ரொம்ப சுட்டிப்பையன். அவர்களுக்கு உள்ளங்கை அளவு நிலம் இருந்தது. அதில் திணை பயிரிட்டிருந்தனர். அதில் குருவி வந்து திணையை தின்றது. அதை விரட்ட கத்தரிக்காய் அப்பா சுண்டைக்காய் பையனை காவலுக்கு அனுப்பினார்.
         சுண்டைக்காய் பையனும் குருவியை ச்சூ.. ச்சூ... என்று விரட்டிப்பார்த்தான். குருவிகள் கண்டுகொள்ளாமல் உணவினைத் தின்றது. சுண்டைக்காய் பையனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. கடவுளிடம் வேண்டினான். கடவுள் வந்து அவன் கஷ்டத்தினை உணர்ந்து நீ யாருக்கு டொக்கு என்று சொல்கிறாயோ அவர்கள் தூங்கி விடுவார்கள் என்ற வரத்தினை கொடுத்து மறைந்துவிட்டார்.
                       வயலில் மேயும் குருவிகளைப்பார்த்து “எனது வயலில் மேயும் குருவிகளுக்கு ஒரு டொக்கு என்றான்” குருவிகள் அனைத்தும் தூங்கிவிட்டன. சந்தோசமாக வீட்டிற்கு வந்தான். மிளகாய் அம்மா மீன்குழம்பு சமைத்திருந்தார்கள். அவன் பசியுடன் அமர்ந்தான். புளிய மரத்தின் இலையில் ஒரு பருக்கையும் ஒரு சொட்டு மீன்குழம்பும் வைத்தார்கள். அவன் கோபமாகி எனக்கு மீன்குழம்பு நிறையவைக்காத கத்தரிக்காய் அப்பனுக்கும் மிளகாய் அம்மாவுக்கும் ஒரு டொக்கு என்றான். இருவரும் தூங்கிவிட்டனர்.
                          பசியுடன் வெளியே வந்தான். ஒரு கல்யாணவீட்டில் புகுந்து நிறைய சாப்பிட்டான். இவன் சாப்பிடும் அளவைப்பார்த்து பயந்து கல்யாணவீட்டினர் துரத்தினர். இவன் கோபமாக எனக்கு உணவு தராத கல்யாண வீட்டினருக்கு ஒரு டொக்கு என்றான். கல்யாண வீட்டில் அனைவரும் தூங்கிவிட்டனர். மணப்பெண் மணமகன் காலடியிலேயே விழுந்து தூங்கிவிட்டாள். பாவம் இப்படி காலில் விழுந்தால்தான் உண்டு.
                       நிறைய உணவு உண்டதால் வயிறு பெரிதாகி உருண்டு உருண்டு வந்தான். ஒரு பள்ளத்தில் விழுந்து மாட்டிக்கொண்டான். ஒரு பெரியவர் அந்த வழியாக வந்தார். அவரிடம் காப்பாற்றும்படி கேட்டான். அவர் காதில் வாங்கவில்லை. என்னைக் காப்பாற்றாமல் போகும் மொட்டைத் தாத்தாவுக்கு ஒரு டொக்கு என்றான். அவரும் தூங்கிவிட்டார். கஷ்டப்பட்டு பள்ளத்தில் இருந்து வெளியே வந்து ஒரு மரத்தடியில் அமர்ந்தான். அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. எல்லோரையும் டொக்கு சொல்லி தூங்கவைத்து விட்டோம். எனக்கு சொன்னால் என்னவாகும் என நினைத்துப்பார்த்தான். எனக்கு ஒரு டொக்கு என்றான். சுண்டைக்காய் பையனும் தூங்கிவிட்டான்.
                   இந்தக்கதையை நீங்கள் ரசித்து படித்திருந்தால் பதினைந்து வயது குறைந்து விடுமாம். நான் இரண்டு தடவை ரசித்துப் படித்ததால் இப்போது தொட்டிலில் தூங்கும் அளவுக்கு வயது குறைந்துவிட்டது. கதையை ரசித்து படிக்காதவர்களுக்கு ஒரு டொக்கு....

சனி, ஏப்ரல் 11

அறிவியல் ஆனந்தம் 7

அறிவியல் ஆனந்தம் 1
அறிவியல் ஆனந்தம் 2
அறிவியல் ஆனந்தம் 3
அறிவியல் ஆனந்தம் 4
அறிவியல் ஆனந்தம் 5
அறிவியல் ஆனந்தம் 6

மாம்பழத்தினுள் வண்டு எப்படி செல்கிறது? அது எவ்வாறு சுவாசிக்கும்?
 
அறிவியல்
மாம்பழத்தினுள் வண்டு உட்புகுவது கிடையாது. மாம்பூவீலேயே வண்டு முட்டை காணப்படும். மாம்பூ காயாகி, கனியாக மாறும். அந்தப்பூவிலுள்ள முட்டையும் தன் வாழ்க்கைச்சுழற்ச்சியை முடித்துக்கொண்டு பழத்திற்குள்ளேயே சிறிய வண்டாக மாறும். சுவாசித்தல் என்றாலே உணவுப்பொருள்களைச் சிதைத்து ஆற்றல் உற்பத்தி செய்யும் செயலியல் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி ஆக்ஸிஜன் உதவியுடனும், இல்லாமலும் நடைபெறும். இந்த வண்டானது ஆக்ஸிஜன் உதவியில்லாமல் பழச்சர்க்கரையை சிதைத்து கிடைக்கும் குறைந்த அளவு சக்தி கொண்டு வண்டு ஓரிடத்தில் முடங்கி கிடக்கும். (மனிதர்களுக்கு மனசுன்னு ஒன்னு எப்படி உள்ள போச்சு..! அது எப்படி சுவாசித்து உயிர் வாழ்கிறது..!)

எறும்புகள் ஏன் சாரை சாரையாகப் போகின்றன?
அறிவியல்
எறும்புகளின் உடலில் பெரமோன் (Pheromone) என்ற வேதிப்பொருள் சுரக்கிறது. இந்த வேதிப்பொருள்களின் தூண்டுதல்களை உணர்ந்துகொண்டே ஒரு எறும்பை பின்தொடர்ந்து மற்றொரு எறும்பு பின்செல்கிறது. ( ஒரு அழகான பெண்ணின் பின்னால் ஆண்கள் பின்தொடர்வதற்கு என்ன வேதிப்பொருள் காரணம் எனத்தெரியவில்லை..!!)

இருளில் வளரும் தாவரங்கள் உயர்ந்து காணப்படுவது ஏன்?
அறிவியல் ஆனந்தம்
இருளில் வளரும் தாவரங்கள் உயர்ந்து காணப்படுவதற்கு ஜிப்ரலின் (Gibberellin) என்ற வளர்ச்சி ஹார்மோன்தான் காரணம். சூரிய ஒளி இல்லாதபோது இந்த ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கும்.


கனகாம்பரம் வாடினாலும் அதன் நிறம் மாறுவதில்லையே ஏன்?
அறிவியல்
பூவிற்கு நிறம் கொடுப்பது ஆந்தோசைனின், சாந்தோஃபில் முதலிய நிறமிகள்தான். பூ வாடுதல் எனப்படுவது அதிலிருந்து நீர் இழந்து செல்கள் சுருங்குவது ஆகும். கனகாம்பரம் பூவில் நீர் அதிகம் இல்லை(வாடாமல் காகிதப்பூ போல). ஆதலால் அது நீர் இழப்பது குறைவு. எனவே அதன் செல்களிலுள்ள நிறம் மாறுவது இல்லை.

ஞாயிறு, மார்ச் 22

சாணிவண்டு

               சாணி வண்டு ஏன் இவ்வளவு பலம் பொருந்தியதாக உள்ளது என பட்டோங்கோ இன மக்கள் கூறும் கதை இது. கதை சொல்லி நிக் கிரீவ்ஸ் எழுதிய சிங்கம் பறந்தபோது என்ற நூலில் இருந்து...


            முன்னொரு காலத்தில் சாணி வண்டும் வண்ணத்துப்பூச்சியும் சிறந்த நண்பர்கள். எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்றனர். ஒருநாள் மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தபோது இவற்றை முதல் மனிதனும், முதல் பெண்ணும் பார்த்தார்கள்.
          “என்ன அழகிய வண்ணத்துப்பூச்சி!” என்று வியந்தனர். சற்று நேரம் அங்கேயே நின்று அதன் அழகை ரசித்தனர். அவர்கள் போனதும் சாணி வண்டு, வண்ணத்துப்பூச்சியிடம், “ எப்போது இவர்கள் உன்னைப் பார்த்தாலும் நின்று ரசிக்கின்றனர். என்னைப்பார்ப்பதே கிடையாது. அவ்வளவு அசிங்கமா நான்?” என்று கேட்டது.
         வண்ணத்துப்பூச்சி, “சீச்சி! அப்படியில்லை. அவர்களைக்கவரும் எதுவும் உன்னிடமில்லை! அவ்வளவுதான்! மனிதர்கள் அழகையும், பலத்தையும் ரசிப்பர். நீ பலமுள்ள பூச்சியாக மாறினால் உன்னையும் கண்டு ரசிப்பார்” என்றது.
          சாணி வண்டு வருத்தத்துடன், “நான் ஒருபோதும் பலசாலியான பூச்சியாக மாறமாட்டேன்” என்றது.
           வண்ணத்துப்பூச்சி, “ நிச்சயம் நீ பலசாலியாக ஆவாய்! ஒன்றை மட்டும் நினைவில் கொள்! முயற்சி செய்யாமல் எந்தப்பலனும் கிடைக்காது. முயற்சி செய் பலன் கட்டாயம் கிடைக்கும்!” என்றது. சாணிவண்டும் முயற்சி செய்ய முடிவெடுத்தது.
              உடற்பயிற்சி செய்து உடலைப்பலமாக்க முயற்சித்தது. விடாமல் முயற்சி செய்ததன் பலனாக பலமான பூச்சியானது. தன் நண்பன் வண்ணத்துப் பூச்சியிடம் திரும்ப வந்தது. தன் பலத்தைக்காட்ட தன்னைவிட பல மடங்கு பெரியதான் உருண்டைகளாக யானைச்சாணத்தை உருட்டிக்காட்டியது. பின்னாங்கால்களாலேயே அவற்றை நகர்த்திச் சென்றது.
            சாணிவண்டு இவ்வாறு செய்து காட்டியபோது அந்தப்பக்கமாக முதல் மனிதனும், முதல் பெண்ணும் அங்கே வந்தனர். சாணிவண்டின் பலத்தைப்பார்த்து வியந்தனர். அருகிலிருந்த வண்ணத்துப்பூச்சியைப் பார்க்கவே இல்லை. சாணி வண்டுக்கு ஒரே மகிழ்ச்சி. அன்று முதல் சாணத்தை உருட்டி வருகிறது.
             சாணிவண்டு தன் பலத்தை பறைசாற்ற இப்படிச் செய்வதில்லை. தன் முட்டைகளை இந்த சாணி உருண்டைகளில் மறைத்து வைத்து தன் எதிரிகளிடமிருந்து காத்துக் கொள்கிறது.

கூடுதல் தகவல் : சாணிவண்டின் அறிவியல் பெயர் பேக்கிலோமெரா பெமொராலிங். இது குழுவாகவே இருந்து உண்ணும். இதன் ஆயுட்காலம் 2 வருடங்கள். அடைகாக்கும் பருவம் 1 வாரம். இவற்றில் 750 வகைகள் உண்டு. ஆப்பிரிக்காவில் இவை பரவிக் காணப்படுகின்றன.இதற்கு மோப்ப சக்தி அதிகம். ஆண் வண்டு “கல்யாணப்பந்து” தயாரித்து உருட்டும். அப்போது பெண் கவரப்படும். இனச்சேர்க்கை முடிந்தவுடன் கல்யாணப்பந்தை சாப்பிட்டுவிடும். தேன்நிலவு முடிந்தவுடன் இரண்டு வண்டுகளும் சேர்ந்து ஒரு சாணப்பந்து தயாரித்து அதை புதைத்து அதில் ஒரே ஒரு நீள்வட்ட வெள்ளை முட்டை இடும். 2 அல்லது 3 வாரங்களுக்குள் லார்வா பியூப்பாவாக மாறி சாணிவண்டாக மாறிவிடும். கீரியும் புனுகுப்பூனையும் இந்த லார்வாக்களை தேடித்திரிந்து உண்ணும்.
நன்றி : நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா

சனி, மார்ச் 21

காக்காச்சோறு

           விமலனின் காக்காச்சோறு தலைப்பு என்னைக் கவர்ந்தது. இந்த தலைப்பைக் கேள்விப்பட்டவுடன் கவிஞர்  அப்துல் ரகுமானின் காக்கைச்சோறு எனும் கவிதை நூல்தான் எனக்கு ஞாபகம் வந்தது. காக்கைகள் நாம் உணவு வைத்தவுடன் கூட்டமாக வந்து தன் உணவைப்பகிர்ந்து கொள்ளும் என்றுதான் நாம் நினைக்கிறோம். அதில் விஷம் வைத்திருக்கலாம் என்ற எண்ணத்தில் காக்கைகள் தன் இனத்தைக் கூப்பிட்டு சோதித்துப்பார்க்கும் என்று கவிதை நடையில் நாம் யோசிக்காத தெரிந்திருக்காத வகையில் அப்துல் ரகுமான் புது விளக்கம் தந்திருப்பார்.

              விமலனின் காக்காச்சோறு நூலில் இடம்பெற்ற  அதே தலைப்பிலான கதையில் காக்காவிற்கு சோறு வைப்பதும் அது சினேகத்துடன் பழகுவதும் அழகான நடையில் எழுதியிருப்பார். கதையின் இடையில் அரிசி ரகங்களை சொல்லி அவர் அடிக்கும் கமெண்ட் அருமை. கதை முடிவில் அவர்கள் டவுனுக்கு போனதும் காட்சிகள் மாறி காக்கைகளுக்கு நேரும் கதியினை எழுதி முடித்திருப்பார்.

                 நீர்க்குமிழி எனும் சிறுகதையில் தாலி அறுத்தவளின் மனநிலையை அழகாக விவரித்திருப்பார். கிராமத்தில் இதுபோன்ற நிலைமை இன்னும் தொடரத்தான் செய்கிறது. ராமு அண்ணன், அவரின் பாட்டி போன்றோரின் உழைப்பினை கிராமத்துப்பாணியில் விமலன் அழகாகக் கூறியுள்ளார். முடிவில் “தாலி அறுத்தவ தலைவிதி அதுதான்” எனும்போது நெஞ்சு கனக்கிறது.

             இடக்கரடக்கல் எனும் கதையில் வனராஜன் எனும் பெயரை அறிமுகப்படுத்தும் பாங்கு அலாதியானது.

         வாய்க்கரிசி எனும் கதையில் ஒரு டெய்லரின் அன்றாட நடவடிக்கைகளை துல்லியமாக விவரித்திருப்பார். எங்கள் ஊரில் நான் பார்த்த ஒரு டெய்லரும் இதே பாணிதான். இந்தக்கதையில் வரும் டெய்லர் குடிகாரராக மாறவும் வீட்டின் நிலைமையே மாறுகிறது. தினமும் அவன் டீக்குடிக்கும் கடை, அங்கு டிபன் சாப்பிட அவன்படும்பாடு, ஒரு கட்டத்தில் அவனுக்கு டீ கொடுக்கக்கூடாது என முடிவெடுக்கும் முதலாளி , டெய்லரின் பிள்ளைகள் என கதையின் ஒவ்வொரு பாத்திரமும் கவனத்தை ஈர்க்கிறார்கள். இறுதியில் அவன் இறந்ததும் மனைவியும், பிள்ளைகளும் வாழ வேண்டிய வயது என முடித்திருப்பார்.

       வேனற்காடு எனும் கதை வித்தியாசமான கோணத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார் விமலன். நல்ல எழுத்து நடை. சந்தேகப்புத்தி எனும் விஷவிதை ஒட்டு ரகம், வீரிய வித்து, கலப்பின வித்து எதனிதனையும் தாண்டியதாக அவனுள் விழுந்து துளிர்விட்டிருந்தது எனும் அவரது நடை வாசிக்க சுகமானது.


                    காக்காச்சோறு நூலில் மொத்தம் பதினேழு கதைகள். ஒவ்வொரு கதையை பற்றியும் எழுத எனக்கு ஆசைதான். அது படிப்பவர்களுக்கு அயற்ச்சியைத் தரும். விமலனின் கதையில் நாம் அன்றாடம் பார்க்கும் காட்சிகள், டீக்கடை, உடன் பணியாற்றுபவரின் மனநிலை என ஒவ்வொன்றையும் நுணுக்கமாக காட்சிப்படுத்தி இருப்பார். இந்த நூலில் சில கதைகளின் தலைப்பு நமக்கு ஆச்சர்யமூட்டும். ஒத்தப்பனை, உப்பாங்காத்து, உள்கூடு, விருசல், இடக்கரடக்கல், சனாதனங்கள் எனப்பட்டியல் நீளும். வம்சி புக்ஸ் நிறுவனத்தார் விமலனின் காக்காச்சோறு சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்கள்.

புதன், பிப்ரவரி 11

அப்பாவி அப்புச்சாமி

தன் நண்பனிடம் பீற்றிக்கொண்டிருந்தான் அப்புச்சாமி.

என் மனைவி என்னைக்கண்டாலே பயப்படுவா தெரியுமா!
பகல் முழுவதும் வேலை செய்கிறாளே.. பாவம்னு நான்தான் காலையில் அவளுக்கு டீ போட்டு கொடுத்து எழுப்புவேன். அப்புறம் அவளுக்கு வெந்நீர் வைத்துக்கொடுத்துவிட்டு காய்கறி வெட்ட ஆரம்பித்துவிடுவேன்.

ஓ! அதுசரி.. மனைவிக்காக இதுகூட செய்யக்கூடாதா! என்றான் நண்பன்.

காய்கறி வெட்டியபின் போனால்போகுது என்று சமையலையும் நானே செய்துவிடுவேன். என் சமையலை சாப்பிட்டுதான் அவள் இப்படி அழகா இருக்கிறாள் தெரியுமோ! என்றான் அப்புச்சாமி.

அப்போ உன் மனைவி என்னதான் செய்வாள் என்று அப்பாவியாக கேட்டான் நண்பன்.

அவளுக்கு நிறைய வேலை இருக்கும். அதான் பிள்ளைகளைக்கூட நானே பள்ளிக்கு கிளப்பிவிடுவேன் என்று அப்புச்சாமி கூறினான்.

ஆமா.. உன்னைக்காண்டாலே உன் மனைவி பயப்படுவான்னு சொன்னியே!


ஆமா! என் மனைவி என்னையைக் கண்டாலே பயப்படுவா! அதான் நான் காலையில் எல்லா வேலையும் முடித்துவைத்துவிட்டு உடனே ஆபிஸுக்கு கிளம்பிவிடுவேன். அப்புறம்தான் அவள் எந்திருப்பாள் தெரியுமா?

ஓ! உன் மனைவிக்கு உன்மேல் அவ்வளவு பயமா! என்று ஆச்சரியப்பட்டன் நண்பன், சரி...மாலையிலாவது அவள் வேலை செய்வாளா?


நோ..நோ.. அவள் வேலை செய்து ஏதாவது தப்பாகிவிட்டால் நான் பொல்லாதவனாகிவிடுவேன். அதான் நான் வரும்வரை அவள் எந்த வேலையும் செய்யமாட்டாள். 

ஓஹோ... நீ வந்தப்புறம் செய்வாளோ?

என்ன இப்படி கேட்டுவிட்டாய். நான் வந்தப்புறம் அவள் எதுக்கு வேலை செய்யனும். நானே பார்த்துக்கொள்ள மாட்டேனா!
மாலையில் வந்தபின் பாத்திரம் விளக்கிவைத்துவிட்டு டீ போட்டு கொடுப்பேன். என்னுடைய டீயை ரசித்து குடிப்பாள் தெரியுமா!

அவ்வளவு நல்லா டீ போடுவியோ என்றான் நண்பன்.


பின்ன டீ நல்லாயில்லைனு அவ சொல்லிட்டா பின்ன எப்பவுமே போடமாட்டேன் என்று கோபமாக அப்புச்சாமி சொன்னான்.
இரவு டிபன் நான் நல்லா செய்வேன்னு என் மனைவி அடிக்கடி சொல்வாள். தினமும் விதவிதமா அவளுக்கு சமைத்து கொடுப்பேன். இதுக்காகவே சமையல் குறிப்பு பத்து புத்தகம் வைத்திருக்கிறேன் தெரியுமா! அப்புறம் டிவியில் சமையல் நிகழ்ச்சி போட்டால் தவறாம நான் பார்ப்பேன் என்று அப்புச்சாமி தம்பட்டம் அடித்தான்.

அவன் நண்பனுக்கு சிரிப்பதா அழுவதா எனத்தெரியாமல் முழித்தான்.

நீ சொல்வதைப்பார்த்தால் உன் மனைவி உனக்கு பயப்படுற மாதிரி தெரியலையே.
பயங்கரமா பயப்படுவா..! அதான் இரவுகூட அவ என்கூட தூங்க மாட்டாள். நான் வராந்தாவில் படுத்துக்கொள்வேன். என்னைக் கண்டால் அவளுக்கு அவ்வளோ பயம் என்று சொல்லிக்கொண்டே போனான் அப்புச்சாமி.

நண்பன் தலையைச்சொறிந்து கொண்டான். 

அப்போது அப்புச்சாமியின் மனைவியின் குரல் கேட்டது.

இன்னுமா பேசிக்கிட்டு இருக்கீங்க. வந்து பிள்ளைகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுங்க என்று கத்தினாள்.

பார்த்தியா நண்பா.. வீட்டுபாடம் அவள் சொல்லிக்கொடுத்தால் மார்க் குறைஞ்சிரும்னுதான் என்னைச் சொல்லி கொடுக்கச் சொல்றா. என்மீது அவளுக்கு அவ்வளவு பயம் .


ஆமா அப்புச்சாமி . உண்மையிலேயே  உன்மீது உன் மனைவிக்கு ரொம்பவும் பயம்தான். கொஞ்சம் கோவம் வராமல் பார்த்து நடந்துக்க என்று நண்பன் அப்புச்சாமியை பார்த்து கவலைப்பட்டான்.


அப்புறம் நண்பா.. நீதான் நிறைய ஊர் சுத்துறயே... அதனால் எங்காவது ”வெயிட்லெஸ் பூரிக்கட்டை கிடைச்சா ஒன்னு வாங்கிட்டு வா” என்று அப்பாவியாகத் தலையைத் தேய்த்துக்கொண்டே அப்புச்சாமி கூறவும் அவன் மனைவியின் குரல் திரும்பவும் ஒலிக்கவும் சரியாக இருந்தது. 
இதோ வந்துட்டேன்  என்று அப்புச்சாமி வேகமாக வீட்டிற்குள் ஓடினான்.

ஞாயிறு, பிப்ரவரி 1

தாடியுள்ள பெண்கள்

                          ஆண்களுக்கு மட்டும் அழகா தாடி மீசை முளைக்குதே. பெண்களுக்கு ஏன் முளைப்பதே இல்லை!! என்று நானும் விவரம் தெரிந்த நாள் முதல் யோசித்ததுண்டு. ஹார்மோன்கள் ,உடற்கூறு என்று பல காரணங்கள்
 கூறப்பட்டாலும் பெண்களுக்கும் தாடி, மீசை முளைத்தால் இன்னும் அழகாக இருப்பார்கள் அல்லவா! மீசையை முறுக்கிக்கொண்டு பெண்கள் நடந்தால் இன்னும் கூடுதல் அழகுதானே. அந்தப்பயத்திலேயே ஆண்களும் பெண்களிடம் வாலாட்டமாட்டார்கள். கடவுளுக்கு இரக்கமே இல்லையா என்று நினைத்ததுண்டு. ஆண்கள் தினமும் தாடியை ஷேவ் செய்வதற்கே கால்மணிநேரம் ஆகிறது. பெண்களுக்கும் தாடி முளைத்தால் தாடியை இன்னும் அழகாக்கவேண்டும் , தேவர்மகன் மீசை போன்று ஸ்டைலாக ஏதாவது மீசை வைக்கவேண்டும் என்று பியூட்டி பார்லரில் இன்னும் கூடுதல் நேரம் செலவழிப்பார்கள் என்றுகூட மீசை, தாடி முளைக்காமல் இருந்திருக்கலாம் என நான் எண்ணுவதுண்டு. ஆனால் வெரியர் எல்வினின் உலகம் குழந்தையாக இருந்தபோது என்னும் நூலைப்படித்தபின் காரணம் புரிந்தது. வேடிக்கையான கதைதான்.
                         ஆதிகாலத்தில் பெண்களுக்கும் ஆண்களைப்போன்று தாடியும், மீசையும் இருந்தன. அக்காலத்தில் புலியே காட்டு விலங்குகளின் அரசன். இந்தப்புலி அரசனுக்கு ஒரு மகன் இருந்தானாம். மகனுக்கு மணம் முடிக்க பெண் தேடினான் அரசன். காட்டு விலங்குகளிடம் ‘ அழகிய பெண் ஒருத்தி கிடைத்தால் என் மகனுக்கு அவளையே மணமுடிப்பேன். அவளே அரசனின் பிரியமான மருமகள்; காட்டின் இளவரசியும் அவள்தான்’ என்றது புலியரசன்.
                     பெண் ஆடு ஒன்று இந்த அறிவிப்பை கேட்டதும் தன் எஜமானியிடம் சென்றது. “அம்மா, உன் அழகிய மீசை, தாடியை  எனக்கு கடனாகக் கொடு. நான் புலியரசனின் மனதை வென்று அவன் மருமகளான பின் இரண்டு அல்லது நான்கு நாட்களில் மீண்டும் வந்து உன் மீசை, தாடியை உன்னிடமே ஒப்படைக்கிறேன்.” என்றது ஆடு. எஜமானியும் தனது தாடி மீசையை வெட்டி எடுத்து ஆட்டிற்கு ஒட்டவைத்து அழகாக்கினாள். ஆட்டை வழியனுப்பியும் வைத்தாள். இப்போது எஜமானி அம்மா மீசை, தாடி இல்லாமல் அசிங்கமாக இருந்தாள். சென்ற ஆடும் புலியரசனின் மகளைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்தது. ஆடு மீண்டும் திரும்பவேயில்லை. வெட்டப்பட்ட தாடி, மீசையும் மீண்டும் முளைக்கவேயில்லை. அது முதல் பெண்களுக்கு தாடி, மீசை முளைப்பதே இல்லையாம். பின்னாளில் அதுவே அழகாகிவிட்டது போலும். 
    இந்தக் கதையைப் படித்தபின்பு வீட்டுக்காரி மீசையை முறுக்கிக்கொண்டு என்முன்னால் காபியை கொண்டுவந்து நிற்பதுபோன்று நினைத்துப்பார்த்தேன். பயங்கர காய்ச்சல் வந்துவிட்டது.

சனி, ஜனவரி 31

நான் யார்?

2175ம் ஆண்டு  ஒருநாள்  மாலை 5.00 மணி :
மூளை மாற்று அறுவை சிகிச்சையில் பெரிய கில்லாடிதான் விஷ்ணு. இவர் ஒருவர்தான் இந்தியாவிலேயே மிகச்சிறப்பாக இந்த அறுவை சிகிச்சையை செய்யக்கூடியவர். அவரைத்தேடி உடம்பெல்லாம் மூடிக்கொண்டு ஒருவர் வந்தார்.
வணக்கம் சார்(நல்லவேளை... தமிழ் இன்னும் வாழ்கிறது) என்னை ஞாபகம் இருக்கிறதா?
நன்றாக ஞாபகம் இருக்கிறது சதிஷ். உங்களை மறக்க முடியுமா. ஆறு மாதத்திற்கு முன்னாடிதானே உங்களது மூளையில் அறுவை சிகிச்சை செய்தேன். எப்படி இருக்கிறீர்கள்?
ம்.. நலம்தான். ஆனால் என் மூளைதான் நான் சொல்வதை கேட்க மாட்டேங்குது.
விஷ்ணு சிரித்தார். நீங்கள் சொல்வதை மூளை கேட்கவில்லையா!!
ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கவேண்டும் என தீர்மானிப்பதே மூளைதான். அதன் சொல்படிதான் நீங்கள் நடந்து கொண்டிருக்கிறீர்கள்.
அப்போ நான் யார் டாக்டர்!
புரியவில்லையே என்றார் விஷ்ணு.
மூளை சொல்படிதான் நான் கேட்கவேண்டும் என்றால் நான் யார். நான்தான் மூளையா!  பிறகு ஏன் நான் சொல்வதை மூளை கேட்கவில்லை.
விஷ்ணு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தார். நீங்கள் ஏதோ சொல்ல வருகிறீர்கள். எனக்கு புரியவில்லை என்றார்.
எனக்குள்ள பிரச்சனையை தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். ஆறு மாதத்திற்கு முன் என்னால் கடந்த ஒரு வருடமாக சரியாக எழுதவோ, வாசிக்கவோ முடியவில்லை. மேலும் எனக்கு பிடித்த பாடகர்களின் பாடலை கேட்கும்போது மூளை தன் கவனத்தை மாற்றிவிடுகிறது. எனக்கு பிடித்த சாப்பாட்டை சாப்பிட முடியவில்லை என்ற பிரச்சனைகளுடன் நான் இங்கு வந்தேன்.
ஆமாம் .. நன்றாக ஞாபகம் உள்ளது . உங்களது மூளையில் உள்ள நியூரோடிரான்ஸ்மீட்டரில் பிரச்சனை. மேலும் விசுவல் சிஸ்டம், சினாப்ஸ் சரியாக இயங்கவில்லை என பல பிரச்சனை இருந்தது. அதைத்தான் நான் சரிபண்ணி விட்டேனே என்றார் விஷ்ணு.
சரிதான் டாக்டர். நீங்கள் ஆப்பிரேசன் பண்ணிய நாளிலிருந்து நான்கு மாதங்கள் எந்த பிரச்சனையும் எனக்கு வரவில்லை. நீங்கள் கொடுத்த மருந்தையும் தவறாமல் சாப்பிட்டு வந்தேன். ஆனால் இந்த இரண்டு மாதங்களாக என் மூளை எனது கட்டுப்பாட்டில் இல்லை.
டாக்டர் சிரித்தார். தவறாகச் சொல்கிறீர்கள். மூளையின் கட்டுப்பாட்டில் நீங்கள் இல்லை என்று சொல்லுங்கள்.
ஏதோ ஒன்று டாக்டர். எனக்கு பிடித்ததை என்னால் செய்யமுடியவில்லை. செய்யவிடாமல் மூளைத் தடுக்கிறது.
எனக்கு புரிகிறது. மீண்டும் மூளையில் உள்ள நியூரான்களில் ஏதோ பிரச்சனையாகி இருக்கும். கவலைப்படாதீர்கள். சரிப்படுத்திவிடலாம்.
அப்படியே சாய்ந்து அமருங்கள். இப்போதே ஆப்பிரேசன் செய்து அரை மணி நேரத்தில் சரிசெய்கிறேன். சதீஷுக்கு ஏதோ மயக்க மருந்தை செலுத்திவிட்டு ஸ்டீரியோடேக்டிக் சர்ஜரி போன்ற ஏதோ செய்ய ஆரம்பித்தார். மூளையின் நியூரான்களை ஆராய்ந்தார். நிறைய ஒயர் கனெக்‌ஷன் பண்ணியிருந்தார். நியூரான்களின் நினைவுகளை கம்ப்யூட்டர் மொழியில் மொழிபெயர்த்தார். முடிவுகளைப் பார்த்தபின் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தார்.
மூளையின் நினைவுகளில் எனக்கு இந்த உடல் பிடிக்கவில்லை. அதனால் என்னால் சிறப்பாக செயல்படமுடியாது என்று இருந்தது. அவரின் மூளை பற்றிய ஆராய்ச்சிக்கு ஒரு அருமையான மூளை கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை அவர்விட தயாரில்லை. மூளைக்கு சில சமிஞ்கைகளை கொடுத்துப்பார்த்து அதன் முடிவுகளை பெற்றார்.
எனக்கு இந்த சதீஷின் உடல் பிடிக்கவில்லை. என்னை வேறொரு நல்ல உடம்பில் அதுவும் அழகான உடம்பில் பொருத்தினால்தான் நான் இன்னும் சிறப்பாக செய்ல்படுவேன். அதுவரை காலவரையற்ற ஸ்டிரைக் என்றது மூளை. விஷ்ணு ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்தார். உடனே அவர் மூளை வேகமாக வேலை செய்தது.
சதீஷின் மூளையை எடுத்து பத்திரப்படுத்தினார். அவனது உடல் தூக்கி எறியப்பட்டது. வேறொரு நல்ல அழகான உடல் கிடைக்குவரை காத்திருக்கவேண்டும் என்று விஷ்ணு முடிவு செய்தார்.
இப்போது மூளை யோசித்தது. இதுவரை நான் சதீஷ். வேறொரு உடலில் என்னை பொருத்தினால் இனி நான் யார்?

வெள்ளி, ஜனவரி 23

பெண்பாவம்


படித்த பட்டங்கள்
பரணில்
தூங்குகின்றன

வேலைகளில்
பெரிதாய் மாற்றமில்லை
காலையில் காபி போடுவதில்
ஆரம்பித்து
இரவில் கால் அமுக்குவதில்
முடிகிறது

பாரதிகண்ட புதுமைப்பெண்
நிமிர்ந்த நடை
நேர்கொண்ட பார்வை
நான் நடந்தால் மட்டும்
திமிர்பிடித்தவள்

ஆனாலும்
நவீன ராமன்கள்
நல்லவர்கள்தாம்
வாங்கிய தட்சணைக்கு
விறகைத் தேடுவதில்லை
சிலிண்டர்தான்..!


ஞாயிறு, ஜனவரி 18

பழகிய நாட்கள்

                          இரவு புரண்டு படுத்துப்பார்த்தேன். தூக்கம் வரவில்லை. நான் அடுத்து அப்பா, அம்மா அதன்பின் தங்கை என்று வரிசையாக படுத்துத்தான் தூங்குவோம். தனியாக படுக்கையறை என்று எதுவும் கிடையாது. தரையில் வரிசையாக போர்வை விரித்து நான்கு தலையணைகளையும் வரிசையாக போட்டு எல்லோரும் ஒன்றாகத்தூங்குவோம். எனது கல்லூரி நாட்களிலும் தனியாகத் தூங்கவேண்டும் என்ற எண்ணம் வந்ததில்லை. அவர்களைவிட்டு என்னால் தூங்கவும் இயலாது. கண்களில் நீர் வடிந்தது. துடைக்க மனமின்றி படுத்திருந்தேன். 
                        என்னைப்போல்தான் எல்லோரது மனநிலையும் இருக்கும் என்று எனக்குத்தெரியும். ஆனால் எல்லோருமே தூங்குவது போலவே படுத்திருந்தோம். சிறிது நேரத்தில் யாரோ ஒருவரின் விசும்பல் சத்தம் கேட்டது. நிச்சயம் அம்மாவாகத்தான் இருக்கும். அப்பா எந்தவிதமான துன்பத்தையும் அடக்குபவர். ஆனால் அவரது கண்ணிலும் கண்ணீர் கசிந்துகொண்டிருப்பதை நிச்சயம் என்னால் உணரமுடிந்தது.
                    அன்று காலையில்தான் தங்கையை பெண்பார்க்க மானாமதுரையில் இருந்து வந்திருந்தார்கள். மாப்பிள்ளை பையனுக்கு மின்சார வாரியத்தில் வேலையாம், கொஞ்சம் குண்டாக இருந்தார். தங்கைக்கு முழுதாக மாப்பிள்ளையை பிடிக்கவில்லை. இதோடு ஆறாவதாக பெண்பார்க்கும் படலம் நடந்துவிட்டது. ஏதோ சில காரணங்களால் ஒவ்வொரு இடமும் நின்றுவிட்டது.அதனாலோ என்னவோ மாப்பிள்ளை எனக்குப்பிடித்து விட்டது என தங்கை கூறினாள். 
              ஒவ்வொருவராக தங்கையிடம் வற்புறுத்தி கேட்டாகிவிட்டது. குண்டாக இருந்தாலும் பரவாயில்லை. மாப்பிள்ளை எனக்கு பிடிக்கிறது என அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டாள். எங்களுக்குத்தெரியும். அப்பா அம்மாவை இதற்குமேல் கஷ்டப்படுத்தக்கூடாது என்பதற்காகவே அவள் மாப்பிள்ளையை பிடிப்பதாகக்கூறினாள். வயதான காலத்தில் எத்தனை மாப்பிள்ளைதான் அவர்கள் பார்த்து நமக்காக அலைவார்கள் என்று அவள் எண்ணியிருக்கவேண்டும். ஆனால் மற்ற யாருக்கும் மாப்பிள்ளை பையனை அவ்வளவாக பிடிக்கவில்லை. அதுவும் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.                             எங்கள் வீட்டில் யாரும் அவ்வளவு குண்டு கிடையாது என்பது முதல் காரணம். அடுத்த காரணம் எல்லோருக்கும் உள்ளதுபோல் மாப்பிள்ளையின் ஊர் தூரமாக உள்ளது. நிச்சயம் எங்கள் ஊரிலிருந்து மானாமதுரைக்கு எட்டுமணி நேரம் ஆகும்.
                      தங்கையுடன் சண்டை போடாத நாட்களில்லை. இரத்தம் வருமளவு நான் அடித்திருக்கிறேன். ஆனால் என்மீது அவளுக்கு அளவுகடந்த பாசம். அப்பா தின்பண்டம் எது வாங்கிவந்தாலும் எனக்காக பத்திரப்படுத்தி வைப்பாள். என்னுடன் மணிக்கணக்காக பேசுவாள். நான் நண்பர்களுடன் சுற்றும்போது அப்பா என்னைத்திட்டுவார். தங்கை அப்பாவிடம் எனக்காக சண்டை போடுவாள். எல்லோருமே இரவு உணவை சேர்ந்துதான் சாப்பிடுவோம். எவ்வளவு பசித்தாலும் இதுவரை யாரும் தனியாக சாப்பிட்டது கிடையாது. சாப்பிடும்போது சந்தோசமாக பேசிக்கொண்டும் எங்கள் அம்மாவை நக்கலடித்து சிரித்தும் சாப்பிடுவோம். பொறியல், கூட்டு எது இருந்தாலும் அவளுக்கு அதிகமாகவே வைப்போம். அவளுக்குப்பிடித்த உணவாக அம்மா பார்த்து பார்த்து வைப்பார்கள். எல்லோருக்குமே அப்பா மீது அளவுகடந்த மரியாதை. அம்மாவைப்பற்றி சொல்லவே வேண்டாம். எங்கள்மீது உயிரையே வைத்திருப்பார்கள். எங்கள் அப்பாவிற்கு என் தங்கைமீது அவ்வளவு பாசம். எங்கள் வீட்டின் செல்லப்பிள்ளை எனது தங்கை. எந்தப்பண்டிகை ஆனாலும் அவளுக்கு புத்தாடை கண்டிப்பாக வாங்கிவிடுவார்கள்.
                        மானாமதுரைக்கு அவள் வாக்கப்பட்டு போய்விட்டால் அவளது படுக்கை இடம் வெறிச்சோடி இருக்கும். இரவு உணவு உண்ணும்போது அவளது தட்டு காலியாக இருக்கும். அதை நினைக்கும்போது மனது என்னனவோ செய்தது. அவள் எங்கள் மூன்று பேரையும் நினைத்து நிச்சயம் அழுவாள். இப்படியாக எண்ண ஓட்டம் சுழன்றடித்தது. ஏனோ அவளது பிரிவை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மணி நிச்சயம் இரண்டு ஆகியிருக்கும் என்று தோன்றியது.
                    நாளை மானாமதுரை மாப்பிள்ளைக்கு போனில் பதில் சொல்வதாகச் சொல்லியிருந்தோம். நிச்சயமாக மாப்பிள்ளை வேண்டாம் எனச்சொல்லிவிடவேண்டும் என்று முடிவேடுத்து தூங்க ஆரம்பித்தேன். எல்லோரது முடிவும் அதுவாகத்தான் இருக்கும்போல. எல்லோருமே தூங்க ஆரம்பித்திருந்தனர்.

வியாழன், ஜனவரி 15

மரித்தபின்

நல்லவேளை
நானும் உன்னை
பார்த்ததில்லை
நீயும் என்னை
பார்த்ததில்லை
கம்பியில்லா
தந்தியில் மனம்
அனுப்பும் செய்திகளை
என்னைப்போலவே
நீயும் லாவகமாக
படிக்கிறாய்
ஒவ்வொரு நாளும்
நான் எண்ணும்
நட்சத்திரங்களைத்தான்
நீயும் எண்ணிக்கொண்டிருப்பாய்
அதே தப்பும் தவறுமாக
அடுத்தமுறை
நட்சத்திரத்தை
சரியாக எண்ணிப்பார்
மரித்தபின்னும்
உன்னை மறக்காத
இப்படிக்கு
நான்..!


சனி, ஜனவரி 10

PG TRB 2015 ANSWER KEY

10.01.2015 அன்று நடந்த PG TRB 2015 ANSWER KEY (முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வில்) கேட்கப்பட்ட பொதுவான கல்வியியல் ’ பொதுஅறிவு மற்றும் பல்வேறு பாடங்களுக்கான உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ளது. கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து பார்க்கவும்.

தமிழ் உத்தேச பதில்கள்
பொது அறிவு மற்றும் கல்வியியல்
TAMIL ANSWER KEY
ENGLISH ANSWER KEY
ENGLISH ANSWER KEY
PHYSICS ANSWER KEY
HISTORY ANSWER KEY
BOTANY ANSWER KEY
COMMERCE ANSWER KEY
MATHS ANSWER KEY
ZOOLOGY ANSWER KEY
CHEMISTRY TENTATIVE ANSWER KEY
 Official Tentative Answer Key

சனி, ஜனவரி 3

வா...வா...


எனக்கும் வயசாகின்றது
அவளுக்கும் வயசாகியிருக்கும்
தலைமயிரும் நரைத்துவிட்டது
ஒவ்வொரு முடிக்கும் தெரியும்
உன்னை நான் நினைக்கும்
நினைவுகளை
இப்போதெல்லாம்
அரைத்தூக்கத்தில்
அடிக்கடி விழிப்பு
கால்கை வலி
மூட்டுவலி
தலைவலி
எல்லாமுமாய் சேர்ந்துவந்த
போதிலும் பொறுத்துக்கொள்கிறேன்
உன்னால் வந்த
இதயவலியைத் தவிர
இரத்தக்கொதிப்பு
கூடிவிட்டதாம்
மருத்துவர் சொல்கிறார்
அவருக்கு தெரியுமா
கொதிப்பு வந்தது
எதனால் என்று
என்னை வாவா
என்று அழைப்பதே
இப்போதெல்லாம்
இந்த மண்மட்டும்தான்..!